You will be redirected to the script in

seconds
Kalvisolai.Info: டாக்டர். வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - அவர்களுடன் நேர் காணல்
உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Sunday, April 18, 2010

டாக்டர். வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - அவர்களுடன் நேர் காணல்

‘நோபல் தமிழர்’ டாக்டர். வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களுடன் நேர் காணல்

இன்று நம் இந்தியாவுக்கு பெருமை இவரால் என்று சந்திக்கும் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்ளும் பெயர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். ராமகிருஷ்ணன் – ராஜலட்சுமி தம்பதியினருக்கு 1952ம் ஆண்டு சிதம்பரத்தில் பிறந்த இவர் மூன்றாவது வயதில் குஜராத்தில் உள்ள பரோடாவிற்கு தந்தையுடன் சென்று அங்குள்ள ஜீசஸ் மேரி கான்வென்டில் பள்ளிப் படிப்பை முடித்தார். பரோடா எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று 1976-ம் ஆண்டு ஓகையோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில், பி.எச்.டி. பட்டம் பெற்றார்.

இயற்பியல் வல்லுனராக தன் வாழ்க்கையைத் துவக்கி,கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1978ல் இளநிலை உயிரியல் துறையில் (Biology) இணைந்தார்.

மவுரிசியோ மாண்டல் என்பவருடன் ஆராய்ச்சியில் இணைந்தவர் 1996-ம் ஆண்டு யூடா பல்கலைக்கழத்தில் உயிர் வேதியியல் (Bio Chemistry) துறை பேராசிரியராகச் சேர்ந்தார். முதுநிலை ஆராய்ச்சியாளராக இங்கிலாந்து Medical Research Council (MRC) ஆய்வகத்தில் ஆர்.என்.ஏ.இ (ரிபோ நியூக்ளிக் அமிலம்)வில் உள்ள புரோட்டீன்கள் குறித்த ஆய்வில் இறங்கினார்.

செல்லில் மிகச்சிறிய மூலக்கூறான ‘ரிபோசோமின்’ சப்யூனிட் குறித்த சிறப்பான ஆய்வை அங்கு முடித்தார். அச்சிறப்பிற்குரிய ஆய்வுக்குத்தான் நோபல் பரிசு அவரைத் தேடி வந்திருக்கிறது.

இவருடன் இதே ஆய்வை மேற்கொண்ட தாமஸ் ஸ்டேய்ட்ஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அடாயோநாத் ஆகியோரும் நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களின் தந்தை, தாய் இருவருமே விஞ்ஞானிகள். பரோடாவில் பயோகெமிஸ்டிரி பேராசிரியர்களாக பணிபுரிந்தவர்கள். குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாட்டினால் மூளை வளர்ச்சி குறைவதற்கு காரணங்கள் மற்றும் அவற்றைச் சரி செய்வது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள். மேலும் இவரின் துணைவியார் வீராரோஸ்பெரி, குழந்தைகள் புத்தக எழுத்தாளர். 25க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். ஒரு மகன் திரு. இராமன் (இசைக்கலைஞர்). ஒரு மகள் தான்யா (மருத்துவர்).

அறிவியல் குடும்பத்தில் வளர்ந்ததால் அறிவியல் மீது ஆர்வம் ஏற்பட்டது என்றாலும் பெற்றோர்கள் என்னை மருத்துவராகத்தான் பார்க்க ஆசைப்பட்டார்கள். ஆனால் நான் இன்று ஆராய்ச்சியாளராகி நோபல் பரிசை பெற்றிருப்பதை எண்ணும்போது நான் பெரிய அதிர்ஷ்டசாலியாகக் கருதுகிறேன் என்று சொன்ன நோபல் பரிசு சாதனையாளர் டாக்டர். வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களுடன் இனி நாம். . .

ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டு நோபல் பரிசு பெறுவோம் என்று தாங்கள் நினைத்தது உண்டா?

விஞ்ஞானிகள் எவரும் நோபல் பரிசால் கவர்ந்திழுக்கப்பட்டு ஆராய்ச்சித் துறைக்கு வருவதில்லை. ஆராய்ச்சித் துறைக்கு வருபவர்கள் சில தீர்க்கப்படாத கேள்விகளுக்கு விடைகாண வேண்டும் என்கிற உத்வேகத்தில் தான் வருகிறார்கள். அதற்குப் பின்பு தொடர்ச்சியாக ஆராய்ச்சியிலேயே தன்னை முழுமையாக அர்ப் பணித்து விடுகிறார்கள். “உங்களுக்கு வெகுமதி கிடைக்கும் என நினைத்து ஒரு செயலை செய்தீர் கள் என்றால் அதில் வெகுமதி கிடைக்காதபோது தோல்வியும் அவமானமுமே மிஞ்சும். எனவே வெகுமதி கிடைக்கும் என்று எந்தச் செயலையும் எந்தத் துறையையும் தேர்வு செய்யாதீர்கள். நீங்கள் இருக்கும் துறையில் முழுமையாக ஈடுபட்டு வேலை செய்தால் வெற்றி நிச்சயம்.”

