You will be redirected to the script in

seconds
Kalvisolai.Info: செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செம்மொழி அலுவலகம்: முதல்வர் கருணாநிதி
உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Saturday, June 26, 2010

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செம்மொழி அலுவலகம்: முதல்வர் கருணாநிதி

இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பல்வேறு கட்சித் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஏராளமான கருத்துகள், அறிவுரைகள், கட்டளைகளை வழங்கியுள்ளனர்.
தமிழரை வாழ வைக்கவும், தமிழை மேலும் உயர்த்தவும் என்னென்ன செய்ய வேண்டும் என்று இங்கு தலைவர்கள், மக்கள் கொடுத்த கட்டளைகளை ஏற்று நிச்சயம் செயல்படுவோம் என்று நான் உறுதி அளிக்கிறேன். எங்கும் தமிழ் என்று கூறும் நாம், ஏங்கும் தமிழ் என்ற கவலையளிக்கும் கட்டத்தில் உள்ளோம்.

கூட்டணி சேர்க்கும் சக்தி:

இங்கு 20-க்கும் மேற்பட்ட கட்சியினர் உள்ளதைப் பார்த்து, மறுபடியும் பழைய கூட்டணியைப் பார்ப்பது போல் உள்ளதே என்று சிலர் கேட்டனர். ஆனால் கூட்டணி கவிழ்ந்தாலும், பிரிந்தாலும் எல்லா கட்சிகளையும் மீண்டும் சேர்க்கும் சக்தி எனக்கு உள்ளது. அது மாய சக்தியா, மந்திர சக்தியா என்று கேட்டால் அது நான் பெற்ற தமிழ் சக்தி என்றுதான் கூறுவேன்.

இந்த மாநாட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி ஆகியோர் வருவார்களா என்று அச்சத்தோடு இருந்தேன். ஆனால் அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையேயும் தமிழுக்காக வந்துள்ளனர்.

இந்தக் கருத்தரங்கில் பேசிய தங்கபாலு எனக்கு 10 கோரிக்கைகள் வைத்துள்ளார். கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய இடத்தில் உள்ளவரே கோரிக்கை வைக்கிறார்.

உயர் நீதிமன்றத்தில் தமிழ்:

உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி கோரிக்கைக்கு அவர்கள் ஒப்புதல் வழங்காதது மனமில்லாததால் அல்ல. அவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளதால்தான்.

நாங்கள் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்ற வழியில் வந்த வீர வரலாற்றுக்கு உரியவர்கள். தமிழுக்காக தமிழகத்தில் பெரும் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும். அது இந்த மாநாட்டில் கலந்து கொள்வதாலோ, அரங்குகளில் நடைபெறும் அமர்வுகளாலோ முடிந்துவிடக் கூடியது அல்ல.

சங்க காலம் முதல் இப்போது வரை தமிழ் பல்வேறு சிக்கல்களைக் கண்டுள்ளது. மூவேந்தர்கள் ஆட்சியில் சங்க இலக்கியம் தோன்றியது. ஆனால் களப்பிரர்கள் ஆட்சியில் தமிழுக்கும் இருண்ட காலம் ஏற்பட்டது. இதைப் போலவே 14-ம் நூற்றாண்டு முதல் 20-ம் நூற்றாண்டு வரை தமிழ் சீரழிந்துபோனது.

அதையேதான் நாம் இன்று கவலையோடு காண்கிறோம். இந்த நிலையை மாற்ற பரிதிமாற்கலைஞர் முதலானோர் முயன்றனர். இதையடுத்து தமிழுக்கு இப்போதுதான் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மாநாடு முடிவதற்குள்...
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது போல மைசூரில் உள்ள செம்மொழி அலுவலகத்தை தமிழகத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் ஒரு சிறிய இடத்தை வாடகைக்கு வாங்கி நடத்துகிறோம்.

புதிய சட்டசபைக் கட்டடம் கட்டப்பட்ட பிறகு பழைய சட்டப்பேரவைக் கட்டடத்தை என்ன செய்வது என்று யோசித்தோம். இப்போது பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செம்மொழித் தமிழ் தலைமை அலுவலகம் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அங்குள்ள முதல்வர் அறை, செம்மொழித் தலைமை அலுவலர் அறையாக மாற்றப்படும். கோவை மாநாடு முடிவடைவதற்குள் கோட்டையில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு அலுவலகம் அமைக்கும் பணிகள் முடிந்துவிடும்.

செம்மொழி அந்தஸ்து பெற்ற பிறகு நாங்கள் அமைதியாக இருந்துவிடாமல், தமிழ் வாழ, வலிமை பெற நல்ல அடித்தளம் அமைத்து வருகிறோம். மொழியின் பெயரை மாற்றி விட்டு, வைரக் கிரீடம் வைத்துவிட்டால் மட்டும் போதும் என்று இல்லாமல் கணினியில் தமிழ், தமிழ் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு என்று எதிர்காலத்தில் எல்லாவற்றையும் பெற நிச்சயம் உழைப்போம் என்றார் முதல்வர்.

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.