உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Sunday, November 6, 2011

உலகின் மக்கள்தொகை 700 கோடி . நமது எண்ணிக்கை 121 கோடி. இன்னும் 19 ஆண்டில் (2030) சீனாவை முந்துவோம்பத்து புள்ள பெத்த பின்னும் எட்டு மாசமா... இந்த பாவி மக எந்த நாளும் கர்ப்ப வேஷமா... என்று மனித வடிவில் இறைவன் பாடுவது சமீபத்திய கணக்கெடுப்பில் நிஜமாகியிருக்கிறது. ஆம். மக்கள்தொகை, இதுவும் ஒரு வகையில் திருவிளையாடல் தான். மக்கள்தொகை பெருக்கம். 700 கோடியை சமீபத்தில் தொட்டது மகிழ்ச்சியா, வேதனையா என்பது உலகம் முழுவதும் இப்போது பேச்சு எழுந்திருக்கிறது. அதில் சிலருக்கு மகிழ்ச்சி. பலருக்கு வேதனை என்பதே நிலைமை.

வளர்ந்த நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் ஆகியவற்றில் மக்கள்தொகை வேகமாக குறைகிறது. அங்கு எண்ணிக்கை கூடினால் மகிழ்ச்சி. சீனா, இந்தியா உட்பட ஆசிய நாடுகள், சில ஆப்ரிக்க நாடுகளில் அரசுகள் அலறுகின்ற அளவுக்கு வேதனை.

இந்த மகிழ்ச்சி / வேதனைக்கு இடையே கடந்த 31ம் தேதி உலக மக்கள் எண்ணிக்கை 700 கோடியை தாண்டியிருக்கிறது. விநாடிக்கு இந்தியாவில், உலகில் எத்தனை குழந்தை பிறக்கிறது? என்பது போன்ற புள்ளிவிவரங்களே இந்த விஷயத்தில் போரடித்துப் போய் குழந்தை பிறப்புக்கு காரணம் ஆகிவிடும் என்பதால் அவற்றை தவிர்த்து விடலாம்.

சமீபத்திய சென்செஸ்படி நமது எண்ணிக்கை 121 கோடி. இன்னும் 19 ஆண்டில் (2030) சீனாவை முந்துவோம் என்கிறார்கள். மக்கள்தொகை அதிகமாகிறது, கொஞ்சம் யோசியுங்கள் என்று அரசு சொன்ன ஒரே காரணத்துக்காக... ஜப்பானியர்கள் இன்று எண்ணிக்கையில் குறைந்து நிற்கிறார்கள். குழந்தை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட அதே அரசு, அலுவலக நேரத்தில் பர்மிஷன் அளிக்கிறது இப்போது. அந்த அளவுக்கு அரசு என்பது நாம்தான் என ஜப்பானியர்கள் நினைத்ததால், நல்லது நடந்தது. இத்தாலி, ஸ்பெயினிலும் ஏறக்குறைய இதே நிலை. அங்கெல்லாம் தம்பதிகளை குழந்தை பெற்றுக் கொள்ள அரசு கெஞ்சிக் கொண்டிருக்கிறது.

ஆனால், இந்தியர்கள் மட்டுமின்றி சீன, ஆப்ரிக்க மக்களோ நேரெதிர். வேண்டாம்... விபரீதம் நடக்கும் என்று ஐ.நா. அலறுகிறது. குடும்ப கட்டுப்பாட்டு பிரசாரங்களுக்கு மட்டும் ஆண்டுதோறும் அது செலவிடுவது ரூ.3,500 கோடி. இந்திய அரசும் எவ்வளவோ முயன்று பார்க்கிறது. ஆனால், மக்கள் தங்கள் முடிவில் உறுதியாக நின்று மக்கள்தொகையை உயர்த்துகிறார்கள்.

இந்தியா போன்ற நாடுகளில் மக்கள்தொகை அதிகமானால் ஐ.நா.வுக்கு என்ன வந்தது? என்று கேட்கலாம். அதன் கவலையில் நியாயம் இருக்கிறது. உள்ளூரில் இடமில்லை என்றால் அடுத்த ஊருக்குள் வந்து விடுவார்களே. காற்று, உணவு, தங்குமிடத்துக்கு போர் வெடிக்குமே. விடும் மூச்சுக் காற்றால் உலகம் சூடாவது, காடுகள் அழிந்து இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதால் பாதிப்பு அந்தந்த நாட்டுக்கு மட்டுமில்லையே, ஒட்டுமொத்த உலகமும் நாசமாகுமே என்பதுதான் ஐ.நா.வின் கவலை.

