Friday, June 3, 2011

சட்டசபையில் ஆளுநர் உரை அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள்



1. தமிழ் மொழியின் தொன்மையையும், பெருமையையும் மற்ற மொழியினரும் உணர்ந்து போற்றத் தக்க வகையில் திருக்குறள், பாரதியார்,  பாரதிதாசன் 
கவிதைகள் மற்றும் புகழ் பெற்ற தமிழ் நூல்களை ஆங்கிலம்,  5 சீன, அரேபிய மற்றும் உலகில் அதிகம் பேசப்படும் ஏனைய மொழிகளிலும், மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு இணைய தளத்தில் இடம் பெறச் செய்து, நமது தமிழ் மொழியின் 
பெருமை உலகமெல்லாம் பரவ வழிவகை செய்யப்படும்.  கணினி வழித் தமிழ் வளர்ச்சிக்கும், ஆராய்ச்சி மேம்பாட்டிற்கும் போதிய நிதி ஒதுக்கீடு ய்யப்படுவதுடன் தனித் தன்மை இழந்த தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் அதன் 
தொடர்புடைய நிறுவனங்களை மீட்டெடுக்க இந்த அரசு அனைத்து டவடிக்கைகளையும் எடுக்கும்.  தமிழ் மொழியை இந்திய ஆட்சிமொழிகளுள் ஒன்றாக ஆக்கவும், நீதிமன்றங்களில் தமிழைப் பயன்படுத்தவும் மத்திய அரசை 
இந்த அரசு வலியுறுத்துகிறது. 

2. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற தலைமைச் செயலகக் கட்டடம் முழுமையாக கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பே மார்ச் 2010-ல் திறந்துவைக்கப்பட்டது.  அந்தப் புதிய கட்டடத்தில் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.  அடிப்படை வசதிகள் கூட அங்கு இல்லை.  கட்டுமானப் பணிகள் முழுமை பெறுவதற்கு முன்பே அவசரஅவசரமாக ஒரு சில துறைகளும், முதலமைச்சர் மற்றும் அனைத்து அமைச்சர்களின் அலுவலகங்களும் அந்தப் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டன.  ஆறு செயலகத் துறைகள் மட்டுமே புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் மீதமுள்ள 29 துறைகள் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பழைய கட்டடத்திலேயே இயங்கி வந்தன.  அமைச்சர்களின் அலுவலகங்கள் மட்டும் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், தொடர்புடைய துறை அலுவலகங்கள் தொடர்ந்து புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பழைய தலைமைச் செயலகக் கட்டடத்திலேயே செயல்பட்டு வந்தன.  இவ்வாறு துறைகளை ஒரு இடத்திலும், அமைச்சர்களின் அலுவலகங்கள் மற்றும் ஒரு சில துறைகளை மட்டும் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்திற்கு மாற்றியது தேவையற்ற  7நிர்வாகப் பிரச்சனைகளை ஏற்படுத்தியதுடன் பொதுமக்களுக்கும் இடையூறாக அமைந்துள்ளதால், இந்த அரசு புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகக் கட்டடத்திலேயே தனது நிர்வாகப் பணிகளைத் தொடர முடிவு செய்துள்ளது.   புதிய தலைமைச் செயலகக் கட்டடப் பணிகளுக்கு  கூடுதலான மற்றும் பயனற்ற செலவு, காலதாமதம், தரமற்ற கட்டுமானப் பணிகள் போன்ற குறைபாடுகள் உள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் 
எழுந்துள்ளன.  இதுகுறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது.  இந்த விசாரணை முறையாக நடைபெற ஏதுவாக புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்படும்.  

3.தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த சேவைகளை வழங்கும் முக்கிய மையமாக தமிழகத்தை மாற்றும் நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும்.  இரண்டாம் நிலை நகரங்களில் தொலை தொடர்பு பூங்காக்கள் மூலம்  வலுவாக்கப்பட்டு தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி  பரவலாக்கப்படும்.   மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை இந்த அரசு 2011 செப்டம்பர் 15 ஆம் நாள் முதல் தொடங்கும்.  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து +1 மற்றும் +2 மாணவர்களும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும்.  முதல் கட்டமாக 2011-2012 ஆம் ஆண்டில் 9.12 இலட்சம் மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கப்படும். 

4.  தரமான பள்ளிக் கல்வியை இலவசமாக அனைவருக்கும் வழங்குவது இந்த அரசின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும்.  முக்கிய கல்வி சார்ந்த குறியீடுகளான பள்ளிச் சேர்ப்பு விகிதத்தை அதிகரித்தல்,  இடை நிற்றலைக் குறைத்தல் போன்றவற்றுடன் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இந்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்.  சமச்சீர் கல்வி என்ற பெயரில் பள்ளிக் கல்வியின் தரத்தைக் குறைத்து அதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதை இந்த அரசு விரும்பவில்லை.   பள்ளிக் கல்விமுறை மாணவர்களின் செயல்முறை அறிவாற்றலையும், ஆக்கப்பூர்வமான சிந்தனைத் திறனையும் மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.  தமிழ்நாட்டு மாணவர்கள் பிற மாணவர்களைக் காட்டிலும் சிறந்து விளங்கும் வகையில் உருவாக்க இந்தக் கல்வி முறை வகை செய்யவேண்டும்.  ஆனால், தற்போது தயாரிக்கப்பட்டுள்ள பொது பாடத்திட்டம் இந்த நோக்கத்தை எய்த போதுமானதாக இல்லை.  எனவே சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும். ஒரு வல்லுநர் குழுஅமைக்கப்பட்டு இது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

5.அதிக எண்ணிக்கையில் உயர்கல்விக்கானப் பல்கலைக் கழகங்களைத் தொடங்கிவிட்டால் மட்டும் கல்வியின் தரம் உயர்ந்துவிடாது என இந்த அரசு கருதுகிறது.  அண்ணா பல்கலைக்கழகங்களை மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தொடங்கியதால் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வலுவிழந்துவிட்டது.  இதனால் கல்விச் சேவையின் தரம் உயராமல் சுயமாக செயல்பட இயலாத பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  எனவே சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டுவர இந்த அரசு முடிவெடுத்துள்ளது.  இந்த அரசு பல்கலைக் கழகங்களைச் சீரமைத்து உலகத் தரம் மிக்க நிறுவனங்களாக மாற்றியமைக்க சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தும்.

6.அரசு அலுவலர்கள் சுதந்திரமாகவும், ஊக்கமுடனும் செயல்பட உரிய சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்தால்தான் அரசின் திட்டங்கள் நல்ல முறையில் செயல்படுத்தப்பட இயலும் என இந்த அரசு கருதுகிறது.  அரசு அலுவலர்கள் ஊக்கமுடன் செயல்பட்டு புதிய அரசின் நல்ல முயற்சிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்.  பெண் அரசு அலுவலர்களின் நலன் பேண, மகப்பேறு மருத்துவ விடுப்பிற்கு இதுவரை அளிக்கப்பட்ட மூன்று மாதம் என்பதை ஆறு மாதங்களாக உயர்த்தி தனது தேர்தல் வாக்குறுதியை இந்த அரசு நிறைவேற்றியுள்ளது

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.