திருப்பூரில் உள்ள டீக்கடை உரிமையாளர் மகள் பி.எஸ்.சி., மைக்ரோ பயாலஜி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, கோவை பாரதியார் பல்கலை அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இம்மாணவிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது.திருப்பூர் அருகே செட்டிபாளையம் டி.பி.என்., கார்டனை சேர்ந்தவர் மனோகர்; மனைவி அமுதராஜேஸ்வரி. இவர்களுக்கு மனோபிரியா (19); பிரீத்தி (17) என இரு மகள்கள். மனோகர், திருப்பூர் பெருமாள் கோவில் வீதியில் கடந்த 15 ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருகிறார்.
மூத்த மகள் மனோபிரியா, குமரன் கல்லூரியில் 2008-11ம் கல்வியாண்டில் பி.எஸ்.சி., மைக்ரோ பயாலஜி படித்தார். மூன்று ஆண்டுகளிலும் படிப்பில் சிறந்து விளங்கிய மனோபிரியா, அனைத்து செமஸ்டர்களிலும் சிறந்த மதிப்பெண்களுடன், 87.34 சதவீதம் பெற்று, கோவை பாரதியார் பல்கலை அளவில் முதலிடம் பிடித்து, சாதனை படைத்துள்ளார்.மாணவி மனோபிரியா கூறியதாவது:சிக்-குன்-குனியா போன்ற எண்ணற்ற நோய்கள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் நுண்ணுயிர்களே காரணமாக இருக்கின்றன.
மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று சிறு வயது முதலே ஆர்வம் இருந்ததால், குமரன் கல்லூரியில் சேர்ந்து மைக்ரோ பயாலஜி படித்தேன். படிப்பை தவிர மற்ற நேரங்களில்தான் பொழுதுபோக்கு என்று எனக்கு நானே கட்டுப்பாடு ஏற்படுத்தி படித்தேன். பொருளாதார சிக்கல் வந்தபோதிலும், பெற்றோர் எனது படிப்புக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் கொடுத்ததால், படிப்பில் சாதிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன்.பாடங்கள் குறித்த சந்தேகங்களை கல்லூரி பேராசிரியர்கள் தீர்த்து வைத்தனர்.
அனைத்து பாடங்களுக்கும் குறிப்பு கொடுத்து, ஊக்கப்படுத்தினர். கல்வி மட்டுமின்றி, அவ்வப்போது "கவுன்சிலிங்' நடத்தி, இதர பிரச்னைகளையும் கேட்டறிந்து நிவர்த்தி செய்ததால், படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்து, பல்கலை அளவில் முதலிடம் பெற்றுள்ளேன். தற்போது குமரன் கல்லூரியிலேயே முதலாம் ஆண்டு எம்.எஸ்.சி., மைக்ரே பயாலஜி படித்து வருகிறேன். எம்.எஸ்.சி.,யிலும் நன்றாக படித்து முதல் மதிப்பெண் பெற்று, மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிர் குறித்து ஆராய்ச்சி செய்வதை லட்சியமாக கொண்டுள்ளேன், என்றார்.மாணவியின் பெற்றோர் கூறியதாவது:திருப்பூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் துணிக்கடை வைத்திருந்தோம்; நஷ்டம் ஏற்பட்டதையடுத்து, டீக்கடை வைத்துள்ளோம்.
இரு மகள்களும் சிறு வயது முதல் நன்றாக படித்ததால், படிப்பில் சாதிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவோம். படிப்பிலும் சரி; வீட்டிலும் சரி, முழு சுதந்திரம் கொடுப்பதோடு, வியாபார நஷ்டங்களை பொருட்படுத்தாமல், அவர்களை படிக்க வைக்கிறோம். மூத்த மகள் மனோபிரியா, குமரன் கல்லூரியில் பி.எஸ்.சி., மைக்ரோ பயாலஜி படித்தாள். எங்கள் கஷ்டங்களை புரிந்துகொண்டு, படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்து, பாரதியார் பல்கலை அளவில் முதலிடம் பெற்றிருப்பது பெருமையாக உள்ளது.
திருச்சி சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு பி.ஏ., பி.எல்., படிக்கும் இளைய மகள் பிரீத்தி, கடந்த மாதம் பெங்களூருவில் நடந்த போட்டியில் சிறப்பாக வாதாடி, பரிசு மற்றும் சான்று பெற்றுள்ளார்.கஷ்டப்பட்டாலும், பிள்ளைகள் நன்றாக படித்து, முதலிடம் பெறுவது எங்கள் கவலைகளை மறக்கச் செய்கிறது, என்றனர்.பி.எஸ்.சி., மைக்ரோ பயாலஜியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ள மாணவி மனோபிரியாவுக்கு, கோவை பாரதியார் பல்கலை தங்கப்பதக்கம் வழங்க உள்ளது.
நன்றி : தினமலர்
KEEP IT UP,
ReplyDeletemy dear mano priya..
ReplyDeletemy best wishes to achieve your goals...keep going on..
Concuratulations my dear mano priya more than achivement S.David vallava raj
ReplyDelete