உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Monday, September 12, 2011

நம் உண்மையான தோழர்கள் புத்தகங்களே
பூ.ஆ. நரேஷ், தமிழக பொது நூலகத்துறையின் இணை இயக்குனர். துடிப்பான அதிகாரியான நரேஷ், சமீபத்தில் ஹிலாரி கிளிண்டன் சென்னைக்கு வருகைதந்து உரையாற்றியபோது வரவேற்புரை நிகழ்த்தினார். தன் பேச்சின்போது ஹிலாரி, இவரைக் குறிப்பிட்டு சில நிமிடங்கள் பேசியது பலருக்கும் ஆச்சரியம்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனே உங்களைக் குறிப்பிட்டுப் பேசினாரே... எப்படி?
2006 இல் கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றியபோது, சுனாமி மறுவாழ்வுப் பணிகளை ஆய்வு செய்ய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் வந்தார். அவரிடம் கல்வித்துறையின் பணிகளை விளக்கிக் கூறும் வாய்ப்புக் கிட்டியது. இப்போது ஹிலாரி அவர்கள் சென்னைக்கு வந்தபோது, அவர் ஆற்றிய கொள்கை விளக்க உரையின்போது அவர் பற்றிய அறிமுக உரை நிகழ்த்துமாறு என்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இப்படித்தான் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

வெளிநாடுகளில் நூலகத்துக்கும் சமூகத்துக்குமான உறவு எப்படி உள்ளது?
அங்கு பாடப்புத்தகத்துக்கு வெளியே ஒரு மனிதனை எதிர்கால வாழ்வுக்கு, எந்தச் சவாலையும் சந்திக்கும் தயார்நிலையை ஏற்படுத்துபவையாக புத்தகங்களே உள்ளன. பல நாடுகளில் அவர்களின் கலாச்சாரத்திலேயே இயல்பான ஒன்றாக நூல் வாசிப்பு அமைந்துள்ளது. அங்கு தொடக்கப்பள்ளிகளில் ஆரம்பித்து கல்லூரிகள் வரை மாணவர்கள் இயல்பாக நூல்களை வாசிக் கின்றனர். வீடுகள், குடியிருப்புகள், கல்விக்கூடங்களில் கட்டாயமாக நூலகங்கள் உள்ளன. வாசிப்புப் பழக்கம் உண்டு. நம் கல்விமுறையில் பாடப் புத்தகங்களுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். இங்கும் இளைஞர்களுக்கு பாடப் புத்தகங்களைத் தாண்டி நூல்களை வாசிக்கும் பழக்கம் இயல்பாகவே ஏற்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

அரசுப்பணிக்கு ஏன் வந்தீர்கள்? 
படித்து முடித்தவுடன் நான் செய்யும் வேலை பலருக்குப் பலனுள்ளதாக அமையவேண்டும். பலர்  வாழ்வை மாற்றி அமைக்கக்கூடிய ஒன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். அதற்கு அரசுப் பணியே தகுதியாக அமைந்தது. நான் பணிபுரியும் கல்வித்துறையில் மாணவர்கள், அவர்களுக்குக் கற்பிப்பவர்கள் என்று பல்வேறுபட்டவர்களை ஒவ்வொரு ஆண்டும் புதிதாக சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இப்படி புதியவர்களைச் சந்திக்கும் வாய்ப்புள்ள ஒரே துறை கல்வித்துறை மட்டுமே.

புத்தக வாசிப்பில் ஆர்வம் உடையவர் நீங்கள். தினமும் வாசிப்பீர்களா?
நான் சமகால வரலாறு, அரசியல், தத்துவம் தொடர்பான நூல்களை வாசிப்பதில் ஆர்வம் உடையவன். நாவல்கள் என்றால் வேகமாகப் படித்துவிடலாம். ஆனால் இதுபோன்ற நூல்களில் அவற்றின் தீவிரத்தைப் பொறுத்து ஒரு புத்தகத்தை வாசித்து முடிக்க ஒரு வாரமும் ஆகும்; மூன்று வாரமும் ஆகும். நம் உண்மையான தோழர்கள் புத்தகங்களே.

இப்போது வாசிக்கும் புத்தகம்?
ராபர்ட் கிரீன் எழுதிய 48 Laws of Power  வாசித்து வருகிறேன். மனித குலத்தின் மூன்றாயிரம் ஆண்டு களின் வரலாற்றுப் பின்னணியில் சமகால மனிதனின் முன்னேற்றத் துக்கான வழிகளைச் சொல்கிறது இந்நூல். இதில் ஏராளமான வரலாற்று, தத்துவத் தகவல்கள் விரவிக் கிடக்கின்றன.