You will be redirected to the script in

seconds
Kalvisolai.Info: April 2011
உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Sunday, April 24, 2011

என்.எஸ்.கிருஷ்ணன் - சி‌ரிக்க வைத்த சிந்தனையாளர்

நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் (என்.எஸ்.கே.) பிறந்தது கன்னியாகும‌ரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள ஒழுகினசே‌ரி. அப்பா சுடலையாண்டி பிள்ளை, தாய் இசக்கியம்மாள். பிறந்த வருடம் 1908 நவ. 29 ஆம் நாள். ஏழு பே‌ரில் இவர் மூன்றாவது பிள்ளை. வறுமை காரணமாக நான்காம் வகுப்புடன் படிப்பு தடைபடுகிறது. 

என்.எஸ்.கே.-யின் ஆரம்ப நாட்கள் கடுமையானவை. காலையில் டென்னிஸ் கோர்ட்டில் பந்து பொறுக்கிப் போடும் வேலை. பிறகு மளிகைக் கடைக்கு பொட்டலம் மடிக்க‌ச் செல்வார். மாலையில் நாடகக் கொட்டாயில் தின்பண்டங்கள் விற்பார். நாடகம் அவரை மிகவும் ஈர்த்தது. மகனின் விருப்பம் அறிந்த தந்தை ஒழுகினசே‌ரியில் நாடகம் போட வந்த ஒ‌ரி‌ஜினல் பாய்ஸ் கம்பெனியில் அவரை சேர்த்துவிடுகிறார். சிறுவனின் நாடக வாழ்க்கை ஆரம்பமாகிறது.

பாய்ஸ் நாடக கம்பெனியிலிருந்து டி.கே.எஸ். சகோதரர்களின் ஸ்ரீ பால சண்முகானந்தா நாடக சபையில் சேர்கிறார் கிருஷ்ணன். அங்கிருந்து பால மீனரஞ்சனி சங்கீத சபை. பல நாடக கம்பெனிகள் மாறினாலும் அவருக்கு டி.கே.எஸ். சகோதரர்களின் நாடக சபையே மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது. 

ஒப்பந்தத்தை மீறி பால மீனரஞ்சனி சங்கீத சபையிலிருந்து வெளியேறி மீண்டும் ஸ்ரீ பால சண்முகனாந்தா நாடக சபையில் சேர்கிறார். இதனால் கோபமுற்ற பால மீனரஞ்சனி சங்கீதா சபை ஜெகன்னாத அய்யா, கிருஷ்ணன் மீது பணம் கையாடல் செய்ததாக காவல் நிலையத்தில் பொய்யாக புகார் தருகிறார். ஆலப்புழையில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் கைது செய்யப்படுகிறார்.

இந்த முதல் கைதுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டார் கிருஷ்ணன். அந்த கைது தமிழ்நாட்டையே உலுக்கியது.

நாடகத்தில் பல ப‌ரீட்சார்த்த முயற்சிகளை கலைவாணர் மேற்கொண்டார். வில்லு‌ப் பாட்டை நாடகத்தில் முதன் முதலாக புகுத்தியவர் இவரே. தேசபக்தி நாடகத்தில் காந்தி மகான் கதை என்ற பெய‌ரில் வில்லு‌ப் பாட்டை சேர்த்து காந்தியின் மது அரு‌ந்தாமை கொள்கையை‌ப் பரப்பினார். இந்த நாடகத்தில் கலைவாணர் ராட்டையுடன் வரும் காட்சிக்காக நாடகம் தடைசெய்யப்பட்டது.

கிந்தனார் நாடகத்தில் பாகவதர் வேடத்தில் கலைவாணர் செய்யும் காலட்சேபம் பிரசித்திப் பெற்றது. அன்பே கடவுள் என்ற முகவுரையுடனே காலட்சேபம் தொடங்கும். இதில் கலைவாணர் எழுதிய ரயில் பாடல் குறித்து திராவிட நாடு பத்தி‌ரிகையில் கட்டுரை ஒன்று எழுதினா‌் அண்ணர். சாதி, மத ஏற்றத்தாழ்வை ரயில் இல்லாமல் செய்ததை அந்த பாடலில் குறிப்பிட்டிருந்தார் கலைவாணர்.

கரகரவென சக்கரம் சுழல

கரும்புகையோடு வருகிற ரயிலே

கனதனவான்களை ஏற்றிடும் ரயிலே
ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே 
மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி மதபேதத்தை ஓழித்திட்ட ரயிலே.


நாடகத்தில் கலைவாணர் செய்த சாதனைகள் பல. திரைத்துறையில் காலடி வைத்த பிறகும் அவரது நாடகம் மீதான தாகம் குறையவில்லை. பிறருக்கு உதவுவதற்காகவே அவர் பலமுறை நாடகம் போட்டிருக்கிறார். நாடக கம்பெனி ஏதேனும் நொடித்துப் போனால் கலைவாணருக்கு சேதி வரும். அவர் சென்று ஒரு நாள் நடித்துவிட்டு வருவார். அந்த நாடகம் கலைவாணர் நடித்தார் எனபதற்காகவே மக்களிடம் வரவேற்பை பெறும்.

கலைவாண‌ரின் திரை வாழ்க்கையை தொடங்கி வைத்த படம் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய சதிலீலாவதி. எஸ்.எஸ்.வாசன் எழுதி ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் கலைவாணருக்கு மட்டுமில்லாது பல ஜாம்பவான்களுக்கு அறிமுகப் படமாக அமைந்தது. எம்.‌ஜி.ஆர்., எம்.‌ஜி.சக்கரபாணி, டி.எஸ்.பாலையா, எம்.கே.ராதா, எம்.வி.மணி, கே.வி.தங்கவேலு ஆகியோர் இந்தப் படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்கள்.

தனது முதல் படத்திலேயே தனக்கான காட்சிகளை கலைவாணரே எழுதிக் கொண்டார். தமிழ் திரையில் நகைச்சுவைக்கென தனி ட்ராக் எழுதியவரும் அவரே. முதல் படம் சதிலீலாவதி என்றாலும் திரைக்கு முதலில் வந்த படம் மேனகா. இது கலைவாணர் நடித்து வந்த நாடகம். திரைப்படமாக எடுத்த போது நாடகத்தில் கலைவாணர் நடித்து வந்த சாமா அய்யர் வேடத்தை அவருக்கே அளித்தனர்.


சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் திரு.என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் சிரிப்பு பற்றிய இந்த பாடல் ஒரு சிறந்த நகைச்சுவை மற்றும் சிந்தனை நிறைந்த பாடல்.
திரு.என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களும், அவர் மனைவி திருமதி.டி.ஏ.மதுரம் அவர்களும் இந்த பாடலில் சிரிப்பு…..சிருப்பு…..என பலவகைச் சிரிப்புகளை பட்டியலிடுவது மட்டுமல்லாது, அவற்றை செய்து காட்டியும் நம்மை பாடல் முழுவதுமாய் சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்திருக்கிறார் திரு.என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்.

Sunday, April 17, 2011

IMAGES


இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை உதவி கமிஷனர் மற்றும் மருத்துவ அதிகாரி பதவிகளில் 21 காலி இடங்கள் டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும்.

தமிழக அரசின் வெவ்வேறு துறைகளுக்கு தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

இதற்காக குரூப்-1, குரூப்-2, குரூப்-4 என்ற பல்வேறு நிலைகளில் போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப்-1, குருப்-2 நிலையிலான போட்டித்தேர்வுகளை பட்டதாரிகள் எழுதலாம். இதேபோல், குரூப்-4 தரத்திலான தேர்வுகளை எழுத 10-ம் வகுப்பு தேர்ச்சியே போதுமானது.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அதிகாரி பணி இடங்களை நிரப்ப போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நடத்தப்பட்ட குரூப்-2 தேர்வுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டு, எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண்ணும் வெளியிடப்பட்டுள்ளன. இறுதி தேர்வுபட்டியல் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாகும்.

இந்த நிலையில், புதிய பணி நியமனம் பற்றிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்பட உள்ளது. அதன்படி, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் 9 உதவி கமிஷனர் பணி இடங்களும், பொது சுகாதாரத்துறையில் 12 மருத்துவ அதிகாரி இடங்களும், கால்நடை மருத்துவ துறையில் 6 பால்வள உதவியாளர் பணி இடங்களும் டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.

இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் பதவிக்கு பி.எல். பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க எம்.பி.பி.எஸ். பட்டதாரிகள் தகுதியுடையவராவர்.

இந்த அறிவிப்புகளை தொடர்ந்து, இளநிலை உதவியாளர், தொழிலாளர் உதவி கமிஷனர், மாவட்ட கல்வி அதிகாரி, ஆவண காப்பக உதவி ஆசிரியர் என்று அடுத்தடுத்து பல்வேறு பணி நியமனங்கள் வர இருக்கிறது.

Saturday, April 16, 2011

லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து: ஒரு "ஹீரோ'வின், "ப்ளாஷ்பேக்'


"ஒரு நாள் இந்த ஆபீசுக்குள்ளே போய், கலெக்டர் சீட்டில் உட்காரணும்...' புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை தன் சகோதரருடன் சைக்கிளில் கடக்கும்போதே, ஆசை விதை, அந்த சிறுவனுக்குள் முளைவிட்டிருந்தது. அந்த விதை, இன்று விருட்சமாக வளர்ந்து, மதுரையில் மையம் கொண்டு, நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தேர்தல் களத்தை சூடாக்கிய அந்த, "ஹீரோ' மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம்.

புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுணை கிராமத்தை சேர்ந்த, உபகாரம் என்பவருக்கு, ஐந்து மகன்கள். இதில் கடைக்குட்டியாய் பிறந்தவர் சகாயம். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் முதுநிலை பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு என, அடுத்தடுத்து தன் கல்வி தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார். சிறுவனாய் இருந்தபோது முளைத்த, "கலெக்டர் கனவு' நிறைவேற, யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத வைத்தது. ஐ.ஏ.எஸ்., கிடைக்காத நிலையில், ஏற்கனவே எழுதியிருந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியாக, துணை கலெக்டரானார் சகாயம். தர்மபுரியில் பயிற்சி கலெக்டர், நீலகிரி மாவட்டம், கூடலூரில், ஆர்.டி.ஓ., திருச்சி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி, காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ., திருச்சி சிவில் சப்ளைஸ் முதுநிலை மண்டல மேலாளர், கோவை கலால் பிரிவு துணை கமிஷனர், சென்னை, டி.ஆர்.ஓ., தொழில் வணிகத்துறை இணை இயக்குனர், மாநில தேர்தல் ஆணைய செயலர், நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர், நாமக்கல் மாவட்ட கலெக்டர், புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர், மதுரை கலெக்டர் என, இவர், "பந்தாடப்பட்ட' விதமே இவரது நேர்மைக்கு சான்றாக சொல்லலாம்.

பதவி வகித்த இடங்களில் சகாயம் படைத்த சாதனைகளில் சில:

*அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஆர்.டி.ஓ.,வாக இருந்த போது, நேர்மையான நடவடிக்கைகளால், அப்பகுதி மக்களின், "தோழனாக' மாறினார் சகாயம். அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த லீனாநாயருக்கு, சகாயத்தின் செல்வாக்கு சங்கடத்தை கொடுக்க, அதிரடியாக அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டார்.

*காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.,வாக இருந்தபோது, மாசடைந்த குளிர்பானத்தை விற்பனை செய்தது தொடர்பாக வந்த புகாரையடுத்து, "பெப்சி' குளிர்பான உற்பத்தி ஆலைக்கு, "சீல்' வைத்து பரபரப்பு ஏற்படுத்தினார். பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க எடுத்த கடுமையான நடவடிக்கையால், கொலை முயற்சி தாக்குதலில் இருந்து தப்பினார்.

கோவை மாவட்டத்தில் கலால் துறை துணை ஆணையராக இருந்த போது, மதுபானக் கடை ஏலத்தை அரசு விதிமுறைப்படி நடத்த வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அரசியல்வாதிகள், பினாமிகள் பெயரில் ஏராளமான கடைகளை எடுப்பதையும், "சிண்டிகேட்' முறையில் நடந்த முறைகேடுகளுக்கு, "செக்' வைத்தார்.

*அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, திருப்பூர் அ.தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான பிராந்தி கடைகளில் அதிரடி சோதனைகளை நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். கோவையில் பிரபலமான சைவ ஓட்டலில், அனுமதி பெறாமல் மது வகைகள் பதுக்கி விற்கப்படுவதை அறிந்து, நேரடியாக, "ரெய்டு' நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

*சென்னை டி.ஆர்.ஓ.,வாக இருந்தபோது, பிரபல ஓட்டல் நிறுவனம் ஆக்கிரமித்திருந்த, 48 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிரடியாக மீட்டார். இதேபோல், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகள், சகாயத்தால் அரசின் வசமானது. சுனாமி நிவாரண பணிகளில் நடந்த முறைகேடுகளை களைந்து, உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் பலன் பெற உதவினார்.

தி.மு.க., ஆட்சியின் போது, முதல்வருக்கு இவர் எழுதிய கடிதம், அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "நேர்மையான அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்' என்பதோடு, தன் சொத்து விவரம், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை கடிதத்தில் குறிப்பிட்டு, "இது தவிர எனக்கு ஏதாவது சொத்து இருந்தால், நடவடிக்கை எடுங்கள்' என்று பகிரங்கமாக சவால் விடுத்தார். அதோடு, "நியாயம் கேட்டு, குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பேன்' என்ற போர் குரலை தொடர்ந்தே, சகாயத்திற்கு ஐ.ஏ.எஸ்., தகுதி உயர்வு கிடைத்தது என்கிறது நேர்மையான அதிகாரிகள் வட்டாரம்.

*நாமக்கல் மாவட்ட கலெக்டராக சகாயம் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகள், அந்த மாவட்ட மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் தன் சொத்து கணக்கை வெளியிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில் பொறாமைக்குள்ளானார்; பொதுமக்கள் மத்தியில் பெருமைக்குள்ளானார்.

*இவரது நேர்மைக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த அங்கீகாரம், தற்போதைய மதுரை கலெக்டர் பதவி. இவரது இருக்கைக்கு பின்புறம் இருக்கும் வாசகங்கள், "லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!'

Friday, April 15, 2011

அழிந்து கொண்டிருக்கும் தவளைகள்

அழிந்து கொண்டிருக்கின்ற  பல அரிய விலங்குகளைப்போல, பறவைகளைப்போல தவளைகளும் அழிந்து கொண்டிருக்கின்றன. இயற்கையைப் பாதுகாப்பதில் தவளைகளுக்கு முக்கியமான பங்கு உண்டு என்று நம் பாடப் புத்தகங்கள் சொல்கின்றன. அப்படிப்பட்ட தவளைகள்தான் பூமியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


இரவுகளில் நாம் தாலாட்டுபோல தவளைச் சப்தம் கேட்டு உறங்கிய நாட்கள் உண்டுதானே! நம் மழைக்கால இரவுகளையும், தவளைகளின் கொண்டாட்டக் கூச்சல்களையும் பிரித்துப் பார்க்க முடியுமா! டெலிவிஷனும் ரேடியோவும் வந்தவுடன்,   அந்தத் தவளைக் குரல் அகன்றுபோகத் தொடங்கியது. ஆயினும், இன்றும் பகல் நேரங்களில் குளங்களிலும் வயல்களிலும் தென்படும் தவளைகள், எதிர்காலத்தில் இருக்குமா என்பது சந்தேகம்தான்.


புவி வெப்பமடைவதால் முதலில் பலியாகும் உயிரினம் தவளைதான் என்று விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகிறார்கள். "ஜெய்ஸôவேஜ்' எனும் அமெரிக்க ஆய்வாளர் கண்டுபிடித்த "தங்கத் தவளை' இன்றில்லை. இதன் அறிவியல் பெயர் "ப்யூபோ பெரிக்லெனஸ்' என்பது. அமெரிக்காவின் வடமேற்குப் பிரதேசங்களில் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்ட "தி வெஸ்டன் டோட்' எனும் அரிய வகைத் தவளைகளும் அழிந்துவிட்டன. 1972-ல் கண்டுபிடிக்கப்பட்ட "கேஸ்டிக் ப்ரூடிங்' எனும் தவளை இனமும் சந்ததி இன்றி அழிந்துபோனது. இது, அபூர்வமான தவளையாக அறிவியல் உலகத்தால் கருதப்பட்டது. மருத்துவ ஆராய்ச்சிக்குப் பெருமளவில் பயன்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இத் தவளை இன்று முற்றிலும் அழிந்துவிட்டது.


