You will be redirected to the script in

seconds
Kalvisolai.Info: வ.உ.சி. கண்ட பாரதி
உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Friday, December 17, 2010

வ.உ.சி. கண்ட பாரதி

பாரதியாரின் தந்தை சின்னச்சாமி ஐயரும் வ.உ.சி.யின் தகப்பனார் உலகநாதன் பிள்ளையும் நல்ல நண்பர்கள். சின்னச்சாமி ஐயர் எட்டயபுரம் சமஸ்தானத்து உயர்மட்ட ஊழியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அதே சமஸ்தானத்தின் வக்கீலாகத் திகழ்ந்தவர் உலகநாதன் பிள்ளை.

வ.உ.சி.யின் சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்தில்தான் அப்போது தாலூகா நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் இருந்தன. சமஸ்தான அலுவல் நிமித்தமாக ஒட்டப்பிடாரம் வருகிறபோதெல்லாம் தனது அலுவலக சகாவும் நண்பருமான வக்கீல் உலகநாதன் பிள்ளையின் வீட்டில்தான் தங்குவார் சின்னச்சாமி ஐயர்.

அவ்வாறு தங்கிய நேரங்களில் நண்பர்கள் இருவரும் மற்றும் சிலரும் ஓய்வாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். சின்னச்சாமி ஐயருக்கு ஒரு மகன் இருப்பதாகவும், அவன் அதிபுத்திசாலி என்றும், தமிழில் சுயமாகப்பாடும் திறன் பெற்றவன் என்றும் உலகநாதன்பிள்ளை தனது மகன் வ.உ.சிதம்பரம் பிள்ளையிடம் சி.சுப்பிரமணிய பாரதி குறித்துப் பெருமையாகச் சொல்வதுண்டு. அப்போது வ.உ.சி. பதினைந்து வயதுப் பாலகனாக இருந்தார். பின்னர் வளர்ந்து வழக்கறிஞரான பிறகு தனது பணியின் பொருட்டு சென்னை சென்றிருந்தபோது, தான் தங்கியிருந்த திருவல்லிக்கேணியிலிருந்து நகரப்பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். போகிற வழியில் இந்தியா இதழின் அதிபர் திருமலாச்சாரியாரின் வீடு அங்கிருப்பதை அறிந்தார். அடிக்கடி அவ்வீட்டைத் தாண்டிச் சென்ற வ.உ.சி., ஒருநாள் அவ்வீட்டுக்குள் திருமலாச்சாரியாரைச் சந்திக்கும் நோக்கில் சென்றார். அதிபர், வீட்டின் மாடிப்பகுதியில் இருப்பதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். மாடிக்குச் சென்று திருமலாச்சாரியாரைப் பார்த்துத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் வ.உ.சி.

வ.உ.சி. தனது ஊரையும் பெயரையும் உச்சரித்து முடித்தவுடனேயே திருமலாச்சாரியார் மாடியின் உள்ளே அமைந்த அரங்கை நோக்கி ""பாரதி, உங்கள் ஊரார் ஒருவர் வந்திருக்கிறார்'' என்று உரக்கச் சொல்ல, உள்ளே இருந்த பாரதி, அதிபர் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்தார். இவர்தான் ஆசிரியர் சுப்பிரமணியபாரதி என்று வ.உ.சி.க்கு பாரதியை அறிமுகப்படுத்தினார் திருமலாச்சாரியார்.

முதல் சந்திப்பே இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ஊட்டுவதாக அமைந்தது. இருவருமே ஒருவரையொருவர் நேரில் அதுவரை பார்த்ததில்லையாயினும் இருவரின் பள்ளிப்பருவ காலத்திலேயே இரண்டு பேரின் தந்தைமார்களும் தங்களின் மகன்களைப் பற்றி அக்காலத்திலேயே கருத்துகளையும் தகவல்களையும் பரிமாறிக் கொண்டிருந்த காரணத்தால், ஒருவரைப்பற்றியொருவர் நன்கு அறிந்திருந்தனர்.

