கர்வம் மிக்க முனிவர் ஒருவர், ஒருமுறை யமுனைக் கரைக்கு வந்தார். அங்கே ஒரு படகோட்டி படகுடன் நின்றான். ""அடேய்! அக்கரைக்கு அழைத்துச்செல்,'' என ஆணவத்துடன் உத்தரவு போட்டார். படகு புறப்பட்டது.
""அடேய் படகோட்டி! என்னடா இப்படி மெதுவா படகை ஓட்டுறே! வேகமா போ''.
படகோட்டி தன் முழுபலத்தையும் காட்டி படகைத் தள்ளினான். முனிவருக்கு திருப்தியில்லை. ""முட்டாள்! இன்னும் வேகமா போடா,'' என கத்தினார். படகோட்டியால் அதற்கு மேல் படகைத் தள்ள முடியவில்லை.
முனிவர் அவனிடம்,""முட்டாளே! படிக்காத உன்னால், என் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. உனக்கு ராமாயணம் தெரியுமாடா? குகன் எவ்வளவு வேகமா படகோட்டினான் தெரியுமா?''
""தெரியாது சாமி! என்னால் முடிஞ்ச வரைக்கும் வேகமாகத்தான் போறேன்,''.
""ஒழிஞ்சு போ! மகாபாரதமாவது தெரியுமாடா! அதிலே, அர்ஜுனனின் அம்பு வேகமா பாயுமே! அதுமாதிரி சீறிகிட்டு ஓட்டத்தெரியுமா?''
""அதெல்லாம் இந்த ஏழைக்குத் தெரியாது சாமி. கோபப்படாதீங்க, சீக்கிரமா போயிடுறேன்,''.
""அடேய் மடையனே! உனக்கு என்ன தான் தெரியும்? உங்கள் ஊரில் யாராவது கிருஷ்ணனைப் பற்றி கதை, காலட்சேபம் பண்றதையாவது கேட்டிருக்கிறாயா? அவனது கையிலுள்ள சக்கரம் மின்னல் வேகத்தில் பறக்குமே! அதுபோல் படகை ஓட்டு''.
"" காலட்சேபத்துக்கெல்லாம் போக நேரமில்லே சாமி''.முனிவர் முனகினார். திடீரென படகோட்டி கத்தினான்.
""சாமி! உங்களுக்கு எல்லாம் தெரியுமுனு சொன்னீங்களே! நீச்சல் தெரியுமா?''
""எதுக்குடா கேக்கிறே?''
""படகிலே ஓட்டை விழுந்துருச்சு. இன்னும் கொஞ்ச நேரத்திலே தண்ணீருக்குள் மூழ்கிடும். எல்லாம் தெரிஞ்ச உங்களுக்கு நீச்சல் தெரியாமலா இருக்கும்! தப்பிச்சு போயிடுங்க!''.
படகோட்டி தண்ணீரில் குதித்துவிட்டான். இப்போது புரிகிறதா? எல்லாம் தெரிந்தவர் உலகில் யாருமில்லை.
wonder full thankyou
ReplyDelete