தவளைகளின் அழிவிற்கு நிறையக் காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று, தவளையை உணவாகச் சாப்பிடும் பழக்கம்தான். வயல்களும், குளங்களும்தான் தவளைகளின் இருப்பிடங்கள். விவசாய வயல்கள் மெல்ல மெல்ல சமப்படுத்தப்பட்டு வருவதாலும், குளங்கள் தூர்க்கப்படுவதாலும் தவளைகள் போக்கிடமின்றி அழிகின்றன. தண்ணீர்ப் பஞ்சத்தின்போதும் தவளைகள் கூட்டம் கூட்டமாகச் சாகின்றன.இந்தியாவில் தவளைகளின் அழிவு ஏறத்தாழ நாற்பது வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள், தவளைக் கால்களை உண்ணத் தொடங்கியதிலிருந்து, தவளைகளுக்குப் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. அந்த நாடுகளில் தவளைக் கால்களை மிகவும் சுவையான உணவாக விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இதனால் இந்தியாவிலும், பங்களாதேஷிலும் உள்ள தவளைகளுக்கு வெளிநாட்டுச் சந்தையில் மதிப்பு அதிகரித்தது. அதைத் தொடர்ந்து, இந்தியாவும், பங்களாதேஷும் மிகப் பெரிய அளவில் தவளைக் கால்களை ஏற்றுமதி செய்தன.


1978-ல் இந்தியா, 3,500 டன் தவளைக் கால்களை ஏற்றுமதி செய்தது. இவ்வளவு தவளைக் கால்களைச் சேகரிக்க வேண்டும் என்றால் ஆறு கோடித் தவளைகளையாவது கொன்றிருக்க வேண்டும் என்று "தி ஸ்டேட்மென்' எனும் பத்திரிகை குறிப்பிட்டது. இது ஒரு வருடக் கணக்குதான். 1981-ல் 4,368 டன் தவளைக் கால்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதன்மூலம், ஏறத்தாழ 95 லட்சம் டாலர்கள் வெளிநாட்டுப் பணம் நமக்குக் கிடைத்தது. எனவே, நாம் கோடிக்கணக்கான தவளைகளைக் கொன்றிருக்கிறோம் என்று தெளிவாகிறது.


வயல்களில் பெரும் எண்ணிக்கையிலிருந்த "ராணா டை கரீனா' பச்சை நிறமுள்ள " ராணா ஹெக்ஸôடக்டைலா' ஆகிய தவளை இனங்கள்தான் அன்று மிக அதிகமாகக் கொல்லப்பட்டன. இன்றாவது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தீவிரமாகச் செயல்படுகின்றனர். ஆனால், அன்று இத்தகைய செயல்பாடுகள் அவ்வளவு தீவிரமாக இல்லாத நேரத்திலும்கூட தவளை ஏற்றுமதியின் ஆபத்துகளை பலரும் சுட்டிக்காட்டினர்.


அன்று பலரும் தவளைகளை, புழு பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு மிகச்சிறந்த வழியாகக் குறிப்பிட்டார்கள். ஒரு ஏக்கர் பரப்பளவில் ஐம்பது தவளைகளாவது இருந்தால்தான் பூச்சிகள் சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு பிரத்தியேக பணச் செலவு கிடையாது. கொஞ்சம் ஆர்வமும், கவனமும் இருந்தாலே போதும்.


கொசுக்களைக் கட்டுப்படுத்துவதில் தவளைகளும், தும்பிகளும் நமக்கு மிக அதிகமாக உதவி செய்கின்றன. கொசுக்களை லார்வா பருவத்திலேயே தின்றழிப்பதில் தவளைகளின் பங்கு மிகவும் அதிகம். மாதந்தோறும் கொசுக்களை அழிப்பதற்கும், கொசுக்களால் உருவாகும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் நாம் செலவு செய்கிற தொகை கோடிக்கணக்கில் வரும். வயல்களில் தெளிக்கப்படுகின்ற பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான செலவு வேறு.


தவளைகளை ஏற்றுமதி செய்த பிறகு வந்த வருடங்களில் இந்தியா, கோடிக்கணக்கான ரூபாய் விலை மதிப்புடைய பூச்சிக்கொல்லி மருந்துகளை இறக்குமதி செய்தது. தவளைகள் இருந்தபோது பூச்சிக்கொல்லிகளுக்காக செலவிட்ட தொகையைவிட இது அதிகம். தவளையை ஏற்றுமதி செய்ததன் மூலமாக நாம் பெற்ற வெளிநாட்டுப் பணத்தைவிட அதிகமான தொகையை, பூச்சிக்கொல்லி மருந்து இறக்குமதி செய்ததற்காக நாம் வெளிநாட்டிற்குக் கொடுத்தோம்.இதைப் பற்றிப் புரிந்துகொண்ட பிறகுதான் அரசு, பிற்காலத்தில் தவளை ஏற்றுமதியைத் தடை செய்தது.


வன உயிர் பாதுகாப்புச் சட்டத்தின்படி, தவளைகளைப் பிடிப்பதும் கொல்வதும் குற்றம். ஆனாலும், இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. கொசுக்களைக் கொல்வதில் நாம் எந்த அளவு ஆர்வம் காட்டுகிறோமோ, அந்தளவு நாம் தவளைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்.


புவி வெப்பமடைதல், தவளைகளின் இனப்பெருக்கத்திற்குத் தீங்கு செய்யும் "அல்ட்ரா வயலெட் கதிர்கள்', "அக்வாட்டிக் ஃபங்கஸ்' எனும் தோல் நோய், வயல்களில் தெளிக்கப்படும் பூச்சி மருந்துகளின் வீர்யம் ஆகியவை தவளைகளின் அழிவிற்குக் காரணமாகின்றன. வெளிநாடுகளிலிருந்து வருகிற சிலவகை மீன்களாலும் தவளைகள் அழிகின்றன. "ஸ்போர்ட்ஸ் ஃபிஷ்' எனும் வெளிநாட்டு மீனின் விருப்பமான உணவு, குஞ்சுத் தவளைகள்தான்.


கியூபாவிலிருந்து வடக்கு அமெரிக்காவிற்கு வந்த, கியூபா மரத்தவளையும் சிறு தவளைகளை அழிக்கக்கூடியது. வடக்கு அமெரிக்காவின் மிகப் பெரிய தவளை இதுதான்.


தவளைகள் அமைதியான பிராணிகள். யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காத பரிதாபமான உயிர்கள். அவற்றை நாம் காப்பாற்றியே ஆகவேண்டும். தவளைகளை நாம் நம் பாதுகாப்பு வீரர்களாக எண்ண வேண்டும். அப்போதுதான் இந்தப் பாவப்பட்ட ஜீவன்கள் மீது நமக்கு அன்பும் மரியாதையும் ஏற்படும்.  

அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கையில்...


அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவர். அந்தக் காலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பிள்ளைகளை பள்ளியில் மிகவும் மோசமாக நடத்தினார்கள். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பிள்ளைகள் வகுப்பறையின் ஒரு மூலையில்தான் ஒடுங்கி அமரவேண்டும். அதுவும் அவர்கள் தரையில் அமரக்கூடாது. அப்படி அமர்ந்தால் "தீட்டு' ஒட்டிக்கொள்ளுமாம். என்ன மடமை! அதனால் தரையில் ஒரு கோணியை விரித்து அதன்மேல்தான் உட்கார வேண்டும். வீட்டுக்குச் செல்லும்போது கோணியை எடுத்துச் சென்றுவிட வேண்டும். ஆசிரியர்கள் தவறிப்போய்கூட அந்த தாழ்த்தப்பட்ட சாதிப்   பிள்ளைகளைத் தொடமாட்டார்கள். அவ்வளவு ஏன்? அந்தப் பிள்ளைகள் வைத்திருக்கும் புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவற்றைக்கூடத் தொடமாட்டார்கள்.