எந்தச் செயல் உங்களை ஆராய்ச்சித் துறைக்கு அழைத்து வந்தது எனக் கருதுகிறீர்கள்?

என் தாய் தந்தை இருவரும் விஞ்ஞானிகள் என்பதனால் அந்த தாக்கம் எனக்குள்ளும் ஏற்பட்டது. என் மாணவப் பருவத்தில் தேசிய அறிவியல் திறனை அறியும் தேர்வு எழுத என் தாய் என்னை ஊக்கப்படுத்தினார். இளம் வயதில் மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவத் துறை அல்லாது அறிவியல் துறையைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்திய அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட இந்த தேசிய அறிவியல் திறன் தேர்வு (National Science Talent Search Exam) முயற்சி தான் என்னை இந்த ஆராய்ச்சித் துறைக்கு கொண்டுவரச் செய்தது. ஆனால் தற்பொழுது இந்தத் தேர்வு பொறியியல் மற்றும் மருத்துவத் துறைக்கு விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளது. இது தேவையில்லை. காரணம் இத்துறைகளுக்கு தானாகவே திறமையுள்ளவர் கள் வந்து சேர்கிறார்கள். எனவே ஆராய்ச்சித் துறைக்கு மட்டுமே இத்தேர்வு இருப்பது நல்லது.

அவரவர் தேர்ந்தெடுத்த துறையில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கு குடும்பத்தின் ஒத்துழைப்பு அவசியமா?

தாய் தந்தையின் ஊக்கம் ஒரு மாணவன் தான் தேர்ந்தெடுத்த துறையில் சாதிக்க பெருமளவு காரணமாகிறது. வீட்டுப்பாடங்கள் போன்ற திணிப்புகள் அதிகம் இல்லாமல் தகுந்த ஆலோசனைகளை தகுந்த நேரங்களில் அவர்கள் தந்து உதவிடும்போது மாணவர்கள் சாதித்து விடுகிறார்கள்.

இடைவிடாத ஆராய்ச்சிப் பணியில் இருக்கும் நீங்கள் நேரத்தை எப்படி பகிர்ந்து கொள்கிறீர்கள்?

நானொரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான்கு சக்கர வாகனம் இல்லை. செல்போன் உபயோகிப்பது இல்லை. நெடுந்தூரம் நடந்து செல்வது, மிதிவண்டியில் செல்வது, இசை கேட்பது, எப்பொழுதாவது படம் பார்ப்பது இவைதான் என் பொழுதுபோக்காக இருக்கிறது. தற்பொழுது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள அமைதியான சூழ்நிலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் ஆராய்ச்சியின்பால் கால நேரம் மறந்து என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடிகிறது.

உங்கள் ஆராய்ச்சி பணிக்கு மத்தியில் நண்பர்கள், பொது வாழ்க்கைக்காக நேரம் ஒதுக்க முடிகிறதா?

என்னுடன் பணிபுரியும் விஞ்ஞானிகள், மாணவர்கள், பள்ளிக்கால நண்பர்கள் என எனக்கு குறைந்தளவு நண்பர்களே உள்ளார்கள்.எப்போதாவது அவர்களை சந்தித்து உரையாடுவது உண்டு. தென்னிந்திய, குஜராத் உணவு வகைகளை நான் தயார் செய்து அதனை நண்பர்களுக்கு பரிமாறி மகிழ்வது உண்டு.

‘ரிபோசோம்’ ஆராய்ச்சியில் உங்களுக்கு ஆர்வம் வரக்காரணம்?

என்னுடைய முனைவர் பட்ட படிப்பு முடிந்ததும் முதுமுனைவர் பட்டத்திற்கு (Post Doctoral Fellow) யேல் யுனிவர்சிட்டியின் பேராசிரியர் பீட்டர் மோரின் ‘ரிபோசோம்’ ஆராய்ச்சித் திட்டத்தில் சேர்ந்தேன். அவரின் ஆராய்ச்சிக்கு உறுதுணையாக பணி செய்து கொண்டிருந்த போது ‘ரிபோசோமில்’ ஆராய்ச்சி செய்வது என்பது மிகச்சிறந்தது என்பதை உணர்ந்தேன். எனவே மேலும் மேலும் ஆராய்ச்சி களை அத்துறையிலேயே செய்ய ஆரம்பித்தேன்.

உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் குறித்து . . .

‘நோபல் பரிசு’ வெற்றிக்கு பலர் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள் என்றாலும் 30எஸ் ரிபோசோம் ஆராய்ச்சியில் 1999லிருந்து 2001 வரை என்னுடைய ஆராய்ச்சியில் இணைந்து பணியாற்றிய மாணவர்களைச் சொல்லலாம்.

இதனால்தான் இன்றைக்கு இந்த ஆராய்ச்சி சாத்தியமானது என்று சொல்லுமளவு ஏதேனும் செய்தி இருக்கிறதா?

தொழில் நுட்பத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம்தான் எல்லா வெற்றிக்கும் காரணம். எக்ஸ்-ரே கதிர் வீச்சை உருவாக்கும் திறன் தற்பொழுது நன்கு முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும் எக்ஸ்-ரே மூலம் படிகத்தை ஆய்வு செய்யும் திறனும் நன்றாக வளர்ந்துள்ளது. இந்த படிக அமைப்பை மிகத் துல்லியமாக கணிக்க புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் கருவிகள், கணினி மூலம் அதன் மென்பொருளைக் கொண்டு படிகத்தை ஆய்வு செய்ய உருவாக்கப் பட்ட மென்பொருட்கள், செல்லில் உள்ள ரிபோசோமைத் தனியாக பிரித்தெடுக்கும் திறன், படிகத்தை நுண்ணியமாக கண்டுபிடிக்கும் திறன் ஆகியவைகள் என்னுடைய கண்டுபிடிப்பிற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.

இங்கிலாந்து MRC ஆய்வுக்கூடத்தில் உங்கள் ஆராய்ச்சி பணி அமைந்தது குறித்து?

நான் அமெரிக்காவில் இருக்கும் பொழுது யூடா பல்கலைக்கழகத்தில் உள்ள என்னுடைய ஆராய்ச்சிக் கூடத்தில் மிகவும் சந்தோசமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன். ஆனால் ரிபோசோம் ஆய்வு என்பது கடினமானது. அந்த ஆய்வை என்னுடைய ஆராய்ச்சிக் கூடத்தில் செய்தால் பல வருஷங்கள் ஆகும் எனக் கருதினேன். ரிபோசோம் ஆராய்ச்சியை விரைவில் முடிக்கக்கூடிய சிறப்பான ஆய்வுக்கூடம் எது வென்று தேடியபோது இங்கிலாந்து MRC ஆய்வுக்கூடம் என அறிந்தேன். ஆராய்ச்சிக்கு பண உதவி, சூழ்நிலைகள், ஆராய்ச்சியை தொடர்ந்து பல காலம் செய்வதற்கான அனுமதி அங்கு கிடைத்தது. உடனே ஆராய்ச்சியில் அமர்ந்தேன்.

அமெரிக்காவில் பல்கலைக்கழகங்களில் 3 லிருந்து 5 ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பண உதவி செய்தார்கள். என்னுடைய ஆராய்ச்சிக்கு இன்னும் கூடுதலாக ஆண்டுகள் தேவைப் பட்டதால் நான் அமெரிக்காவில் பெற்ற சம்பளத்தில் 40 சதவீத அளவு குறைந்த ஊதியம் தான் MRC யில் கிடைக்கும் என்று தெரிந்தும் எனது ஆராய்ச்சிப் பணிக்கு கிடைக்கும் நீண்ட கால உதவி ஒன்றை மட்டுமே கருதி இங்கிலாந்து ஆய்வுக்கூடத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்.

பலதுறையினரும் இணைந்து செய்யக்கூடிய ஆராய்ச்சி (Inter disciplinary research) குறித்து உங்கள் கருத்து?

பொதுவாக பெரிய ஆராயச்சி வெற்றிகள் வெவ்வேறு துறைகளில் இருக்கின்ற விஞ்ஞானி கள் இணைந்து செயல்படும்போதுதான் கிடைக் கிறது. அந்த வகையில் ரிபோசோம் ஆராய்ச்சி யில் எக்ஸ்-ரேயில் படிகத்தின் அமைப்பை படிப்பது இயற்பியல் துறையைச் சார்ந்தது. அதன் செயல்பாடுகளை படிப்பது உயிரியல் துறையைச் சார்ந்தது. மேலும் படிக அணுக்களை கண்டுபிடிப்பது வேதியியல் துறையைச் சார்ந்தது. இப்படி மூன்று முக்கியத்துறை விஞ்ஞானி களையும் ஒன்றிணைத்ததின் பலன்தான் எங்கள் ரிபோசோம் ஆராய்ச்சிக்கு கிடைத்த நோபல்பரிசு.

