You will be redirected to the script in

seconds
Kalvisolai.Info: இசைத் துறையில் சாதிக்க ஆசையா?
உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Monday, January 29, 2018

இசைத் துறையில் சாதிக்க ஆசையா?இசைத் துறையில் சாதிக்க ஆசையா? | இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை. இசைத்துறை பரந்து விரிந்தது. இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் இசை உலகமும் புதிய பரிணாமம் அடைந்திருக்கிறது. நீங்களும் இசைப் பிரியர், இசைத் துறையில் சாதிக்க நினைப்பவர் என்றால், இசைத் துறையின் முக்கியமான படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்... இசைத் துறையில் படிப்புகளும் அதிகம், வேலைவாய்ப்புகளும் அதிகம். அதே நேரத்தில் போட்டிகளும் மிக அதிகம். நினைத்ததும் யார் வேண்டுமானாலும் பாடலாம். ஆனால் பாடகராக நிச்சயம் சாதகப் பறவையாக நெடிய காலம் பயணப்பட வேண்டியிருக்கும். நீங்கள் தனிப்பட்ட இசைக் கருவியை இசைத்துப் பழகுவதோ, தனி இசையை கற்றுக் கொண்டு பாடகராக உயர்வதோ மட்டும் இசைத்துறை வாய்ப்பு என்று எண்ணிவிடாதீர்கள். இன்னும் எண்ணற்ற வாய்ப்புகள் இசைத் துறையில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் முக்கியமான சில பணிகளை அறிவோம்... இசை அமைப்பாளர் இசைத் துறையில் உயர்ந்த பணியாக கருதப்படுவது இசை அமைப்பாளர் அல்லது இசை இயக்குனர். இசைத்துறையின் அடிப்படை பணிகள் அனைத்தையும் அறிந்து உயர்ந்தவர்களால் இசை அமைப்பாளர் பணியில் சாதனை படைக்க முடியும். ஆரம்பத்தில் கிடைக்கும் சிறிய வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்துபவர்கள், பின்னர் சாதனையாளராகவும், மற்றவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குபவராகவும் உயரலாம். அதற்கான பயணப்பாதை கொஞ்சம் கடினமானதுதான். பாதுகாப்பற்ற நிலையில் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டு, கடமைகளையும் நிறைவேற்றிக் கொண்டு நம்பிக்கையுடன் நடைபோட்டவர்கள் இன்று சிறந்த இசையமைப்பாளர்களாக இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. இசைத் துறையின் நுண்ணறிவையும், அனுபவத்தையும் பெற்றுக்கொண்டால் அந்த சாதனையை நீங்களும் நிகழ்த்தலாம். சினிமாத் துறையில் இசை அமைப்பாளர்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. ஆடியோ என்ஜினீயர் இசை சார்ந்த தொழில்நுட்ப படிப்பு இது. ஒலியின் தரத்தை உயர்த்தி இசையை ஏற்றம் பெறச் செய்வது ஒலிப் பொறியியல் துறை. இதற்கான பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு நிறைய பணி வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இசை சிறப்பாக ரசிகர்களைச் சென்றடைய பின்னணியில் செயல்படுபவர் சவுண்ட் என்ஜினீயர்தான். இசை ஞானம் மிகுதியாக இல்லாவிட்டாலும் ஆடியோ என்ஜினீயரிங் படிப்பை கற்கவும், சாதிக்கவும் முடியும். இசையின் ஒலித் தடங்கலை சமாளிக்கும் தொழில்நுட்பம் மற்றும் இயந்திர நுட்பங்களை அறிவது ஆடியோ என்ஜினீயர் படிப்பாகும். அதை சிறப்புடன் செயல்படுத்துவது சவுண்ட் என்ஜினீயரின் பணியாகும். இசை நிகழ்ச்சிகள், சினிமா ஸ்டூடியோக்கள், மாநாடுகள் போன்ற பொதுநிகழ்வுகள், ரேடியோ, டி.