You will be redirected to the script in

seconds
Kalvisolai.Info: கருப்பினத் தலைவரே வருக, வருக...
உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Sunday, October 31, 2010

கருப்பினத் தலைவரே வருக, வருக...

உலகில் கருப்பின மக்கள் சந்தித்த துன்பமும், துயரமும் சொல்லி மாளாது. தோல் கருப்பாய் பிறந்துவிட்ட ஒரே காரணத்துக்காக அவர்கள் இனவெறி எனும் பேயால் ஆட்டிப்படைக்கப்பட்டனர். அதிலும், அமெரிக்க கருப்பர்கள் வெள்ளையர்களால் மிருகங்களைவிட கேவலமாக நடத்தப்பட்ட பரிதாபத்தை நினைத்தால் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்துகிறது. அமெரிக்கக் கருப்பின மக்கள் இனவெறி கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை மனிதநேயம் படைத்த சில வெள்ளையர்களாலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அப்படி கருப்பின மக்களின் துயரைக் கண்டு 145 ஆண்டுகளுக்கு முன்பு பொங்கி எழுந்தவர்தான் அமெரிக்க வெள்ளை இனத்துப் பெண்மணியும், எழுத்தாளருமான ஹேரியட் பீச்சர் ஸ்டோ. அமெரிக்காவில் கருப்பர் இன மக்கள் எப்படியெல்லாம் இழிவாக நடத்தப்படுகின்றனர், சித்திரவதை செய்யப்படுகின்றனர் என்பதை "டாம் மாமாவின் குடில்' என்ற கதையில் தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டினார்.

அந்தக் கதையில் ஒரு காட்சியைக் காண்போம்: வெள்ளை முதலாளியால் ஏலத்துக்கு எடுக்கப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கருப்பின இளைஞன் ஜார்ஜ். இவன், நெடுந்தொலைவு ஓடிவந்து, பிரிந்து போன தன் மனைவியை, குழந்தையைப் பார்க்கிறான். அவனது குழந்தை மறுநாள் ஏலச்சந்தையில் விற்கப்படுகிறது என்பதை அறிந்த மனைவியும் ஓடிவருகிறாள். இருவரும் ஓரிடத்தில் சந்திக்கிறார்கள்.

அப்போது அவள் அவனுடைய உடம்பைப் பார்த்துவிட்டு, "ஏன் இந்த ரத்தக்காயங்கள்' என்று கேட்கிறாள். "எல்லாம் எஜமானன் கொடுத்த பரிசு. இப்புவியில் நாம் பிறந்ததே பாவம். நாம் மனிதர்கள் அல்ல. பண்டங்களைவிடக் கேவலமான பிண்டங்கள். இதோ பார், என் உடம்பெல்லாம் என் எஜமான் சவுக்கால் அடித்த ரத்தக் காயத்தின் தழும்புகள்' என்கிறான். உடனே, "ஏன் உன்னை எஜமான் சவுக்கால் அடித்தான்' என்று வினவுகிறாள் மனைவி.

"ஏன் தெரியுமா? என் எஜமான் ஒவ்வொரு நாளும் என்னை சவுக்கால் அடிக்கிறான். அரை வயிற்றுப் பசி தணிக்க அவன் வீசி எறியும் ரொட்டித் துண்டுகளை, நான் பிரியமாக வளர்த்த நாய்க்குக் கொடுத்தேன். அதை ஒருநாள் அவன் பார்த்துவிட்டான். அந்த நாய் செல்லமாக என்னிடம் கொஞ்சி விளையாடுவது அவனுக்குப் பொறுக்கவில்லை.

"நான் உனக்குக் கொடுத்த ரொட்டித்துண்டுகளை நாய்க்கு ஏன் கொடுத்தாய்?' என்று கேட்டான்.

"எஜமானே! இந்த நாயை நான் ஆசையோடு வளர்க்கிறேன். இந்த நாய் மீது நான் உயிரையே வைத்திருக்கிறேன்' என்றேன். நான் கூறியதைக் கேட்ட அவன், பொங்கிப் போனான். "ஆசை, பாசத்துக்கு எல்லாம் இங்கே வேலை கிடையாது. உன் மனைவி, தாயிடம்கூட அன்புகாட்ட உனக்கு அனுமதி இல்லாதபோது, ஒரு நாயிடம் எப்படி அன்பு காட்டுவாய்?' என்று கண்டித்தான். நான் பிள்ளையைப்போல் செல்லமாக வளர்த்த நாயை, நானே அடித்துக்கொல்ல ஆணையிட்டான்.

மறுத்தேன். என்னை மரத்தில் கட்டிவைத்து உதைத்தான். என் கண் எதிரே நாயையும் சித்திரவதை செய்தான். பின்னர் அதன் கழுத்தில் ஒரு கல்லைக் கட்டிக் குளத்தில் வீசினான். அது கொஞ்சம் கொஞ்சமாகக் குளத்தில் மூழ்கியது. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கடைசியாக அந்த நாய் என்னைப் பரிதாபமாகப் பார்த்தது. "என் பிரியமானவனே, என்னை நீ காப்பாற்ற வரவில்லையே!' என்று ஏக்கத்தோடு என்னைப் பார்த்துக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிச் செத்துப்போனது. நம்மைப் படைத்தவனிடம் இரக்கம் இல்லை. நீதி இல்லை, இப்படி வாழ்வதைவிட மடிவதே மேல் என்றான் கண்ணீர்மல்க. எதிரில் நிற்கும் மனைவியின் கண்களும் கலங்குகின்றன. இப்படி ஒரு காட்சியை அமைத்திருக்கிறார்.

