You will be redirected to the script in

seconds
Kalvisolai.Info: January 2018
உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Wednesday, January 31, 2018

மனிதம் போற்றிய மகான்


மனிதம் போற்றிய மகான் | வள்ளலார் மருத்துவர் அமுதவடிவு, செயலாளர், திருவருட்பா இசை சங்கம், வடலூர் | இன்று (ஜனவரி 31-ந்தேதி) வள்ளலார் ஜோதியில் கலந்த தினம். | "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று பாடிய வள்ளலார் மனித சமுதாயத்தை வாழ்விக்க வந்த மகான். வள்ளலார் கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுகா மருதூர் கிராமத்தில் 5-10-1823-ல் ராமையா பிள்ளைக்கும், சின்னம்மையாருக்கும் 5-வது மகனாக அவதரித்தார். இவரது இயற்பெயர் ராமலிங்கம். இவருக்கு இரண்டு சகோதரர்கள். இரண்டு சகோதரிகள். ராமலிங்கம் ஐந்து மாத குழந்தையாக இருந்தபோது ராமையாவும், சின்னம்மையும் குழந்தையை தூக்கி கொண்டு நடராஜரை தரிசிக்க சிதம்பரம் சென்றனர். தீட்சிதர் திரையை விலக்கினார். அனைவரும் நடராஜரை தரிசனம் செய்த மகிழ்ச்சியில் பக்தி பரவசத்துடன் 'சிவ சிவ' என்று கூறி வணங்கினர். ஆனால் குழந்தை ராமலிங்கமோ கலகலவென்று சிரித்தார். அதைக் கண்டவர்கள் இது சாதாரண குழந்தை அல்ல; தெய்வக்குழந்தை என்று கூறி குழந்தையை வணங்கினர். அப்போது அருள் உண்மையை வள்ளலாருக்கு இறைவன் உணர்த்தினார். சிறிது காலத்தில் வள்ளலாரின் தந்தை காலமானார். குடும்பம் வறுமையில் வாடியது. பிழைப்பு தேடி சின்னம்மை தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்னையில் குடியேறினார். ராமலிங்கத்தின் மூத்த சகோதரர் சபாபதி புராண சொற்பொழிவு நடத்தி வந்தார். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். ராமலிங்கத்துக்கு 5 வயதானபோது அவரை சபாபதி முதலியார் என்கிற ஆசிரியரிடம் தமிழ் படிக்க சேர்த்தார்கள். ஆனால் ராமலிங்கம் கல்வி கற்க செல்லாமல் கந்தக்கோட்டம் கந்தசாமி கோவிலுக்கு சென்று தியானம் செய்து வந்தார். ஒருநாள் வள்ளலாரின் அண்ணன் சபாபதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால் அன்று ஒரு புராண சொற்பொழிவுக்கு செல்வதாக இருந்தார். அவர் வள்ளலாரை அழைத்து இன்று ஒருநாள் மட்டும் நிகழ்ச்சிக்கு சென்று பக்தி பாடல்களை பாடிவிட்டு வா என்று உத்தரவிட்டார். வள்ளலார் சென்று சொற்பொழிவாற்றினார். அவரது சொற்பொழிவில் சபையோர் மெய் மறந்தனர். வள்ளலார் 1857-ம் ஆண்டு வரை சென்னையில் இருந்தார். பின்னர் தீர்த்த யாத்திரையாக சென்னையில் இருந்து தென்திசை பயணம் மேற்கொண்டார். சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் முதலிய தலங்களை தரிசித்தார். பின்னர் உடல் நலமில்லாத தம் இளைய அண்ணன் பரசுராமரைக்காண 'கருங்குழி' எனும் ஊருக்குச் சென்றார். கருங்குழியில் தங்கியிருந்தபோது அடிக்கடி வள்ளலார் சிதம்பரம் சென்றார். கூத்தனைக் கண்டார். தோத்திரம் செய்தார். பாமாலை புனைந்தார். சுமார் இருநூறு மாலைகள் பாடினார். சிதம்பரம் சென்று வழிபட்டபோது சிதம்பரத் திருக்கோவிலைப் புதுப்பிக்க எண்ணினார். அது நிறைவேறவில்லை. இறைவன் "வடலூர் என்னும் உத்தரஞான சிதம்பரத்தில் அளவு கடந்த நெடுங்காலம், சித்தி எல்லாம் விளங்கத் திருஅருள் நடம் செய்வோம். அதற்கு அடையாளமாக வடலூரில் ஓர் ஞானசபை காணுதல் வேண்டும்" என்னும் அருட்குறிப்பை அறிவித்தார். எனவே, இறைவனின் அருள் ஆணையின்படி ஞானசபை அமைக்க ஆயத்தமானார். அதனை உத்தரஞான சிதம்பரமாகிய வடலூரில் அமைக்க முற்பட்டார். ஞானசபைக்கான வரைபடத்தைத் தாமே வரைந்தார். 1871-ம் ஆண்டு ஆனி மாதம் ஞானசபை கட்டும் பணி தொடங்கியது. எட்டு கோண வடிவில், தாமரைப்பூ மலர்ந்ததுபோல் வடிவமைக்கப்பட்டது. ஞானத்தில் சிறந்த திசையாகிய தென்திசை நோக்கி வாயில் ஏற்படுத்தப்பட்டது. ஞானசபையின் முன்மண்டபத்தில் கீழ்ப்புறம் பொற்சபையும், மேற்புறம் சிற்சபையும் அமைக்கப்பட்டது. ஞானசபையின் நடுப்பகுதியில் பன்னிருகால் மண்டபம் கட்டப்பட்டது. அதற்கு உட்பகுதியில் நாற்கால் மண்டபம் அமைக்கப்பட்டது. அம்மண்டபத்தின் நடுவில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை எழுந்தருளச் செய்தனர். அவ்வருட்பெருஞ்ஜோதிக்கு முன் ஏழு திரைகள் தொங்கவிடப்பட்டன. அவை கருமை, நீலம், பசுமை, செம்மை, பொன்மை, வெண்மை, கலப்பு ஆகிய வண்ணங்களில் இருந்தன. பொற்சபை என்பது ஆன்ம ஆகாயம், சிற்சபை அதாவது ஞானசபை என்பது ஆன்மப் பிரகாசம். அந்தப் பிரகாசத்திற்குள் இருக்கும் பிரகாசமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். அந்தப் பிரகாசத்தின் அசைவே அருள் நடனம். ஆன்மப் பிரகாசத்தை விளக்கம் செய்யாமல் மறைப்பவைகள் மாயைகள், மலங்கள், மதங்கள் என்னும் திரைகள். இத்திரைகளாகிய குறைகள் நீங்கினால் நமக்குள் பேரருட்ஜோதி பிரகாசத்தைக் காணலாம். 1871-ம் ஆண்டு ஆனிமாதம் தொடங்கப்பட்ட பணி 1872-ம் ஆண்டு தை மாதத்திற்குள் நிறைவடைந்தது. ஞானசபை கட்டப்படும்போது வள்ளற்பெருமான் மேட்டுக்குப்பத்தில் இருந்தார். வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தர்மசாலை என்ற பெயரில் அன்னதானத்தை தொடங்கினார். அன்று அவர் ஆரம்பித்த அன்னதானம் இன்று வரை தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. 1872-ம் ஆண்டு தைத்திங்கள் முழுமதி நாள், வியாழக்கிழமை. பூசவிண்மீன். மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் இருந்த வள்ளற்பெருமான் சன்மார்க்க அன்பர்களை அழைத்தார். அகண்டம் ஒன்றினைத் தந்தார். தம் அருட்பார்வையில் ஒரு மண்டலம் வைத்திருந்த 5 அடி உயரமுள்ள கண்ணாடியையும் தந்தார். தைப்பூசத்தன்று வடலூர் ஞானசபையில் ஜோதி தரிசனம் காண்பித்தார். அதனைத் தொடர்ந்து பகல் 10 மணிக்கும், நண்பகல் 1 மணிக்கும், மாலை 7 மணிக்கும், இரவு 10 மணிக்கும், மறுநாள் காலை 5.30 மணிக்கும் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பித்தனர். இவ்வாறே ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து ஆறு காலங்களில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. மாத பூஜை நாட்களில் 6 திரைகள் நீக்கி இரவு 7.45-க்கு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. 30-1-1874 அன்று இரவு ஆயிரக்கணக்கானோர் மத்தியில் அருளுரை ஆற்றினார். பின்னர் சித்திவளாக அறைக்குள் சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. அறைக்குள் செல்வதற்கு முன்பு நீங்கள் அறையை வெளியே பூட்டிக்கொள்ளுங்கள். அறையை திறந்து உள்ளே வர முயற்சிக்க வேண்டாம். கதவைத் திறந்தாலும் என்னைப் பார்க்க முடியாது என்று கூறிவிட்டு அறைக்குள் சென்றார். வள்ளலார் கூறியபடியே அவரது சீடர்கள் அறையின் வெளிக்கதவை மூடினார்கள். அரசு அதிகாரிகள் அறையை திறந்து சோதனை செய்து பார்த்தபோது உள்ளே எதுவுமில்லை. வள்ளலார் ஜோதியாய் காற்றில் கலந்து விட்டார் என்று அறிவித்தனர். நாமும் சாதி, சமய, மத, இன சங்கற்ப, விகற்பங்களை விடுத்து கோபம், லோபம் முதலிய குறைகளாகிய திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்போம்.

Tuesday, January 30, 2018

மாணவர்களின் கையெழுத்து மேம்பட ஆசிரியர்களுக்குப் பயிற்சி தேவை.


மாணவர்களின் கையெழுத்து மேம்பட ஆசிரியர்களுக்குப் பயிற்சி தேவை | வேதா டி. ஸ்ரீதரன் | 'மாணவர்களை அழகாக எழுதவைப்பது பள்ளிகளுக்குப் பெரிய சவாலாக இருப்பது ஏன்?' இது எனது பயிற்சி வகுப்புகளின் தொடக்கத்தில் நான் முன்வைக்கும் கேள்வி. இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதிலைச் சொல்வார்கள். எனினும், பள்ளிகளில் மாணவர்களின் கையெழுத்து மேம்படாததற்கு ஆசிரியர்களின் அறியாமையே முக்கியக் காரணம் என்று நான் கருதுகிறேன். கையெழுத்து என்பது ஒருசில எழுத்து வடிவங்களைக் காகிதத்தில் எழுதுவது மட்டுமே. பள்ளிகளில் கணிதம், இலக்கணம், உயிரியல், வேதியியல் முதலான எத்தனையோ கடினமான பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவை அனைத்துமே சவாலான விஷயங்கள்தாம். இருந்தாலும், இவற்றில் பெரும்பாலான மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால், ஒரு சில சாதாரணக் கோட்டு வடிவங்களை எழுதுவதற்கு மாணவர்கள் பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கிறது. அப்படியானால், கையெழுத்து விஷயத்தை எப்படிக் கையாளுவது என்பது ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை என்றுதானே பொருள்? இதைத்தான் அறியாமை என்று நான் குறிப்பிட்டேன். மாணவர்கள் தங்களுக்கு எவ்வாறு எழுதத் தெரியுமோ, அவ்வாறே மீண்டும் மீண்டும் எழுதிவருகிறார்கள். இது தவறானது. மாறாக, எப்படி எழுத வேண்டுமோ, அப்படி எழுத வேண்டும். அதாவது, சரியான விதத்தில் எழுத வேண்டும். இவ்வாறு எழுத ஆரம்பிக்கும்போது காலப்போக்கில் அவர்களது கையெழுத்து மேம்பாடு அடையும். சரியான விதத்தில் எழுதுவது என்றால் என்ன? ஓர் எழுத்து வடிவத்தை முறையான விதத்தில் எவ்வாறு உருவாக்க வேண்டுமோ, அந்த விதத்தில் உருவாக்குவதுதான் சரியான அணுகுமுறை. இதில் மூன்று முக்கிய விஷயங்கள் உண்டு. 1. பென்சிலை லாகவமாகப் பிடிப்பது. 2. பென்சிலைக் காகிதத்தின் மீது மென்மையாக அழுத்துவது. 3. பென்சிலைக் காகிதத்தின்மீது சரியான திசையில் நகர்த்துவது. இந்த மூன்று விஷயங்களையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த மூன்று விஷயங்களையும் கற்றுக்கொள்வதற்குப் பெயர்தான் முறையாக எழுதக் கற்றுக்கொள்வது அல்லது பயிற்சிசெய்வது. ஆக, மாணவர்கள் முதலில் எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து அன்றாட எழுத்து வேலையின் மூலம் அவர்கள் கையெழுத்து படிப்படியாக முன்னேற்றம் அடையும். கையெழுத்துப் பயிற்சி என்பது முறையாக எழுதிப் பழகுவது. முறையாக எழுதிப் பழகும்போது மாணவர்கள் சரியாக எழுதுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள். ஆக, பயிற்சியின் பயன் கற்றுக்கொள்வது. எனவே, வெறுமனே ஒரே வாக்கியத்தை மீண்டும் மீண்டும் எழுதுவதைப் பயிற்சி என்று சொல்ல முடியாது. கையெழுத்துப் பயிற்சி என்பது இரண்டு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது. 1. பயிற்சி தரப்படும் விதம் 2. கையெழுத்துப் பயிற்சி ஏடு முதலில் விரலால் மட்டும் எழுதுவது. உதாரணத்துக்கு, ஆள்காட்டி விரலால் மணல்மீது எழுதுவது சுலபமானது. அடுத்ததாக, எழுத்தின்மீது பென்சிலால் எழுதிப் பழகுவது நல்லது. இவற்றைத் தொடர்ந்து காலி இடத்தில் எழுத வேண்டும். இந்த மூன்றும் கையெழுத்துப் பயிற்சியின் முக்கியமான படிநிலைகள். எத்தகைய கையெழுத்துப் பயிற்சி ஏடுகளில் இந்த மூன்றுவிதமான பயிற்சிகளுக்கும் வாய்ப்பு கிடைக்கிறதோ, அவைதான் கையெழுத்துப் பயிற்சிக்குப் பொருத்தமானவை. இந்த விஷயங்கள் மிகச் சுலபமானவையே. ஆனாலும், மாணவர்களின் கையெழுத்து மேம்படாததற்குப் போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம். கையெழுத்துப் பயிற்சி என்றால் என்ன, மாணவர்களுக்கு எவ்வாறு கையெழுத்துப் பயிற்சி தர வேண்டும் முதலிய விஷயங்களை ஆசிரியர்கள் கற்றுக்கொள்வதுதான் இதற்கான ஒரே தீர்வு. கட்டுரையாளர், கையெழுத்துப் பயிற்சி நிபுணர்