பழைய நினைவுகளைப் பாசத்தோடும் பரவசத்தோடும் நினைவுகூர்ந்து பேசி மகிழ்ந்ததோடு பாரதி, திருமலாச்சாரியார், வ.உ.சி. மற்றும் இந்தியா இதழில் பணியாற்றும் இன்னொரு நண்பர் என நால்வரும் பேசியவாறே திருவல்லிக்கேணி கடற்கரைக்குச் சென்றனர். கடற்கரை மணலில் அமர்ந்தபடி அன்றைய நாட்டு நடப்பு குறித்து விரிவாக வெகுநேரம் மிகுந்த அக்கறையோடு கலந்து பேசினர். பெரும் பகுதி நேரம் பாரதியும் வ.உ.சி.யுமே உரையாடினர்.

தனது முதல் சந்திப்பு குறித்து வ.உ.சி., ""அப்பேச்சு அவரைக் கம்பராகவும் என்னைச் சோழனாகவும் நான் நினைக்கும்படி செய்தது'' என்றும், ""என் உள்ளத்தில் மின்மினிப்பூச்சிபோல் ஒளிர்ந்து கொண்டிருந்த தேசாபிமான நெருப்பு விளக்குப்போல ஒளிவிட்டுப் பிரகாசித்தது'' என்றும் பதிவு செய்துள்ளார்.

சென்னை செல்கிறபோதெல்லாம் அன்றாடம் இந்தியா அலுவலகத்துக்குச் சென்று பாரதியுடன் மெய்மறந்து உரையாடியதையும், அவர்கள் இருவரும் அடிக்கடி கடற்கரைக்குச் சென்று நீண்ட நெடுநேரம் அன்றைய அரசியல் நிகழ்வுப் போக்குகள் குறித்துப் பேசுவதுமாக இருந்ததாகவும் வ.உ.சி. தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

பாரதியின் அரசியல் பிரவேசத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வ.உ.சி.யின் அரசியல் நடவடிக்கைகள் தெளிவாகத் தொடங்கிவிட்டன. 1893-ம் ஆண்டிலிருந்தே பாலகங்காதரதிலகரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் உன்னிப்பாகக் கவனித்து வந்ததாக வ.உ.சி.யே குறிப்பிட்டுள்ளார்.

1898-ல் வ.உ.சி. காங்கிரஸ் மகாசபையில் அங்கம் பெற்று அமைப்புரீதியாகவே செயல்பட்டு வந்துள்ளார். வ.உ.சி.யின் அரசியல் தெளிவை, தேசிய இலக்கிய மாத இதழான விவேகபாநு இதழில் 1906-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான சுதேசாபிமானம் எனும் அவரது முதல் அரசியல் கட்டுரையின் மூலம் நன்கு உணரலாம்.

1906-ன் தொடக்கத்தில் பாரதியை தான் முதன்முதலாகச் சந்தித்ததாக தனது வாழ்க்கைக் குறிப்பில் வ.உ.சி. குறிப்பிட்டுள்ளார். பாரதியை முதலில் சந்தித்தபோதே அரசியல் தெளிவோடும் கொள்கை உறுதியோடும் விளக்கியுள்ளார். வ.உ.சி.க்கே பாரதியின் சந்திப்பு புத்தெழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல வ.உ.சி.யைச் சந்தித்ததில் பாரதிக்குப் புத்துணர்ச்சி பிறந்துள்ளது. முதல் சந்திப்பில் தன் உள்ளத்தில் தேசாபிமான நெருப்பு விளக்குபோல் ஒளிவிட்டுப் பிரகாசித்த செய்தியை வ.உ.சி. பாரதியிடம் சொல்லி முடித்தவுடன் மாலை 4 மணியிலிருந்து மெய்மறந்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருக்கும் நிலையில் இருள் சூழத்தொடங்கிய அவ்வேளையில் கடற்கரை மின்சார விளக்குகள் பளிச்சென ஒளிவிட்டு எரியத் தொடங்கின. அதைக் கண்ட பாரதி பிள்ளைவாள், ""சக்திதுணை செய்வாள். நம் உள்ள ஒளி பிரகாசிக்கும்பொழுது மின்னொளியையும் பிரகாசிக்கச் செய்தது நம் அன்னை பராசக்தியே வாழ்க; இனிநம் முயற்சி வெற்றி எடுத்ததெல்லாம் வெற்றி என்பதற்கான சுபசகுனம் இதுதான். வாழி அன்னை வாழி அம்மை சக்தி வாழி'' என்று ஆவேசத்தோடு வ.உ.சி.யிடம் கூறினார் பாரதி.

