You will be redirected to the script in

seconds
Kalvisolai.Info: February 2018
உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Wednesday, February 28, 2018

வெற்றிக்கு வித்திடுபவர்கள் விஞ்ஞானிகளே!


வெற்றிக்கு வித்திடுபவர்கள் விஞ்ஞானிகளே! சர் சி.வி.ராமன் முனைவர் எஸ்.பாலகுமார் இன்று (பிப்ரவரி 28) தேசிய அறிவியல் தினம். இந்திய விஞ்ஞானி சர் சி.வி.ராமன் என்று அழைக்கப்படும் சர் சந்திரசேகர் வெங்கட்ராமன், கடந்த 1928-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி ராமன் விளைவை கண்டுபிடித்தார். அதற்காக 1930-ம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த நாளே "தேசிய அறிவியல் தினம்" என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகளின் எண்ணிக்கை எவ்வளவு? நாட்டின் வளர்ச்சியில் அவர்களின் பங்கு என்ன? இந்திய ஆராய்ச்சியின் நிலை உலக அளவில் எவ்வாறு உள்ளது? என்பது போன்றவற்றை சற்று நினைவு கூற வேண்டும். பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் பல இடங்களில் ஒரு கேள்வியைக் கேட்டோம். தற்சமயம் பாரத ரத்னா பட்டம் பெற்ற இந்திய விஞ்ஞானி யார் என்பதே அந்தக் கேள்வி. இதற்கு சரியான பதிலான சி.என்.ஆர்.ராவ் என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. ஆனால் தெண்டுல்கர் என்பதைச் சொல்கின்றனர். ஆக விஞ்ஞானிகள் பற்றிய மதிப்பீடு நமது சமுதாயத்தில் எவ்வாறு உள்ளது என்பதைப் பற்றி அறிந்து கொள்ள இது ஒரு அளவுகோலாகும். இந்தியாவில் உள்ள டாக்டர்கள், என்ஜினீயர்கள், உயர் அதிகாரிகளின் எண்ணிக்கையை விட விஞ்ஞானிகள் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆனால் குறைவான எண்ணிக்கையில் உள்ள அவர்களால் சமுதாயத்தில் மாற்றம் உண்டாகிறது என்றால் அது மிகையாகாது. தகவல் பரிமாற்றத் துறையின் மாற்றங்களைச் சற்றே பார்ப்போம். போஸ்ட் கார்டுகள், இன்லேண்ட் லெட்டர்கள், தந்தி போன்றவையெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன. ஏன் வீட்டில் இருந்த டெலிபோன்களும் காணாமல் போய்விட்டன. அனைவரிடமும் கையடக்க செல்போன்கள் வந்துவிட்டன. இந்த மாற்றங்களுக்குக் காரணம் நிச்சயமாக விஞ்ஞானிகள் தான். மருத்துவ உலகின் முன்னேற்றங்களைப் பாருங்கள். உங்களைத் தொடாமலே உங்கள் உடலின் உள்ளே என்ன பிரச்னை என்பதைக் கண்டறியும் எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி. ஸ்கேன் முறைகள் வந்துவிட்டன. இதை சாத்தியமாக்கியவர்கள் பவுதிக விஞ்ஞானிகளே. இவ்வாறு வாழ்வின் ஒவ்வொரு பரிமாண வளர்ச்சிக்கும் வித்திட்டவர்கள் விஞ்ஞானிகளே. ஒரு காலகட்டத்தில் 30 கோடி மக்கள் கொண்ட இந்திய நாட்டில் பசி, பட்டினி, பஞ்சம் தலைவிரித்தாடியது. அப்போது உணவுத்துறையின் மத்திய அமைச்சர்கள் அமெரிக்காவிடம் கையேந்தி கோதுமையை வாங்கி வருவார்கள். இன்றோ இந்தியாவின் மக்கள் தொகை 100 கோடியைத் தாண்டிவிட்டது. ஆனால் விளை நிலமான வயல்களின் பரப்போ அதிகரிக்கவில்லை. இருந்தபோதிலும் உணவில் தன்னிறைவு பெற்றுவிட்டோம். இது எப்படி நிகழ்ந்தது? இந்த சாதனையை நிகழ்த்தியவர்கள் அரசியல்வாதிகளா? இல்லவே இல்லை. புதுவகைப் பயிர்களை அறிமுகப்படுத்திய விஞ்ஞானிகள் தான் இதற்கு காரணம். எத்தகைய பெரிய சோதனை காலமாக இருந்தாலும் அதனை வெல்லக் கூடிய