Monday, January 29, 2018

இசைத் துறையில் சாதிக்க ஆசையா?இசைத் துறையில் சாதிக்க ஆசையா? | இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை. இசைத்துறை பரந்து விரிந்தது. இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் இசை உலகமும் புதிய பரிணாமம் அடைந்திருக்கிறது. நீங்களும் இசைப் பிரியர், இசைத் துறையில் சாதிக்க நினைப்பவர் என்றால், இசைத் துறையின் முக்கியமான படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்... இசைத் துறையில் படிப்புகளும் அதிகம், வேலைவாய்ப்புகளும் அதிகம். அதே நேரத்தில் போட்டிகளும் மிக அதிகம். நினைத்ததும் யார் வேண்டுமானாலும் பாடலாம். ஆனால் பாடகராக நிச்சயம் சாதகப் பறவையாக நெடிய காலம் பயணப்பட வேண்டியிருக்கும். நீங்கள் தனிப்பட்ட இசைக் கருவியை இசைத்துப் பழகுவதோ, தனி இசையை கற்றுக் கொண்டு பாடகராக உயர்வதோ மட்டும் இசைத்துறை வாய்ப்பு என்று எண்ணிவிடாதீர்கள். இன்னும் எண்ணற்ற வாய்ப்புகள் இசைத் துறையில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் முக்கியமான சில பணிகளை அறிவோம்... இசை அமைப்பாளர் இசைத் துறையில் உயர்ந்த பணியாக கருதப்படுவது இசை அமைப்பாளர் அல்லது இசை இயக்குனர். இசைத்துறையின் அடிப்படை பணிகள் அனைத்தையும் அறிந்து உயர்ந்தவர்களால் இசை அமைப்பாளர் பணியில் சாதனை படைக்க முடியும். ஆரம்பத்தில் கிடைக்கும் சிறிய வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்துபவர்கள், பின்னர் சாதனையாளராகவும், மற்றவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குபவராகவும் உயரலாம். அதற்கான பயணப்பாதை கொஞ்சம் கடினமானதுதான். பாதுகாப்பற்ற நிலையில் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டு, கடமைகளையும் நிறைவேற்றிக் கொண்டு நம்பிக்கையுடன் நடைபோட்டவர்கள் இன்று சிறந்த இசையமைப்பாளர்களாக இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. இசைத் துறையின் நுண்ணறிவையும், அனுபவத்தையும் பெற்றுக்கொண்டால் அந்த சாதனையை நீங்களும் நிகழ்த்தலாம். சினிமாத் துறையில் இசை அமைப்பாளர்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. ஆடியோ என்ஜினீயர் இசை சார்ந்த தொழில்நுட்ப படிப்பு இது. ஒலியின் தரத்தை உயர்த்தி இசையை ஏற்றம் பெறச் செய்வது ஒலிப் பொறியியல் துறை. இதற்கான பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு நிறைய பணி வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இசை சிறப்பாக ரசிகர்களைச் சென்றடைய பின்னணியில் செயல்படுபவர் சவுண்ட் என்ஜினீயர்தான். இசை ஞானம் மிகுதியாக இல்லாவிட்டாலும் ஆடியோ என்ஜினீயரிங் படிப்பை கற்கவும், சாதிக்கவும் முடியும். இசையின் ஒலித் தடங்கலை சமாளிக்கும் தொழில்நுட்பம் மற்றும் இயந்திர நுட்பங்களை அறிவது ஆடியோ என்ஜினீயர் படிப்பாகும். அதை சிறப்புடன் செயல்படுத்துவது சவுண்ட் என்ஜினீயரின் பணியாகும். இசை நிகழ்ச்சிகள், சினிமா ஸ்டூடியோக்கள், மாநாடுகள் போன்ற பொதுநிகழ்வுகள், ரேடியோ, டி.வி. நிலையங்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் என பல்வேறு இடங்களிலும் சவுண்ட் என்ஜினீயரிங் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதில் உள்ள ஆர்வமும், அறிவுத்திறனும் சிறந்த பணிவாய்ப்பையும், உயர்ந்த அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை. ஆர்ட்டிஸ்ட் மேனேஜர் இசைத்துறையில் பலருக்கும் தெரிந்திராத முக்கியப் பணிகளில் ஒன்று ஆர்டிஸ்ட் மேனேஜர். இசைக் கலைஞர்கள் பலர், தங்களுக்கான வாய்ப்புகளைத் தேடித் திரிந்து கொண்டிருந்தாலும், இசைத்துறையில் எங்கெங்கு யாருக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது எளிதில் தெரிவதில்லை. அதே நேரத்தில் ஒருவர், இரு இடங்களில் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனால் ஒரு வெற்றிடம் ஏற்படும். இதுபோன்ற சூழலை சமாளித்து பல்வேறு இசைக் கலைஞர்களுக்கும் வாய்ப்புகளை ஒருங்கிணைத்து, இசைத் தடத்தில் வெற்றிகரமாக செயல்படுத்துவது 'ஆர்டிஸ்ட் மேனேஜர்' பணி. இவர்கள் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கும், இசைக் கலைஞர்களுக்கும் இணைப்புப் பாலமாக விளங்குவதால் நல்ல கவுரவமும், வருவாயும் கிடைக்கும். அதற்கேற்ப பேச்சாற்றல், ஒருங்கிணைந்து செயல்படும் ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு திறன்கள் இந்தப் பணிக்கு அவசியம். ரசிகர்கள் விரும்பும் சிறந்த கலைஞரை நிகழ்ச்சிக்கு ஒப்பந்தம் செய்வதற்கேற்ப நிறைய ஊதியம் பெறுகிறார் ஆர்டிஸ்ட் மேனேஜர். இசை ஞானம் இல்லாமலும் இந்தப் பணியைச் செய்ய முடியும் என்றாலும், இசை அறிவு வாய்ப்புகளை பிரகாசமாக்கும். இசை இதழாளர் எழுத்துத் திறமை இருப்பவர்களுக்கும் இசைத் துறையில் பணி வாய்ப்பு உண்டு. இசைத் துறையில் அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ளும் ஒரு குறுகிய காலப் படிப்பை படித்துக் கொண்டால் இசை எழுத்தாளராகிவிடலாம். இசை நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை எழுதுதல், இசைக் கலைஞர்களை நேர்காணல் செய்தல், ஆல்பங்கள் பற்றிய விமர்சனம் எழுதுதல் என இசை சார்ந்த அனைத்து சங்கதிகளையும் ஆராய்ந்து, அறிந்து எழுத்தில் பதிக்கலாம். அனேக தினசரிகள், இதழ்கள், காட்சி ஊடகங்கள் இசை சார்ந்த கட்டுரைகள், காணொலிகளை வெளியிடுகின்றன. இசையைப் பற்றிய ஆழ்ந்த அறிவு, இந்தத் துறையில் சிறந்து விளங்க துணை புரியும். இசை ஆசிரியர் இசைத்துறையில் கால்பதித்தால் இசையை பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் உயரலாம். இசையமைப்பாளருக்கு அடுத்தபடியாக இசை ஆசிரியருக்கு வாய்ப்புகள் பிரகாசம். நிறைய பேர் இந்தப் பணியைச் செய்து வருகிறார்கள். திறமை வாய்ந்த இசை ஆசிரியர்களுக்கு மதிப்பு அதிகம். அதற்கேற்ப வாய்ப்புகளும், வருவாயும் அதிகம். தனிநபருக்கு இசை கற்றுக் கொடுத்தல், இசைப்பள்ளி நடத்துதல், பிரபலங்களுக்கு நேரில் சென்று இசை கற்பிப்பது, இசை நிகழ்ச்சிகளுக்குச் செல்வது என எல்லாப் பணிகளிலும் ஈடுபடுகிறார்கள் இசை ஆசிரியர்கள். கல்லூரிகளிலும் வகுப்பெடுக்க முடியும். இசை ஆசிரியராக உயர அடிப்படை இசை ஞானம் போதாது. ஆழ்ந்த இசை ஞானம் இருந்தால்தான் சிறந்த இசையாசிரியராகி எதிர்கால இசை இளவரசர்களை உருவாக்க முடியும். இதயங்களை இணைக்கும் இசைத்துறையில் நீங்களும் கால்பதித்து சாதிக்கலாம்!

மாணவர்களின் மறதியை விரட்ட உதவும் மகத்தான பயிற்சிகள்!


மாணவர்களின் மறதியை விரட்ட உதவும் மகத்தான பயிற்சிகள்! இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் தங்களுக்கு நினைவாற்றல் திறன் இல்லை என்று முடிவு செய்துவிடுகிறார்கள். 'நன்றாகத்தான் படித்தேன், ஆனால் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. தேர்வு எழுதும்போது பதில்கள் மறந்துவிடுகின்றன. அதனால் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற முடியவில்லை' என எத்தனையோ மாணவர்கள் சொல்கிறார்கள். ஆனால் 10 வருடங்களுக்கு முன்பு பார்த்த ஒரு திரைப்படத்தின் கதையை இப்போது கேட்டாலும் சொல்ல முடிகிறது. அதே போல் ஒரு படத்தின் பாடல் வரிகளை ஞாபகமாக சொல்ல முடிகிறது என்றால் உங்களுக்கு சிறப்பான நினைவாற்றல் இருக்கிறது என்றுதானே அர்த்தம். உங்களுக்கு எதில் ஆர்வமும், விருப்பமும் இருக்கிறதோ? அதைப்பற்றி எப்போது கேட்டாலும் உங்களால் கூற முடியும். திரைப்படத்தின் மேல் உள்ள ஆர்வமும், விருப்பமும் தான் உங்களால் அந்த திரைப்படத்தின் கதையையோ, பாடல் வரிகளையோ உடனே சொல்ல முடிகிறது. அதுபோலவே நீங்கள் படிக்கும் படிப்பையும் ஆர்வத்துடன், விருப்பத்துடன் படித்தால் கண்டிப்பாக எப்போதுமே மறதி ஏற்படாது. ஒரு நூலகத்திற்குச் சென்று அங்குள்ள நூலகரிடம் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை கேட்கும்போது அங்கு ஏராளமான புத்தகங்கள் இருந்தாலும் நீங்கள் கேட்ட புத்தகத்தை உடனே எடுத்து கொடுத்துவிடுகிறார். அது எப்படி முடிகிறது என்று பார்த்தால், அங்கே புத்தகங்களை வரிசைப்படுத்தி சீராக அமைத்திருப்பதுதான் காரணம். எவ்வளவு புத்தகங்கள் இருந்தாலும் அதை சீராக வரிசைப்படுத்தி வைத்திருந்தால் எந்த புத்தகத்தையும் எடுப்பது மிக எளிது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அது போன்றுதான் நமது நினைவுகளை, பதிவுகளாக மாற்றி ஒழுங்காக வரிசைப்படுத்தி வைத்தால் அது நீண்ட காலம் வரை நினைவில் இருக்கும். அவ்வாறு இல்லையென்றால் சிறிது காலத்தில் மறந்து போய்விடும். நினைவுப் பதிவுகளை வரிசைப்படுத்தியவர்கள் சிறந்த நினைவாற்றல் மிக்கவர்களாக திகழ்கிறார்கள். உலக சாதனை புரிந்தவர்கள் மற்றும் குறைந்த வயதிலேயே சிறப்பான நினைவாற்றல் உள்ளவர்கள் தங்கள் நினைவு பதிவுகளை வரிசைப்படுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களது நினைவாற்றல் சிறப்பான முன்னேற்றத்தை காண ஒரு எளிய பயிற்சி முறையை நீங்கள் மேற்கொள்ளலாம். காலை சிற்றுண்டி முடித்தவுடன், தூங்கி எழுந்தது முதல் சிற்றுண்டி முடிக்கும் வரை நீங்கள் செய்த செயல்களை வரிசையாக 2 நிமிட நேரம் நினைவுபடுத்தி பார்க்கவும். பின்னர் உங்கள் பணியை தொடரவும். அதே போல் காலை சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்கும் உள்ள இடைப்பட்ட நேரத்தில் நீங்கள் செய்த செயல்களை, மதிய உணவு நேரத்தில் வரிசையாக நினைவுபடுத்தி பார்க்கவும். அதே போல் மாலையிலிருந்து இரவு உணவு உண்ட நேரம் வரை நீங்கள் செய்த செயல்களை தூங்கும் முன் வரிசையாக நினைவுபடுத்தி பார்க்கவும். இந்த நினைவாற்றல் பயிற்சியை ஒரு மாத காலம் செய்து வந்தால், உங்கள் நினைவாற்றல் நம்ப முடியாத அளவு வளர்ந்திருப்பதை உணர முடியும். இந்த பயிற்சிமுறை உங்கள் நினைவாற்றல் திறனை மட்டும் அல்லாமல் உங்களது நேர மேலாண்மையும் அதிகரிக்கும். எப்படி என்றால் ஒவ்வொரு நாள் நிகழ்வுகளையும் வரிசைப்படுத்தி நினைவுபடுத்தும் போது அன்றைய பொழுதில் வீண் அரட்டை, தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் போன்றவற்றில் நீங்கள் வீணடித்த நேரங்கள் உங்கள் கவனத்திற்கு வரும். அவற்றை நீங்கள் தானாகவே தவிர்த்து விட இந்த பயிற்சி உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். இதே போன்று மேலும் சில பயிற்சிகளை பார்ப்போம். மொத்தமாக உள்ள பாடத்தை நமக்குப் புரியும் வகையில் பகுதிவாரியாக பிரித்துக் கொள்ளலாம். இப்படிச் செய்வதால் நினைவில் அதிக பாரம் இல்லாமல் பதிந்துகொள்ள முடியும். அத்துடன் பகுதி பகுதியாக பிரித்து வைத்து சிறுபகுதியாக படிப்பதால் மறதி இல்லாமல் அனைத்தையும் தேர்வில் எழுத முடியும். மற்றொரு பயிற்சி முறை என்னவென்றால், படிக்க வேண்டிய பதிலை இரண்டு தடவை படிக்க வேண்டும். இப்போது புத்தகத்தை மூடி வைத்துவிட்டு நாம் படித்த பாடத்தை நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். பதியவில்லையெனில், அந்த பாடம் மேலோட்டமாக சொல்லும் கருத்து என்ன என்பதை முதலில் கவனிக்க வேண்டும். மீண்டும் இரண்டு முறை படிக்க வேண்டும், நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் படித்த பாடம் மனதில் பதியும். படித்ததை நண்பர்களிடம் பகிர்வது மிகவும் சிறந்த நினைவாற்றல் பயிற்சி ஆகும். இதனால் நினைவில் உள்ளது வாய்மொழியாக வெளிப்படும் போது ஐந்துமுறை படித்ததற்கு சமமாகிறது. பாடங்கள் படிக்கும் போது புரியாத வார்த்தைகளோ அல்லது வாக்கியங்களோ வந்தால் அதை நீங்கள் உங்களுக்கு புரிந்த வார்த்தை அல்லது வாக்கியங்களுடன் தொடர்புபடுத்தி படித்தால், புரியாத வாக்கியங்களும் நினைவில் பதியும். தேர்வு எழுதும்போது மறதி ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் நினைவாற்றல் பயிற்சிகளை தொடர்ந்து கடைபிடித்து, படிக்கும் பாடத்தை மனப்பாடம் செய்து படிக்காமல் புரிந்து படிக்க வேண்டும். புரிந்து படிக்கும் முறையை எளிய முறையாக நமது தாய்மொழியில் படிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு படிக்கும் பாடம், எப்போதும் மறக்காமல் நமது நினைவில் பதிந்து வாழ்வில் பயன்படும் என்பதில் ஐயமில்லை. -பேராசிரியர், முனைவர், அ.முகமது அப்துல்காதர், சென்னை.

