You will be redirected to the script in

seconds
Kalvisolai.Info: உழைப்பாளர் தினம் (1.5.2010)
உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Saturday, May 1, 2010

உழைப்பாளர் தினம் (1.5.2010)

இன்பம், துன்பம் இரண்டும் இணைந்த இந்த மனித வாழ்வில் கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை இவை மூன்றும் வெற்றிக்கான அடிப்படை என்று சாகர் என்ற சிந்தனையாளர் கூறுகிறார்.

உழைப்பு என்பது நாம் உயிர்வாழ்வதற்கான கடவுள் வழிவகுத்துள்ள தெய்வீகச் சட்டம் என்றார் மாஜினி. உழைப்பில்லாமல் எந்த ஒரு நாடும் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்ததில்லை. செல்வத்தை உண்டாக்குவது உழைப்பு.

எல்லா விஷயங்களையும் இயக்குவதும் அதுவே. உழைப்பு என்பது பிழைப்பிற்காக மட்டுமல்லாமல் உண்மைக்காகவும் இருக்க வேண்டும். அந்த மகத்தான உண்மையை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து உயர்ந்தவர் நம் தேசப்பிதா.

மனித வாழ்க்கை என்பது உழைப்பில் உள்ளது. உழைக்கும் மனிதனின் உறக்கம் மிகவும் இனிமையானது. ஆம் அடிமை போல் உழைப்பவன் அரசனைப் போல் உண்கிறான் என்கிறார் கால்மர்ஸ் என்ற சிந்தனையாளர்.

உழைப்பு, தொந்தரவு, தீயொழுக்கம் மற்றும் தரித்திரம் என்ற மூன்று பெருந்தீமைகளை நம்மிடமிருந்து நீக்குகின்றன.

கடின உழைப்பு, நேர்மை, விடாமுயற்சி, உறுதியான சிந்தனை வெற்றிக்கான அடிப்படை என்கிறார் சிந்தனையாளர் வால்டேர். வாழ்க்கையில் வெகு முக்கியமாய் கற்றுக்கொள்ள வேண்டியது எங்ஙனம் வாழ்வது என்பதே என்று கூறிய அறிஞர் ஆவ்ப்ரி, மனிதனுடைய ஆசைக்கு அளவே இல்லை. அவன் ஆற்றலுக்கும் எல்லையில்லை. மனிதனுடைய அந்த ஆசையை நிறைவு செய்யும் பொருட்டு, மனித னுடைய அளப்பறிய ஆற்றலைப் பயன்படுத்தி கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கூறுகிறார். ஆம், உழைப்பின்றி வெற்றி எதுவும் செழிப்பதில்லை.

வாழ்வில் நமக்கு ஏற்படு கின்ற ஒவ்வொரு துன்பமும் நம் முன்னேற்றத்திற்காக கடவுள் அளித்துள்ள வாய்ப்புகள் என்று எண்ண வேண்டும். அந்த வாய்ப்பு களை வெற்றியாக மாற்றுவதற்கு விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும்.

சுவாமி விவேகானந்தர் கூறியதைப் போல் நம்மிடம் இருக்கும் அளவற்றஆற்றலை வெளிப்படுத்த முடியாத போதுதான் நமக்கு தோல்வி ஏற்படுகின்றது.

அத்தகைய தோல்வியை வெற்றியாக்க நம்மிடம் இருக்கும் அளவற்ற ஆற்றலை விடா முயற்சியுடன் உழைத்து வெளிப் படுத்த வேண்டும்.

வாழ்க்கை என்பது போராட்டம்தான் அதை சந்தித்து வெல்லவேண்டும். பொறுமையும், விடாமுயற்சியும் உள்ளவர் கள் சிரமங்கள் எனும் மலைகளை மிதித்தே கடந்து விடுகின்றனர் என்கிறார் நம் தேசபிதா.

மனிதனின் முயற்சிகளில் தோல்வி இருக்கலாம் ஆனால் முயற்சியே தோல்வியாக இருக்கக்கூடாது. அப்படி முயற்சி தோல்வியாகாமல் இருக்க விடாமுயற்சியுடனும், மன உறுதியுடனும், எதற்கும் அஞ்சாத திட சிந்தனையுடனும் உழைக்க வேண்டும். பொதுவாக நம்பிக்கையை இறைநம்பிக்கை, தன்னம்பிக்கை என்று இரண்டு வகையாக பிரிக்கலாம்.

