You will be redirected to the script in

seconds
Kalvisolai.Info: நேர் வழியில் கல்வி நெறி
உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Sunday, February 6, 2011

நேர் வழியில் கல்வி நெறி

கடந்த 1950ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின், 45வது பிரிவில் இடம் பெற்று, 10 ஆண்டுகள் கெடு விதிக்கப்பட்டிருந்தும், நம் நாட்டுக் குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை ஏன் வழங்க இயலவில்லை? அந்த சட்டம் சொன்னது இது தான்: "14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க, இந்த அரசியலமைப்புச் சட்டம் துவங்கிய, 10 ஆண்டுகளுக்குள் அரசு வழிவகை செய்ய வேண்டும்...' இது அமலுக்கு வந்ததா?

இப்போது புதிதாக அரசியலமைப்புச் சட்டத்தின், 86வது திருத்தமாக, 21ஏ பிரிவில் கொண்டுவரப்பட்டு, ஏப்., 1, 2010 முதல் அமலாக்கப் பட்டுள்ள உத்தரவுகளின் சாராம்சம் இதோ:

* ஒரு கல்வி ஆண்டின் முதல் நாளிலிருந்து, ஆறு மாதங்கள் வரை, புதிய மாணவர் சேர்க்கை அனுமதிக்க வேண்டும்.

* அரசு அமைப்புகள் வழங்கும் பிறப்புச் சான்றிதழை பள்ளிகள் வற்புறுத்தக் கூடாது. அது இல்லாதபோது, வயது குறித்து பெற்றோர் அளிக்கும் எழுத்துப்பூர்வமான உறுதிமொழியே போதுமானது.

* எட்டாம் வகுப்பு வரை, எந்த ஒரு குழந்தையையும் பெயிலாக்கக் கூடாது. இவை நிறைவேற்றுவதற்குக் கடினமானதாகவும், கல்வி என்ற ஒரு விஷயத்தையே புரட்டிப் போடும் விதத்திலும் அமைந்துள்ள சட்டங்கள். இது, வரவேற்கக் கூடியதாக, ஆனால் வருமா என்ற ஏக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ள, திருத்தப்பட்ட பிற விதிகள் வருமாறு:

* நகரம், கிராமம் என்றில்லாமல், எல்லா இடங்களிலும் குழந்தைகளின் வீட்டுக்கு அருகே பள்ளிகள் இருக்க வேண்டும் அல்லது தோற்றுவிக்கப்பட வேண்டும்.

* தனியார் பள்ளிகள் நன்கொடை வசூலிக்கக் கூடாது. அப்படி வசூலித்தால், அவர்கள் வசூலித்த நன்கொடைக்கு பத்து மடங்கு, அபராதம் விதிக்க வேண்டும்.

* குழந்தைகளை சேர்க்க நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது. அப்படி நடத்தினால், 25 ஆயிரம் ரூபாய், முதல் முறை, பின், 50 ஆயிரம் வரை, ஒவ்வொரு முறையும், அவர்கள் அபராதம் செலுத்த வேண்டும்.

* அரசு அங்கீகாரம் இன்றி பள்ளிகளை நடத்தினால், ஒரு லட்சம் அபராதம்; தொடர்ந்து நடத்தினால், ஒவ்வொரு நாளுக்கும் பத்தாயிரம் அபராதம் விதிக்க வேண்டும்.

* தனியார் பள்ளிகளில், ஏழைக் குழந்தைகளுக்கு, 25 சதவீத இட ஒதுக்கீடு செய்து, இலவசக் கல்வி அளிக்க வேண்டும்.

இதற்கெல்லாம் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? போகட்டும்! நம் கவலையெல்லாம் முதலில் சொன்ன, மூன்று உத்தரவுகள் தான்... அரசு அமைப்புகள் வழங்கும் பிறப்புச் சான்றிதழ் கட்டாயமல்ல என்றாகிவிட்டால், பிஞ்சு வயதிலேயே, குழந்தைகளின் வயதை மறைத்தும், குறைத்தும், பள்ளிகளில் தள்ளும் நிலை உருவாகக்கூடும். "மூன்று மாதங்கள்தானே குறைவு; பரவாயில்லை... சேர்த்துக் கொள்ளுங்கள்' என்று, பெற்றோர் தரப்பிலிருந்து வரும் அபாய கோரிக்கைகள், எங்களை போன்ற கல்வியாளர்கள் நன்கு அறிந்ததே. அடுத்து, ஒரு கல்வியாண்டின், முதல் ஆறு மாதங்கள் வரை மாணவர்கள் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு. இது எங்கே போய் முடியும் என்று நினைக்கவே அச்சமாக இருக்கிறது. சில பெற்றோர் அலட்சியமாக, காலதாமதம் செய்து, பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தல், தகுந்த காரணங்கள் இன்றி, அந்த ஆறு மாதத்தில் பள்ளி மாற்றத்தில் பெற்றோர் ஈடுபடுவது, ஆண்டில் பாதி படிப்பை படிக்க இயலாமல் குழந்தைகள் சிரமப்படுதல், பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறித்து ஆறு மாதம் வரை பள்ளிகளும், அரசும் அறியாமல் இருத்தல் போன்ற, பல பிரச்னைகள் இதில் உண்டு. அடுத்து, எட்டாம் வகுப்பு வரை, எல்லாக் குழந்தைகளையும் பாஸ் செய்ய வேண்டும் என்ற சட்டம். "கட்டாயக் கல்வி' என்ற பெயரில் உருவாகும் இச்சட்டம், "கட்டாயப் பள்ளி' என்ற விதமாக மட்டுமே அமையும். இப்படி பாஸ் செய்து, ஒன்பதாம் வகுப்புக்குள் நுழையும் குழந்தைகள் எப்படி "படித்து' பாஸ் செய்வர்? ஐந்தில் வளையாதது, பதினைந்தில் வளையும் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை. இதில் ஆபத்து என்னவெனில், பத்தாம் வகுப்பில் இவர்கள் எப்படியாவது தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, அந்த இரண்டு ஆண்டுகளில் இவர்கள் 24 மணி நேரமும் படிக்க வேண்டும் என்று பள்ளிகளும், பெற்றோரும் மிரட்டக்கூடிய நிலை ஏற்படும்.