டால்பின்கள்


டால்பின்கள் | இந்தியாவின் தேசிய விலங்கு புலி என்று அனைவருக்கும் தெரியும். அதேபோல, இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் டால்பின் ஆகும். கடலில் வாழும் டால்பின்கள் அல்ல. நதி நீரில் வாழும் நன்னீர் டால்பின்களே நமது தேசிய நீர்வாழ் விலங்கு. டால்பின்கள் கடலில் வாழும் உயிரினம் என்று நினைத்தவர் களுக்கு இது ஆச்சரியமாக தோன்றலாம். இருந்தாலும் இந்திய நன்னீர் டால்பின்கள் தனித்தன்மை மிக்க உயிரினம் என்பதால் தேசிய உயிரினமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. மனிதனுக்கு அடுத்தபடியாக உயிரினங்களில் பகுத்தறிவோடு வாழும், நீர்வாழ் விலங்கு டால்பின் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். நன்னீர் டால்பின்கள், கடல் டால்பின்களை காட்டிலும் உருவம், அளவு, குணத்திலும் நிறைய வேறுபட்டு காணப்படும். கங்கை, பிரம்மபுத்திரா, சிந்து நதிகளில் வாழும் இந்த டால்பின்கள், இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. இந்திய நதிநீரில் வாழும் டால்பின்கள் பொதுவாக பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில், நீண்ட மூக்கோடு, பெரிய தலையோடு காணப்படும். கங்கையில் வாழும் டால்பின்கள் 'சூசு' எனவும், சிந்து நதியில் வாழும் டால்பின்கள் 'புலான்' என்றும் அழைக்கப்படுகிறது.

வறுமையில் வாடும் இந்தியாவறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்தியா 97-வது இடத்தில் இருப்பது தெரியவந்து உள்ளது. மனிதனுக்கு 4-6 வயதில் உள்ளவர்களுக்கு 1,950 கலோரியும், 10-12 வயதினருக்கு 1,970 கலோரியும், 13-15 வயதினருக்கு 2,060 முதல் 2,450 கலோரியும், 16-18 வயதினருக்கு 2,060 முதல் 2,640 கலோரியும் உணவு தேவைப்படுகிறது. உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடு இந்தியா. எனினும், இந்தியர்களில் 5-ல் ஒருவர் ஏழை. உலகில் 76 கோடி மக்கள் ஏழைகள். 80 கோடி பேர் போதுமான உணவு இல்லாமல் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள் என கணக்கிடப்பட்டு இருக்கிறது. பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட வறுமை, சுதந்திர வாழ்வை பின்பற்றுவதில் இருக்கும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. வறுமையை அளவிடுவதில் இருக்கும் குழப்பத்தைக் களையவும், அவை தொடர்பான தகுந்த பார்வையை பெறவும் சமீபத்திய இரண்டு அறிக்கைகள் முயற்சிக்கின்றன. முதலாவது சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட உலகளாவிய பட்டினி அட்டவணை (ஜி.எச்.ஐ.) எனும் அறிக்கை. அடுத்தது, உலக வங்கி வெளியிட்ட வறுமைக் குறைவு மற்றும் இந்தியாவின் வளத்தை பகிர்வதற்கான வழிமுறைகள் எனும் அறிக்கை. உலக நாடுகளில் நிலவும் வறுமையின் அளவை கணக்கிட உலகளாவிய பட்டினி அட்டவணை முயற்சி செய்கிறது. இந்த அட்டவணை மக்கள் தொகையில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் சதவீதம், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சி குறைபாடு, இறப்பு விகிதம் ஆகியவற்றின் சதவீதம் எனும் 4 கூறுகளின் அடிப்படையில் சுட்டிக்காட்டுகிறது. இந்த அட்டவணை 0 முதல் 100 வரையிலான அளவீடுகளை கொண்டிருக்கிறது. இதில் 100 என்பது முற்றிலும் பட்டினி எனும் நிலையையும், 0 என்பது முற்றிலும் பட்டினியின்மை எனும் நிலையையும் குறிக்கிறது. உலக நாடுகளும், பிரதேசங்களும் கூட பட்டினியின் அளவின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. 9.9-க்கோ அல்லது அதற்கு குறைவாகவோ அளவீட்டின் கீழ் வரும் நாடுகள் குறைந்த அளவு பட்டினி கொண்டிருப்பவை என்று கருதப்படுகிறது. 10 முதல் 19.9 வரையிலான அளவீட்டை கொண்ட நாடுகள் நடுத்தரமானவை என்றும், 20 முதல் 34.9 அளவீட்டுக்குள் வருபவை தீவிர நிலையில் இருக்கும் நாடுகள் என்றும், 35 முதல் 49.9 வரையிலான அளவீட்டில் வரும் நாடுகள் அபாயகரமான நிலையில் இருப்பவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. அதற்கும் கீழ் அளவீடு கொண்ட நாடுகள் மிகவும் அபாயகரமான நிலையில் இருக்கும் நாடுகள் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு வெளியான உலகளாவிய பட்டினி அட்டவணையில் சில முக்கிய அம்சங்கள் உள்ளன. வறுமை அளவைக் குறைப்பதில் வளரும் நாடுகளுக்கு பிரதான பங்கு இருக்கிறது என்பது புலப்படுகிறது. 2000-ல் இருந்து இந்த நாடுகளில் வறுமை அளவு 29 சதவீதம் குறைந்து இருக்கிறது. 2017 அட்டவணையில் சஹாராவின் தெற்குப் பகுதி ஆப்பிரிக்க நாடுகளும், தெற்காசியாவும் அதிகபட்ச ஜி.எச்.ஐ. புள்ளிகள் கொண்டிருக்கின்றன (முறையே 30.1 மற்றும் 29 புள்ளிகள்). இந்த அட்டவணையில் பரிசீலிக்கப்பட்டிருக்கும் 118 நாடுகளின் பட்டியலில் இந்தியா படுமோசமாக 97-வது இடத்தை பிடித்து இருக்கிறது. அதாவது, இன்னமும் 'தீவிர' நிலையில் இருக்கும் நாடுகளின் பட்டியலில் தான் நாம் இருக்கிறோம். பட்டினியுடன் தொடர்புடைய வறுமையானது, சர்வதேசப் பொருளாதார வளர்ச்சியில் உள்ள மிகச் சிக்கலான பிரச்சினைகளில் ஒன்று. இந்தியாவின் வளர்ச்சி அனுபவத்தில் உலக வங்கி அறிக்கை கவனம் செலுத்துகிறது. நான்கு முக்கிய விஷயங்கள் இதில் வெளிப்படுகின்றன. முதலாவதாக 1994-ல் இருந்து 2013-ம் ஆண்டு வரை இந்தியாவில் வறுமை கணிசமான அளவு குறைந்திருப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதே கால கட்டத்தில் இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் சதவீதம் 45-ல் இருந்த 22 சதவீதமாக குறைந்து உள்ளது. அதாவது, 13.3 கோடி பேர் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறார்கள். எனினும் இந்தியாவின் வளர்ச்சி அப்படி ஒன்றும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக இல்லை என்றும் இந்த அறிக்கை சொல்கிறது. இரண்டாவதாக, இந்தியாவில் குறிப்பிட்ட சில தரப்பு மக்களின் நிலை, பிற மக்களின் நிலையுடன் ஒப்பிடுகையில் படுமோசமாக இருக்கிறது. 2012-ம் ஆண்டு நிலவரப்படி வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களில் 43 சதவீதம் பேர் பழங்குடியினர், 29 சதவீதம் பேர் பட்டியல் இனத்தவர்கள். மூன்றாவதாக, குறிப்பிட்ட சில பகுதிகளில் வறுமை நிரந்தரமாக இருப்பதாக தோன்றுகிறது. முற்றிலும், வறுமை எனும் அடிப்படையில் இந்தியாவில் முதல் இடங்களில் இருக்கும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் (6 கோடி பேர் ஏழைகள்), பீகார் (3.6 கோடி பேர்), மத்தியப்பிரதேசம் (2.4 கோடி பேர்) போன்ற மாநிலங்கள் முதன்மையான இடத்தில் இருந்தன. முதல் 7 இடங்களில் இருக்கும் மாநிலங்களில் ஒட்டுமொத்த இந்தியாவில் இருக்கும் ஏழைகளில் 62 சதவீதம் பேர் வசிக்கிறார்கள். வறுமை எனும் விஷயத்தில் கிராமப்புற-நகர்ப்புற வேறுபாடும் முக்கியமானது. இந்தியாவில் ஐந்து பேரில் ஒருவர் ஏழை. ஒவ்வொரு ஐந்து பேரிலும் 4 பேர் கிராமப்புறத்தில் வசிக்கிறார்கள். அத்துடன் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பெரிய நகரங்களில் வறுமை விகிதம் 7 சதவீதம் தான். வறுமையின் அளவு குறைவதற்கு மாநிலங்கள் வேகமாக வளர்ச்சியடைய வேண்டும் என்பது முக்கியமான இன்னொரு புரிதல். வளர்ச்சி விகிதத்தில் பின்தங்கி இருக்கும் மாநிலங்களின் தனிநபர் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி குறைவாக இருப்பதுடன் வறுமையும் அதிகமாக உள்ளது. நான்காவதாக, வளர்ச்சியும், மறுபங்கீடும் வறுமை ஒழிப்புக்கு மிகமுக்கியமானவை. ஆகையால் அடுத்த 15 ஆண்டுகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகளில் முதலாவது, இரண்டாவது இலக்குகளில் மேம்பாடு காண்பதே இந்தியாவின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். இனிவரும் எதிர்காலத்தில் வறுமையை இல்லாத இந்தியாவை உருவாக்க அனைவரும் முயற்சி செய்திடல் வேண்டும்.

Sunday, January 28, 2018

வாழ்க்கைதான் செல்வம் 125-வது பிறந்தநாள் கண்ட ஜே.சி.குமரப்பாவின் வாழ்வியல் சிந்தனைகள்


வாழ்க்கைதான் செல்வம் 125-வது பிறந்தநாள் கண்ட ஜே.சி.குமரப்பாவின் வாழ்வியல் சிந்தனைகள்  DOWNLOAD

‘எம்-சாண்ட்’ தரம் கண்டறியும் பரிசோதனை


'எம்-சாண்ட்' தரம் கண்டறியும் பரிசோதனை | தற்போது நிலவி வரும் மணல் தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக எம்-சாண்ட் பயன்பாட்டுக்கு வந்து, இப்போது பரவலாக உபயோகத்திலும் இருந்து வருகிறது. இந்தநிலையில் போதிய அளவு தரமில்லாத எம்-சாண்ட் புழக்கத்தில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் எம்-சாண்ட் எந்த அளவுக்கு தரமாக உள்ளது என்பதை கண்டறியும் வழிமுறைகளை கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். நீண்ட காலம் உபயோகத்தில் இருந்து வரும் ஆற்று மணலுக்கு மாற்றாக விளங்கும் 'எம்-சாண்ட்' பல இடங்களில் போதிய அளவு தரத்துடன் கிடைப்பதில்லை என்பது வீடு கட்டும் பொதுமக்கள் மற்றும் கட்டுமான துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்-சாண்ட் வாங்கும்போது அதன் தரத்தை எவ்வாறு அறிந்துகொள்வது என்ற குறிப்புகளை இங்கே பார்க்கலாம். எம்-சாண்ட் செயற்கை மணலில் 75 மைக்ரான் அல்லது அதற்கும் குறைவான அளவு கொண்ட 'குவாரி டஸ்ட்' துகள் கலந்திருப்பது அதன் வலிமையை பாதிக்கக்கூடியதாகும். அதை பயன்படுத்தி பூச்சு வேலைகள் உள்ளிட்ட இதர வேலைகளை செய்யும் பட்சத்தில் வலுவற்ற கட்டமைப்பு உருவாகி விடலாம். ஆற்று மணலில் கலந்துள்ள களிமண் மற்றும் நுண்ணிய இதர துகள்களை கண்டறிய ஒரு சோதனை உள்ளது. கட்டுமான பணியிடத்தில் உள்ள மணலின் மையப்பகுதியிலிருந்து கொஞ்சம் மணலை எடுத்து, ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு, அதில் தண்ணீர் விட்டு கலக்கிவிட்டு ஓரிடத்தில் வைக்கப்படும். கொஞ்ச நேரம் கழித்து தண்ணீரின் மேற்பரப்பில் மிதக்கும் நுண்துகள் அல்லது பிசுபிசுப்பான களிமண் ஆகியவற்றின் தன்மைகளை கணக்கிட்டு ஆற்று மணலின் தரத்தை கண்டறிவது வழக்கம். எம்-சாண்ட் என்பது பாறைகளை உடைத்து அவற்றை குறிப்பிட்ட அளவு நுண் துகளாக மாற்றப்படுவதால், மேற்கண்ட முறையில் தண்ணீரில் கலந்து பிரித்தெடுத்து அளவை சரி பார்த்துக்கொள்வது இயலாது. அவ்வாறு செய்து பார்த்தாலும் 150 மைக்ரான் அளவு கொண்ட துகள்கள்தான் தண்ணீரில் மிதக்கும். எம்-சாண்ட் செயற்கை மணலில் கலந்துள்ள குவாரி டஸ்ட் அளவு 15 சதவிகிதத்துக்கும் மேலாக இருப்பது கூடாது. ஆனால், கலந்துள்ள குவாரி டஸ்ட் மேலே குறிப்பிட்ட அளவுக்கும் மேல் இருப்பதை அறிந்து கொள்வது சற்று சிரமம்தான். இந்த சிக்கலை தீர்க்க சல்லடை முறையை பயன்படுத்தலாம். அதாவது, 75 மைக்ரான் அளவு கொண்ட சல்லடையில் 'எம்-சாண்ட்' மணலை 3 கைப்பிடி அளவு கொட்டப்பட்டு, அதன் மேற்பரப்பில் தண்ணீரை ஊற்ற வேண்டும். அதன் மூலம் 75 மைக்ரான் அளவுக்கும் கீழ் உள்ள 'டஸ்ட்' வெளியேற்றப்பட்டு, மீதமுள்ள நுண் துகள்கள்தான் இருக்கும். இதன் அடிப்படையில் எம்-சாண்ட் தரம் பற்றி கண்டறிய இயலும்.