வி. நிலையங்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் என பல்வேறு இடங்களிலும் சவுண்ட் என்ஜினீயரிங் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதில் உள்ள ஆர்வமும், அறிவுத்திறனும் சிறந்த பணிவாய்ப்பையும், உயர்ந்த அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை. ஆர்ட்டிஸ்ட் மேனேஜர் இசைத்துறையில் பலருக்கும் தெரிந்திராத முக்கியப் பணிகளில் ஒன்று ஆர்டிஸ்ட் மேனேஜர். இசைக் கலைஞர்கள் பலர், தங்களுக்கான வாய்ப்புகளைத் தேடித் திரிந்து கொண்டிருந்தாலும், இசைத்துறையில் எங்கெங்கு யாருக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது எளிதில் தெரிவதில்லை. அதே நேரத்தில் ஒருவர், இரு இடங்களில் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனால் ஒரு வெற்றிடம் ஏற்படும். இதுபோன்ற சூழலை சமாளித்து பல்வேறு இசைக் கலைஞர்களுக்கும் வாய்ப்புகளை ஒருங்கிணைத்து, இசைத் தடத்தில் வெற்றிகரமாக செயல்படுத்துவது 'ஆர்டிஸ்ட் மேனேஜர்' பணி. இவர்கள் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கும், இசைக் கலைஞர்களுக்கும் இணைப்புப் பாலமாக விளங்குவதால் நல்ல கவுரவமும், வருவாயும் கிடைக்கும். அதற்கேற்ப பேச்சாற்றல், ஒருங்கிணைந்து செயல்படும் ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு திறன்கள் இந்தப் பணிக்கு அவசியம். ரசிகர்கள் விரும்பும் சிறந்த கலைஞரை நிகழ்ச்சிக்கு ஒப்பந்தம் செய்வதற்கேற்ப நிறைய ஊதியம் பெறுகிறார் ஆர்டிஸ்ட் மேனேஜர். இசை ஞானம் இல்லாமலும் இந்தப் பணியைச் செய்ய முடியும் என்றாலும், இசை அறிவு வாய்ப்புகளை பிரகாசமாக்கும். இசை இதழாளர் எழுத்துத் திறமை இருப்பவர்களுக்கும் இசைத் துறையில் பணி வாய்ப்பு உண்டு. இசைத் துறையில் அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ளும் ஒரு குறுகிய காலப் படிப்பை படித்துக் கொண்டால் இசை எழுத்தாளராகிவிடலாம். இசை நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை எழுதுதல், இசைக் கலைஞர்களை நேர்காணல் செய்தல், ஆல்பங்கள் பற்றிய விமர்சனம் எழுதுதல் என இசை சார்ந்த அனைத்து சங்கதிகளையும் ஆராய்ந்து, அறிந்து எழுத்தில் பதிக்கலாம். அனேக தினசரிகள், இதழ்கள், காட்சி ஊடகங்கள் இசை சார்ந்த கட்டுரைகள், காணொலிகளை வெளியிடுகின்றன. இசையைப் பற்றிய ஆழ்ந்த அறிவு, இந்தத் துறையில் சிறந்து விளங்க துணை புரியும். இசை ஆசிரியர் இசைத்துறையில் கால்பதித்தால் இசையை பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் உயரலாம். இசையமைப்பாளருக்கு அடுத்தபடியாக இசை ஆசிரியருக்கு வாய்ப்புகள் பிரகாசம். நிறைய பேர் இந்தப் பணியைச் செய்து வருகிறார்கள். திறமை வாய்ந்த இசை ஆசிரியர்களுக்கு மதிப்பு அதிகம். அதற்கேற்ப வாய்ப்புகளும், வருவாயும் அதிகம். தனிநபருக்கு இசை கற்றுக் கொடுத்தல், இசைப்பள்ளி நடத்துதல், பிரபலங்களுக்கு நேரில் சென்று இசை கற்பிப்பது, இசை நிகழ்ச்சிகளுக்குச் செல்வது என எல்லாப் பணிகளிலும் ஈடுபடுகிறார்கள் இசை ஆசிரியர்கள். கல்லூரிகளிலும் வகுப்பெடுக்க முடியும். இசை ஆசிரியராக உயர அடிப்படை இசை ஞானம் போதாது. ஆழ்ந்த இசை ஞானம் இருந்தால்தான் சிறந்த இசையாசிரியராகி எதிர்கால இசை இளவரசர்களை உருவாக்க முடியும். இதயங்களை இணைக்கும் இசைத்துறையில் நீங்களும் கால்பதித்து சாதிக்கலாம்!

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.