"பத்தாம் வகுப்புக்கு இவர்களை அனுப்பினால், 100 சதவீத தேர்ச்சி கிடைக்காது' என்பதற்காக, ஒன்பதாம் வகுப்பிலேயே இக்குழந்தைகளை பள்ளிகள் பெயிலாக்கினால் அவர்களின் எதிர்காலம் என்னாகும்? டுட்டோரியல், தனித் தேர்வுகள் என்று ஓரங்கட்டப்பட்டு, கல்லூரிகளால் புறக்கணிக்கப்பட்டு, வாழ்க்கை தோல்வியில் முடியும் அபாயமே அதிகம். நம் குழந்தைகளுக்குத் தேவை கட்டாயப்பள்ளி மட்டுமல்ல; கட்டாயக் கல்வியும் கூட. அதற்குத் தேவை பள்ளிகளுக்கென்று, ஆசிரியர்களுக்கென்று சில சுதந்திரங்கள்; சில அதிகாரங்கள். தெரிந்தும் தவறு செய்யும் பெரியவர்களை நல்வழிப்படுத்த எப்படி காவல் துறைக்கு கட்டாய சட்டங்கள் தேவையோ, அதே போல, தெரியாமல் தவறு செய்யும் குழந்தைகளை நல்வழிப்படுத்த அவர்களுக்கு, "கட்டாயக் கல்வி' அளிக்க பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் சுதந்திரங்கள் இருந்தாக வேண்டும். இன்றைய புள்ளி விவரப்படி, ஒரு ஆசிரியருக்கு, 50 மாணவர்கள் என்பதே நாடெங்கும் உள்ள பள்ளிகளின் நிலை. இதை இச்சட்டம் குறிப்பிடுவதைப் போல, 1:30 என, மாற்றவும், லட்சக்கணக்கான கிராமங்களில், குழந்தைகளின் வீட்டருகே பள்ளிகள் அமைக்கவும் பெரும் தொகை செலவாகும். 2010ல் மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வின்படி, இதையெல்லாம் நிறைவேற்ற, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 2 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இதில், மத்திய அரசும், மாநில அரசும் 68:32 என்ற விகிதத்தில் பங்களிக்க வேண்டும் என, முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல மாநில அரசுகள், "எங்களிடம் பணமில்லை' என, கைவிரித்துள்ளன.

நம் நாட்டில் கல்வி என்பது வெறும் பொழுது போக்கோ, சமுதாயக் கடமையோ மட்டும் அல்ல. மக்கள் தொகை என்ற கடலில், வேலைவாய்ப்பு மற்றும் குடும்ப வளம் என்ற நீச்சல் போட்டியில், நீந்திக் கரை சேர வேண்டிய நிலை இங்கு எல்லா மாணவர்களுக்கும் உண்டு. பெற்றோர் எதிர்பார்ப்பது, தங்கள் குழந்தைகள் பாஸ் என்ற வெற்று சான்றிதழ்கள் அல்ல. பேச்சு, எழுத்து, புத்திக்கூர்மை, பண்புகள் என எல்லாவற்றிலும் அவர்கள் வல்லவர்கள் என்ற சான்றுகளே அவர்களின் தேவைகள். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பள்ளிகளுக்குள் நுழையலாம். அங்கு படித்தும், படிக்காமலும் இருக்கலாம். எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் லீவு போடலாம். படி, ஒழுங்காக நடந்துகொள் என்ற ஆசிரியர்களின் கட்டளைகளை புறந்தள்ளலாம் என்றானால், "கல்வி' என்பதுதான் என்ன? எனவே, கல்வியிலும் தேவை சட்டம், ஒழுங்கு. சட்டத்தை இயற்றுபவர்களும், விதிகளை உருவாக்குபவர்களும் இதையெல்லாம் கவனத்தில் கொள்வரா?

பா.புருஷோத்தமன், கல்வியாளர்

2 comments:

  1. this article reflects my(our) feelings about the current position of our situation about education and government policies.

    ReplyDelete
  2. பத்மநாபன்April 16, 2011 at 1:17 PM

    கல்வியாளர்களின் கருத்தை வெளிப்படுத்திய புருஷோத்தமனுக்கு நன்றி. சட்டத்தை உருவாக்குபவர்கள் இதைக் கவனிப்பார்களா?

    ReplyDelete

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.