You will be redirected to the script in

seconds
Kalvisolai.Info: ஏலகிரி
உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Monday, September 13, 2010

ஏலகிரி

அன்றாட பரபரப்பான வாழ்க்கையிலிருந்து சற்று தங்களை விடுவித்துக்கொள்ள விரும்புவோரும், கொளுத்தும் கோடையிலிருந்து தப்பிக்க நினைப்போரும் பெரும்பாலும் தஞ்சம் புகும் இடங்கள் தமிழகத்தின் மலைப் பகுதிகள். ஆனால், இவற்றுக்காக மட்டுமின்றி, இயற்கையை நேசிக்கும் பலரும் அதன் இன்னிசையைக் கேட்டு, மனதை இலகுவாக்கிக்கொள்ளவும் ஏற்ற இடம் ஏலகிரி மலைப்பகுதி.

வாணியம்பாடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில், வழியில் பொன்னேரி கிராமத்தில் இருந்து ஏலகிரி மலைக்குப் பாதை பிரிகிறது. அங்கிருந்து 14 கி.மீ. தூரத்தில் ஏலகிரி மலையை அடைய முடியும். சற்று தூரத்திலேயே மலைப் பாதை தொடங்கிவிடுகிறது. மொத்தம் 14 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இந்த மலைப் பாதையில் பயணித்தால், ஒவ்வொரு வளைவுக்கும் காரி, பாரி, ஓரி, ஒüவையார், கபிலர், கம்பர், இளங்கோ, திருவள்ளுவர், பாரதியார், பாவேந்தர் எனத் தமிழ் வளர்த்த புலவர்கள், கவிஞர்களின் பெயர்கள்.

சாலைகள் அனைத்தும் பளிச்சென, புத்துயிர் பெற்று, பள்ளம் மேடின்றி, அழகாகப் பராமரிக்கப்பட்டிருந்தன.

13-வது வளைவு சென்றபோது, அங்கு வனத்துறை சார்பில் டெலஸ்கோப் மையம் அமைக்கப்பட்டிருந்தது. அதில், வனத்துறை ஊழியர் ஒருவர், டெலஸ்கோப் கருவிக்குப் பாதுகாப்பாக நின்றிருந்தார். அங்கிருந்து பார்த்தபோது, கீழே பொன்னேரி கிராமத்தின் இயற்கை அழகை ரசிக்க முடிந்தது. டெலஸ்கோப் பயன்படுத்த கட்டணம் ஏதும் கிடையாது.

அடுத்த ஒரு கொண்டை ஊசி வளைவுக்குப் பிறகு, ஏலகிரி மலையின் சமதளப் பரப்பு தென்படுகிறது. அங்கு புங்கனூர் கிராமத்தில் ஏரி இருக்கிறது. ஏலகிரியில் படகு சவாரி செய்வதற்கான மிகப் பெரிய ஏரி இது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் எனப் பலர் ஒரே நேரத்தில் சவாரி செய்வதற்கான வகை, வகையான படகுகள் உள்ளன. சுற்றுக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கிறார்கள். இதை மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் கவனித்து வருகின்றனர்.

படகுத் துறைக்கு எதிரேயே இயற்கைப் பூங்கா அமைத்திருக்கின்றனர் சுற்றுலாத் துறையினர். இதை தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது. புல்வெளிப் பூங்கா இது. இதன் நடைபாதையின் இரு பக்கமும் பச்சைப் பசேலெனப் புல் தரைகள், அழகான செடிகள், 5 செயற்கை நீரூற்றுகள், இசைக்கு ஏற்ப நடனமாடும் செயற்கை நீரூற்று, செயற்கையாகவே உருவாக்கப்பட்ட சிற்றருவி, தொட்டிகளில் பார்வைக்கு வைக்கப்பட்ட மீன்கள், ரோஜாப் பூந்தோட்டம் என அழகின் அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கிறது.

அந்தப் பூங்காவின் நடைபாதையில் மாலை நேரத்தில் மெல்ல நடைபழகினாலே, கண்களுக்கு இதமளிக்கும் அழகும், அங்கு உடலைத் தழுவும் குளிர்காற்றும், நமது மனதின் அத்தனை அழுத்தத்தையும் துடைத்தெறிகிறது. பிற கோடை வாசஸ்தலங்களோடு ஒப்பிடுகையில், இயற்கை சூழலுக்கும், தட்பவெப்ப நிலைக்கும் ஏலகிரி ஓரளவுக்கே மாறுபட்டிருக்கிறது.

கடல் மட்டத்திலிருந்து 1045 மீட்டர், அதாவது 3,400 அடி உயரத்தில் இந்த ஏலகிரி அமைந்திருக்கிறது. இதனால், கோடை காலத்திலும் சில்லென வீசும் காற்று, இரவில் எப்போதும் குளிர் என மனதுக்கு இதமளிக்கும் சூழல். குளிர்காலத்தில் இங்குள்ள குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்ஷியஸ், கோடை காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்ஷியஸ். கோடை காலத்தில் வெயில் நிலவினாலும், குளிர்ந்த காற்று வீசுவதை உணர முடியும்.

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.