அது நிதர்சனம். இருக்கும் அளவான வளத்துக்கு அதிகம் பேர் பங்கு போடும் ஆபத்து (உதாரணம்: உணவு). யாருக்கு கிடைக்கும் என்ற கிராக்கியால் விலை உயர்வு. விளைவு... கிடைக்காதவர்கள் ஏழ்மையில் தள்ளப்படுவது. அதனால், ஏழைகள் எண்ணிக்கை அதிகரிப்பு. வாழ வழி தேடி இயற்கையை அழிப்பது. அதனால், இயற்கை சீற்றங்கள். இப்படி சக்கரம் போல சுழலும் பிரச்னைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

இதில் முக்கியமானது மக்கள்தொகை விடும் அனல் மூச்சு. நாளுக்கு நாள் வெளியாகும் மூச்சு காற்று வெப்பம், வேலை + சமையல் + குப்பை அழித்தல் என வெளியாகும் வெப்பம் ஆகியவை சுத்தமான காற்றை அளிக்கும் ஓசோன் மண்டலத்தையே பதம் பார்த்து வருகின்றன. அதனால், பூமியே சூடு அதிகமாகி பூகம்பம், காலம் தவறிய மழை, வெள்ளம், ஆழி பேரலை என இயற்கை சீற்றங்கள் அதிகரிக்கின்றன. இவை எல்லாம் உலகம் முழுவதற்கும் பொதுவானது என்றாலும் அதிகம் பொருந்துவது இந்தியாவுக்குதான்.

பொருளாதார பாதிப்புகள் மறுபுறம். மக்கள் அதிகரிப்பால் பசுமை காணாமல் போகிறது. காடுகள், விளைநிலங்கள் அழிக்கப்பட்டு உற்பத்தி குறையும் நிலையில் அதை பயன்படுத்த தயாராகும் மக்கள் அதிகம் என்பதால் விலைவாசி விண்ணை முட்டுகிறது. எத்தனை நலத் திட்டங்கள் போட்டாலும் ஏழைகள் பரம ஏழைகளாக மாறவும் மக்கள்தொகையே காரணம்.

நம்நாட்டில் மக்கள்தொகை உயர படிப்பறிவின்மை, மத நம்பிக்கை, கலாசாரம், பழக்க வழக்கம், நவீன மருத்துவத்தால் குழந்தை இறப்பு குறைவு, சிறந்த சிகிச்சையால் வாழ்நாள் நீடிப்பு ஆகியவை முக்கிய காரணங்கள். குறிப்பாக, 55 ஆண்டுகளாக இருந்த சராசரி வாழ்நாள் இப்போது 67ஐ தொட்டுள்ளது. இறப்பு இப்படி குறைந்து போக, ஒருபக்கம் குழந்தை பிறந்து கொண்டே இருக்கிறது.

தவிர, மற்ற நாடுகளில் தீவிரவாதம், நல்ல வேலைவாய்ப்பு, இயற்கை சீற்றங்கள் குறைவு ஆகியவற்றால் வெளிநாட்டில் அதிகளவில் செட்டில் ஆவதும் நடக்கிறது. குறிப்பாக, நேபாளம், வங்க தேசம், பூடான், மியான்மர், திபெத், இலங்கை, பாகிஸ்தான் என நம்மை சுற்றியுள்ள நாடுகளின் சில கோடி பேர் நம்மில் ஒருவராக மாறியுள்ளனர். இது நாட்டின் பொருளாதார, அரசியல் சவால்களை அதிகமாக்கி விட்டது.

குழந்தை பெறும் 18 முதல் 44 வயது பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பது மற்றொரு முக்கிய காரணம். அவர்களில் பெரும்பாலோர் குழந்தை விஷயத்தில் முடிவெடுக்கும் சுதந்திரம் இல்லாதது, கணவன் குடும்பத்தாரின் இஷ்ட எண்ணிக்கையில் குழந்தை பெறுவது நிலைமையை மோசமாக்குகிறது.

நவீன மருத்துவத்தால் மக்கள்தொகை எந்த அளவு உயர்கிறதோ அதே மருத்துவ வசதியை பெற முடியாத ஏழைகள் அதிகரிக்கவும் அதுவே காரணமாகிறது. நகரங்களில் மக்கள் நெரிசலால் காற்று, நீர் அனைத்தும் மாசுபடுகிறது.

அதற்கு கங்கை மட்டுமின்றி அத்தனை புண்ணிய(!) நதிகளும் சாட்சி. பிறகு, உள்ளூர் குளம், குட்டை ஆக்கிரமிப்பு எப்படியிருக்கும்? குறிப்பாக, குடிநீருக்கு இப்போது உள்நாட்டில் மக்கள் அடித்துக் கொள்கின்றனர். இன்னும் 50 ஆண்டுகளில் நாடுகள் இடையே போர் நடக்கும் என ஐ.நா. எச்சரிக்கிறது.

