You will be redirected to the script in

seconds
Kalvisolai.Info: உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிதை மழை : மூன்றரை மணி நேரம் "நனைந்தார்' முதல்வர்
உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Saturday, June 26, 2010

உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிதை மழை : மூன்றரை மணி நேரம் "நனைந்தார்' முதல்வர்

"யாரை அழைத்து வந்து கவியரங்கத்தை தொடங்கி வைப் பேன்...?' என்ற கவிதை வரிகளுடன் ஈரோடு தமிழன்பன், கவியரங்கத்தை துவக்கி வைத்தார்.


"கலைஞர் என்பது

தாயின் ஆண்பால் பெயர்.

அவர் வேட்டி கட்டுகிறார்,

ஆனால், அவர் இதயம் எப்போதும்

கசங்காத புடவையோடு தான்...

அவரது கபால களஞ்சியத்தில்

ஆண் எண்ணங்களை விட,

ஈரப்பெண் எண்ணங்களே அதிகம்.

இல்லாவிட்டால் கோபாலபுரம் வீட்டை

கொடையாக தரமுடியுமா?

அந்த அவ்வையார் காலத்தில்

இவர் இருந்திருந்தால்,

அதியமான் ஏமாந்திருப்பான்.

அவனுடைய சங்கப்பாடலுக்கு எல்லாம்

இவர் சபாநாயகர் ஆகியிருப்பார்...'என, முதல்வர் மீது தமிழன்பனின் கவிமழை பொழிய, அரங்கம் அதிர கரவோசை எழுந்தது. அடுத்து, கவியரங்கத்துக்கு தலைமை வகித்த வைரமுத்து முழங்கினார். "பாப்பநாயக்கன்பாளையத்திலுள்ள டீ கடையில் நின்றிருந்தேன்...' என துவங்கி, தமிழச்சிக்கும் தனக்கும் இடையே நடந்ததாக கற்பனை கவிதை உரையாடலை அடுக்கி, பலரையும் தன்வசம் ஈர்த்தார்.

அடுத்ததாக, கவிஞர் விவேகா பேசினார். எதுகை மோனையில் முதல்வரை புகழ்ந்துபாடிய இவர்...

"சென்னைக்கு தெற்கே உள்ள

திருக்குவளையின் தான்,

தமிழுக்கு கிழக்கு பிறந்தது...'

எனத் துவங்கி, முதல்வர் கருணாநிதியை ராஜதந்திரி, முந்திரி, பாதிரி, ஒரு மாதிரி என அடுக்கிக்கொண்டே போனார். இவரது பேச்சின் போது, அரங்கில் இருந்தோரில் பலரும் நெளிந்தனர். காரணம், இவருக்கு அளிக்கப்பட்டிருந்த தலைப்பு, "சமத்துவம் பூக்க... கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக்கூட்டம்' என்பது; ஆனால், தலைப்புக்கு பெரும்பாலும் தொடர்பில்லாமலே இறுதிவரை நேரத்தை கரைத்து முடித்தார்.

அடுத்து "ஆதிக்கம்...' என்ற தலைப்பில் பேசிய பேராசிரியர் கருணாநிதி, முதல்வரை பார்த்து... "அய்யா, நீங்கள் நடந்து வரும் போது இருவர் மீது கைவைத்து வருகிறீர்கள். இதற்கு காரணம், அகவையல்ல (வயது); தம்பிகளின் இதயங்களையெல்லாம் உங்கள் இதயத்தில் சுமப்பதினால் பாதம் தாங்காமல், இருவர் தோள் மீது கைவைத்து வருகிறீர்கள்...' என்றார். மேலும், "தமிழர்களே... பொங்கலுக்கு கரும்பை வைத்து கும்பிடுகிறீர்கள் இனிமேல், தலைவர் தலைவைத்து படுத்த இரும்புத் தண்டவாளத்தையும் கும்பிடுங்கள்...' என்றார். அடுத்து, "பகுத்தறிவு தழைக்க...' என்ற தலைப்பில் நா. முத்துக்குமார் பேசினார்.
"சமதர்மம்...' என்ற தலைப்பில் கயல்விழியை பேச அழைத்த வைரமுத்து, "கலைஞர் வீட்டுச் சொத்து' என வர்ணித்தார். மேலும், "யாருக்கு கிட்டும் இந்த வாய்ப்பு? தாத்தா தலையாட்ட, பாட்டி தாலாட்ட, அம்மா பாராட்ட, சித்தப்பா சீராட்ட... பாடவா பெண்ணே' என்றழைத்தார்; பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கரவொலி.

"அடையாளம் மீட்க...' என்ற தலைப்பில் மரபின் மைந்தன் முத்தையா கவிதை வாசிக்கையில், செம்மொழி மாநாடு முன்னிட்டு கோவையில் நடந்துள்ள வளர்ச்சிப் பணிகளை பாராட்டி, புகழ்ந்தார்.

"எத்தனை வேகமாய் எல்லாம் நடந்தது?

மண்ணெடுத்தார் மாலையிலே

தார் தெளித்தார் இரவினிலே

காலையில் கண் விழுத்து பார்க்கையிலே

கண்ணாடி போல மின்னியது சாலை.

சருக்கிவிட்ட பள்ளங்கள் சமச்சீராய் ஆனது

வழுக்கிவிட்ட சாலையிலே வாகனங்கள் போகிறது

வெறிச்சோடி கிடந்த வீதி சந்துகளும்

குளித்து தலைமுழுகி கலகலப்பாக

இருக்கிறது.

துணைமுதல்வர் வந்து வந்து

தூண்டிவிட்ட காரணத்தால்

இணையில்லா வெளிச்சத்தில்

ஜொலிக்கிறது எங்கள் கோவை...' என்றார்.

கொங்கு தமிழில், பொங்கிய இவரது கவிதையை கேட்டு அரங்கமே கரவோசையில் ஆழ்ந்தது. அடுத்து, "தன்மானம் காக்க...' என்ற தலைப்பில் நெல்லை ஜெயந்தா, "தாய்த்தமிழ் வளர்க்க...' என்ற தலைப்பில் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கவிதை வாசித்தனர். மூன்றரை மணி நேரம் முழங்கிய கவியிடி முழக்கத்தை, முதல்வர், துணைமுதல்வர் உள்ளிட்டோர் ரசித்து கேட்டனர். மாநாட்டு பந்தலுக்குள் இருந்தாலும் கவிதை மழையில் நனைந்த பல ஆயிரம் பேர், வெயிலில் உலர்ந்து திரும்ப சிறிது இடைவேளை கிடைத்ததாக கருதி, பட்டிமன்றம் துவங்கிய நேரத்தில் பரபரப்பாக வெளியேறினர்

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.