You will be redirected to the script in

seconds
Kalvisolai.Info: 'பார் போற்றும் பாரதநாட்டுக்குள்' உங்களையும் பிறர் பார்க்கச் செய்யுங்களேன்...!
உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Friday, April 16, 2010

'பார் போற்றும் பாரதநாட்டுக்குள்' உங்களையும் பிறர் பார்க்கச் செய்யுங்களேன்...!

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில், அதிகாலை கூட்டத்தோடு கூட்டமாக நின்று, நீராடி வெளிவரும் பகலவனை பார்ப்பதில் சிலருக்கு பரவசம். சூரியன் 'சுள்'ளென்று குப்புற முதுகில் பட்டாலும் , 'காபி'யோடு தான் விழிப்பது பலருக்கு சந்தோஷம். 'நேத்து 20-20 கிரிக்கெட் மேட்ச் பாத்துட்டு தூங்கினேனா? அதனால தான் ரொம்ப நேரம் தூங்கிட்டேன்' என்று சப்புக் கொட்டி, சோம்பலை முறித்து எழுபவர்களை கண்டுகொண்டு தான் இருக்கிறோம். அதிகாலை 'துள்ளி' எழ வேண்டிய இளைய சமுதாயமும் இதில் அடங்கியிருக்கிறது என்பதை நினைக்கும் போது தான் சற்று வருத்தம்.

இருபது பாக்கெட்டுகள் உள்ள பேண்ட், சந்தையில் உலாவும் வெளிநாட்டு மொபைல் போன் அதிலும் டூயல் சிம், ஐ பாட், முக அலங்காரத்துக்கு கூடுதல் நேரம் செலவு என, இப்படித்தான் இருக்கிறது இளைய சமுதாயம் என பொத்தாம் பொதுவாக குறை கூறி விட முடியாது. 'இன்றைய இளைஞர்கள் தான் நாளைய தலைவர்கள்' என்ற எண்ணத்தை தாரக மந்திரமாக மனதுக்குள் உச்சரித்து கொண்டிருப்பவர்கள், வருங்காலத்தை வசந்தகாலமாக மாற்ற தங்களால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால், இதற்கு கல்லூரிகளில் வாங்கும் 'பட்டம்' மட்டும் போதுமா? என்ற வினா எழும் போது, வெளியுலக நாட்டமும் இருக்க வேண்டும் என்பது தான் விடையாக கிடைக்கிறது.'சிந்தனைக்கு அறிவும், உணர்வுக்கு இதயமும், உழைப்புக்கு உடலும்' திடமானதாக இருக்க வேண்டும் என்பது சுவாமி விவேகானந்தரின் தாரக மந்திரம். அறிவை வளர்த்துக் கொள்ள என்ன செய்யப் போகிறோம்... என்று... யோசிக்க ஆரம்பித்து விட்டாலே, வெற்றியின் கோட்டைக்குள் நுழையப் போகிறீர்கள் என்று அர்த்தம். இதில் முக்கிய இடம் பிடிப்பது வாசிப்பு. நல்ல புத்தகங்களை வாசிக்கத் துவங்கினால், புத்தகங்களுக்குள் சுவாசிப்பீர்கள் என்று, நல்ல புத்தகங்களுக்கு, கை தேர்ந்த படைப்பாளிகள் பலர் முன்னுரை வழங்கியிருக்கின்றனர்.

படிக்கும் காலத்திலேயே நல்ல கருத்துகளை உடைய புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். புத்தரின் அருள் வாழ்வு, விவேகானந்தரின் சகோதரத்துவம், மகாத்மா காந்தியடிகளின் அஹிம்சை பாதை, பாரதியின் விடுதலை வீரம், பாவேந்தரின் தமிழ் பற்று, விஞ்ஞானிகளின் அறிவுத் திறன் உட்பட, அறிவுக்கு விருந்தாகும் புத்தகங்களை தேடிப் பிடித்து படிக்க வேண்டும். 'இதுபோன்ற புத்தகங்களுக்கு ரொம்ப விலை ஆகுமே! எங்கே போறது' என்று கேள்வி எழுப்பினால், இருக்கவே இருக்கிறது நூலகம்.'இலவச'ங்கள் கிடைக்கவில்லை என்றால், சாப்பாடு இல்லை என்றாலும் கூப்பாடு போட்டு வீதிக்கு வந்து, போக்குவரத்துக்கு இடையூறு கொடுப்பவர்களை பார்த்திருக்கிறோம்.

