உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Saturday, October 5, 2013

பான் கார்டு பெறுவது எப்படி?

வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கும், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் அடிப்படைத் தேவை பான் கார்டு (PAN card – Permanent Account Number Card) எனப்படும் நிரந்தரக் கணக்கு எண் அட்டை. பான் கார்டுக்கு எங்கே விண்ணப்பிப்பது? குழந்தைகளுக்கும் வாங்க முடியுமா? பான் கார்டு தொலைந்துவிட்டால் என்ன செய்வது? ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் இங்கே….

பான் கார்டு என்பது என்ன? ஆங்கில எழுத்துக்களும், எண்களும் கலந்த பத்து இலக்க எண் கொண்ட புகைப்பட அடையாள அட்டையான இது, இந்திய அரசின் நிதி அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.

பான் கார்டின் அவசியம்

1.    வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய
2.    பங்குகளை வாங்க மற்றும் விற்பதற்கான டீமேட் கணக்கைத் துவக்க
3.    வங்கியின் ஒரு கணக்கிலிருந்து மற்றொன்றுக்கு  50,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை மாற்ற / டெபாசிட் செய்ய / கணக்கிலிருந்து எடுக்க
4.    வரி கழித்த தொகையை திரும்பப் பெற ஆகியவற்றுக்கு அவசியம்.

பான் கார்டு பெறுவதற்கான தகுதிகள்

இந்தியக் குடிமக்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். பான் கார்டு பெறுவதற்கு வயது வரம்பு இல்லை. குழந்தைகளுக்குக்கூட பான் கார்டு பெற முடியும். பான் கார்டு பெறுவதற்கு ஒரு குழுமமோ, நிறுவனமோ,  சங்கமோ, தனி நபரோ விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

இந்தியாவில் வசிப்பவர்களுக்கு 96 ரூபாய் கட்டணமும், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு 962 ரூபாய் கட்டணமும் பெறப்படுகிறது. ஏஜெண்டுகள் மூலம் விண்ணப்பித்தால் 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை செலவாகும்.

எங்கே விண்ணப்பிப்பது?

மத்திய வருமானவரித் துறையின் அங்கீகாரம் பெற்ற யூ.டி.ஐ.டெக்னாலஜி சர்வீஸ் லிமிடெட் நிறுவனம் நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்களில் இதற்கான சேவை மையங்களைத் திறந்துள்ளது. இங்கு சென்று நேரடியாக விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். இந்தியர்கள் 49 A என்ற விண்ணப்பத்தையும், வெளிநாட்டில் வசிப்பவர்கள் 49 A A என்ற விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பப் படிவத்தை  https://www.tin-nsdil.com/  என்ற தளத்திற்குச் சென்றும் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்

பான் கார்டு பெற அடையாளச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று மற்றும் பிறந்த தேதி சான்று தேவை.

1.    அடையாள மற்றும் இருப்பிடச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இருப்பிடச் சான்றாக கடைசி 3 மாதங்கள் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் போன்றவற்றின் நகல்களைக் கொடுக்கலாம்.
2.    பிறந்த தேதிச் சான்றாக பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளிச் சான்றிதழ் கொடுக்கலாம்.
3.    விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தால் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சான்றிதழ்கள் போதுமானவை. மைனர் விண்ணப்பதாரருக்குப் பிறப்புச் சான்றிதழ் கொடுக்க வேண்டும்.
4.    ஒருவேளை மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

மீண்டும் பான் கார்டு பெற

 ஏற்கெனவே பான் கார்டு வழங்கப்பட்டு ஒருவேளை தொலைந்து போயிருந்தாலோ / சேதமாகியிருந்தாலோ மீண்டும் அதே பான் நம்பரை வைத்து விண்ணப்பிக்கலாம். இதற்கும் மேற்கூறிய சான்றுகள் தேவை. புதிய பான் கார்டுக்கான கட்டணமே இதற்கும் பொருந்தும். அப்படிப் பெறும்போது ஏற்கெனவே உள்ள எண்ணே வழங்கப்படும்.

பான் கார்டில் பெயர் மாற்றமோ, பிறந்த தேதி மாற்றமோ, வேறு திருத்தங்களோ செய்ய வேண்டுமெனில் அதற்கான ஆதாரங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே பான் நம்பர் வைத்திருப்பவர்கள் மீண்டும் மற்றுமொரு பான் நம்பரைப் பெற முடியாது. அப்படிப் பெறுவதும் / வைத்திருப்பதும் சட்டப்படிக் குற்றமாகும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க

ஆன்லைனில்  http://www.myutiitsl.com/PANONLINE/   இத்தளத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எப்படி அனுப்புவது என்ற விவரமும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும். கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை உள்ளிட்டு அதை சரிபார்த்து பின் உறுதி செய்து அதை பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். அதில் கையெழுத்திட்டு அத்துடன் ஒரு புகைப்படத்தையும் தேவையான சான்றுகளையும் இணைத்து தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

PAN PDC Incharge  Chennai region
UTI Infrastructure Technology And Services Limited
STC Trade Centre, First Floor, A-29,
Thiru. Vi. Ka Industrial Estate, Guindy
CHENNAI - 600 032
Tel No:(044) 22500426

உங்கள் விண்ணப்பத்தின் நிலையறிய

http://www.myutiitsl.com/PANONLINE/panTracker.do இத்தளத்திற்குச் சென்று கூப்பன் எண்ணைக் கொடுத்து தெரிந்துகொள்ளலாம் அல்லது PAN  என டைப் செய்து சிறிது இடைவெளிவிட்டு 15 இலக்க அக்னாலெட்ஜ்மெண்ட் எண்ணை டைப் செய்து 53030 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.

மேலதிக விவரங்களுக்கு

அருகிலுள்ள பான் கார்டு விண்ணப்பங்களைப் பெறும் மையங்களைத் தொடர்பு கொள்வதற்கு http://www.myutitsl.co.in//intra/web/searchpsa.jsp  என்ற இணையதளத்திற்குச் சென்று உங்கள் பகுதியை அல்லது ஊரை க்ளிக் செய்தால் தொடர்பு முகவரியையும் தொலைபேசி எண்ணையும் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் விவரங்களை அறிந்துகொள்ள https://www.tin-nsdl.com/ அல்லது  http://www.utitsl.co.in  ஆகிய தளங்களுக்குச் செல்லவும்.

3 comments:

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.