உங்கள் எதிர்காலத் திட்டம்?

ரிபோசோம் ஆராய்ச்சியில் தற்பொழுது தான் ரிபோசோமின் வடிவத்தை கண்டுபிடித்து உள்ளோம். இன்னும் வெவ்வேறு நிலைகளில் ரிபோசோம் எப்படி இருக்கிறது, எப்படி எல்லாம் அதன் செயல்பாடுகள் அமைகிறது என ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டியிருக்கிறது. ரிபோசோம்கள் செயல்படும் போது படங்கள் எடுக்கப்பட்டு இடம் பெயர்தல், தனக்கு தேவை யான சக்தியை எவ்விதம் பெறுகிறது போன்ற பல சிக்கலான கேள்விகளுக்கு விடைகாண வேண்டி யிருக்கிறது.

நீங்கள் மேற்கொண்ட ரிபோசோம் ஆராய்ச்சியின் பலன் குறித்து?

இந்த ஆராய்ச்சியின் மூலம் தான் இந்தப் பொருள் வந்தது என்று நேரிடையாக எதுவும் கூறமுடியாது. ஆனால் நிறைய நோய் எதிர்ப்பு திறன் கொண்ட ஆன்டிபயாடிக்ஸ் மாத்திரை களைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. என்னுடன் நோபல்பரிசு பெற்ற தாமஸ் ஸ்டெய்ட்ஸ் என்பவர் ‘ரிப் எக்ஸ்’ என்ற கம்பெனியை நிறுவியுள்ளார். இந்த கம்பெனியி லிருந்து புதியவகையான ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் சந்தைக்கு வரும் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இதழ் ஒன்றில் வந்த செய்தி உங்களை ஆராய்ச்சித் துறைக்கு அழைத்துச் சென்றதாக அறிந்தோம். இதழ்களின் பணி குறித்து . . .

இதழ்கள் அறிவியல்பூர்வமான கட்டுரை களை கொண்டுவருவது நல்லது. என்ன சாப்பாடு உங்களுக்கு பிடிக்கும்? நீங்கள் கிரிக்கெட் பார்ப்பதுண்டா? இதுபோன்ற கேள்விகளை வெற்றியாளர்களிடம் கேட்பதை தவிர்த்து சாதிப்புக்குண்டான சூழல், சுற்றியிருப்பவர்களின் ஆலோசனை, சிந்தனைகள் குறித்து கேட்பது தான் ஒருவர் சார்ந்த துறையில் சாதிக்கத் தூண்டும். கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக இந்தியாவின் மாணவர்கள், ஆராய்ச்சியாளர் களைக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். மிகச்சிறந்த திறமையுடன் இருக் கிறார்கள். அவர்கள் தாங்கள் செய்யும் வேலையில் நம்பிக்கையுடன் செயல்பட்டால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் நிரம்ப இருக்கிறது.

இயற்பியல் துறையிலிருந்து நீங்கள் உயிர் வேதியியல் துறைக்கு மாறுவதற்கான காரணம்?

நான் இயற்பியல் துறையில் பி.எச்டி. பட்டப்படி முடித்த பின்பு உயிரியல் துறையில் இரண்டாண்டுகள் பட்டப் படிப்பு படித்தேன். இந்தப் படிப்புதான் என்னை இயற்பியல் துறையில் இருந்து உயிரியில் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும், துறைசார்ந்த தீர்க்கமான அறிவு பெறுவதற்கும் உறுதுணையாக இருந்தது.

உங்கள் வெற்றியின் ரகசியம்?

என் வெற்றியின் ரகசியத்தை இன்னும் என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் சிலவற்றை உறுதியாகக் கூறமுடியும். ஒன்று அதிர்ஷ்டம், இரண்டாவது வழிநடத்தியவர்கள் திறமை சாலிகள், மூன்றாவது வெற்றி தோல்விகளை கண்டுகொள்ளாது, தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது, நான்காவது சம்பளம் குறைவானாலும் ஆராய்ச்சியில் வெற்றிகாண முடியும் என்கிற நம்பிக்கையைத் தந்த இங்கிலாந்து MRC ஆய்வுக்கூடம். உடன் பணிபுரியும் மாணவர்கள், ஆராயச்சியாளர்கள் அடங்கிய ஆய்வுக்குழுவும் என் வெற்றியின் ரகசியமாக கருதுகிறேன்.