தாழ்த்தப்பட்ட சாதிப் பிள்ளைகள் ஆசிரியர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருந்தால் மட்டும் போதும். அவர்கள் பாடங்கள் படிக்க வேண்டியதில்லை. பாடல்கள் பாடவேண்டாம். ஆசிரியர்கள் அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படமாட்டார்கள். அந்தப் பிள்ளைகளின் நலத்தில் அவர்களுக்குக் கொஞ்சமும் அக்கறை கிடையாது.


தாழ்த்தப்பட்ட சாதிப் பிள்ளைகளுக்கு, பள்ளிக்கு வந்து செல்வதைத் தவிர வேறு எந்த உரிமையும் கிடையாது. வகுப்பில் இருக்கும்போது தாகம் எடுத்தால் அந்தக் குழந்தைகள் தாங்களாகத் தண்ணீர் எடுத்துக் குடிக்கக்கூடாது. என்ன செய்ய வேண்டும் தெரியுமா? தாகம் உள்ள குழந்தைகள் மேலே அண்ணாந்துகொண்டு "ஆ'  என்று வாயைத்          திறந்துகொள்ள வேண்டும். இரக்கம் கொண்ட உயர்சாதிப் பிள்ளைகள் குடி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து, தாழ்த்தப்பட்ட சாதிப் பிள்ளைகளின் வாயில் ஊற்றுவார்கள். அதைத்தான் அவர்கள் குடிக்க வேண்டும். இதுதான் அந்த நாளில் இருந்த நிலை.


அம்பேத்கர் கல்வி கற்றுவந்த பள்ளியிலும் இதே நிலைதான். கள்ளமற்ற பிள்ளைகளின் உள்ளத்திலும் தீண்டாமை எனும் நச்சு விதை விதைக்கப்பட்டிருந்தது. என்ன கொடுமை! இந்தச் சூழ்நிலையில் எந்தக் குழந்தைக்குத்தான் படிப்பில் விருப்பம் ஏற்படும்?

அம்பேத்கரின் நிலையும் அப்படித்தான் இருந்தது. அதைப்போல, சாதி வெறியர்களுக்கு நடுவில் சில சமத்துவவாதிகளும், நல்லவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? அம்பேத்கர் படித்து வந்த பள்ளியில் ஓர் அந்தண ஆசிரியர் இருந்தார். அவர் பெயர் அம்பேத்கர். அவர் நம் அம்பேத்கரிடம் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர்; சாதி பேதங்களை அறவே வெறுப்பவர்; நல்ல மனம் படைத்தவர். அந்த ஆசிரியருக்கு அம்பேத்கரிடத்தில் ஒரு தனிப் பற்றும் அக்கறையும் இருந்தன.


பள்ளி இடைவேளைகளில் அந்த ஆசிரியர் நம் அம்பேத்கரை அன்புடன் அழைத்துச் செல்வார். சோறு, ரொட்டி, சமைத்த காய்கறிகள் ஆகியவற்றைக் கொடுத்து உண்ணச் செய்வார். அத்துடன் அறிவுரையும் கூறுவார். அந்த ஆசிரியரின் அன்பும் கனிவும், மாணவரான அம்பேத்கரை மிகவும் கவர்ந்தன. அந்த ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்தான் பின்னாளில் தன் பெயரை அம்பேத்கர் என்று வைத்துக்கொண்டார். அம்பேத்கரின் இயற்பெயர் "பீமராவ் ராம்ஜி' என்பது.


ஒரு முறை அம்பேத்கரின் தந்தை ராம்ஜி, கோரிகோன் என்னும் இடத்தில் காசாளராக பணிபுரிந்து வந்தார். அந்த ஊருக்குச் சென்று தங்கள் தந்தையைப் பார்த்து வரவேண்டிய அவசியம் அம்பேத்கருக்கும் அவருடைய அண்ணனுக்கும் ஏற்பட்டது. அதனால் அவர்கள் தங்கள் வருகையைக் குறித்து தங்கள் தந்தைக்கு எழுதினார்கள். ரயில் நிலையத்திற்கு வந்து தங்களை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்கள். பிறகு, தங்கள் திட்டப்படி ரயில் வண்டியில் ஏறிச் சென்று தாங்கள் குறிப்பிட்டு எழுதியிருந்த நிலையத்தில் இறங்கினார்கள். தங்கள் தந்தை வருவார் என்று வெகு நேரம் காத்திருந்தார்கள். குறித்த நேரத்தில் கடிதம்   கிடைக்காததால் ராம்ஜி, தன் மகன்களை அழைக்க ரயில் நிலையத்திற்கு வரவில்லை.


நெடுநேரம் காத்திருந்தும் தந்தை வராததால் அம்பேத்கரும், அவருடைய அண்ணனும்  மனம் சோர்ந்தனர். அந்த ரயில் நிலையத்தில் இருந்த அதிகாரி நல்ல மனிதர்.. நீண்ட நேரமாக நிலையத்தில் காத்திருக்கும் அம்பேத்கரையும், அவர் அண்ணனையும் நெருங்கி விசாரித்தார். விஷயம் அறிந்து வருத்தப்பட்டார். தாம் உதவி செய்வதாகக் கூறினார். நிலையத்தின் அருகில் இருந்த ஒரு மாட்டு வண்டியை வாடகைக்கு அமர்த்திக் கொடுத்து கோரிகோனுக்குச் செல்லும்படிக் கூறினார்.


அண்ணனும் தம்பியும் அதிகாரிக்கு நன்றி கூறினார்கள். வண்டியில் ஏறி அமர்ந்தார்கள்.  வண்டிக்காரன் வண்டியை ஓட்டிச் சென்றான். வண்டி சென்றுகொண்டிருக்கும்போதே,  வண்டிக்காரன் மெல்லப் பேச்சைத் தொடங்கினான். அம்பேத்கரையும், அவரது அண்ணனையும் பற்றி விசாரித்தான். களங்கம் இல்லாத சிறுவர்கள் இருவரும் தாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை மறைக்காமல் கூறிவிட்டனர்.


அவ்வளவுதான் வண்டிக்காரனுக்குக் கடும் கோபம் வந்தது. தாழ்த்தப்பட்டவர்களைத் தன் வண்டியில் ஏற்றியதால் தன் வண்டி தீட்டுப்பட்டுவிட்டதாக எண்ணினான்.           வண்டியைவிட்டுக் குதித்தான்.மாட்டை அவிழ்த்துத் தூர நிறுத்தினான். குப்பைக் கூடையைக் கவிழ்ப்பதுபோல வண்டியைத் தலைகீழாகக் கவிழ்த்தான். பாவம்! அம்பேத்கரும் அவருடைய அண்ணனும் சாலை ஓரத்தில் சென்று விழுந்தார்கள். அவர்களுடைய ஆடைகள் அழுக்காயின. வாய், கண், காது, மூக்கு, உடல் முழுவதும் மண்ணாயின. அவர்கள் ஏதும் அறியாமல் திகைத்து நின்றனர்.


வண்டிக்காரனோ வாயில் வந்தபடி ஏசிக்கொண்டிருந்தான். அம்பேத்கரின் அண்ணன் சிறிது நேரம் யோசித்தார். வண்டிக்காரனோடு தகராறு செய்வதில் பயன் இல்லை என்று உணர்ந்தார். வண்டிக்காரனை மெல்ல நயந்து காரியம் சாதிக்க வேண்டும் என்று நினைத்தார்.

அவர் வண்டிக்காரனைப் பார்த்து, ""வண்டிக்காரரே, கோபப்படாதீர்கள். வண்டியில்    ஏறக்கூடாது என்பது எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. அதனால்தான் ஏறிவிட்டோம். மன்னித்துக்கொள்ளுங்கள். உங்கள் வண்டியும் தீட்டுப்பட்டுவிட்டது. நாங்களும் ஊருக்குச் சென்றாக வேண்டும். ஊரோ புதிது. அதனால் நீங்கள்தான் எங்களுக்கு உதவி செய்யவேண்டும். வேறு வழியில்லை. பேசிய கூலியைவிட இரண்டு மடங்கு அதிகம் தருகிறோம். தயவு செய்து வண்டியில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொண்டார்.


பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் அல்லவா? இரண்டு மடங்கு அதிகப் பணம் என்றதும் வண்டிக்காரனின் கோபம் போன இடம் தெரியவில்லை. ஆயினும், தாழ்த்தப்பட்ட சாதிச் சிறுவர்களுக்கு வண்டி ஓட்டத் தயாராக இல்லை. வண்டியை அம்பேத்கரின் அண்ணனே ஓட்ட வேண்டும் என்று முடிவானது. அம்பேத்கர் வண்டியில் அமர்ந்துகொண்டார். அண்ணன் வண்டியை ஒட்டினார். வண்டிக்காரனோ, வண்டியைத் தொடர்ந்து சென்றான்.


செல்லும் வழியில் அம்பேத்கருக்கும் அவரது அண்ணனுக்கும் தண்ணீர்த் தாகம் எடுத்தது. பாதையில் இருந்த வீடுகளை அணுகித் தண்ணீர் கேட்டார்கள். ஒருவராவது அவர்களுக்குத் தண்ணீர் கொடுக்க முன்வரவில்லை. குட்டையில் கிடக்கும் நீரையும், குழம்பிய சேற்று     நீரையுமே குடிக்கச் சொன்னார்கள். தண்ணீர் கேட்கச் சென்றவர்களை வெறுப்போடு நோக்கி ""விலகிப் போங்கள்'' என்று கூறினார்கள். யாருடைய நெஞ்சிலும் அன்பு பிறக்கவில்லை. சிறுவர்கள் தாகத்தால் வெயிலில் பறித்துப்போடப்பட்ட கீரைகள் போலத் துவண்டார்கள். மாலை முதல் இரவு வரை அந்த நிலை நீடித்தது. தந்தையைக் கண்ட பிறகே அவர்களுக்குத் தண்ணீர் கிடைத்தது. உயர்சாதிக்காரர்கள் என்போர் இழைத்த கொடுமைகளை எண்ணி அந்த இளம் உள்ளங்கள் நொந்தன. சிறுவரான அம்பேத்கரின் மனமோ மிகவும் புண்பட்டது.


இதைப்போல அம்பேத்கருக்கு மற்றொரு முறையும் ஓர் அனுபவம் ஏற்பட்டது. அப்போதும் அவருக்குத் தண்ணீர் தாகம். எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. எல்லோரையும் கேட்டுப் பார்த்தார். யாரும் தண்ணீர் தருவதற்கு முன்வரவில்லை.     நாக்கு வறண்டது. அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அருகில் இருந்த பொதுத் தண்ணீர் துறையில் இறங்கித் தண்ணீர் குடித்துவிட்டார். அதை ஒரு உயர்சாதிக்காரர் பார்த்துவிட்டார். பிறகு கேட்கவேண்டுமா? பிடித்து வரப்பட்ட அம்பேத்கர் ஈவு இரக்கம் இல்லாமல் தாக்கப்பட்டார்

இந்த நிகழ்ச்சிகள் இளம் அம்பேத்கரின் மனதில் ஆழப் பதிந்தன. தீண்டாமையை ஒழிப்பதற்குப் பாடுபடவேண்டும் என்று உள்ளத்தில் உறுதி பூண்டார்.


அண்ணல் அம்பேத்கர் 1891 - ஆம் ஆண்டு, ஏப்ரல் 14 - ஆம் நாள் பிறந்தார். அவர் தந்தையின் பெயர் ராம்ஜி. அம்மாவின் பெயர் பீமாபாய். அம்பேத்கர் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். பேராசிரியர், சட்ட மேதை, இந்திய அரசியல் சட்டத்தை வகுத்தளித்தவர். தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுதும் அயராது உழைத்தார். 1956 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார்.


""நாட்டுக்கு உழைத்த நல்லவர் - அம்பேத்கர்'' நூலிலிருந்து.

ஜனநாயகம் வெற்றிகரமாக செயல்படுவதற்கு அவசியமான நிலைமைகள் - அம்பேத்கர்

ஜனநாயகம் எப்போதுமே தனது வடிவத்தை மாற்றிக்கொண்டு வந்திருக்கிறது. இதுதான் எடுத்த எடுப்பில் நான் கூறவிருக்கும் கருத்தாகும். நாம் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் ஜனநாயகம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கிரேக்கர்கள் அத்தகைய ஜனநாயகத்தை பற்றிக் குறிப்பிட்டார்கள். ஆனால் சுண்ணாம்பு, பாலடைக் கட்டியிலிருந்து எவ்வாறு மாறுபடுகிறதோ அவ்வாறே அதீனிய ஜனநாயகம் மாறுபடுகிறது என்பதை எல்லோரும் அறிவர். அத்தகைய ஜனநாயகம் மக்களில் 50 சதவீதத்தை அடிமைகளாகக் கொண்டதாகும். இவ்வாறு அடிமைகளாக இருப்பவர்களுக்கு அரசாங்கத்தில் இடமில்லை. நமது ஜனநாயகம் அதீன ஜனநாயகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதில் ஐயமில்லை. 

உங்கள் கவனத்துக்கு நான் பூர்வாங்கமாகக் கொண்டுவர விரும்பும் இரண்டாவது விஷயம் எந்த ஒரு நாட்டிலும் ஜனநாயகம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதாகும். இங்கிலாந்தின் வரலாற்றை எடுத்துக் கொள்ளுங்கள். 1688 ஆம் வருடப் புரட்சிக்கு முன்னர் இருந்த இங்கிலாந்தின் ஜனநாயகமும் 1688ஆம் வருடப் புரட்சிக்கு பின்னர் வந்த இங்கிலாந்தின் ஜனநாயகமும் ஒரே மாதிரியானது என்று எவரும் கூறமுடியாது. இதேபோல் முதலாவது சீர்திருத்த மசோதா சட்டமாக்கப்பட்ட போது 1688க்கும் 1832க்கும் இடையே நிலவிய பிரட்டிஷ் ஜனநாயகமும் 1832ஆம் வருடச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு நிலவிய ஜனநாயகமும் ஒரே மாதிரியானது என்று யாரும் கூற முடியாது. ஜனநாயகம் தனது வடிவத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறது.

உங்கள் கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்பும் மூன்றாவது விஷயம் ஒன்றுள்ளது. ஜனநாயகம் தனது வடிவத்தில் மாறிக் கொண்டிருப்பது மட்டுமின்றி, நோக்கங்களிலும் மாறிய வண்ணம் இருக்கிறது. பண்டைக்கால பிரிட்டிஷ் ஜனநாயகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஜனநாயகத்தின் குறிக்கோள் என்னவாக இருந்தது? மன்னனைக் கட்டுப்படுத்த வேண்டும், மட்டுப்படுத்த வேண்டும், அவனுக்குள்ள தனி அதிகாரங்கள் என இப்போது அழைக்கப்படும் அதிகாரங்களை மன்னன் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்பதே அதன் குறிக்கோளாக இருந்தது. சட்டம் இயற்றும் ஓர் அமைப்பாக நாடாளுமன்றம் இருந்தபோதிலும் "மன்னன் என்ற முறையில் சட்டங்கள் இயற்ற எனக்குத் தனி அதிகாரம் உண்டு. எனவே நான் இயற்றும் சட்டம் செல்லுபடியாகும்" என்று கூறுமளவிற்கு மன்னன் சென்றான். மன்னனின் இவ்வாறான தன் முனைப்பான அதிகாரம்தான் ஜனநாயகம் தோன்றுவதற்குக் கதவு திறந்துவிட்டது. 

இன்று ஜனநாயகத்தின் குறிக்கோள் என்ன? இன்றைய ஜனநாயகத்தின் குறிக்கோள் யதேச்சதிகார மன்னன் மீது கட்டுப்பாடு செலுத்துவதல்ல. மக்களுக்கு நல்வாழ்வு கிட்டச் செய்வதே குறிக்கோளாகும். ஜனநாயகத்தின் குறிக்கோளில் இது அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவேதான் நான் எடுத்துக்கொண்ட விஷயத்திற்கு தலைப்பு தருவதில் நவீன ஜனநாயகம் வெற்றி பெறுவதற்கு அவசியமான நிலைமைகள் என்ற சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறேன்.

என் அழகிய கிராமம்

என் அழகிய கிராமம்

 செஞ்சிக்கோட்டை கருங்குழிதுள்ளித் திரியும் நேரம்...

