உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Tuesday, March 30, 2010

தமிழக மக்கள் நீரை சேமித்துப் பழக வேண்டும்

தமிழக மக்கள் நீரை சேமித்துப் பழக வேண்டும்


ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைக்கும் தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கு தான் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு கிடைக்கிறது.எதிர் காலத்தில் நீர் பற்றாக்குறை உலகம் முழுவதும் ஏற்படும். எனவே நீரை சேமித்து பாதுகாக்க வேண்டும் என்று பல்வேறு அறிஞர்கள் எச்சரிக்கை விடுத்திருப்பதை அறிவோம். எனவே இருக்கின்ற நீரை செம்மையாக பயன்படுத்திடவும், பருவமழை காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்திடவும் உரிய நல்ல பல திட்டங்களை வகுத்து மக்களை காக்க வேண்டும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

சென்னையில் இன்று பண்டைய தமிழரின் நீர் மேலாண்மை குறித்த 3 நாள் கருத்தரங்கை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

பண்டை தமிழரின் நீர் மேலாண்மை குறித்த இந்த கருத்தரங்கை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பண்டைய தமிழர்கள் நீரை எவ்வாறு சேமித்து பாசனங்களுக்கு பயன்படுத்தியதையும், நீர்மேலாண்மை குறித்த தமிழர்களின் அறிவு, ஆற்றல் இவற்றையெல்லாம் பார்க்கும் போது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மழை நீரை சேமிப்பதற்காக குளம், குட்டைகள், ஏரிகள், மடு, கண்மாய் என்று ஏராளமான நீர் நிலைகளை உருவாக்கினார்கள்.

இவற்றில் சேரும் தண்ணீரை தேவைப்படும் காலங்களில் பாசனத்திற்கு பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இது போன்ற செய்திகளை பழந்தமிழ் நூல்களில் நம்மால் காண முடிகிறது. ஓடைகளின் குறுக்கே சிறு சிறு அணைகளை கட்டி, கால்வாய்கள் வெட்டி அவற்றின் மூலம் நீரைப்பயன்படுத்தி வந்த தகவல்கள் எல்லாம் தொல்காப்பியம், புறநானூறு உள்ளிட்ட பல்வேறு சங்க இலக்கியங்களிலும் நம்மால் காண முடிகிறது.

கல்வெட்டுகளிலும் குட ஓலைகளிலும், செப்பேடுகளிலும் கூட பண்டைய தமிழர்களின் நீர் மேலாண்மை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. நீரை தேக்கும் இன்றைய தொழில்நுட்பத்தை 1800 ஆண்டுகளுக்கு முன்பே கரிகால சோழன் கையாண்டு காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையை கட்டி நீர் மேலாண்மையை ஒழுங்கு செய்த வரலாறு நமக்கெல்லாம் பெருமை சேர்க்கிறது.

இதனால் தான் பிற நாட்டு வளங்களை விட சோழ நாடு செழித்து வளர்ந்ததை தனிப்பாடல்கள் கூறுகிறது. சிலம்பு, மணிமேகலை , சிந்தாமணி உள்ளிட்ட இலக்கிய நூல்களிலும் பழந்தமிழர்களின் நீர் மேலாண்மை குறித்து பல்வேறு பாடல்கள் இடம் பெற்றுள்ளனன.

முதலாம் பரமேஸ்வரன், நஞ்சுவர்மன், ராஜேந்திர சோழன் உள்ளிட்ட மன்னர்களும் குளங்கள், கிணறுகள், ஏரிகளை உருவாக்கி நீர் மேலாண்மை செய்த வரலாறுகள் பல உண்டு.

இவ்வாறு உருவான ஏரிகள்தான் உத்திரமேரூர் ஏரி, சோழ கங்கம் என்னும் பொன்னேரி, வீரநாராயண எனும் வீரானம் ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளாகும். இது பற்றிய விவரங்கள் எல்லாம் ஓலை சுவடிகளிலும், செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அண்டை மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது என்பதை நாம் அறிவோம். அதனால் தான் கிடைக்கின்ற நீர் வளத்தை சேமித்து செம்மையாக பயன்படுத்த தமிழக அரசு பல்வேறு சிறப்பு மிக்க திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