ஆற்றல் படைத்தவர்கள் விஞ்ஞானிகளே! ஆனால் அவர்களில் யாரும் பணக்காரர்கள் ஆகவில்லை. ஒரு மென்பொருளை விற்று இன்று உலகின் மாபெரும் பணக்காரராக சிலர் உலா வருகிறார்கள். இது வருந்துதற்குரியது. மின்சார பல்பைக் கண்டுபிடித்து ஒளிவெள்ளத்தைத் தந்த ஐசக் நியூட்டன் நினைத்திருந்தால் அவரோ அல்லது அவரின் சந்ததியினரோதான் உலகின் செல்வந்தராக ஆகி இருக்க முடியும். மாறாக இன்று வரை எங்களது கண்டுபிடிப்புகள் மனித சமுதாயத்தின் பொதுச் சொத்து என்று அறிவித்து பணக்காரராக வேண்டும் என்ற நோக்கமில்லாமல் உழைத்து வரும் விஞ்ஞானிகளே சமுதாயத்தின் உண்மையான சேவகர்கள். அவர்களது சமுதாயப் பணியினை குடத்தில் இட்ட விளக்காக மறைத்தே வைத்திருப்பது சரியல்ல. போற்றத்தக்க இந்திய விஞ்ஞானிகள் ஒரு சிலரைக் குறிப்பிடலாம் என்றால், தாவர ஆராய்ச்சி நிபுணர் ஜகதீஷ் சந்திர போஸ், பாபா அணுசக்தி நிறுவனப் புகழ் ஹோமி ஜஹாங்கிர் பாபா, விண்வெளி ஆய்வின் வித்தகர் விக்ரம் சாராபாய், மக்கள் போற்றும் அணு விஞ்ஞானி அப்துல் கலாம் போன்றவர்கள் உடனடியாக நினைவுக்கு வருகிறார்கள். 'நேச்சர்' என்ற உலகின் தலை சிறந்த அறிவியல் இதழ் இந்திய நாடானது ரஷியா, பிரான்சு, இத்தாலி, கனடா ஆகிய நாடுகளை விட அதிகமாக ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது என்ற தகவலை தெரிவிக்கின்றது. ஆனாலும் சீனா, பிரேசிலைவிட குறைவுதான் என்பது சற்றே கவலை அளிப்பதாக இருக்கிறது. இருந்தாலும், சாட்டிலைட்டுகள் எனப்படும் விண் கோள்களை வானத்தில் செலுத்துவதில் நாம் முன்னணியில் இருக்கிறோம் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும். அதுவும் தமிழ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி சிவன் தலைமையின் கீழ் இந்த சாதனைகள் நிகழ்த்தப்பட்டது பெருமைக் குரியதாகும். இந்தியாவில் ஆராய்ச்சிக்காக 30 அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையங்கள் இயங்கிவருகின்றன. அவற்றுள் இரண்டு மையங்கள் தமிழகத்தில் உள்ளன. தோல் சம்பந்தமான ஆராய்ச்சி நிறுவனமான சென்ட்ரல் லெதர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் சென்னையிலும், மத்திய மின்வேதியியல் ஆயுவுக்கூடம் காரைக்குடியிலும் சிறப்பாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. காரைக்குடியில் வருங்காலத்தில் சாலைகளில் ஓட உள்ள பேட்டரி கார்களுக்கான பேட்டரிகளைச் சிறந்த முறையில் உருவாக்கும் பணிகள் முனைப்புடன் நடந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். எதிர்கால இந்தியா வளமாக உருவாக வேண்டும் என்றால் சிறந்த விஞ்ஞானிகளை உருவாக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு இந்திய அறிவியல் தொழில் நுட்பக் கழகம், 'இன்ஸ்பயர்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் பிளஸ்-1, பிளஸ்-2 பயிலும் மாணவர்களில் மிக அதிக மதிப்பெண்கள் (அதாவது 94 சதவீதத்துக்கு மேல்) பெற்ற மாணவர்கள் சுமார் 1 லட்சம் பேருக்கு ஆண்டு தோறும் இலவசமாக 5 நாட்கள் முழுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களில் 1000 பேர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு விஞ்ஞானிகளாக மாறிவிட்டால் 10 ஆண்டுகளில் 10 ஆயிரம் தலை சிறந்த விஞ்ஞானிகள் இந்தியாவில் உருவாகி விடுவார்கள். அந்த நாள் வரும் பொழுது உலக அரங்கில் அசைக்க முடியாத மாபெரும் வல்லரசாக இந்தியா திகழும்.

கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் ஒரு ஏழை, பொருட்செல்வம் வேண்டி இறைவனை நினைத்துத் தவமிருந்தான். அவன் முன் இறைவன் தோன்றி, 'என்ன வரம் வேண்டும்?' என்றார். 'எனக்குப் பணக்காரனாவதற்கு பணம் வேண்டும்' என்றான். இறைவனோ, 'சரி.. இதை வைத்துக்கொள்' என்று ஒரு தடிக்கம்பைக் கொடுத்தார். அதற்கு அந்த ஏழை, 'நான் பணம் கேட்டால் தடியைத் தருகிறீர்களே' என்றான். 'இந்தத் தடியை உனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் தட்டினால், ஆயிரம் தங்கக் காசுகள் கிடைக்கும். நீ எப்பொழுது பணம் வேண்டும் என்று நினைக்கிறாயே, அப்பொழுதெல்லாம் இந்த தடியைத் தட்டினால் ஒவ்வொரு முறையும் ஆயிரம் பொற்காசுகள் உனக்குக் கிடைக்கும்' என்றார் இறைவன். ஏழை மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் போதே, 'ஆனால் ஒரு நிபந்தனை' என்றார் இறைவன். ஏழை என்ன ஏதென்று தெரியாமல் விழித்தான். இறைவன் தொடர்ந்தார். 'உனக்கு கோபம் வரக்கூடாது. அப்படி வந்தால், தடி உன்னைவிட்டுப் போய்விடும். கோபம் மட்டுமில்லாமல் இருந்தால், இந்தத் தடி எப்பொழுதும் உன்னிடமே இருக்கும்' என்று சொல்லி மறைந்துவிட்டார். ஏழை ஒரு முறைத் தட்டினான். ஆயிரம் தங்கக்காசுகள் கிடைத்தன. அதை அள்ளி மூட்டையாகக் கட்டிக்கொண்டு, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான். வழியில் அவனுக்கு எதிரே ஒரு சன்னியாசி வந்து கொண்டிருந்தார். அவர் ஏழையிடம், 'ஏனப்பா.. எங்கே போய் வருகிறாய்?' என்று கேட்டார். நடந்ததைச் சொல்லித் தங்கக் காசைக் காட்டினான். 'அப்படின்னா இப்ப அந்த தடியைத் தட்டு பார்க்கலாம்?' என்றார். உடனே 'இதோ பாருங்கள். தட்டுகிறேன்' என்று தட்டினான். அதிலிருந்து ஆயிரம் பொற்காசுகள் விழுந்தது. அதையும் அந்த ஏழை எடுத்துக்கொண்டான். இதைப் பார்த்த சன்னியாசி, 'இதேபோல் எப்பவும் வருமா?' என்றார். 'நாளைக்குத் தட்டினால் கூடவா?' ஏழை 'ஆமாம்' என்றான். 'இன்னும் ஒருமாதம் கழித்துத் தட்டினால் கூடவா?' என்று மீண்டும் கேட்டார் அந்த சன்னியாசி. 'ஆமாம்' என்றான். 'ஒரு வருடம் கழித்துத் தட்டினால் கூடவா?' என்றார். ஆமாய்யா.. போய்யா சும்மா உயிரை எடுக்காதே' என்று கோபத்தில் பேசினான், அந்த ஏழை. அவன் அப்படி கோபப்பட்ட அந்த நொடியே, பொற்காசுகளும், தடியும் மறைந்து விட்டது. சோதிக்க வந்த இறைவனும் தான். கல்லுக்குள் தேரையும், கனிக்குள் புழுவையும், நெல்லுக்குள் பதரையும், சொல்லுக்குள் தீமையும் கலந்தே இருப்பது போல, நல்ல மனிதர்களிடம் சினமும் இணைந்தே இருக்கிறது. அதை மட்டும் போக்கிவிட்டால் அனைத்து செல்வமும் நம்முடனேயே இருக்கும். அந்த கோபத்தை அகற்றும் இறைவனை எப்போதும் நாடுவோம்.

Monday, February 26, 2018

மன அழுத்தம் தவிர்ப்போம்! தேர்வில் ஜெயிப்போம்!!