சில தினங்களுக்கு முன்பு என் வீட்டுக்கு அருகிலுள்ள நண்பரின் வீட்டில் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது பள்ளி விட்டு வந்த அவருடைய 12 வயது மகன் தந்தையைக் கட்டிப்பிடித்து தொங்கியவாறு, நான் இன்று ரொம்ப சந்தோஷமாக இருக்கேன் என்றான். அவனுடைய இயல்புக்கு மாறான இந்தச் செய்கை எங்களுக்கு வியப்பாக இருந்தது. அதைக் காட்டிக் கொள்ளாத நண்பர், என்ன விஷயம் என்றார் மகனிடம்.

 அதற்கு அவன், எனக்கு நாளையோட "எக்ஸôம்' முடியுது... ரெண்டு மாசத்துக்கு லீவு என்றான். மிகச் சாதாரண விஷயம்தான். ஆனால், இதன் பின்னணியில் நாம் அறிந்துகொள்ள வேண்டியவை நிறைய உள்ளன.

 விவசாயிக்கு விளைச்சல் பெருகினால் மகிழ்ச்சி. தொழிலதிபருக்கு தடையற்ற உற்பத்தியும், நிறைந்த ஏற்றுமதியும் மகிழ்ச்சி, பணியாளருக்குப் பணி உயர்வும், ஊதிய உயர்வும் மகிழ்ச்சி, வியாபாரிக்கு விற்பனை அதிகரித்து லாபம் கிடைத்தால் மகிழ்ச்சி, தேர்தல் வெற்றியும், பதவியும் அரசியல்வாதிக்கு மகிழ்ச்சி.

 இப்படி ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், பள்ளிக் குழந்தைகளுக்கு விடுமுறைதான் மகிழ்ச்சி.

 குறிப்பாக, சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின்போது, வியாபாரிகள், விவசாயிகள், அலுவலர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரும் அவதிக்குள்ளாயினர்.

 ஆனால், அப்போது தொலைக்காட்சிக்கு முன்பாக அமர்ந்து, பள்ளி விடுமுறைக்கான அறிவிப்பு வருகிறதா என்பதைக் கவனித்து, அறிவிப்பு வந்தவுடன் துள்ளிக் குதித்து மகிழ்ந்தவர்கள் பள்ளிக் குழந்தைகள்.

 தின்பண்டங்கள், புத்தாடைகள், விளையாட்டுப் பொருள்களைக் காட்டிலும் விடுமுறையால் கிடைக்கும் சந்தோஷம்தான் அவர்களுக்குப் பெரிது.

 அந்த சந்தோஷம் இப்போது அவர்களுக்குக் கிடைத்தாயிற்று. அதை அவர்கள் முழுமையாக அனுபவிக்க, கொண்டாடி மகிழ பெற்றோர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? இந்த விடுமுறையைக் குழந்தைகள் பயனுள்ளதாகக் கழிக்க பலவிதமான திட்டங்களை அவர்கள் தயாரித்திருப்பார்கள்.

 நம்மால் நம் விருப்பத்துக்குத் தயாரிக்கப்பட்ட இந்தத் திட்டங்கள் குழந்தைகளைச் சந்தோஷப்படுத்துமா என்பதை ஆராய்வது மிக அவசியம்.

 2 மாத விடுமுறையில் தட்டச்சு, கணினி கற்றுக் கொடுப்பது, ஹிந்தி வகுப்புகளுக்கு அனுப்புவது, முழுநேர இசை, நாட்டியப் பயிற்சி, ஆங்கிலப் பயிற்சி வகுப்பு, கணிதத் தேற்றங்களைக் கற்றுக் கொடுப்பது, அடுத்த வகுப்புக்கான பாடங்களை நடத்துவது, பொது அறிவு, நுண்ணறிவு பயிற்சி வகுப்புகள், இல்லையேல், குறிப்பிட்ட சிலர் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

 இப்போதுள்ள பாடத்திட்டங்களினாலோ அல்லது அவற்றைச் செயல்படுத்தும் முறையினாலோ தங்களது விளையாட்டு நேரத்தை பெரும்பாலும் இழந்துவிட்ட இந்தச் சிறார்கள், தாங்கள் சற்று இளைப்பாற நாடுவது தொலைக்காட்சியைத்தான். இதனால், மன, உடல் ஆரோக்கியங்களை இழக்கும் இவர்கள், சிறு வயதிலேயே 25 சதம் பேர் கண்ணாடி அணியும் நிலைக்குச் சென்றுவிட்டனர்.

 இந்தச் சூழ்நிலையில், மீண்டும் அதே திட்டமிட்ட பாடங்கள், வகுப்பறை, வீட்டுப்பாடங்கள் போன்றவற்றை இந்த விடுமுறையிலும் திணிப்பது குழந்தைகளை மன அழுத்தத்தின் உச்சத்துக்குக் கொண்டு சென்றுவிடும். இன்று அதன் பாதிப்பை அவர்கள் உணராவிட்டாலும், எதிர்காலத்தில் இது பெரிய பிரச்னையாக உருவெடுக்கலாம்.

 விடுமுறையில் அவர்களை ஊர் சுற்றவிட்டால் கெட்டுப்போய் விடுவார்களே.... என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. தனியாகவோ, பிறரோடு சேர்ந்து ஊர்சுற்றினால்தானே கெட்டுப் போவார்கள். அதற்குப் பதிலாக, பெற்றோர்களே அவர்களோடு சேர்ந்து ஊர் சுற்றினால் எப்படிக் கெட்டுப்போவார்கள். வியாபாரம், அலுவல் போன்றவற்றில் இருப்பவர்களுக்கும் இது சாத்தியமே. திட்டமிடுதல்தான் முக்கியம்.

 ஏப்ரல் மாதம் தொடங்கியாயிற்று. இதில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு, தேர்தல் முடிவு என முதல் 15 நாள்களை விட்டு விடுங்கள். மீதமுள்ள 45 நாள்களை 5 அல்லது 6 வாரங்களாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.

 எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் வாரத்தில் ஒருநாள் விடுமுறை உண்டு. அந்த விடுமுறை தினத்தை உங்கள் குழந்தைகளுடன் ஊர் சுற்றப் பயன்படுத்துங்கள்.

 நாம் செல்லும் இடங்கள் நம் குழந்தைகளுக்குப் பொழுதுபோக்காக அமைவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் அறிவை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும்.

 நம் பகுதியில் இருக்கும் ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பயணம் செய்வது, பயணச்சீட்டு முன்பதிவு செய்வது, பயணத்தின்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அங்குள்ள ரயில்வே போலீஸôரிடம் புகார் செய்வது, ரயில் ஓட்டுநர்களை அறிமுகப்படுத்தி அவர்கள் ரயிலை இயக்கும் முறை போன்றவற்றை விளக்குவது பயனுள்ளதாக இருக்கும்.

 இதேபோல, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், விமான நிலையம் போன்றவற்றையும் அறிமுகப்படுத்தலாம். கோளரங்கத்துக்கு அழைத்துச் சென்று காட்டுவதோடு, அங்கு நடைபெறும் வான் நோக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கச் செய்யலாம். அருங்காட்சியகத்துக்கு சென்று அங்குள்ள அதிசயங்களைக் காட்டலாம்.

 மேலும், நாம் இருக்கும் இடத்துக்கு அருகிலேயே நமக்குத் தெரியாத பல வரலாற்றுச் சின்னங்கள், கல்வெட்டுகள், கலைச் சின்னங்கள் நிச்சயமாக இருக்கும். அதுகுறித்து அறிந்து அங்கு அழைத்துச் செல்லலாம். நீச்சல் கற்றுக் கொடுக்கலாம்.

 நம் ஊரில் இருக்கும் தீயணைப்பு நிலையத்தில் பல விஷயங்கள் உள்ளன. நூலகங்களில் உள்ள என்சைக்ளோபீடியா என அழைக்கப்படும் தகவல் களஞ்சியங்களில் வண்ணப்படங்களுடன் கூடிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதுதானே என நாம் நினைக்கும் பல விஷயங்கள் நம் குழந்தைகளுக்கு அதிசயமாகவும், அறிவுச் செய்திகளாகவும் இருக்கும்.