அடிக்கடி இவ்வாறான இருவரின் சந்திப்பு நிகழ்ந்ததோடு பாரதி வீட்டுக்கு வ.உ.சி. செல்வதும் வ.உ.சி. தங்கியிருந்த இல்லத்துக்கு பாரதி வருவதும், இருவருமாகச் சேர்ந்து உண்பதும் உறங்குவதுமாகத் தோழமை வேரூன்றியது.

அந்தச்சூழலில் பிரான்ஸ், இத்தாலி போன்ற உலக நாடுகளில் நடைபெற்ற போராட்டம் குறித்தும் இன்னும் இதுபோன்ற கிளர்ச்சிகள் பற்றி வெளிவந்திருந்த ஆங்கிலக்கவிதைகள் குறித்தும் பாரதி, வ.உ.சி.க்கு உணர்ச்சிகரமாக எடுத்துக் கூறினார். இவர்களின் உறவின் நெருக்கம் மாமனார், மருமகன் என்று முறை வைத்துத் தங்களுக்குள் அழைத்துக் கொள்ளும் அளவுக்கு அன்னியோன்யமாக இருந்தது.

திருவல்லிக்கேணியிலிருந்த தேசபக்தர்களான மண்டயம் குடும்பத்தாரிடம்- குறிப்பாக திருமலாச்சாரியார், ஸ்ரீனிவாசாச்சாரியார் போன்றவர்களிடம் தீவிரமாக ஆலோசித்த பின்னர் பாரதியும் வ.உ.சி.யும் முன்னின்று சென்னை ஜனசங்கம் என்ற தேசாபிமான சங்கத்தை அமைத்தனர்.

தீவிரவாத தேசியத்தையும் மிதவாத தேசியத்தையும் அடிப்படையாகக் கொண்டு காங்கிரஸ் இயக்கம் இரண்டு பிரிவுகளாக இயங்கி வந்த சூழலில், திலகர் தலைமையில் திரண்ட தீவிரவாத தேசியப் பிரிவின் முன்னணிப் படைத்தளபதிகளாக வ.உ.சி., பாரதி, சிவா ஆகியோர் விளங்கினர்.

சூரத்தில் 1907-ம் ஆண்டு நடைபெற்ற இருபத்து மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டில் தமிழகத்தின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டதோடு அம்மாநாட்டின் நிகழ்வுகளில் பெரும் பங்களிப்பைச் செலுத்தியவர்கள் பாரதியும், வ.உ.சி.யும்.

வ.உ.சி. தூத்துக்குடியில் சுதேசிக்கப்பல் கம்பெனியை நிறுவி வெள்ளையனுக்கு எதிராக இரண்டு சுதேசிக் கப்பல்களை ஓடவிட்டது, அங்குள்ள கோரல் மில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடியது, விபின்சந்திரபாலர் விடுதலை நாளைக் கொண்டாடியது போன்ற புரட்சிகர வடிவங்களில் விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திச் சென்றபோது பாரதி இந்தியா இதழில் இந்த வரலாற்று நிகழ்வுகளையெல்லாம் வரிதவறாமல் பதிவு செய்தார். இந்தச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தனது இதழ்மூலம் தமிழகத்தில் ஒரு புத்தெழுச்சியையே உருவாக்கினார் பாரதி.

வ.உ.சி., சிவா ஆகியோரை ஆங்கிலேய அரசு அடக்கிவிட வேண்டுமென்ற நோக்கில் பல்லாண்டு காலம் சிறைத்தண்டனை அளித்தபோது வெகுண்டெழுந்தார் பாரதி. ""தற்சமயம் சிறைப்படுத்தியிருக்கும் கோயம்புத்தூர் ஜெயிலில் அதிகாரி அவரைக் கைகால் விலங்கிட்டுக் கேவலம் மிருகம்போல் எண்ணெய் ஆட்டும் செக்கிழுக்கும்படி செய்கிறாராம். நடு வெயிலில் தீப்பறக்கும் செக்கிழுத்துக் கஷ்டமடைகிறாராம். அந்தோ இக்கொடிய துன்பத்தை நினைக்கும் போதே நெஞ்சுருகுகிறதே... இங்கெழுதும் போதே கை நடுங்குகிறதே... இக்கொடுந்துன்பத்தைச் சகிக்கும் தேசபக்தர் பாடு எங்ஙனமோ கடவுளேயறிவர்''.