உங்களுடைய ஆராய்ச்சிக் குழுவில் இடம் பெறுவதற்கு வேண்டிய தகுதிகள்?

என்னுடன் பணிபுரியும் மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் அந்தந்தத் துறையில் நன்கு பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் துறைசார்ந்த ஆற்றலுடன் மற்ற துறைகளிலும் ஆற்றலைப் பெற்றிருப்பது நுண்ணிய பிரச்சனைகளுக்கும் தீர்வு காண உதவும் என்பதால் மேற்கண்ட தகுதிகள் உடை யவர்களை உடன் வைத்துள்ளேன்.

உங்கள் குழு ஆராய்ச்சியாளர்களுக்கு நீங்கள் தரும் ஊக்கம் எத்தகையது?

நாம் செய்யும் ஆராய்ச்சி ஒவ்வொன்றும் மிகவும் முக்கியமான ஒன்று. ரிபோசோம் குறித்து ஆராய்ச்சியில் வெற்றிபெற்றால் பின்வரும் தலைமுறைக்கு ஒரு மிகப்பெரிய உதவியாக இருக்கும். கண்டுபிடிக்கப் படாத நிறைய கேள்விகளுக்கு பதில் தரும் வாய்ப்புகள் அதில் இருக்கிறது என எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பேன்.

ஆராய்ச்சியாளர்களுக்கு நீங்கள் தரும் ஆலோசனை?

• நீங்கள் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தும் குழு மிகப்பெரியதாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

• அதிக நபர்கள் இருந்தால்தான் வெற்றி பெறமுடியும் என்கிற எண்ணம் தவறானது. ஏனெனில் அதிக நபர்கள் இருந்தால் கவனம் சிதறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

• தேவையானதை மட்டுமே ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஆராய்ச்சியின் பால் கிடைக்கும் முடிவுகள் எளிமையாகத் தெரியப்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும்.

நோபல் பரிசை பெறும் அளவு இந்திய ஆராய்ச்சி யாளர்களுக்கு நீங்கள் தரும் ஆலோசனை?

முதலில் நோபல் பரிசை பெறுவதற்கென்று ஆராய்ச்சிகளைத் தொடரக்கூடாது.

• நோபல் பரிசு மட்டுமே குறிக்கோள் என்று ஆராய்ச்சியைத் தொடர்ந்தீர்கள் என்றால் உங்களுக்கு கிடைப்பது தோல்வியும் விரக்தியும்தான்.

• உங்களுக்கு பிடித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வது மட்டுமே உங்களை மகிழ்ச்சி யில் ஆழ்த்தும்.

• இந்தியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் நன்கு திறமை பெற்றவர்களாக இருக்கிறார் கள். எனவே என் ஆலோசனையாக எதுவும் தேவைப்படாது என்றே கருதுகிறேன்.

இந்தியாவில் ஆராய்ச்சியாளர்களை அதிகம் உருவாக்குவதற்கு நீங்கள் தரும் ஆலோசனை?

• ஆராய்ச்சிக்கான கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.

• அதிக நாட்கள் ஆராய்ச்சியை தொடர்வதற் கான நிதியுதவி வழங்கப்படுதல் வேண்டும்.

• 30 முதல் 40 ஆண்டுகளாக இந்தியாவில் ஆராய்ச்சி செய்வதற்கு பல்கலைக்கழகங் களுக்கு தந்துவந்த நிதிஉதவி குறைந்து இருக் கிறது. பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிக் கான நிதியுதவியைக் குறைத்துவிட்டு தேசிய ஆராய்ச்சி கழகங்களுக்கு நிதியுதவியை அதிகப்படுத்தியதனால் பல்கலைக் கழகங் களில் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் குறைந்து வருகிறது. இதனால் இளைய தலைமுறை யினர் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சித் திறனை வளர்த்தால் இன்னும் விஞ்ஞானிகள் அதிகம் உருவாகி ஆராய்ச்சியில் சாதிக்க முடியும்.

முந்தைய நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

1. ரவீந்திரநாத் தாகூர் இலக்கியம் 1913

2. சர்.சிவி. ராமன் இயற்பியல் 1930

3. ஹர்கோபின்ந்த் கொரானா மருத்துவம் 1968

4. சுப்பிரமணியம் சந்திசேகர் இயற்பியல் 1983

5. அன்னை தெரசா அமைதி 1979

6. அமர்த்தியா சென் பொருளாதாரம் 1998

7. வி.எஸ். நைபால் இலக்கியம் 2001

8. ஆர்.கே. பச்சோரி அமைதி 2007

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.