1934ல் மேட்டூர் அணை, 1944ல் பூண்டி நீர்த்தேக்கம், 1956ல் பவானி அணை, 1958ல் சாத்தனூர் அணை, 1959ல் வைகை அணை போன்ற நீர்த்தேக்கங்களை உருவாக்கி தமிழகத்தில் பாசனத்தை உயர்த்தி நடைமுறைப்படுத்தி வருகிறோம்.1967ம் ஆண்டு திமுக பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் நீர் ஆதாரங்களை பெருக்கிட பல்வேறு திட்டங்களை உருவாக்கினோம்.
கேரள அரசுடன் நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி பரப்பிகுளம் ஆழியாறு, சிறுவாணி, பம்பை ஆற்று நீரை பகிர்ந்து கொண்டுள்ளோம்.1989-91ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் தான் நெல்லை அடவிரையன் ஆற்றுத் திட்டம், திண்டுக்கல் மஞ்சளாறு திட்டம், பெரியாறு மற்றும் வைகை ஆறு திட்டம், சாத்தனூர், கோதாவரி, தாமிரபரணி மற்றும் கம்பம் அமராவதி பள்ளத்தாக்கு நீர் மேம்பாட்டு திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தினோம்.

தற்போது மோர்தானா, நம்பியாறு, பாலாறு பாசன திட்டங்கள், தர்மபுரி கிருஷ்ணகிரி பாசன கால்வாய் திட்டங்கள், பாம்பாறு நீர்த்தேக்கம், சூளகிரி சின்னாறு, மதனப்பள்ளி, சாத்தனூர் கால்வாய் பாசன திட்டங்கள் ஆகியவற்றையும் செயல்படுத்தி வருகிறோம்.

திருக்கோவிலூர் அணை திட்டம், செய்யாறு அணை திட்டம், திருச்சி கல்லணை திட்டம், குண்டாறு பாசன திட்டம் உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளோம்.

தற்போது 2006ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். குறிப்பாக வெள்ள நீர் வீணாகி சென்று கடலில் கலப்பதை தடுப்பதற்கு இந்தியாவிலேயே முதன் முதலாக மாநில ஆறுகளை இணைக்கும் திட்டத்தை செயல்பத்தி வருகிறோம். இதன்படி காவிரி, கட்டளை கால்வாய், கதவனை திட்டம், தாமிரபரணி, நம்பியார் திட்டம் ஆகியவை நடைபெற்று வருகின்றன.

வெள்ள சேதங்களை தடுப்பதற்காக திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ரூ.284 கோடி மதிப்பிலான திட்டங்கள், தஞ்சை, நாகை, கடலூர் ஆகிய பகுதிகளில் கொள்ளிடம் வெள்ள தடுப்புக்காக ரூ.376 கோடி மதிப்பிலான திட்டங்கள், இதே போல் கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மொத்தம் ரூ.609 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

ஆறுகள் மற்றும் சிற்றாறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்டுவதற்கு ரூ.650 கோடி மதிப்பிலான பெரும் திட்டம் ஒன்று கடந்த நிதியாண்டில் தயாரிக்கப்பட்டு 1859 தடுப்பணைகளும், 1869 கசிவு நீர் குட்டைகள் உட்பட 4079 பணிகள் நடைபெற்று நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது.

பண்டை தமிழர்களின் நீர் மேலாண்மை வழியை பின்பற்றி நாமும் இத்தகைய பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இந்தியாவில் மொத்த நீர் இருப்பில் 2 சதவீதம் தான் தமிழ் நாட்டில் உள்ளது. ஆனால் மக்கள் தொகை ஆறரை சதவீதமாக இருக்கிறோம்.

ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைக்கும் தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கு தான் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு கிடைக்கிறது.எதிர் காலத்தில் நீர் பற்றாக்குறை உலகம் முழுவதும் ஏற்படும். எனவே நீரை சேமித்து பாதுகாக்க வேண்டும் என்று பல்வேறு அறிஞர்கள் எச்சரிக்கை விடுத்திருப்பதை அறிவோம். எனவே இருக்கின்ற நீரை செம்மையாக பயன்படுத்திடவும், பருவமழை காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்திடவும் உரிய நல்ல பல திட்டங்களை வகுத்து மக்களை காக்க வேண்டும். அதற்கு இந்த நீர் மேலாண்மை கருத்தரங்கு பயன்பட வேண்டும் என்றார் கருணாநிதி.

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.