சுற்றுச்சூழல் பற்றி நமக்கு கவலையில்லை என்றாலும் மக்கள்தொகையால் தன்னை பற்றிய கவலை இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கல்வி, வேலைவாய்ப்பில் போட்டிக்கு ஆள் அதிகரிக்கும்போது பிரச்னைதானே. நேர்காணல், ரேஷன் கடை, பஸ், ரயில் டிக்கெட் கவுன்டர்கள், இலவச பொருள் விநியோக மையங்களில் மக்கள்தொகையை சலித்து கொள்ளாதவர்கள் யார்?
நாட்டின் வளங்கள் அதே அளவில் (இன்னும் கேட்டால் குறைந்து போய்) இருக்கும் நிலையில், அதிகம் பேர் அதை பங்கு போடுவது சிக்கலானது. உணவு பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து மட்டுமின்றி சத்தான உணவு கிடைக்காததும் மக்கள்தொகை உயர்வு செய்த புண்ணியம். விளைவு... இந்திய குழந்தைகளில் 30 சதவீதம் ஊட்டச் சத்து உணவின்றி நோய்வாய்ப்படுவதாக யுனிசெப் குரல் கொடுக்கிறது.

அதிக உற்பத்திக்காக தரமற்ற விதைகள், உரங்கள், வீரியமிக்க பூச்சி மருந்துகள் என பயன்படுத்தி விளைபொருட்களின் சத்தையும் உடல்நலனையும் கெடுப்பதுதான் மிச்சம். இவற்றை ஈடுகட்ட அரசு செலவழிக்கும் கோடிகளை கேட்டால் தலைசுற்றும். ஆனால், பலனோ பூஜ்யம்தான். இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளில் சுமார் 17 சதவீத காடுகள், விளைநிலங்கள் தரிசாகின. உலக மக்கள்தொகையிலோ அதே 17 சதவீதம் பேர் இந்தியர்கள்.

மக்கள்தொகை உயர்வை தடுக்க என்னதான் வழி? அரசு தரப்பில் எத்தனை வழிகள் சொன்னாலும் மக்கள் சிந்திப்பது ஒன்றே வழி. குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை ஏதோ நோய்க்காக ஆஸ்பத்திரி போவது போல மக்கள் மிரட்சியுடன் பார்க்கின்றனர். கருத்தடை மாத்திரையை ஆபத்தாக பார்ப்பது, ஆண் + பெண்ணுறைகளால் திருப்தி இல்லை என்று நினைத்து இலவசமாக கொடுத்தாலும் தூக்கி எறிவது, கருத்தடையால் ஆண்மை போகும் என்ற தவறான கருத்து, வேண்டாத கருவை கலைத்தால் பாவம் என்ற நினைப்பு, ஆண் குழந்தையே வாரிசு என்று அது கிடைக்கும் வரை பெற்றுத் தள்ளுவது என மக்களின் தவறான கருத்துகள் பட்டியல் நீள்கிறது.

இவற்றை மாற்ற அரசு, தன்னார்வ அமைப்புகள் எடுக்கும் முயற்சிகளை காது கொடுத்து கேட்டால் தவிர மக்கள்தொகை ஊதி வெடிப்பதை தவிர்க்க முடியாது. பிறகு, மற்ற அனைத்திலும்... கடைசி, இந்தியர் எண்ணிக்கையில் நம்பர் ஒன் என்று உலக அரங்கில் விரைவில் சொல்லலாம்.ஆனால், அதனால் ஏற்படும் பிரச்னைகளை நடைமுறையில் நாம் சந்திக்கும்போதுதான் எதார்த்த நிலையை புரிந்து கொள்ள முடியும்.


என்.பாஸ்கரன் 

3 comments:

 1. உள்ளூரில் இடமில்லை என்றால் அடுத்த ஊருக்குள் வந்து விடுவார்களே. காற்று, உணவு, தங்குமிடத்துக்கு போர் வெடிக்குமே. விடும் மூச்சுக் காற்றால் உலகம் சூடாவது, காடுகள் அழிந்து இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதால் பாதிப்பு அந்தந்த நாட்டுக்கு மட்டுமில்லையே, ஒட்டுமொத்த உலகமும் நாசமாகுமே என்பதுதான் ஐ.நா.வின் கவலை.


  sarithaan nanbaree

  ReplyDelete
 2. hai iam gnanasekaran very super so very usefull all the peopel very use the information

  ReplyDelete
 3. hai friend iam study in m.ed from kovai srkv college of education

  ReplyDelete

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.