“வாழ்க்கையில் உங்களுக்குத் தரப்பட்டசுமைகள், உங்களை வாழ்வில்

உயர்த்துவதற்காக இறைவன் அளித்துள்ளதாக உண்மையில் நம்புங்கள்”

இப்படிப்பட்ட மனோபாவமே மகிழ்ச்சியையும், அதன் மூலம் முன்னேறிச் செல்லத் தூண்டுதலையும் அளிக்கிறது” என்று கூறுகிறார் சிந்தனையாளரான காப்மேயர்.

ஆண்டவனிடத்தில் நம்பிக்கை இல்லாதவன் தன் இடத்திலேயே தன்னம்பிக்கை அற்றவன் என்கிறார் விவேகானந்தர். ஆம்! இறைவனிடத்தில் நம்பிக்கை வைத்து வாழ்வில் உயர்வதற்கு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இதோ சில தன்னம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட சில வெற்றிச் சிந்தனைகளை நினைவில் கொள்வோம்.

• பெரிய செயல்களை சாதிக்க மிக முக்கியமானது தன்னம்பிக்கை.

•சிக்கல்தான் மிகப்பெரிய சாதனைகளையும், மிகவும் வசதியான வெற்றிகளையும் உருவாக்குகிறது.

• தன்னம்பிக்கையே வாழ்க்கையின் சக்தி.

• தன்னம்பிக்கையுடைய ஆன்மாவின் ஆற்றல் அளவற்றது.

சிந்தனையாளர் வில்கி “என் வாழ்க்கையில் நான் ஒரு மாபெரும் உண்மையைக் கண்டுபிடித்தேன். பயப்படும் விஷயங் களை எதிர்த்து தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்படும்போது அவை இருக்கும் இடமே தெரியாதபடி ஓடி மறைகின்றன என்பதே அந்தக் கண்டுபிடிப்பு” என்கிறார்.

எவனொருவனுக்குத் தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப் பிட்டன. புதிய மதமோ தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று கூறுகிறது என்று கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்.

ஒவ்வொரு மனிதனும் தனக்கு ஏற்பட்ட தோல்வியை நினைத்து மனதை தளரவிடக்கூடாது. ஒவ்வொரு தோல்வியிலும் வெற்றிக்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. அச்சத்தை வெல்வதே முதல் வெற்றி. எந்த பெரிய வெற்றியும் மிகவும் எளிதான முறையால் கிடைத்துவிடுவதில்லை. வேதனையின்றி வெகுமதியும், முள் இன்றி அரியணையும் இல்லை என்றே கூறுகிறார் வில்லியம் பென் என்ற சிந்தனையாளர். இத்தகைய அச்சத்தையும், வேதனையையும் வெல்வதற்கு தன்னம்பிக்கை யுடன் விடாமுயற்சியை இணைத்து உழைக்க வேண்டும்.

தன்னம்பிக்கையுடன் இருக்கும்போது எந்த காரியமும் கடினமாகத் தெரிவதில்லை. தீவிர தன்னம்பிக்கை இருந்தால் தேடும்பொருள் கிடைத்தே தீரும். ஆம், ஒழுக்கமும், தன்னம்பிக் கையுடன் கூடிய ஆற்றலும் மதிப்புள்ள முதலீடாகும்.

“துயரப் புயல்கள் வீசிய போதிலும்

தோல்வி இருட்டு தொடர்ந்த போதிலும்

சோதனை அடுக்கு சூழ்ந்த போதிலும்

நினைவில் வைக்க வேண்டிய மந்திரம்

உனக்கு நீயே ஒளியாக இரு”

என்ற புத்தரின் தன்னம்பிக்கைக்குச் சான்றான வரிகளை மனதில் நிறுத்தி,

கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம் பிக்கை இவை மூன்றும் வெற்றிக்கான அடிப் படையாகக் கருதி, விண்ணைத்தொட முயலுங்கள் உங்களுக்கு மேகங்களாவது கிடைக் கட்டும் என்று எண்ணங்களை உயர்வானதாக எப்பொழுதும் மனதில் இருத்தி,

ஒவ்வொரு மனிதனும் வெற்றி என்ற மிக உயர்ந்த சிகரத்தை அடைய முயற்சி என்ற ஊன்றுகோல் மூலம் தன்னம்பிக்கையுடன், தளரா மனம் பெற்று விடாமுயற்சியுடன் உழைத்து பார்போற்ற வாழ்வோம்.

3 comments:

  1. "ஒவ்வொரு மனிதனும் வெற்றி என்ற மிக உயர்ந்த சிகரத்தை அடைய முயற்சி என்ற ஊன்றுகோல் மூலம் தன்னம்பிக்கையுடன், தளரா மனம் பெற்று விடாமுயற்சியுடன் உழைத்து பார்போற்ற வாழ்வோம்."

    ReplyDelete

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.