அறிவியல் முறைப்படி நிலத்தடி நீர் கண்டறிதல்


அறிவியல் முறைப்படி நிலத்தடி நீர் கண்டறிதல் | நிலத்தடி நீரை கண்டறிய சம்பந்தப்பட்ட பகுதி நிலத்தின் வரைபடத்தை கொண்டு பாறைகளை அளவிட்டு, அவை எந்த வகையை சேர்ந்தவை என்று அறிந்து, பொருத்தமான தளங்களில் ஆழ்குழாய் தோண்டப்படுகிறது. பெரும்பாலும், சுண்ணாம்பு பாறைகள் உள்ள பகுதிகளில் அதிகமாக நிலத்தடி நீர் இருக்கும் சாத்தியம் உள்ளதால், நீரியல் நிபுணர்கள் அந்த இடங்களில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்க பரிந்துரை செய்கின்றனர். பூமியின் ஆழத்தில் உள்ள பாறை இடுக்குகளில் நிலத்தடிநீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக நீரியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டிய இடத்திற்கு அருகில் ஏற்கனவே உள்ள கிணறுகள் பற்றிய தகவல்களை அறிவார்கள். அதன் மூலம் கிணறுகளில் எவ்வகை பாறை படிமங்கள் அமைதிருக்கின்றன என்பதை அறிந்து, ஆழ்குழாய் கிணறு அமைத்தால் நீர் கிடைக்கும் சாத்தியம் உள்ளதாக நீரியல் நிபுணர்கள் கருதுகின்றனர். அவர்கள், ஏரியல் (கிமீக்ஷீவீணீறீ) புகைப்படங்களை ஆய்வு செய்து, அதன் மூலம் பாறைப் படுகைகளை கண்டறிந்து அந்த பகுதியில் கிணறு அமைக்கும் பட்சத்தில் நிலத்தடி நீர் கிடைக் கும் என்றும் தெரிவிக்கின்றனர். பொதுவாக, பூமிக்கு அடியில் நிலத்தடி நீர் பாறை இடுக்குகளில் இருப்பது இயற்கை. அதை கண்டுபிடிக்க பூமியில் ஆழ்துளை இடுவதன் மூலம் பூமியின் மாதிரிகள் அதாவது மண்ணின் தரத்தை துளை இயந்திரம் நமக்கு வெளிக்கொண்டு வந்து காட்டும். இதன் மூலம் குறிப்பிட்ட பகுதியில் நிலத்தடி நீர் இருக்குமா என்பதை கண்டறியலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கண்டவை தவிரவும், தற்போது வெவ்வேறு விதமான நவீன முறைகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு கண்கள் தேவையில்லை - டிபானி


மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு கண்கள் தேவையில்லை டிபானி "கண் பார்வையில்லாவிட்டாலும் மகிழ்ச்சியாக வாழமுடியும்" என்று சந்தோஷமாக சொல்கிறார், டிபானி. இவர் பார்வைத்திறனோடுதான் பிறந்திருக்கிறார். பிறந்த சில மாதங்களில் பெற்றோரின் முகம் பார்த்தும் சிரித்திருக்கிறார். ஐந்தாறு மாத பருவத்தில் காய்ச்சலால் அவதிப்பட்டிருக்கிறார். பின்பு காய்ச்சல் குணமாகியுள்ளது. பார்வைத்திறனை இழந்திருக்கிறார். "எனக்கு பார்வையில்லாமல் போனதால் அம்மா ஒருபோதும் அனுதாபம் காட்டியதில்லை. என்னை நினைத்து அவர் கவலைப்பட்டதுமில்லை. எனது தந்தை ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாங்கள் வசித்திருக்கிறோம். இரண்டாம் வகுப்பு படிக்கும்போது கேரளா வந்தோம். பின்பு சண்டிகார், டெல்லி என்று இடம்மாறிக்கொண்டே இருந்தோம். பார்வையில்லாததால் பள்ளியில் ஆசிரியர்கள் என்னை அதிகம் கவனித்ததில்லை. கடைசி பெஞ்சில் உட்காரவைத்துவிடுவார்கள். பாடம் தொடர்புடைய கேள்விகள் எதையும் என்னிடம் கேட்டதில்லை. ஹோம் ஒர்க்கும் எனக்கு கிடையாது. சில நேரங்களில் ஆசிரியர்களின் கேள்விக்கு நான் பதில் அளிக்க முயற்சிப்பேன். அப்போது அவர்கள், 'நீ கண் தெரியாத பெண். கஷ்டப்படவேண்டாம். உட்கார்ந்து விடு..' என்பார்கள். என்னிடம் பேசுவதற்கு யாரும் கிடையாது. விளையாடுவதற்கும் தோழிகள் வரமாட்டார்கள். அதனால் தனிமைப்படுத்தப்பட்டு, தன்னம்பிக்கை இல்லாமல் போனேன். அம்மா மட்டுமே எனக்கு ஆறுதல். அவர் போகும் இடங்களுக்கெல்லாம் என்னையும் கைப்பிடித்து அழைத்துசென்றார். என் தந்தைக்கு டார்ஜிலிங்கிற்கு இடமாற்றம் கிடைத்தபோது அங்கு சென்றேன். அங்குள்ள மேரி ஸ்காட் பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்தார்கள். அங்கு எனக்கு வாழ்க்கையை கற்றுத்தந்தார்கள். நான் வெளியே சென்றேன். கிணற்றில் தண்ணீர் இறைத்தேன். என் வேலைகளை நானே சுயமாக செய்துகொள்ளத் தொடங்கினேன்.." என்று கூறும் டிபானிக்கு 13 வயதில் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. திடீரென்று அவரது அம்மா இறந்து போனார். "அம்மாதான் எனக்கு எல்லாமுமாக இருந்தார். அம்மா உயிரோடு இருந்தது வரை, கண் தெரியாதது எனக்கு ஒரு குறையாகவே தெரியவில்லை. அம்மா இறந்தும் நான் நடுக்கடலில் சிக்கிக்கொண்டதுபோல் உணர்ந்தேன். அடுத்தும் என் தந்தைக்கு இடமாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. அப்போது ஒருமுறை நான், என்னை திருவனந்தபுரத்தில் உள்ள காட்டன் ஹில் பள்ளியில் சேர்க்கும்படி கூறினேன். தந்தை என்னை அங்கு சேர்த்துவிட்டு, ஷில்லாங் போய்விட்டார். நான் விடுதியில் தங்கிப்படித்தேன். எனக்கு அங்கு நிறைய தோழிகள் கிடைத்தார்கள். என் கல்வி வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைந்தது" என்கிறார். பிளஸ்-டூ முடித்துவிட்டு, திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளநிலை பட்டம் பெற் றார், டிபானி. "படித்து முடித்துவிட்டு காந்தாரி என்ற நிறுவனத்தில் சேர்ந்தேன். அவர்கள் பார்வையற்றவர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கித்தருகிறார்கள். அங்கு ஒவ் வொருவரும் சுயமாக வாழ்க்கையை நடத்தும் அளவுக்கு தயார் செய்கிறார்கள். நான் அங்கு டெலிபோன் ஆபரேட்டர் வேலைபார்த்துக்கொண்டே கம்ப்யூட்டர் கற்றேன். அப்போது எனக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரித்தது. தனியாக சாலைகளில் நடந்து சென்றேன்.."என்கிறார். ஒருமுறை இவர் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றிருக்கிறார். அறிமுகமற்ற பெண் ஒருவர் உதவி செய்ய முன்வந்திருக்கிறார். இவர் 3 ஆயிரம் ரூபாய் பெறும்படி சொல்ல, அவர் 6 ஆயிரம் ரூபாய் எடுத்துவிட்டு, பாதியை மட்டும் இவரிடம் கொடுத்துவிட்டு மீதியை எடுத்துச் சென்றுவிட்டார். இப்படி ஒரு சில சம்பவங்கள் நடந்தாலும் டிபானி மனந்தளரவில்லை. இவருக்கு பார்வையற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. அதனால் கோவையில் ராமகிருஷ்ணாமிஷனில் சிறப்பு கல்வியில் பி.எட். முடித்திருக்கிறார். முதலில் பார்வையற்ற குழந்தைகளை தேடிப்பிடித்து, அவர்களது வீடுகளுக்கே சென்று சிறப்பு உபகரணங்களோடு கல்வி கற்றுக்கொடுத்திருக்கிறார். பின்பு அவர்களுக்காக ஒரு மையத்தை தொடங்கி நடத்துகிறார். அதன் மூலம் பார்வையற்றவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து வருகிறார். அது தனக்கு ஆத்மதிருப்தி அளிப்பதாக சொல்கிறார்.

அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்


அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதிர்கணக்கு, மனிதன் மற்றும் உயிரினங்கள் தோன்றியதிலிருந்து தெரிந்தும், தெரியாமலும் பல யுகங்களாக இருந்து வருகிறது. நாகரிகம் தோன்ற ஆரம்பித்த உடன் புதிர், பல பரிமாணங்களில் பல்வேறு காலக்கட்டங்களில் வளர்ச்சியுற்றது. பிற்காலத்தில் புதிர் என்ற வார்த்தை கணக்கியல், வானவியல், அறிவியல், மொழியியல், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் வளர்ச்சியுற்றது. குறிப்பாக கணக்கு துறையில் புதிர் என்பது பல பரிமாணங்களுடன் வளர்ந்தது. சுமார் 3,600 வருடங்களுக்கு முன்பு எகிப்திய பாப்பிரூஸ் மிகவும் பிரசித்தி பெற்றவையாக ஆச்சரியமூட்டும் வகையில் கணக்கு துறையில் வளர தொடங்கின. நம்மில் பல பேருக்கு கணக்கு என்பது சிக்கலான புதிராக இருந்துள்ளது. கணக்கு ஆசிரியர்களுக்கும் சிரமமாக இருந்துள்ள பல புதிர்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியாமலேயே இருந்து வருகின்றன. இந்த புதிர்களின் தொடர்ச்சிதான் கணினி. வளர்ச்சி என்று குறிப்பிட்டால் மிகையாகாது, கணக்கில் உள்ள புதிர்களில் மிகவும் பிரசித்திப்பெற்றது, 8 க்யூன் புதிர் என்று அழைக்கப்படுகிற கணக்கு புதிர். இந்த புதிர்தான் தற்போது உள்ள சதுரங்க விளையாட்டுக்கு முன்னோடியாக இருந்து மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கிறது. முதன் முதலில் மேக்ஸ் பெசல்ஸ் என்ற கணித மேதை 8 க்யூன் புதிரை 1848-ல் பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார். அதன்பிறகு, 1850-ம் ஆண்டு, பிரன்ச் நவுக் என்ற அறிஞர், 8 க்யூன் புதிருக்கான விடையை சதுரங்க விளையாட்டில் பயன்படுத்தினார். அதன் பிறகு பல்வேறு அறிஞர்கள் சதுரங்க விளையாட்டுக்கான கட்டங்களையும், அதற்கான புதிர்களையும் மேம்படுத்தினர். கணக்கியல் புதிரில் மிகவும் பிரசித்தி பெற்றது செஸ் போர்டு என்கிற சதுரங்க விளையாட்டு ஆகும். கி.மு. 1256-ம் ஆண்டு அரேபிய நாட்டை சேர்ந்த கணக்கு விஞ்ஞானியான இபன் காலிக்கன் என்ற கணித விஞ்ஞானி சீ சாஸ் செஸ் போர்டு என்ற விடையை கண்டுபிடித்து அது பல நூறு ஆண்டுகளாக பல்வேறு சதுரங்க விளையாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நூற்றாண்டுகளில் இளைஞர்களிடையே பிரசித்திப் பெற்று வரும் சுடுகு, குறுக்கு வார்த்தை புதிர் அறிவியல் பூர்வமாகவும், மூளையை ஊக்கப்படுத்தும் விளையாட்டாகவும் உள்ளது. தொன்று தொட்டு விளங்கும் தமிழ் நாகரிகத்திலும் தமிழ் மக்களிடையே பல்வேறு புதிர்கள் விடுகதைகளாக நமது இலக்கியம், கலாசாரம் என ஒன்றோடு ஒன்றாக பின்னிப் பிணைந்துள்ளது. தற்சமயம் புதிர் எனப்படுவது, தமிழில் விடுகதைகளாக கூறப்படுவது உண்டு. விடுகதையை தொல்காப்பியர் 'பிசி' என்று கூறுகிறார். பிதிர், புதிர், அழிப்பான் கதை, வெடி, நொடி என்று பல்வேறு சொற்கள் விடுகதையை குறிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. புதிர்மைப் பண்புடைய அனைத்தும் புதிர்களே. மனிதனின் அன்றாட வாழ்க்கையில் புதிர்களின் பங்கு சிறப்பான முறையில் இடம் பெற்றுள்ளது. மக்களது பேச்சு, விளையாட்டு, சடங்கு, இலக்கியம் போன்றவற்றில் புதிர்கள் பெற்றுள்ள இடம் உன்னதமானதாகும். இவை பல்வேறு வடிவங்களில் அமைந்து மனிதனைச் சிந்திக்க வைக்கின்றன. சிரித்து மகிழச் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, "ஒரு மரத்தில் நூறு குருவிகள் இருந்தன. வேடன் ஒரு குருவியைச் சுட்டுவிட்டால், மீதி எத்தனை குருவிகள் இருக்கும்?" (விடை ஒன்றுமில்லை). இந்த வேடிக்கை வினா புதிர் மேற்புறத் தோற்றத்தை வைத்து விடை கூறுபவர்கள் 99 என்று கூறுவார்கள். ஆனால் வேடன் சுட்டவுடன் ஒரு குருவி இறந்துவிட மற்ற எல்லாக் குருவிகளும் பறந்துவிடும். இதை கணக்கு விடுகதை என்று கூறலாம். இது வேடிக்கை வினாக்களாக செயல்படும். கிராமப்புறங்களில் சிறுவர்கள் புதிர்களை விடுகதைகளாக இன்றும் வழங்குகின்றனர். "ஒரு குளத்தில் சில தாமரைகள் மலர்ந்திருந்தன. அவற்றில் சில வண்டுகள் மலர் ஒன்றுக்கு ஒவ்வொன்றாக அமர, ஒரு வண்டிற்கு இடமில்லை. பிறகு அவை மலர் ஒன்றுக்கு இரண்டிரண்டாக அமர, ஒரு மலர் மிகுந்திருந்தது. அப்படியென்றால், வந்த வண்டுகள் எத்தனை? மலர்கள் எத்தனை?" விடை: வந்த வண்டுகள் நான்கு. இருந்த மலர்கள் மூன்று. புதிர் மக்கள் அறிவுத் திறனின் வெளிப்பாடு. தாம் காணும் பொருட்களையும், செயல்களையும் பிறர் சிந்தித்து அறியும் வண்ணம் மறை பொருளாக உருவாக்கப்படும் இலக்கிய வடிவம். புதிர் விளையாட்டு பொழுது போக்கிற்காக நிகழ்கின்றது. ஆயினும், அறிவை கூர்மைப்படுத்திக் கொள்ளல், தன்னம்பிக்கையை வளர்த்தல், நினைவாற்றலை வளர்த்தல், பணிச்சுமையைக் குறைத்தல், அறிவுத்திறனைச் சோதித்தல், நுண்ணறிவினை வெளிப்படுத்துதல், மரபு வழிக் கல்வியளித்தல், சமுதாயத்தைப் புரிந்து கொள்ள உதவுதல் போன்ற பல நிலைகளில் பயன்படுகிறது. நமது சங்ககால தமிழ் இலக்கியத்தில் புதிரானது ஒரு சில கணக்கு வழிமுறைகளை கொண்டுள்ளது. உதாரணமாக. 1000 வருடங்கள் என்பதை பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக என்று பொருள் வரும். வேறெந்த மொழிகளிலும் இந்த உறவு முறைகளை இப்படி அழைப்பது இல்லை. இது தமிழுக்கு மட்டுமே சிறப்பு ஆகும். உதாரணமாக, பரம்பரை பரம்பரையாக என்ற சொற்றொடர் 1000 வருடங்களுக்கான பொருளை கீழ்கண்ட உறவு முறைகளில் அழைக்கப்பட்டு தொன்று தொட்டு வந்திருக்கிறது. நாம்-முதல் தலைமுறை தந்தை-தாயார்-இரண்டாவது தலைமுறை பாட்டன்-பாட்டி-மூன்றாம் தலைமுறை பூட்டன்-பூட்டி-நான்காம் தலைமுறை ஓட்டன்-ஓட்டி-ஐந்தாம் தலைமுறை சேயோன்-சேயோள்-ஆறாம் தலைமுறை பரன்-பரை-ஏழாம் தலைமுறை பரன்+பரை என்பது பரம்பரை. ஒரு தலைமுறை சராசரியாக 60 வருடங்கள் என்று எடுத்துக் கொண்டால் ஏழு தலைமுறைகள் என்பது 480 வருடங்கள் ஆகும். ஈரேழு தலைமுறை என்பது 960 வருடங்கள். இதனால்தான் 1000 வருடங்களை பரம்பரை, பரம்பரையாக என்று சொல்கிறார்கள். அதையே ஈரேழு பதினான்கு தலைமுறையாக என்றும் பொருள் கொள்ளலாம். வேறெந்த மொழிகளிலும் இப்படி புதிராக உறவு முறை அழைக்கப்படுவது இல்லை. இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பாகும். நமது குழந்தைகளுக்கும் அந்த காலத்திலிருந்து சில நடைமுறை கணக்கு புதிர்களை கூறி அவர்களின் அறிவை வளர்த்திருக்கிறார்கள். தற்சமயம் உள்ள அறிவியல் வளர்ச்சியிலும் புதிர்கள் பல்வேறு பரிமாணங்களை பெற்று நமது விஞ்ஞானத்திலும் இன்றியமையாதது என்று அறியப்படுகிறது.

Wednesday, January 24, 2018

புத்தகம் சிறந்த நண்பன்


புத்தகம் சிறந்த நண்பன் தலை குனிந்து என்னை படித்தால் தலை நிமிர்ந்து வாழ வைப்பேன்- புத்தகம். இந்த வாசகத்தை நாம் அனைவரும் அறிந்து இருப்போம். வரலாறு, தொழில்நுட்பம், பொது அறிவு, கலை, மொழி, புராணம் என அனைத்து வகையான தகவல்களையும் புத்தகங்கள் வழியாக தெரிந்து கொள்ள முடியும். வாழ்வை நல்வழியில் கொண்டு செல்வதற்கு புத்தகம் ஒரு சிறந்த நண்பனாக திகழ்கிறது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. அதற்கு பதிலாக செல்போன்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 'காரிருளில் செல்பவர்களுக்கு பேரொளியாகவும், வழி தவறியவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் புத்தகம் திகழும்' என்று அறிஞர்கள் கூறுவார்கள். எனவே, இன்றைய தலைமுறையினரிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை நாம் சிறுவயதில் இருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும். இதனால் அறிவு விருத்தி அடையும். நமக்கு தேவையான, பயனுள்ள புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டியது முக்கியம். 'இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்' என்று கூறுவார்கள். அன்றைய தலைவர்கள் அதிகமான புத்தகங்களை வாசிப்பதன் மூலமாக வாழ்வில் உயர்ந்ததை யாராலும் மறுக்க முடியாது. எனவே பாடப்புத்தகங்கள், செல்போன்களை கடந்து புத்தகங்களை வாசிக்க பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு புத்தகங்கள் கிடைக்காமல் இளைஞர்கள் சிரமப்பட்டனர். ஆனால் இன்று நூலகங்களில் பல புத்தகங்கள் வாசிக்கப்படாமல் தூசி படிந்து கிடக்கிறது. உலகத்தை கைக்குள் கொண்டு வந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இளைஞர்கள், தங்களுக்கு தேவையான தகவல்களை செல்போனில் தேடி எடுத்துக்கொள்ளலாம் என்று எண்ணுகிறார்கள். இந்த எண்ணம் அவர்களுடைய புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கைவிட வைக்கிறது. ஆனால் தேவையானதை தேடும்போது முழுமையான தகவலை புத்தகம் கொடுக்கிறது. மேலும் சிலர் தேவையான புத்தகங்களை செல்போன், கணினியில் பதிவிறக்கம் செய்துகொண்டு படிக்கலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் புத்தகத்தை நேரடியாக வாசிக்கும் அனுபவம் செல்போன், கணினியின் திரையில் வாசிக்கும்போது கிடைக்காது என்பதை உணர வேண்டும். எனவே, வாழ்வை நெறிப்படுத்தும் சிறந்த நண்பனை தேர்ந்தெடுப்போம்.

Tuesday, January 23, 2018

தமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப் புத்தாண்டு எது? தையா? சித்திரையா


தமிழர்கள் யாவரும் தமிழ்ப் புத்தாண்டைப் பற்றிய தெளிவின்மையோடு, எதை நம்புவது எதைப் புறக்கணிப்பது என்ற குழப்பத்தில்  சிக்கியுள்ளார்கள். தமிழக மக்கள் இந்த விசயத்தில் எக்காரணம் கொண்டும் தெளிவுபெற்றுவிடக் கூடாது என்பதில் இப்போது ஆட்சியில் இருப்போரும், அவர்க்கு அறிவுரை வழங்கி வரும் கூட்டமும்  மிகத்  தெளிவாய் இருக்கிறது. அதன்படி தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாய்  கலைஞர் அறிவித்ததை மாற்றி மீண்டும் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக  அறிவித்துள்ளது தற்போதைய தமிழக அரசு. இந்நிலையில் எதற்காக தமிழர்கள் தை முதல் நாளை புத்தாண்டாகக்  கொண்டாட வேண்டும் என்பது குறித்து விளக்கவே இந்தக் கட்டுரை. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு ஏன் எதற்கு என்பதைப் பற்றியெல்லாம் ஆராயும் முன், நாம் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் ஆண்டுகளின் கணக்கு சுழற்சி முறையில் இருக்கும்.அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் 'பிரபவ' முதல் 'அட்சய' என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது பெயர்களில் ஒன்று கூட தமிழ்ப் பெயர் கிடையாது. அனைத்துமே வடமொழிப் பெயர்கள். தமிழ் வருடங்கள் எனச் சொல்லப்படுகிற வருடங்களின் பெயர்கள் வடமொழியில் இருப்பதன் ரகசியம் என்ன? அப்படி இருக்கலாமா? அப்படி இருத்தல் உலகத்தின் மூத்தகுடியான தமிழுக்கும் தமிழர்க்கும் மரியாதையாய்  இருக்குமா? இந்த அறுபது ஆண்டு சுழற்சி முறையைக் குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்குப் பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாகப் பரப்பப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிலைநிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டின் பூர்வகுடி (தமிழ்) மக்களின்  பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்த சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் நடைமுறைப் பழக்கத்திற்கு வந்துவிட்டது. அறுபது ஆண்டு சுழற்சி முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் 'சஷ்டியப்த பூர்த்தி' என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழக்கம் இருப்பதைக் கவனியுங்கள். அதாவது ஆரியர்கள் உருவாக்கிய 60 ஆண்டுகளைக் கடந்து வாழ்கிறார் என்பதை இது குறிக்கிறது. ஒரு சுற்று வந்து விட்டார் என்பது இதன் கரு.தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள்.  வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் - (தை---மாசி மாதங்களுக்குரியது)

2.    முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)

3.    கார் - (வைகாசி - ஆனி மாதங்களுக்குரியது)

4.    கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)

5.    முன்பனி (புரட்டாசி - அய்ப்பசி மாதங்களுக்குரியது)

6.    பின்பனி (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)

மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை-  வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.  சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள்.  காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (மீணீஷீஸீ) பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான்.  இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.தமிழர்கள்  நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்து  பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்,

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம்   கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

கூகுள் உருவாக்கியுள்ள, வெர்ச்சுவல் விசைப்பலகையான ஜிபோர்டு செயலி


ஜிபோர்டு வசதி ஸ்மார்ட்போன்களுக்காக என்று கூகுள் உருவாக்கியுள்ள, வெர்ச்சுவல் விசைப்பலகையான ஜிபோர்டு செயலியை நீங்கள் அறிந்திருக்கலாம். விரைவாக டைப் செய்வதற்காக இந்தச் செயலியை நீங்கள் பயன்படுத்தலாம். இல்லையென்றாலும், ஜிபோர்டு செயலியைப் பயன்படுத்துவது பற்றியும் பரிசீலிக்கலாம். கிளைடு டைப்பிங் உள்ளிட்ட வசதிகளை அளிக்கும் இந்த விசைப் பலகை எண்களை டைப் செய்வதில் உள்ள சிக்கலுக்கான தீர்வையும் அளிக்கிறது. போனில் டைப் செய்யும்போது, சில நேரம் எண்களை டைப் செய்ய வேண்டிய தேவை வரலாம். இதுபோன்ற நேரத்தில் எண்களுக்கும் எழுத்துகளுக்குமாக மாறுவது சிக்கலாக இருக்கும். இதனால், நேரமும் விரையமாகும். இதைத் தவிர்க்க, ஜிபோர்ட் செட்டிங்ஸ் பகுதியில் , கீபோர்டு தேர்வுக்கு சென்று, பிரிபரன்ஸ் வாய்ப்பு மூலம் நம்பர் ரோ வசதியை வர வைத்தால், கீபோர்டு மேல் பகுதியில் எழுத்துகளுக்கு மேல், எண்கள் வரிசை தோன்றும். இதன்மூலம் எண்களுக்கு மாற வேண்டிய தேவை இல்லாமல், வேகமாக டைப் செய்யலாம். குரல் வழி டைப்பிங் வசதியையும் இது அளிக்கிறது.

