You will be redirected to the script in

seconds
Kalvisolai.Info: தோல்விக்கு விடைகொடுத்து லட்சியத்தை அடைய மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அறிவுரை
உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Saturday, October 5, 2013

தோல்விக்கு விடைகொடுத்து லட்சியத்தை அடைய மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அறிவுரை

தோல்விக்கு விடைகொடுத்து லட்சியத்தை அடைய மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அறிவுரை கூறினார்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள மாண்ட்போர்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் மாணவ– மாணவிகள் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ–மாணவிகளுடன் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பேசியதாவது:–

பசுமை நிறைந்த மரங்கள் இருப்பதினால் மட்டுமே தூய்மையான காற்று நமக்கு கிடைக்கிறது. பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் தலா 5 மரக்கன்றுகளை நடவேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு மரக்கன்றுகளை நாம் நட்டுவந்தால் பசுமையான நாடாக நம்நாடு மாறும். மாணவர்கள் படித்துமுடித்த பிறகு நாம் படித்த பள்ளியையும், நமக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களையும் மறந்துவிடக்கூடாது.

ஒவ்வொரு இளைஞர்களும் கனவு காண வேண்டும். அதாவது உறக்கத்தில் வருவது இல்லை கனவு! உன்னை உறங்கவிடாமல் செய்வது தான் கனவு!. வாழ்வில் வெற்றிடைய ஒவ்வொருவரும் இரண்டு வழிகளை பின்பற்ற வேண்டும். அதாவது மிகவும் எளிய வாழ்க்கையை வாழ வேண்டும். மற்றொன்று கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற உறுதிவேண்டும். தோல்விக்கு விடை கொடுத்து லட்சியத்தை அடைய மாணவர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்.

1930–40 ல் ராமேஸ்வரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நான் 5–ம் வகுப்பு படித்தேன். எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் சிவசுப்ரமணிய அய்யர். அப்போது பள்ளியின் மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் இருப்பதை காணமுடியும். அந்த ஆசிரியரின் முகத்திலே அறிவு ஒளி தெரியும். தூய்மை பிரதிபலிக்கும். இதற்கு மேல் மாணவனுக்கு என்ன தேவை.

நல்ல ஆசிரியர் கிடைத்துவிட்டால் மாணவர்கள் கல்வியிலும், வாழ்விலும் வெற்றிபெறலாம். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள், மாணவர்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு பாடங்களை நடத்த வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே நல்லுறவு இருப்பது அவசியம். கல்வி நிறுவனங்கள் என்பது தொழில் மையமாக இருக்கக்கூடாது.

கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் பரவூர் கிராமத்தில் நடந்த விஞ்ஞானம் மூலம் மக்களை மேம்படுத்துவது குறித்த கருத்தரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அந்த கிராமத்தில் 2,000 மாணவர்களை தேர்ந்தெடுத்து டாக்டர், என்ஜினீயர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., படிக்க வைப்பதாக அக்கிராமத்தில் உள்ளவர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர். அப்போது 12 மாணவர்களை தேர்ந்தெடுத்து அதிலிருந்து ஒரு மாணவனிடம் கேள்வி கேட்டேன்.

அதில், எனக்கு உளவியல் படிக்க ஆசை என்றும், ஆனால் எனது பெற்றோர்கள் தொழிற்கல்வி படிக்க ஆசைப்படுவதாகவும் கூறினான். இதற்கு நான், பெற்றோர் உன்னை நேசிப்பதால் அப்படி விரும்புகிறார்கள் என்று கூறினேன். உடனே கூட்டத்தில் இருந்த அந்த மாணவனின் பெற்றோர் எழுந்து நின்று, மகன் விருப்பப்படியே உளவியல் படிக்க வைப்பதாக தெரிவித்தார்கள். ஏன் இதை சொல்கிறேன் என்றால், அன்பும், அரவணைப்பும் மாணவர்களுக்கு கட்டாயம் தேவை.

இன்னமும், பல்லாயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் தன்னம்பிக்கை இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு கூற விரும்புவது என்னவென்றால் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மன உறுதியுடன் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை.

2020–ம் ஆண்டில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி அடைந்து ஊழல் அற்ற நாடாக இருக்கும். அதேபோல், நகரம், கிராமம் போன்ற பிரிவினை இல்லாமல் எல்லா வசதிகளும், எல்லா இடங்களில் கிடைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கும். இன்னும் 7 ஆண்டுக்குள் விவசாயம், தொழில் வளர்ச்சி போன்ற தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த நாடாளுமன்றத்தில் விவாதித்து அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.

முன்னதாக காரில் இருந்து இறங்கிய அப்துல்கலாம், மேடைக்கு வரும் வழியில் மாணவ–மாணவிகளிடம் நலம் விசாரித்து, உங்களது பெயர் என்ன? என்று கேட்டார். மேலும், விழாமேடையில் இருந்தபோது, பள்ளி மாணவ–மாணவிகள் சிலர் அப்துல்கலாமிற்கு நினைவு பரிசுகளையும், பூங்கொடுத்துக்களையும் கொடுத்தனர்.

நிகழ்ச்சியில், கபேரியல் சபையின் தென்னிந்திய திருச்சபை தலைவர் கே.ஜே.ஜார்ஜ், மாண்ட்போர்ட் பள்ளி இயக்குனர் இக்னேசியஸ், முதல்வர் வர்கீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.