""கைதிகளுக்கு எத்தனை வேலைகள் இருக்க இத்தேசபக்தருக்கு நாற்கால் மிருகங்களும் துன்புறக்கூடிய எண்ணெய் யந்திரம் சுழற்றும் வேலையா கொடுக்க வேண்டும்? அவர் கைகால்களுக்கு விலங்கிடுவதேனோ?'' எ ன்று 1908-ம் ஆண்டு இந்தியா இதழில் மனம் பதைபதைக்க நெகிழ்ந்துபோய் எழுதியுள்ளார் பாரதி.

வெறும் செய்திக் கட்டுரைகள் எழுதுவதோடு நின்றுவிடாமல் அன்றைய திருநெல்வேலி மாவட்டக் கலெக்டர் வின்ச், வ.உ.சி.யிடம் கூறியதாகவும், அதற்கு அவர் மறுமொழி சொன்னதாகவும் பாரதி வடித்த இரண்டு கவிதைகள் ஒரு காவியம்போல் வரலாற்றில் நிரந்தரமாகப் பதிந்து விட்டவை.

தொடக்கத்தில் பாளையங்கோட்டை சிறையில் வ.உ.சி.யும் சிவாவும் அடைக்கப்பட்டிருந்தபோது, சென்னையிலிருந்து பாளையங்கோட்டை சென்று சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இருவரையும் சிறைச்சாலைக்குள் பார்த்து உரையாடிவிட்டு வந்தார் பாரதியார்.

இந்நிகழ்வு குறித்து எழுதும்போது ஸ்ரீசிதம்பரம் பிள்ளையை முன்பு நான் தூத்துக்குடியிலே அவருடைய அரிய பிரசங்கங்களை ஆயிரக்கணக்கான ஜனங்கள் கேட்டுப் புகழ்ச்சி கூறிக் கொண்டிருந்த காலத்தில் பார்த்தபோது அவருடைய முகம் எவ்வளவு பிரசன்னமாகவும் தேஜஸýடனும் விளங்கியதோ அதே மாதிரியிலேயே இப்பொழுதும் இருக்கக் கண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

வ.உ.சி., சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட செய்தி காட்டுத்தீ போல் பரவி மக்கள் எழுச்சியை உருவாக்கிவிட்டது. வரலாறு காணாத பேரெழுச்சி திருநெல்வேலியில் மூண்டு விட்டது. இந்த மக்கள் எழுச்சியை அடக்க காவல்துறை களமிறங்கி கண்மூடித்தனமாகச் சுட்டது. குண்டடி பட்டுச்சாவு, படுகாயம் என்று மக்கள் பதறிக் கொண்டிருக்கும் நிலையில் இதன் விளைவுகளை நேரில் கண்டறிந்து இந்தியாவில் எழுதுவதற்காக பாரதி திருநெல்வேலிக்கே சென்று சம்பவம் நடந்த இடங்களைப் பார்வையிட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து விசாரித்தறிந்து தனது இதழில் விளக்கமாக எழுதினார்.

பாரதி புதுச்சேரியில் இருந்த காலங்களில் அவரைச் சந்திப்பதற்கென்றே புதுச்சேரிக்குச் சென்று அவருடன் தங்கியிருந்து தன்னுடைய தோழமையை வெளிப்படுத்தியவர் வ.உ.சி. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் திரிசூலம் என்றும் மும்மூர்த்திகள் என்றும் போற்றப்பட்டவர்கள் வ.உ.சி., பாரதி, சிவா ஆகியோர்.

இதில் வ.உ.சி., சிவா உறவு குறித்தும், பாரதி-சிவா நட்பு குறித்தும் தனித்தனியாக விரித்துச் சொல்லும் அளவுக்கு ஆழமானவை.

1936-ல் வ.உ.சி. மரணப்படுக்கையிலிருக்கும் வேளையில் காங்கிரஸ் தொண்டர் சிவகுருநாதனை அழைத்து பாரதி பாடலைப் பாடப் பணித்தார்.

"என்று தணியும் இந்தச் சுதந்திரதாகம்' என்ற பாடலை உருக்கம் கலந்த எழுச்சியோடு சிவகுருநாதன் பாட அதைக் கேட்டுக் கொண்டே வ.உ.சி.யின் உயிர் பிரிந்தது.

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.