மருத்துவ அற்புதம் ‘இன்சுலின்’


மருத்துவ அற்புதம் 'இன்சுலின்' | டாக்டர் நா.மோகன்தாஸ் | இன்று (ஜனவரி 11) சர்க்கரை நோயாளிக்கு முதன் முதலில் இன்சுலின் பயன்படுத்தப்பட்ட தினம். சத்தம் இல்லாமல் உடலுக்குள் யுத்தம் நடத்துகின்ற சர்க்கரை நோய் வயதானவர்களுக்கு தான் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளும், இளைஞர்களும் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த அவல நிலைக்கு, உணவு முறை மாற்றங்கள், உடல் உழைப்பு குறைந்துவிட்ட வாழ்க்கை முறை, அதிக எடை, ஊட்டச்சத்து குறைபாடுகள், மன உளைச்சல் போன்றவை முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன. இன்று சர்க்கரை நோய்க்கு பல்வேறு இன்சுலின்களும், மருந்து மாத்திரைகளும் வந்துவிட்டன. இன்சுலின் மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் உலகில் இந்நேரம் சர்க்கரை நோயினால் மனித குலமே அழிந்து போயிருக்கும். இந்தியாவில் ஏறக்குறைய 3 கோடி பேருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இதில் மூன்றில் ஒருவருக்கு இன்சுலின் ஊசி அவசியம். கணையத்திலிருந்து இன்சுலின் சுரக்காதவர்களுக்கு இன்சுலின் சிறந்த மருந்து. மாரடைப்பு, அறுவை சிகிச்சைக்கு, ஆறாத புண்ணுக்கு, காச நோய், பிரசவ கால சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை நோயினால் நினைவு இழந்தவர்களுக்கு இன்சுலின் சாலச்சிறந்தது. மருத்துவ உலகில் அற்புத மருந்தான இன்சுலின் 20-ம் நூற்றாண்டின் அதிசய கண்டுபிடிப்பாகும். சர்க்கரை நோய்க்கான மருந்தை தயாரிக்கும் பணியில் நீண்ட காலமாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தன. 1869-ம் ஆண்டு டாக்டர் லாங்கர்ஹான்ஸ் நாயின் கணையத்தை சோதித்துப் பார்த்து அதில் உள்ள திசுக்கள்தான் இன்சுலினை உற்பத்தி செய்கிறது என்பதை கண்டுபிடித்து, அதை 1901-ம் ஆண்டு வெளி உலகிற்கு அறிவித்தார். 1921-ம் ஆண்டு சர்க்கரை நோய் குறித்த ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லாக, கனடாவைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஸ்ரீ பாண்டிங், சார்லஸ் பெஸ்ட் ஆகியோர் ஒரு புதிய மருந்தை கண்டுபிடித்தனர். 1922-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி சர்க்கரை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு டொரண்டோ பொது மருத்துவமனையில் இருந்த லியோனார்ட் தாம்சன் என்ற 14 வயது சிறுவனுக்கு தாங்கள் கண்டுபிடித்திருந்த புதிய மருந்தை முதன் முதலில் கொடுத்தனர். அப்போது தாம்சனுக்கு அலர்ஜி போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டன. உடனே அவர்கள் மருந்து கொடுப்பதை நிறுத்திவிட்டு மேலும் 12 நாட்கள் ஆராய்ச்சி செய்து ஜனவரி 23-ந்தேதி 2-வது தடவையாக அந்த சிறுவனுக்கு மருந்தை ஊசி மூலம் செலுத்தினர். ஆச்சரியமாக சிறுவன் தாம்சனுக்கு ரத்தச் சர்க்கரை 'மளமள'வென்று குறைந்தது. உலகமே வியக்கும் வண்ணம் அந்தச் சிறுவன் மீண்டான். அந்த அதிசய மருந்துதான், இன்சுலின். இந்தச் செய்தி காட்டுத்தீ போல உலகம் முழுவதும் பரவியது. 20-ம் நூற்றாண்டின் அற்புத கண்டுபிடிப்பிற்காக பாண்டிங், அவரது பேராசிரியர் மாக்லியோட் ஆகியோருக்கு 1923-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்தப் பரிசு பணத்தை பாண்டிங், சார்லஸ் பெஸ்டுடன் பகிர்ந்து கொண்டார். நாயின் கணையத்திலிருந்து தயாரித்த இன்சுலினை மனிதர்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தியபோது அதில் பல பக்க விளைவுகள் இருந்தன. பின்பு மாடு மற்றும் பன்றியின் கணையத்திலிருந்து இன்சுலினைத் தயாரித்தார்கள். பக்க விளைவின் விகிதாச்சாரம் குறைந்தது. மரபுசார் தொழில் நுட்பம் மற்றும் டி.என்.ஏ. மறு சேர்க்கை தொழில் நுட்பம் மூலம் மனிதரிடம் சுரக்கின்ற இன்சுலினை போலவே செயற்கை முறையில் இன்சுலினை தயாரித்தார்கள். ஈ கோலை என்னும் பாக்டீரியாவின் டி.என்.ஏ.வில் மனிதனுடைய மரபணுவை இணைத்து வளர்த்தார்கள். இதில் மனித இன்சுலினைப் போலவே பாக்டீரியாக்கள் சுரந்தன. இவற்றை எடுத்து அதன் கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களைச் செய்து பல்வேறு இன்சுலினை தயாரித்து வருகிறார்கள். உணவு சாப்பிட்ட உடன் ரத்தத்தில் ஏறும் சர்க்கரையின் அளவை குறைப்பதற்கு பயன்படுத்தப்படும் இன்சுலின் குறைந்த காலம் செயல்படும் இன்சுலின் ஆகும். அதிக சர்க்கரையினால் நினைவு இழந்த நிலையில் உள்ளவர்களுக்கும், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அறுவை சிகிச்சை செய்யப்படும் நோயாளிகளுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. இது 6 மணி நேரம் செயல்படும். மிக விரைவாக செயலாற்றும் இன்சுலின் உடனே சர்க்கரையை குறைக்கும். இதில் தாழ்நிலை சர்க்கரை மயக்கம் பெரும்பாலும் இருப்பதில்லை. நடுத்தர காலம் செயல்படும் இன்சுலின் சர்க்கரை மாத்திரையுடன் சர்க்கரையை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. நீண்ட நேரம் செயல்படும் இன்சுலின் வேலை செய்ய ஆரம்பித்து 24 மணி நேரம் இன்சுலினை தருகிறது. குறைந்த கால இன்சுலினும், நீண்ட நேரம் செயல்படும் இன்சுலினும் இரண்டையும் கலந்து முக்கலப்பு இன்சுலின் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்சுலினை தினம் ஒருமுறை அல்லது இரண்டு முறை போட்டால் போதும். தற்போது தானாகவே போட்டுக்கொள்ளக்கூடிய பேனா வடிவில் இன்சுலின் சிரிஞ்சுகள் வந்துவிட்டன. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் சிரிஞ்சுகளை பாதுகாப்பாக அழித்துவிடவேண்டும். வெப்பத்தால் இன்சுலின் திறன் குறைந்துவிடும். ஆதலால், இன்சுலினை குளிர்சாதனப் பெட்டியின் கதவில் வைக்கவும். தவறிகூட பிரீசரில் வைக்கக்கூடாது. தினமும் ஊசி போடும் இடத்தை மாற்ற வேண்டும். இன்சுலின் ஊசியைப் பிட்டத்தில் போடுவது அவ்வளவு நல்லதல்ல. அப்படி போட்டால் அங்கு இன்சுலின் கிரகிக்கப்படும் வேகம் குறைந்து அதன் செயல்திறன் சரியாக இருக்காது. உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் என்பதை உணர்ந்து, உணவு முறையைச் சரிவர கடைப்பிடித்து தேவையான உடற்பயிற்சி செய்து நோய்களுக்கு முறையான சிகிச்சை பெறுவதன் மூலம் வாழ்வில் அதிகப் பயனைப் பெறலாம்.

வங்கியில் நம் பணம் பாதுகாப்பானதா?


வங்கியில் நம் பணம் பாதுகாப்பானதா? | -டாக்டர் மா.பா. குருசாமி | நாம் ஈட்டும் வருவாயை முழுக்கச் செலவிடுவதில்லை. அதிக வருவாய் உள்ளவர்களுக்கு இயல்பாக சேமிப்பு இருக்கும். மற்றவர்கள் வயிற்றை கட்டி, வாயை கட்டி தேவைகளை சுருக்கி சேமிப்பார்கள். ஒவ்வொருவருக்கும் எதிர்கால தேவை, நோக்கம் இருக்கும். மிகுதியாக சேமிப்பவர்கள் தொழிலில், பிற வழிகளில் முதலீடு செய்யலாம். குறிப்பாக நடுத்தர மக்கள் வங்கிகளில்தான் நடைமுறை கணக்கில் அல்லது கால வைப்பு நிதியாக வைத்திருப்பார்கள். அதற்கு 3 காரணங்கள் கூறலாம். ஒன்று வங்கியில் போட்டு வைக்கும் பணம் பாதுகாப்பாக இருக்கும். இரண்டு எப்பொழுது வேண்டுமானாலும் தேவைக்கு எடுத்துக் கொள்ளலாம். மூன்று, அதன் மூலம் வருவாய் (அதாவது வட்டி) கிடைக்கும். இப்பொழுது மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிதிசார் வைப்பு நிதி காப்பீடு மசோதா ஒன்றை கொண்டு வந்திருக்கிறது. இது நாடாளுமன்றத்தின் ஆய்வில் இருக்கிறது. இது விரைவில் சட்டமாகலாம். இதிலுள்ள சில விதிமுறைகள் பொதுமக்களின் சேமிப்பு பணத்தில் கை வைக்க கூடியவை என்ற செய்திகள் வெளியாவதால், வங்கிகளில் பணத்தை போட்டு வைப்பவர்களுக்கு அச்சம் தோன்றியுள்ளது. இந்த புதிய சட்ட வரைவால் மக்களின் சேமிப்பு பணத்துக்கு ஆபத்து விளைவிக்க கூடிய சில விதிமுறைகள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வங்கியில் உள்ள தங்கள் பணம் முதலுக்கு மோசம், வட்டிக்கு வாய்தா என்ற நிலைக்கு சென்று விடுமோ? என்று அஞ்சுகின்றனர். அவர்களது நம்பிக்கை தகர்கின்றது. வரப்போகிற சட்டப்படி, ஒரு வங்கி நெருக்கடி (திவாலாகும்) நிலையில் இருந்தால், மக்களின் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை அவர்களது ஒப்புதலின்றியே, குறிப்பிட்ட காலத்திற்கான வைப்பு தொகையாக மாற்றி கொள்ளலாம். அதற்கு வட்டி விகிதத்தை வங்கிகளே தீர்மானிக்கும். எவ்வளவு குறைவாக வட்டி விகிதத்தை தீர்மானிக்கவும் வங்கிகளுக்கு அதிகாரம் இருக்கின்றது. கால வைப்பீடுகளில் உள்ள பணத்தை வைப்பாளர்கள் உடனே எடுக்க முடியாது. இந்த வைப்பீடுகளின் கால அளவை கூட்டவும், வட்டி விகிதத்தை குறைக்கவும், இந்த சட்டம் வங்கிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும் வைப்பு நிதியை வங்கிகளின் பங்குகளாக மாற்றி நெருக்கடியை சமாளிக்கும் வழிமுறையும் உள்ளது. இதைத்தான் உள்பிணை என்று கூறுகின்றனர். பழைய விதி ஒன்று காப்பீட்டாளர்களை பாதுகாக்க இருக்கிறது. 1961-ல் இந்திய அரசு நிறைவேற்றிய வைப்பு நிதி காப்பீடு சட்டத்தின்படி ஒரு வங்கி கடனில் மூழ்கினால் (திவாலானால்) வைப்பு கணக்கில் பணம் வைத்திருந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், அதற்குரிய வட்டி தொகையும் கிடைக்கும். இந்த காப்புறுதிக்காக வங்கிகள் காப்பீட்டு தொகை செலுத்த வேண்டும். வங்கிகள் ரிசர்வ் வங்கியில் இந்த காப்பீட்டுத் தொகையாக ரூ.3,000 கோடி செலுத்தியிருக்கின்றன. சமீப காலத்தில் எந்த வங்கியும் திவாலாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது கொண்டுவரப்போகிற புதிய சட்ட வரைவில் இந்த ஒரு லட்சம் ரூபாய் காப்பீடும் இல்லை என்கின்றனர். இது சிறு சேமிப்பாளர்களை மிகவும் அச்சுறுத்துகின்றது. இந்த புதிய சட்டத்திற்கு ஒரு பின்னணி இருக்கின்றது. 2008-ம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் வங்கிகள் தாராளமாகவும், ஏராளமாகவும் கடன்களை வாரி வழங்கியதால் நீர்க்குமிழிகள் போல வளர்ச்சி போக்குகள் தோன்றின. கடன் பெற்றவர்களால் கடனை திருப்பி கட்ட முடியாத நிலையில் பல வங்கிகள் முறிந்தன. இந்த நாடுகளில் வங்கிகளை மீட்டெடுப்பது அரசின் பொறுப்பாயிற்று. இதன் விளைவாக 2009-ம் ஆண்டில் ஜி20 நாடுகள் ஒன்று கூடி, இப்படிப்பட்ட நிதி நெருக்கடி நிலை ஏற்படுகின்ற பொழுது என்ன செய்ய வேண்டுமென்று வழிகாட்ட நிதித்துறை நிலையாண்மைக்குழு ஒன்றை நிறுவியது. அந்த குழு வங்கிகள் நிதி நிறுவனங்கள் நெருக்கடிக்குள்ளாகும் சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்று சில வழிகாட்டு வழிமுறைகளை வழங்கியது. இந்தியா அந்த அமைப்பில் ஓர் உறுப்பு நாடு என்பதால் அதன் வழிகாட்டுதலின்படி செயல்படுவது தேவையாகின்றது. இந்த புதிய சட்ட வரைவின்படி, புதிதாக நிதிசார் தீர்வு குழுமம் ஒன்று உருவாக்கப்படும். இந்த குழுமம் மிகுந்த அதிகாரம் கொண்டதாக செயல்படும். இது வங்கிகள் காப்புறுதி கழகங்கள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் நிதி நிலையை மதிப்பீட்டு அவற்றை கலைப்பது, அது தொடர்பான தீர்மானங்களை உருவாக்குவது ஆகியவற்றை கவனிக்கும். இந்த சட்டப்படி ரிசர்வ் வங்கியின் அதிகாரங்கள் நிதிசார் தீர்வு குழுமத்திற்கு சென்று விடும். இதுவரை வைப்பு நிதி காப்புறுதி கழகம், ரூபாய் ஒரு லட்சம் வரை வைப்பு நிதியில் காப்புறுதி கொடுத்ததும் நீக்கப்படும். இந்த சட்டப்படி எந்த வங்கியையும் அதன் நிதி நிலை கருதி கலைக்கும் அதிகாரம் இந்த நிதிசார் தீர்வு குழுமத்திற்கு செல்கின்றது. வாடிக்கையாளர்களின் வைப்பு நிதியை உள்பிணை என்ற முறையில் வங்கிகள் பயன்படுத்திக் கொள்ள இந்த சட்டம் வழிவகை செய்வது வாடிக்கையாளர்களின் அச்சத்தை மிகுதிப்படுத்துகிறது. நமது நாட்டில் வங்கிகளின் வளர்ச்சி தொடக்க காலத்தில் மிக மெதுவாக இருந்தது. 1913-ம் ஆண்டு முதல் 1960 வரை சுமார் 1,600-க்கும் மேற்பட்ட வங்கிகள் முறிந்தன. இதனால் இவற்றில் முதலீடு செய்திருந்த பலர் தங்களது பணத்தை இழந்தனர். இது மக்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வங்கிகளின் முறிவுக்கான காரணங்களை ஆராய்ந்து, வாடிக்கையாளர்களின் நலனையும், வங்கிகளின் நிலையையும் நிலைநிறுத்தும் வகையில் சட்டம் இயற்றினர். அதன்படி, ஏதாவது ஒரு வங்கி செயல்பட இயலாமல் போனால், அதன் செயல்பாட்டினை நிறுத்தி, அதனை வேறு வங்கியோடு இணைக்கும் நிலை உருவானது. இதனால் இதுவரை யாருக்கும் இழப்பு ஏற்படவில்லை. 1960-க்கு பிறகு கடந்த 57 ஆண்டுகளில் பீகார் வங்கி, பெல்காம் வங்கி, ஹிந்துஸ்தான் கமர்ஷியல் வங்கி, லட்சுமி கமர்ஷியல் வங்கி போன்ற சில வங்கிகள் நெருக்கடிக்குள்ளாயின. இந்த வங்கிகள் எல்லாம் சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டிருந்ததால் வாடிக்கையாளர்களின் நலன் பாதுகாக்கப்பட்டது. அவர்களுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. அவை எல்லாம் பிற வங்கிகளோடு இணைக்கப்பட்டன. இப்பொழுது நாட்டில் கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகள் என மொத்தம் 2,125 வங்கிகளுக்கு மேல் இருக்கின்றன. இவற்றில் மக்கள் முதலீடு செய்திருப்பது சுமார் ரூ.106 லட்சம் கோடி. இதில் சிக்கல் என்னவென்றால் வாராக்கடன் ரூபாய் பத்து லட்சம் கோடியை தாண்டிவிட்டது. பொறுப்பற்ற முறையால் வங்கி நிர்வாகிகள் பெரிய பண முதலைகளுக்கு கடன் களை வாரி வழங்கியதே இதற்கு காரணம். வங்கிகள் நாட்டுடமையாக்கம் பெற்ற பிறகு மக்களுக்கு வங்கிகளின் மீது நம்பிக்கை கூடியிருக்கிறது. அரசின் காப்புறுதி இருக்குமென்று கருதுகின்றனர். மொத்த வங்கிகளின் வைப்புகளில் 82 சதவீதம் நாட்டுடைமையாக்க பெற்ற வங்கிகளில்தான் உள்ளது. பொதுவாக மக்களிடம், குறிப்பாக நடுத்தர மக்களிடம் அச்சமும், அவநம்பிக்கையும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அரசு நல்ல நோக்கத்தோடு பண மதிப்பீட்டிழப்பின் மூலம் ரூ.1000, ரூ.500 நோட்டுகளை மாற்றியிருக்கலாம். ஆனால் தங்களிடமிருந்த பணத்தாள்களை மாற்றவும், புதிய தாள்களை பெறவும் மக்கள் பட்டபாடு கொஞ்சமல்ல. இன்னும் தீரவில்லை. இப்பொழுது வருகின்ற வங்கிச் சட்டம். பிள்ளையார் பிடிக்க குரங்காகி விடுமோ என்ற குழப்பத்தில் வங்கி முதலீட்டாளர்களை மாற்றியுள்ளது. தங்களது சேமிப்பு குறைவாக இருப்பதால் தொழிலில் முதலீடு செய்ய முடியாமலும், குறுகிய காலத்தில் தேவைப்படுவதால் வங்கிகளை நம்பி வைப்பு நிதியாக வைத்திருப்பவர்கள், தங்களது உடனடி தேவைகளையும், வீடு போன்ற கனவுத் தேவைகளையும் நிறைவேற்ற முடியாமல் போகுமோ என்று கலங்கியுள்ளனர். வரைவு நிலையில் உள்ளது சட்டமாக நிறைவேறும் முன்பு மக்களின் நலனை காக்கும் வகையில் திருத்தங்கள் வர வேண்டும். வாராக்கடன்கள் என்று உருவெடுத்திருக்கும் அரக்கனை அழிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு துணை செய்யும் வங்கிகள் வளர அரசு விழிப்போடு செயல்பட்டு மக்கள் நம்பிக்கையை பெற வேண்டும். வாடிக்கையாளர்கள் வாழ்ந்தால்தான் வங்கிகள் வாழும். வங்கிகள் வாழ்ந்தால்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடரும்.

அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன்


அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெற்றவரும், அறிவியல் புரட்சியில் முக்கிய பங்காற்றிய ஒருவராகவும், விஞ்ஞானிகளுக்கு எல்லாம் விஞ்ஞானியாகவும் திகழ்ந்தவர் சர் ஐசக் நியூட்டன். இங்கிலாந்து நாட்டில் விவசாய குடும்பத்தில் பிறந்த நியூட்டன் பள்ளி படிப்பை படிப்பதற்கே மிகவும் சிரமப்பட்டார். சிறுவயதில் இருந்தே அறிவியல் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்த நியூட்டன், தண்ணீரில் வேலை செய்யும் கடிகாரத்தை அப்போதே கண்டுபிடித்தார். விடாது துரத்திய ஏழ்மையின் காரணமாக 14 வயதிலேயே பள்ளி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது அவருடைய மாமா நியூட்டனின் கல்வி ஆசை நிறைவேற உறுதுணையாக இருந்து உதவினார். அதன் மூலம் பள்ளி படிப்பை முடித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். இளங்கலை பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் அவரது அறிவியல் மூளை பல கோணங்களில் சிந்திக்க வைத்தது. நவீன கணிதத்தின் பல்வேறு பிரிவுகளை அவர் கண்டுபிடித்தார். பைனாமியல் தியரம் மற்றும் கால்க்குலஸ் எனும் நவீன கணிதத்தின் பிரிவுகளை கண்டறிந்தார். ஒரு முறை தோட்டத்தில் நடந்து செல்லும் போது ஆப்பிள் பழம் மரத்தில் இருந்து விழுவதை கண்டார். எல்லா காலகட்டத்திலும் வாழ்ந்த மனிதர்கள் பார்த்திருக்கும் காட்சிதான் அது. ஆனால் அது இயற்கை என்று எண்ணிவிட்டு செல்வார்கள். ஆனால் நியூட்டனோ அதை பற்றி சிந்தித்தார். ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத சக்திதான் ஆப்பிள் பழத்தை புவியை நோக்கி விழ செய்கிறது என்று கருதினார். விளைவு, புவி ஈர்ப்பு சக்தி என்ற ஒன்று இருப்பதால் தான், பொருட்கள் அனைத்தும் கீழே விழுகிறது என்பதை கண்டுபிடித்தார். இது அவருடைய கண்டுபிடிப்புகளில் மகத்தான சாதனையாகும். அதன் பிறகு நியூட்டனுக்கு டிரினிட்டி கல்லூரியில் கவுரவ பொறுப்பு வழங்கப்பட்டது. பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அதன் விளைவு தொலைநோக்கிகளை கண்டுபிடித்தார். இன்று பயன்படுத்தப்படும் பல்வேறு நவீன தொலைநோக்கிகள் அனைத்துமே நியூட்டனின் தொலைநோக்கியை அடிப்படையாக கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. டிரினிட்டி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும்போது உலக புகழ்பெற்ற ராயல் சொசைட்டியில் உறுப்பினராக சேர்க்கப்பட்டார். வண்ணங்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் போது ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறுகண்ணை பார்க்கும் போது திடீரென்று வண்ணங்கள் மாற தொடங்கின. அது மட்டுமல்ல, தனது ஆராய்ச்சிக்காக தன் கண்ணால் வண்ணங்களை பார்க்கும் போது மாற்றம் தெரிகிறதா? என்று அடிக்கடி சோதித்து கொண்டார். அதனால் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு பல நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டிய நிலை வந்தது. ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்பதை நிரூபித்தார். இது நியூட்டன் விதி என்று அழைக்கப்படுகிறது. 21 முதல் 27 வயது வரை நிறைய கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். அதன் பிறகு 1703-ல் ராயல் சொசைட்டியின் தலைவராக நியூட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1705-ம் ஆண்டு இங்கிலாந்து ராணி, நியூட்டனின் ஆராய்ச்சிகளை அறிந்து வியந்தார். அவருக்கு, "சர்" பட்டம் வழங்கி கவுரவப்படுத்தினார். அதன் பிறகு தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நியூட்டன், தூக்கமின்மை, நரம்பு தளர்ச்சி போன்ற நோய்களால் அவதிப்பட்டார். 1727-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி நியூட்டன் இறந்தார். அவருக்கு போப் எழுதிய இரங்கில் குறிப்பு மிகவும் முக்கியமானது. அதில் 'இயற்கையும் அதன் விதிகளும் இருளில் கிடந்தன. கடவுள் நியூட்டன் பிறக்கட்டும் என்றார். ஒளி பிறந்தது' என குறிப்பிட்டு இருந்தார். இந்த வாசகம் நியூட்டன் பிறந்த அறையில் பொறிக்கப்பட்டுள்ளது. நியூட்டன் பிறவியில் ஒரு மேதை. அதனால்தான் அவரால் இயற்கையின் விதிகளை கண்டுபிடித்து சொல்ல முடிந்தது. அத்தகைய மாமேதையின் சாதனைகள் மகத்தானவை, போற்றப்படக் கூடியவை என்றால் மிகையாகாது. அப்போது வழக்கத்தில் இருந்த ஜூலியன் நாட்காட்டியின் படி அவர் 1642-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந்தேதி பிறந்தார். கிரிகோரியன் நாட்காட்டியின்படி அவருடைய பிறந்த நாள் 4-1-1643 ஆகும்.

Tuesday, January 16, 2018

சாப்பாட்டிற்கு முன், பின் என்று மாத்திரைகளை பிரிப்பது ஏன்?


சாப்பாட்டிற்கு முன், பின் என்று மாத்திரைகளை பிரிப்பது ஏன்? | நாம் எடுத்து கொள்ளும் மருந்துகளை நமது உடல் ஏற்று கொள்வதிலும், அம்மருந்துகளை ரத்தத்தில் கலக்க செய்வதிலும் நமது உணவு பெரும்பங்கு வகிக்கின்றன. மருந்தின் தன்மையை பொறுத்தே டாக்டர்கள் சில மருந்துகளை சாப்பாட்டிற்கு முன்பும், சில மாத்திரைகளை சாப்பிட்டிற்கு பின்பு சாப்பிடவும் அறிவுறுத்துகின்றனர்.சில மருந்துகளை நாம் உண்டதும் அவை நமது வயிற்றில் அமிலத்தை அதிகம் சுரக்கச்செய்து வயிற்றில் பிரச்னை, நெஞ்செரிச்சல் போன்றவற்றை உண்டாக்குகின்றன. சில மருந்துகள் வாந்தி உணர்வையும் ஏற்படுத்துகின்றன. இம்மாதிரி மருந்துகள் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிடவே டாக்டர்களால் அறிவுறுத்தப்படுகிறது. இதுபோல மாத்திரைகளை பெரும்பாலும் வெதுவெதுப்பான நீரை அருந்தி மட்டுமே உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. காரணம் பால், தேநீர், காப்பி போன்றவை சில மாத்திரைகளோடு ரசாயன மாற்றம் அடைத்து உடலுக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். சில மருந்துகள் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் நெஞ்செரிச்சல், வாந்தி உணர்வு போன்ற பக்கவிளைவுகளை தராது என்னும் நிலையில் அவை சாப்பாட்டிற்கு முன்பு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

காசநோயாளிகளுக்கு உதவித்தொகைவழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


காச நோயாளிகளுக்கு உதவித்தொகை!!! | காசநோயாளிகளுக்கு உதவித்தொகைவழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.'டியூபர்செல் பாசிலஸ்' எனும் கிருமியால் வரும் நோயின் பெயர் 'டியூபர் குளோசிஸ்'. இதைச் சுருக்கி 'டிபி' என்று அழைக்கிறோம். இந்நோய் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாமல் இருப்பதால்தான் வருகிறது. இது, நெஞ்சுப் பகுதி முழுவதும் சளி சேர்ந்து, பாதிக்கப்பட்டோரின் உடம்பை உருக்கிவிடும். இந்தியாவில் டிபியால் பாதிப்படையும் மக்கள் இறப்பது குறைந்திருந்தாலும், நோயால் மக்கள் பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 28 லட்சம் பேர் காசநோயால் (டிபி) பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 17 லட்சம் பேர் மட்டுமே உரிய சிகிச்சை பெறுவதாக சர்வதேச சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இந்த நிலையில், நாடு முழுவதும் காசநோயால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் பேருக்கு மாதம் 500 ரூபாய் உதவித்தொகை வழங்க மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.மத்திய சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர், "காச நோயாளிகளுக்கு உதவித்தொகை வழங்க செலவு நிதி குழு ஒப்புதல் அளித்துள்ளது. நோயாளிகளின் மருத்துவ ஆவணங்கள் மற்றும் ஆதார் எண் அடிப்படையில் உதவித்தொகை வழங்குவது குறித்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. காச நோயாளிகளுக்கு நோய் குணமாகும் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும். இதனால், காசநோயாளிகள் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துமிக்க உணவுகளை வாங்கி சாப்பிடவும், போக்குவரத்து செலவுக்கும் பயன்படுத்த முடியும். காசநோயை 2025ஆம் ஆண்டுக்குள் 90% ஒழிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை வாரத்துக்கு மூன்று முறை மருந்து உட்கொள்ளும் முறையைப் பின்பற்றி வந்தனர். "ஃபிக்சட் டோஸ் காம்பினேஷன் என்று அழைக்கப்படும் இந்த டிபி மருந்து கலவையை உட்கொள்ளும் முறைகளில் தற்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, வாரத்துக்கு மூன்று முறை மருந்து எடுத்துக்கொள்ளாமல், தினமும் மருந்தை உட்கொள்ள வேண்டும். மேலும், குழந்தைகளுக்குக் கசப்பான மாத்திரைக்குப் பதிலாக எளிதில் கரையக்கூடியஇனிப்பு சுவையுள்ள மருந்துகள் வழங்கப்படவுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.2014ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2016ஆம் ஆண்டு டிசம்பர் வரை டெல்லியில் 2 லட்சம் காசநோயாளிகள் இருந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2014இல் 73,096, 2015இல் 83,028, 2016இல் 69,169 ஆகவும் இருந்தது. இந்நோய் மூலம் கடந்த 2014இல் 4,350 பேரும், 2015இல் 3,635 பேரும் உயிரிழந்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் 2017ஆம் ஆண்டின் அறிக்கைபடி, காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28.2 லட்சத்திலிருந்து 27 லட்சமாகக் குறைந்துள்ளது. கடந்த ஓராண்டில் இறப்பு 60 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