அமெரிக்கக் கருப்பின மக்கள் வெள்ளையர்களின் கால்களால் நசுக்கப்பட்டதை இதைவிட எப்படி எடுத்துக்காட்ட முடியும்? முடியவே முடியாது.

ஹேரியட் பீச்சர் ஸ்டோவின் இந்தக் கதை உலகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. எனினும் என்ன பயன்? உலகே வெள்ளையர்கள் ஆதிக்கத்தால் அடிமைப்பட்டுக் கிடந்ததால் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. ஆனால், ஹேரியட் பீச்சர் ஸ்டோவின் எழுத்து அமெரிக்காவில் மட்டும் கருப்பின உரிமை ஆர்வலர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. 1863-ல் கருப்பின மக்களின் உரிமையை நிலைநாட்ட ஆபிரகாம் லிங்கன் பிரகடனம் செய்தார்.

அமெரிக்காவில் கருப்பர் இனத்தை அடிமைத்தளையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆபிரகாம் லிங்கன் விதைத்த உணர்வு விதைக்கு நீரூற்றி உயிர் கொடுத்தவர் மார்ட்டின் லூதர் கிங். லிங்கன் வழி நின்று கருப்பின மக்களின் அடிமைச் சங்கிலியைத் தகர்த்தெறிந்தார்.

அமெரிக்காவில் கருப்பின மக்கள் அடிமைத்தளையில் இருந்து விடுபட்டாலும் ஒரு மனிதனுக்கு இயற்கையாகக் கிடைக்க வேண்டிய உரிமைகள் அவர்களுக்குத் தொடர்ந்து மறுக்கப்பட்டே வந்தன. இயற்கை உரிமைகளே மறுக்கப்பட்ட நிலையில் அரசியல் உரிமையை கனவில்கூட அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாதநிலை.

கருப்பர்கள் மனிதர்களாவே கருதப்படாத, நீக்ரோக்கள் மனிதர்கள் அல்ல என்று நீதித்துறையால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட அமெரிக்க நாட்டிலே இன்று கென்ய நீக்ரோ தந்தைக்குப் பிறந்த பராக் ஒபாமா அதிபராகி இருக்கிறார்.

இந்த சரித்திர நிகழ்வை உலகம் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒபாமா அதிபர் ஆனதன் மூலம் ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கனவுகள் நனவாகியுள்ளன. 1966-லேயே "மனிதன்' நாவல் மூலம் "டக்ளஸ் டில்மன்' என்ற நீக்ரோவை அமெரிக்க அதிபராக்கி அழகுபார்த்தவரல்லவா அண்ணா!

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மாநாட்டு வாசலுக்கு உள்ளேகூட நுழைய முடியாத ஒபாமாவால், எப்படி அதிபர் சிம்மாசனத்தில் அமர முடிந்தது. தன் சாதனைக்குக் காரணமாக அவர் சொல்வதெல்லாம், "ஆம், நம்மால் முடியும்' என்ற மூன்றே சொற்களைத்தான். தன் நம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் அமெரிக்க அதிபராகிச் சரித்திரம் படைத்த வரலாற்று நாயகன், கருப்பின மக்கள் விடுதலைக்காகப் போராடிய மகாத்மா காந்தி பிறந்த இந்திய மண்ணுக்கு முதல் தடவையாக வருகை தர உள்ளார். ஒபாமாவின் இந்த வருகை அமெரிக்காவைவிட இந்தியாவுக்குத்தான் முக்கியத்துவம் வாய்ந்தது. உறவு ரீதியாக அல்ல, கருப்பினத் தலைவர் என்ற உணர்வுரீதியாக.

இதனால் "உலகக் கருப்பின ஒப்பற்ற தலைவர் ஒபாமாவே வருக..வருக' என்று ஒவ்வொரு இந்தியரும் வாழ்த்தி வரவேற்போம். உரிய வகையில் கெüரவித்து வழியனுப்புவோம்!

15 comments:

 1. this site is very informative and usefull for those who are in dark because of their heavy teaching schedule. Lot of thanks for this great service to the entire teaching community.

  ReplyDelete
 2. this site gives information about every educational activities ... thanks a lot

  ReplyDelete
 3. It is useful to those who are dark in this world.obama is a very inspirative leader.

  ReplyDelete
 4. This information is very nice its useful to know Obama story for young's thanks a lot

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. உலகக் கருப்பின ஒப்பற்ற தலைவர் ஒபாமாவே வருக..வருக' என்று ஒவ்வொரு இந்தியரும் வாழ்த்தி வரவேற்போம்........

  ReplyDelete
 7. this information very nice

  ReplyDelete
 8. super story oppama infarmationverynice

  ReplyDelete
 9. This site is very useful to all the teachers and who are applaying for teacher post.... Thank you kalvisolai..... By srinivasaragavan Thirunelveli....

  ReplyDelete
 10. this site is very helpful for learning history of world ,obama is a very good person .i pray he live in the world many years and do many social work

  ReplyDelete
 11. TEARS ARE SHEDDING...CONFIDENT IS INCREASING AFTER READ IT THANK U

  ReplyDelete

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.