 நாம் செய்ய வேண்டியது: இந்த 45 நாள்களிலும் நம் குழந்தைகளோடு எவ்வளவு அதிமான நேரத்தைச் செலவழிக்க முடியுமோ அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதுதான். இதைத்தவிர, அந்த இளம் மொட்டுகளுக்கு மகிழ்ச்சி தரக் கூடியது எதுவுமில்லை.

 நான் சந்தோஷமாக இருக்கேன் என்ற வார்த்தையை ஜூன் மாதத் தொடக்கத்தில் அவர்களிடம் இருந்து கேட்க வேண்டுமானால், இந்த 2 மாதங்கள் அவர்கள் சந்தோஷத்துக்கு விட்டுவிடுங்கள். இது அவர்கள் துள்ளித் திரியும் நேரம்...                                                                                                                                                இரா . மகாதேவன் 

சிட்டுக்குருவி பற்றி உனக்கு சேதி தெரியுமா?

உலக சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் 20 அன்று சந்தடியின்றி கடந்து சென்று விட்டது. ஏன் இந்தச் சிறிய பறவைக்கு உலகம் முழுவதும் இந்த நாள் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது? காரணம் இருக்கிறது. உலகெங்கிலும் பரவி வாழும் சிட்டுக்குருவிகள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளில்தான் 60 சதவீத சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து விட்டது என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

சிட்டுக்குருவிகள் நாள்தோறும் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டம் மற்றும் அதன் பிரச்னைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், அதன் மூலம் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவைகளை அழிவில் இருந்து பாதுகாக்கவும் தான் இந்த நாள் உலக சிட்டுக்குருவிகள் நாளாக 2010-ம் ஆண்டிலிருந்து மார்ச் 20 அன்று நினைவுறுத்தப்படுகிறது.


மனிதன் வாழும் வாழ்விடத்தையே தன் வாழ்விடமாக மாற்றி, நம் குடும்பத்தோடு தன் குடும்பத்தையும் இணைத்து, மனிதனின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து, நம் வீட்டில் ஒருவராக வாழ்ந்த ஒரு பறவை இனம் என்றால் அது அடைக்கலத்தான் குருவி எனும் சிட்டுக்குருவிதான்.


உலகம் போற்றும் பறவையியலார் டாக்டர் சலீம் அலி சிறுவனாக இருந்தபோது தன் வீட்டில் சிட்டுக்குருவிக் கூட்டில் இருந்து கீழே விழுந்த சிட்டுக்குருவிக் குஞ்சுகளின் அழகில் மயங்கி, பின்னாளில் தன் வாழ்நாளையே பறவைகள் ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்தார். அந்தப் பறவையியல் மாமேதையை இந்தியாவுக்குத் தந்ததும், உலகுக்கு அறிமுகப்படுத்தியதும் இந்தச் சிட்டுக்குருவிகள்தான்.

உலகம் முழுவதும் பரவி வாழும் இந்தச் சிட்டுக்குருவிகள் மெடிட்டரேனியன் பகுதியில் தோன்றியதாக அறியப்படுகிறது.

முதன்முதலில் வட அமெரிக்காவில் இவை அறிமுகப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவின் புரூக்ளின் மற்றும் நியூயார்க் நகரங்களில் 1851, 52-ம் ஆண்டுகளில் இவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அதற்கு முக்கிய காரணம், அவைகள் பூச்சியினங்களைப் பிடித்துச் சாப்பிட்டு, உணவுத் தாவரங்களை பூச்சிகளிடம் இருந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கையில்தான். இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், உண்மையில் இளம் குஞ்சுகளுக்கு உணவூட்ட மட்டுமே அவைகள் பூச்சிகளைப் பிடித்து வருகின்றன.

பொதுவாக மற்ற பறவைகளைப்போல் சிட்டுக்குருவிகளை அடர்ந்த காட்டுப் பகுதியிலோ அல்லது பாலைவனத்திலோ காண முடியாது. அவைகள் மனிதனின் வாழ்விடங்கள், குறிப்பாக வீடுகள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள வயல்வெளிகளில்தான் பொதுவாக தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளும்.

கிராமங்களில் உள்ள ஓட்டு வீடுகளின் இடுக்குகளில், வீட்டில் உள்ள போட்டோக்களின் பின்புறம் வைக்கோல் மற்றும் காய்ந்த புற்களைக்கொண்டு ஓர் ஒழுங்கற்ற முறையில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு வாழும். ஆனால், தூக்கணாங்குருவியின் கூடு கட்டும் திறனோ, அழகோ அதன் வடிவமைப்பில் உள்ள நேர்த்தியோ இவை கட்டும் கூடுகளில் இருக்காது.

பெரும்பாலும் கூடுகட்டும் பணியை ஆண் பறவைகள்தான் மேற்கொள்கின்றன. குளிர்காலங்களில், தெருவோரம் உள்ள மின் விளக்குகளில் கூடுகட்டி இருப்பதைக் கிராமங்களில் காணலாம். ஏனெனில், கடும் குளிரிலும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தங்கள் கூடுகளை மின்விளக்குகளில் கட்டும். இந்தக் குருவிகள் 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். சிட்டுக்குருவிகளின் பிரதான உணவு தானியங்களின் விதைகள் மற்றும் புற்கள் ஆகும்.

மனிதனோடு நெருங்கிப் பழகுபவை என்று அறியப்பட்ட சிட்டுக்குருவிகள், கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து புழுதியில் அரை வட்டவடிவில் பள்ளம் அமைத்து அதில் மண்குளியல் நடத்தும். மழைக்காலங்களில் தெருவில் தேங்கும் தண்ணீரில் அல்லது தண்ணீர் கிடைக்கும்போதெல்லாம் அவை கூட்டம் கூட்டமாக நீராடுவது வழக்கம். அதன் பிறகு இறகுகளைக் கோதிக் கொள்வதும், அதை உலர்த்திக் கொள்வதும் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும். இதற்கு முக்கிய காரணம், அதன் இறகுகளில் ஏதாவது ஒட்டுண்ணிகள் இருந்தால் அதை வெளியேற்றவும் தன் இறகைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்தான் அவைகள் இவ்வாறு செய்கின்றன.

சிதறும் தானியங்கள்தான் இந்தச் சிங்கார சிட்டுக்குருவிகளின் பிரதான உணவு. இன்று நவீனமயமானதன் விளைவு, எல்லா தானியங்களும் ஆலைகளிலேயே கல், மண் நீக்கிய பிறகு உடனே சமையல் செய்யும் விதமாக பாலிதீன் பைகளில் வந்துவிட்டன.

முன்பு உணவு சமைக்கும் முன் அரிசியை முறத்தில் வைத்து வீட்டு வாசற்படியின் முன் அமர்ந்து கல் குறுநொய் நீக்கி , புடைத்து உணவு சமைக்க உதவுவாள் அன்றைய பாட்டி. இன்றைய பாட்டி கருணை இல்லங்களில் அடைக்கலமானதால் இன்று பாட்டியும் இல்லை. முறமும் இல்லை. தானியங்களும் அதிகம் சிந்துவதில்லை. சிட்டுக்குருவிகளுக்கு உணவும் இல்லை.

இரண்டாவதாக, தானியங்கள், விதைகள்தான் இவைகளின் முக்கிய உணவாக இருந்தாலும் சிட்டுக்குருவிகளின் குஞ்சுகளுக்கு உணவுக்கு அவைகள் தோட்டத்துச் சிறு பூச்சிகள், புழுக்களையே முழுவதும் நம்பி உள்ளன.

முட்டையில் இருந்து வெளிவந்த குஞ்சுகளுக்கு முதல் உணவு இந்தத் தோட்டத்துப் புழுக்களும், பூச்சிகளும்தான். நமது கிராமத்து வீடுகளில் தாய்ப்பறவை அடிக்கடி வெளியில் பறந்துபோய் குஞ்சுகளுக்குப் பூச்சிகளைப் பிடித்து உணவாகக் கொடுத்துக் கொண்டிருக்கும். நமது வீட்டுக் கொல்லைப்புறத்தில் உள்ள செடிகளையெல்லாம் அழித்து கான்கிரீட் காம்பவுண்டுகளாக மாறிவிட்ட நகரச்சுழலில் எங்கே புதர்ச் செடிகளையும், உயிர் வேலிகளையும் காண முடிகிறது?அதையும் மீறி இப்போது நகரங்களில் காணப்படும் தோட்டங்களில் அழகுச்செடிகள் என்ற போர்வையில் வேற்றிடத்துத் தாவர இனங்கள் அதிகம் ஆக்கிரமித்திருக்கின்றன. குறிப்பாக, நமது நாட்டுத் தாவரங்களும், புற்களும் இல்லாததால் அதை நம்பி வாழும் புழுக்கள், பூச்சிகள் அரிதாகிவிட்டன.