ஆனால், நூலகமும் நம்மை 'இலவச'மாகத் தான் அழைக்கிறது என்று தெரிந்தும், திரைப்படத்தில் வரும் புரியாத பாடலை மனப்பாடமாக ஒப்புவித்து, 'எங்கே நீ சொல்லு பாக்கலாம்' என்று 'நாங்கெல்லாம் அறிவாளிங்கப்பா... ரொம்ப படிச்சா மூளைக்கு ஆகாது' என்று உப்பில்லாத ஒரு 'டயலாக்' அடுக்கி விட்டு நகராமல், 'இன்றைக்கு' மட்டுமே பாராமல் 'நாளை' என்பதையும் பாருங்களேன்...! எந்த ஒரு புதிய மற்றும் நல்ல விஷயத்தை செய்யும் போது சற்று சிரமமாகத் தான் இருக்கும்; அதில் மூழ்கி விட்டால் உங்களுக்குள் இருக்கும் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள் என்பது, தன்னம்பிக்கை எழுத்தாளர்களின் அடிக்கடி உச்சரிப்பு.

நூலக மேஜைகளில் அடுக்கி வைத்திருக்கும் நாளிதழ், வார இதழ், மாத இதழ்களை நிதானமாக புரட்டிப் பார்த்தால், உங்களை நீங்கள் உணர்வீர்கள். உங்களை உணர்ந்துக் கொண்டால், சமுதாயம் உங்களை உணரும். இந்த உணரும் மாற்றத்துக்கு உணர்வுப் பூர்வமாக இருந்தால், வெற்றியின் விலாசம் உங்களுடையதாகத் தான் இருக்கும். இனியும் என்ன தாமதம்... நூலகத்தில் உறுப்பினராகி புத்தகங்களை எடுத்து வாசிக்க துவங்குங்களேன். உறுப்பினராக பெரிய தொகையை செலவழிக்கத் தேவையில்லை; 50 ரூபாய்க்குள் தான். போட்டித் தேர்வுகளில் நீலகிரி மாவட்ட இளைஞர்களின் பங்களிப்பும், வெற்றியும் குறைவாகத் தான் இருக்கிறது என்ற 'பேச்சு வழக்கை' மாற்ற முன்வந்தால், சுற்றுலா ஸ்தலங்கள் மட்டுமே நினைவுக்கு வரும் மாவட்டம், 'கலைகளுக்கு சொந்தக்காரர்கள் பலர் உள்ளனர்' என்ற நினைப்பும் கூட வரும்.

வெற்றின் ரகசியம் என்ன என்று கேட்கும் போது, இன்று உன்னுடைய 'கையெழுத்து', நாளை 'ஆட்டோகிராப்' ஆக மாற வேண்டும் என்று சொல்வார்கள். இதுதான் சிறப்பான வெற்றி. 'நாம் உயர்ந்த கனவுகளை காண வேண்டும்; உயர்ந்த கனவுகள் சிந்தனைக்கு வழி வகுக்கும். பின், அது செயல் வடிவம் பெறும்; அதுதான் வெற்றிக்கு வழி. முயற்சி, கடின உழைப்பு, உயர்ந்த எண்ணம் இவைகளால் தான் நாடு முன்னேற்றம் அடைய முடியும்' என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறி இருக்கின்றார். 'விழுமின், எழுமின், முயற்சி குன்றாத உழைமின்' என்று சுவாமி விவேகானந்தர் சொல்லி இருக்கின்றார். இந்த உணர்ச்சி மிகு வாக்கியங்களை, நினைவில் வைத்திருந்து 'பார் போற்றும் பாரதநாட்டுக்குள்' உங்களையும் பிறர் பார்க்கச் செய்யுங்களேன்...!

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.