Saturday, January 6, 2018

பேரீச்சையின் ஆரோக்கிய பலன்கள்


பேரீச்சையின் ஆரோக்கிய பலன்கள் | பேரீச்சம்பழத்தை அதன் தித்திப்புக்காக குழந்தைகளும் விரும்புவர். ஆனால் பேரீச்சை அள்ளி வழங்கும் ஆரோக்கிய நன்மைகளுக்கும் குறைவில்லை. கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் சத்துணவுப் பழமாக பேரீச்சை உண்ணப்பட்டு வருகிறது. ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை. இதில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து ஆகியவையும் நிறைந்துள்ளன. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனை வரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பழமாகும். தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு தம்ளர் பால் பருகி வந்தால் ரத்தம் விருத்தியடையும். இனிப்பு உணவுகளைத் தவிர்க்க வேண்டியுள்ள சர்க்கரை நோயாளிகள் கூட பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இப்பழத்தில் உள்ள இனிப்பால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. ஏதேனும் காயத்தால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டவர்கள் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த இழப்பை விரைவில் ஈடுகட்டலாம். பேரீச்சம்பழ சாறு ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். தினசரி இரவில் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கலைத் தரும் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி மலம் சுலபமாக வெளியேறும். பேரீச்சம் பழத்தை பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிட, வாதம், பித்தம், முட்டி வீக்கம் குணமாகும். பேரீச்சம் கொட்டையை வறுத்துப் பொடி செய்து, காபி போல் பால், சர்க்கரை கலந்து பருகலாம். உடலுக்கு உரமளிக்கும் இதை வாரம் ஓரிரு நாள் பருகுவது நல்லது. பல் முளைக்கும் குழந்தைகள் வயிற்றுக் கடுப்பால் அவதி யுறும்போது பேரீச்சம்பழத்தைச் சுடுநீரில் கலந்து குழைய வேக வைத்து வேளை ஒன்றுக்கு 1 கரண்டி வீதம் 3 வேளை கொடுத்தால் பேதி நிற்கும். தினசரி 4 பேரீச்சம்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிற்றுக் கடுப்பு, அஜீரணபேதி, மலச்சிக்கல், அமிபியாசிஸ் போன்ற வயிற்றுக் கோளாறுகள் வருவதில்லை. குறிப்பாக குடலுக்குப் பாதுகாப்புக் கவசமாக பேரீச்சம்பழம் விளங்குகிறது.

ஸ்மார்ட் போனில் நுழைய காத்திருக்கும் புதிய தொழில்நுட்பங்கள்


ஸ்மார்ட் போனில் நுழைய காத்திருக்கும் புதிய தொழில்நுட்பங்கள் | ஸ்மார்ட் போன்களின் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது இமாலய அளவில் உள்ளது. இது ஆண்டுக்காண்டு ஒரு உன்னத நிலையை எட்டி பிடித்து ஸ்மார்ட் போன்கள் மீதான மக்களின் ஆர்வத்தை தூண்டுகின்றன. ஸ்மார்ட்போன்கள் பேசுவதற்கும், சமூக தளங்களில் இயங்குவதற்கு என்பது மட்டுமல்லாது சிறு நிறுவனங்களின் வளர்ச்சி, பாதுகாப்பு அம்சங்கள், ஆப்ஸ்களின் மூலமான பெரும் வளர்ச்சி, சிறப்புமிகு இடந்தேடல் என பல முன்னேற்ற அம்சங்களை கொண்டு மக்களுடன் இணைந்த நபராய் உள்ளது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அடுத்த கட்டம் நோக்கி பயணிக்கிறது. ஆம் அடுத்த ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்களில் ஏற்பட போகும் சில மாற்றங்களை ஆராயும்போது அதன்மீது அதிக ஆர்வமும், கூடுதல் கவன ஈர்ப்பும் ஏற்படுகிறது. மின்னணு அதிர்வலை தொழில்நுட்பத்தின் மூலமாக தொடுதிரை அனுபவம் என்பது முற்றிலுமாக மாறுபடும். நாம் எதனை எண்ணி கொண்டு ஸ்மார்ட்போனை தொடுகிறோமோ அது அங்கே காட்சியாக விரியும். ஆம் ஷாப்பிங் செய்ய வேண்டும் என நினைத்தால் ஷாப்பிங் இணையதள முகவரிகள் மற்றும் நிறுவனங்கள் பகுதி செல்லும். அதுபோல் நாம் என்ன பொருள் ஆடையா, காலணியா, ஸ்மார்ட்போனா என்று எதை நினைத்து தொடுகிறோமோ அதற்கு ஏற்ப செயல்படும். நாம் நினைத்து செயல்பட்டு தொடுதிரை ஒவ்வொரு பகுதிக்கு செல்லும் முன் மின்னணு அதிர்வலை வாயிலாக நாம் தொடும்போது எலக்ட்ரோ ஸ்டிக் அதிர்வுகள் மூளைக்குள் பாய்ந்து நமது எண்ணங்களை வாங்கி உடனடியாக ஸ்மார்ட் போனுக்கு தகவல்களை தருகிறது. எலக்ட்ரோ வைப்ரேஷன் தொழில்நுட்பம் குறித்து டிஸ்னி மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள ஏற்கனவே பலவித ஆய்வுகள் மேற்கொண்டு அதனை செயல்படுத்த பல அமைப்புகளை அமைத்துள்ளன. அதுபோல் ஆப்பிள் நிறுவனம் எலக்ட்ரோ வைப்ரேஷன் தொழில்நுட்பம் குறித்தான சில உரிமங்களையும் பதிவு செய்து உள்ளன. ஸ்பீச்-டூ-ஸ்பீச் என்பது 2012-ல் மைக்ரோ சாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்திய போதும் தற்போது தான் பன்மொழி கான்ப்ரன்ஸ் கால்கள் என்பது வணிக ரீதியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இது இன்னும் முன்னேற்றம் பெற்று பல நாட்டு மக்களும் முக்கியமான விஷயங்களை எந்தவொரு மொழி பெயர்ப்பான் மற்றும் மீடியேட்டர் உதவியின்றி தங்களது மொழியில் விஷயங்களை அறிய இது உதவிகரமாக இருக்கும். நெகிழ் தன்மையுடன் மற்றும் உபயோகத்திற்கு தேவையான அளவில் மாற்றம் செய்யக்கூடிய ஸ்மார்ட்போன்கள். அதாவது மடித்து இயக்க கூடியவாறும், சுருக்க திலையில் சிறியதாக மாற்றி பின் பெரிய அளவில் விரிய செய்யக் கூடிய ஸ்மார்ட்போன்கள் வரபோகின்றன. OLED எனும் தொழில்நுட்பம் வாயிலாக ஸ்மார்ட்போன் காட்சி திரைகளை சுருட்டலாம். மடக்கலாம், சுருக்கலாம். எனவே வேண்டும்போது பெரிய காட்சி தரையில் படம் பார்ப்பது. பிறகு மடித்து சிறியதாக வைத்து கொள்வது. அதுபோல் இருபக்க காட்சி திரை கொண்ட செயல்பாடு. நாம் நமக்கு பிடித்ததை பார்க்க மறுபுறம் நமது நண்பர் பிற தேடல்களை நிகழ்த்தும் வகையிலான வசதியமைப்பு. ஏற்கனவே ஸ்மார்ட் வளர்ச்சிகளின் வளைய கூடிய அமைப்பு திறம்பட இயங்கிட அடுத்து ஸ்மார்ட் போன்களின் உருவ ரீதியிலான நெகிழ்வும் கைகூட போகிறது. பலதரப்பட்ட பணிகளை ஸ்மார்ட் போனில் செய்ய வேண்டி இருப்பதால் உடனுக்குடன் பேட்டரி சார்ஜ் போய்விடுகிறது. இதற்கான பிரத்யேகமான அல்ட்ரா-ராபீட் சார்ஜர் வரபோகிறது. இதன் மூலம் 30 செகண்டில் முழு பேட்டரியும் சார்ஜ் செய்யப்பட்டு விடும். இவை அனைத்தும் கூடிய விரைவில் ஸ்மார்ட்போன் உலகின் தொழில்நுட்ப வசதிகளாய் நுழைய போகின்றன.

நம்மோடு உரையாடி நாம் கூறும் பணிகளை செய்திடும்-கூகுள் ஹோம்


நம்மோடு உரையாடி நாம் கூறும் பணிகளை செய்திடும்-கூகுள் ஹோம் | இன்றைய நாளில் பலதரப்பட்ட பணிகளை ஒரே நேரத்தில் அவசரமாக செய்யவேண்டிய சூழல் உள்ளது. சிலர் உடல்நிலை காரணமாக சில பணிகளை செய்யமுடியாதபடியும் இருக்கும். அது போல நாம் தனிமையில் இருக்க நேரிடும் போது பேச்சு துணையின்றி கஷ்டபடுவோம். இவை அனைத்திற்கும் விடைகாணும் விதமாய் நமக்கு உதவிபுரியும் நோக்கில் இயந்திர உதவியாய் வந்துள்ளார். இவர் ரோபோ அல்ல. ஆனால் எல்லா பணிகளையும் இருந்த இடத்தில் இருந்து ஆணையிட உடனே அப்பணியை செய்து முடித்து விடுகிறது. என்னடா அதிகமாக ஆர்வத்தை துண்டுகிறார் என நினைத்து விட வேண்டாம். இப்படி ஓர் துணையாளர், உதவியாளர் என வியக்கும் அளவு கூகுள் ஹோம் வந்துள்ளது. பல வியத்தகு தொழில்நுட்ப கருவிகளையும், தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கிட்ட கூகுள் நிறுவன வெளியீடு தான் கூகுள் ஹோம். அன்றாட பணிகளை சுலபமாக்கும் கூகுள் ஹோம் என்பது பேச்சு மூலம் இயங்கக்கூடிய ஸ்பீக்கர் இணைப்புடன், சக்தி வாய்ந்த கூகுள் அஸிஸ்டெண்ட் துணையுடன் இயங்குகிறது. நமது பேச்சு மூலம் சொல்லும் கட்டளைகளை உடனடியாக செயல்படுத்தி தருகிறது. கூகுள் ஹோம் துணையுடன் அனைத்து இயந்திரம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் செயல்களை இயக்கி மற்றும் கன்ட்ரோல் செய்ய முடியும். நம்முடைய கேள்விகளுக்கு பதில் கூறும் கூகுள்-ஹோம் கூகுள்-ஹோம் என்பதை பக்கத்தில் வைத்து கொண்டு எந்த வித உதவிகளையும் கேட்க முடியும். நமக்கு தேவையான அனைத்து தகவல்களையும் நாம் கேட்கும் மொழியிலேயே வழங்குகிறது. அதாவது செய்திகள், பருவநிலை தகவல்கள், நேரம், விளையாட்டு என்பதுடன் ஒவ்வொரு நகர பகுதிகளிலும் உள்ள வியாபார ஸ்தலங்கள் குறித்த தகவல்கள், திறந்திருக்கும் நேரம், விடுமுறை நாள் என்றவாறு எந்தவித தகவல்களை உடனடியாக பதிலாக அளித்து விடும். இசைபாடல்களை கேட்க உதவும் கூகுள் ஹோம் நாம் எந்த வித தொடுதலுமின்றி அமர்ந்தபடி எனக்கு இந்த பாடல் வேண்டும் என்று கூறினால் போதும் உடனடியாக அந்த பாட்டு ஒலிக்க தூண்டும் இதில் சூப்பர் பவர் ஸ்பீக்கர் மூலம் அதிக ஒலி சத்தத்துடன், துல்லியமான வெளிபாடு கொண்ட பாடல்களை கேட்டிட முடியும். வீட்டின் அனைத்து மின்னணு சாதனங்களுடன் இணைக்கக்கூடிய கூகுள் ஹோம் வீட்டிலுள்ள ஸ்மார்ட் மின்னணு சாதனங்களான விளக்குகள், தொலைகாட்சி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், வாட்டர் ஹீட்டர், எலட்ரிக் குக்கர், ஸ்மார்ட் விளக்குகள் என்றவாறு 1000-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் இயந்திரங்கள் என்றவாறு 150-க்கும் மேற்பட்ட சிறப்புமிகு பிராண்ட் பொருட்களுடன் இணைந்து செயல்படகூடியது கூகுள் ஹோம். நாம் அமர்ந்த இடத்திலிருந்து வாட்டர் ஹீட்டர் இவ்வளவு வெப்பநிலையில் தண்ணீர் சூடாக வேண்டுமென்பது முதல் எலக்டிரிக் கெட்டில் டீ தயார் செய்வது, விளக்குகள் எரிய வைப்பது, வாஷிங்மெஷினை இயக்குவது என்றவாறு பல பணிகளை நமது பேச்சுமூலமே இயக்கிட முடியும். இதிலுள்ள க்ரோம்காஸ்ட் மூலம் தொலைகாட்சி நிகழ்வுகளை நிறுத்துவது, முன் இயக்கம் மற்றும் பின் இயக்கம் என்பதனை நமது விரல் படாமலேயே மேற்கொள்ள முடியும். அது போல் எனக்கு நெட்பிளக்ஸ் போன்ற ஆன்லைன் திரைப்படங்களுக்கான ஆப்ஸ்-லிருந்து இந்த படம் ஒளிப்பரப்ப வேண்டும் என கூறினால் போதும் உடனே அப்படம் காட்சிபடுத்தப்படும். பொழுது போக்குடன் விளையாடவும் செய்யும் கூகுள் ஹோம் நம்முடன் எதிர் அமர்ந்து ஓர் மனிதரைப்போல் விளையாடலாம். புதிய விஷயங்களை நம்முடன் பகிரவும், கதைகள் போன்றவற்றை சொல்லவும் கூகுள் ஹோம் உதவுகிறது. குழந்தைகளுக்கு பிடித்தமான கதைகள் கூறும், பாட்டுக்கள் பாடும் நாம் எவருக்கும் பேச வேண்டும் எனில் உடனே மொபைலை தொடமலே அவருடன் இணைப்பை ஏற்படுத்தி தரும். அனைவருக்கும் உற்ற துணையாகவும், உதவியாளனாய் கூகுள் ஹோம் உள்ளது.