மிக முக்கியமாக விவசாயத்தில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லிகளின் விளைவாக, நாம் நமக்கு நன்மை செய்யும் பூச்சிகளை மட்டும் கொல்லவில்லை. மாறாக, சிட்டுக்குருவிகளின் சந்ததிகளையும் சேர்த்துத்தான் அழித்துவிட்டோம். ஆம், நாம் சிட்டுக்குருவிகளின் செல்லக் குழந்தைகளுக்கு உணவாக உள்ள பூச்சிகள், புழுக்களை பூச்சிக்கொல்லிகள் பதம் பார்த்து விடுவதால் அங்கே அவற்றுக்கு நிரந்தரமான உணவுப் பஞ்சம். சிட்டுக்குருவிகள் யாரிடம்தான் முறையிடும்?

மூன்றாவதாக, உணவுக்குத்தான் இப்படிப் போராட்டம் என்றால் மனிதனின் குறுகிய சிந்தனையின் விளைவாக கான்கிரீட் காடுகளாகிவிட்ட நிலையில் சிட்டுக்குருவிகள் எங்கே போய் வீடு கட்ட முடியும்? அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறிய வீடுகள், எப்போதும் மூடியே இருக்கும். முழுவதும் மூடிய வீட்டுக்குள் எப்படி இவைகள் புதுக்குடித்தனம் புகுந்து குடியிருக்க முடியும்?

நான்காவதாக, இவற்றையெல்லாம் கடந்து ஒரு வழியாக ஓர் இடத்தைக் கண்டுபிடித்து அங்கு தன் சிறிய கூட்டைக் கட்டி வாழ்க்கையைத் தொடங்கலாம் என நினைத்தால் அங்குதான் சிட்டுக்குருவிகளுக்கு காத்திருக்கிருக்கிறது பேரதிர்ச்சி.

மனிதனின் நாகரிக வளர்ச்சியில் கைப்பேசி பிரதானமாகிவிட்டது. இவைகள் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது என்கிற நிலை உருவாகிவிட்டது. மாநகரங்கள், நகரங்களில் கைப்பேசி கோபுரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதன் விளைவு கைப்பேசி கோபுரங்களில்களில் இருந்து வெளியாகும் மின்காந்த அதிர்வலைகளால் பறவைகள் மற்றும் தேனீக்களின் எண்ணிக்கை பெருமளவு குறையத் தொடங்கி உள்ளது.

கைப்பேசி கோபுரங்களில் இருந்து வெளியிடப்படும் "மின்காந்தக்' கதிர்வீச்சுகள் பறவைகளின் முட்டைகளை அதன் கருவிலேயே பதம் பார்த்து வருவதாக ஆராய்ச்சிகள் எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

கைப்பேசிக் கோபுரங்கள் வெளியிடும் மிகக் குறைந்த அளவு கதிரியக்க அதிர்வலைகள் 900 முதல் 1,800 மெகாகர்ஸ். இவை மைக்ரோ அலைகள் என்று சொல்லக்கூடிய மின் காந்த அலைகள் என அழைக்கப்படுகின்றன.

இவை முட்டையின் மேல் தட்டின் கடினத்தன்மையை முற்றிலும் பாதித்து ஒரு மெல்லிய சவ்வு போன்ற தன்மையை ஏற்படுத்தி விடுகிறது. கைப்பேசிக் கோபுரங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவை பறவையினத்துக்கும் தேனீக்களுக்கும் அடிக்கப்பட்ட சாவு மணியாகின்றன.

ஏனெனில் பறவைகள் மிகவும் நுண்ணறிவு கொண்டவை. இந்த மின்காந்த அலைகள் பறவைகளின் உணர்வுத் திறனைப் பாதித்துத் தவறாக வழிகாட்டி தங்கள் உணவைத் தேடுவதில் சிக்கல் ஏற்படுத்தி மற்ற உயிரினங்களுக்கு எளிதில் உணவாக்கி விடுகின்றன.

சிட்டுக்குருவிகள் உணவுச் சங்கிலியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பணியில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. சிட்டுக்குருவிகள் போன்ற பறவைகள் உதவியுடன் எந்தச் செலவுமில்லாமல் இயற்கையான முறையில் பூச்சிகள் பெருகி பயிர்களுக்குச் சேதம் ஏற்படுத்தாத வகையில், பூச்சிகளின் பெருக்கத்தை இயற்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஆனால், நாம்தான் அதைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல் ரசாயன பூச்சிக்கொல்லிகள்தான் ஒரே தீர்வு என தவறாகப் புரிந்துகொண்டு நம் மண்ணையும், நம் வாழ்வையும் நஞ்சாக்கி வருகிறோம்.

அழிவது சிட்டுக்குருவிகள்தானே என அலட்சியமாக இருக்க வேண்டாம். இன்று சிட்டுக்குருவிகளின் அழிவு மனிதகுலத்தின் அழிவுக்கு அடித்த அபாய ஒலியாகப் பாவித்து நம் குழந்தைகளுக்குச் சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைத்து அவைகளைப் பாதுகாக்க நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.

ஒரு சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் தானியங்கள், கொஞ்சம் தண்ணீர். அவை உங்கள் வீட்டில் தங்குவதற்கு ஒரு சிறிய பெட்டி. உங்கள் வீட்டுத் தோட்டத்தில் நம் நாட்டுச் செடிகள். மரம் நடும்போது மறந்தும் அழகுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வேற்றிடத்து மரங்களை நட வேண்டாம். பூச்சிக்கொல்லிகளையும், களைக்கொல்லிகளையும் அறவே தவிர்த்திடுவோம். இயற்கை முறையில் பயிரிட முயல்வோம். இயற்கை விவசாயத்துக்கு மாறுவோம். சிட்டுக்குருவிகள் பாதுகாப்பின் அவசியத்தை நம் வீட்டுக் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறி அவர்களை இதில் ஈடுபடுத்துவோம்.

கிராமங்களில் அன்று, சிட்டுக்குருவிகள் தங்கள் வீடுகளில் கூடு கட்ட ஆரம்பித்தால், அதைப் பெரியவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். அவைகள் கட்டும் கூட்டுக்குக் குழந்தைகளால் எந்தவிதமான ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்வார்கள்.

சிட்டுக்குருவிகள் என்னும் இந்த சின்னத் தேவதைகள் தங்கள் வீட்டுக்கு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொண்டு வரும் என திடமாக நம்பினார்கள். இது கோடைகாலம் ஆதலால் சிட்டுக்குருவிகள் முதல் மற்ற பறவைகள் வரை உணவு மற்றும் தண்ணீருக்காகத் தவியாய்த் தவித்துப் போகின்றன. இந்த அடைக்கலத்தான் குருவிகள் மனிதரிடம் அடைக்கலம் வேண்டி நம் வீட்டின் கதவைத் தட்டி நிற்கின்றன. இவ்வளவு கஷ்டங்களிலும் இந்தச் செல்லச் சிட்டுகள் நம்மிடம் கெஞ்சிக் கேட்பதெல்லாம் செலவில்லாத சின்ன விஷயங்களை மட்டும்தான்.

நாம் செய்ய வேண்டியது கொஞ்சம் தானியம், கொஞ்சம் தண்ணீர், தங்க சிறிய இடம், முடிந்தால் சிறிய இயற்கை காய்கறித் தோட்டம், அப்புறம் பாருங்கள் இந்தச் சின்னச் சிங்காரத் தேவதைகள் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும். அத்துடன் உங்கள் குடும்பத்துக்கு ஒளிமயமான எதிர்காலத்தையும் கொண்டுவரும்.

(கட்டுரையாளர்: பசுமை உயிரினப்பன்மை சரணாலயத்தின் செயல் இயக்குநர்,அலெக்ஸ்சாந்தர் .)

ALL RESULTS