மன அழுத்தம் தவிர்ப்போம்! தேர்வில் ஜெயிப்போம்!! தேர்வுகள் நம்மை தேர்ச்சி அடைய வைப்பதாக இருக்க வேண்டும். வாழ்வில் உயர்ச்சியைத் தரும் படிக்கல்லாக அமைய வேண்டும். மாறாக, தேம்பி நிற்கச் செய்யும், கவலையில் தோய்க்கும் ஒரு விரோதியாக தேர்வுகள் இருந்துவிடக்கூடாது. தேர்வுகள் நம்மை ஆட்டி வைக்காமல் இருக்க நாம் அதைக் கண்டு பயப்படாமல் இருப்பதே முதல் வழி. தேர்வை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற பயமே, மன அழுத்தமாக மாறி, பதற்றத்தைத் தந்து தோல்விக்கு வைத்துவிடுகிறது. தற்கொலைக்குள் தள்ளும் தைரியமற்ற தன்மையையும் வளர்த்துவிடு கிறது. தேர்வு தரும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு தேர்வில் ஜெயிக்க வைக்கும் மந்திரமொழிகள் சில... * தேர்வு என்பது உங்கள் கற்றல் திறனை சோதிக்கும் ஒரு பரீட்சை அவ்வளவுதான். தேர்வுடன் வாழ்வில் எதுவும் முடிந்துவிடுவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எளிதில் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் எவ்வளவோ எளிய முறைகளை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். எளிமையான வினாக்கள், முக்கிய வினாக்கள், மனப்பாடப் பகுதிகள், அழகுபடுத்தும் உபாயம், படம் வரைதல் என பல்வேறு யுத்திகள் மூலம் எளிதில் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையை மனதில் விதையுங்கள். * தேர்வையும், எதிர்காலத்தையும் ஒப்பிட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். எதிர்காலம் எந்த வினாடியும் உங்கள் கைகளில்தான் இருக்கும். அதை எப்போது நினைத்தாலும் உங்கள் விருப்பப்படி மாற்றி அமைக்க முடியும், நீங்கள் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதிருந்தால் போதும். எனவே தேர்வு பயத்தை துரத்திவிட்டு நம்பிக்கையுடன் தேர்வை எழுதுங்கள். முந்தைய காலம்போல இல்லாமல், இப்போதெல்லாம் மறு தேர்வுகள் உடனே நடத்தப்படுகின்றன. அப்படியிருக்கும் போது எதற்கு அச்சப்பட வேண்டும்? ஏன் தவறான முடிவை எடுக்க வேண்டும். துணிவுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள், வெற்றி உங்களுக்கே. * விளையாட்டும், இசையும் மன அழுத்தத்தை மாயமாக்கும் மந்திர வழிகள். உங்களுக்குப் பிடித்த இசையைக் கேளுங்கள். நண்பர்களுடன் சிறிது நேரம் விளையாடி வாருங்கள். குடும்பத்தினருடன் கூடி இருந்து அரட்டையடியுங்கள். ஒரே அறையில் புத்தகங்களுடன் அடைந்து கிடக்க வேண்டாம். * நண்பர்களை அழைத்து செல்போனில் புலம்பிக் கொண்டிருப்பது, 'நான் பாஸாகி விடுவேனா?' என்று நம்பிக்கையற்று இருப்பது, 'பாஸாகாவிட்டால் அவ்வளவுதான்' என்று எதிர்மறையாக நினைத்துக் கொண்டிருப்பது போன்றவற்றை கைவிடுங்கள். தியானம், யோகா செய்து மனதை அமைதிப்படுத்துங்கள். "நான் ஜெயிப்பேன்" என்ற நம்பிக்கையை மனதில் விதையுங்கள். * தனிமையை தவிருங்கள். நண்பர்கள், குடும்பத்தினருடன் உரையாடுங்கள். இந்தத் தேர்வுதான் என் எதிர் காலத்தை தீர்மானிக்கும் என்ற எண்ணத்தை கைவிடுங் கள். "நான் தனிப்பட்டவன் அல்ல, எனக்காக குடும்பம் இருக்கிறது, உதவிக்கு நண்பர்கள் இருக்கிறார்கள், உறவுகள் இருக்கிறது. எனது சுக துக்கத்தில் அவர்கள் பங்கெடுப்பார்கள். அவர்களுக்காக நான் இருக்கிறேன்" என்ற சமூக மதிப்பை மனதில் வளர விடுங்கள். இது எதிர்மறை எண்ணங்களை விரட்டியடிக்கும். * 'எல்லாவற்றுக்கும் தீர்வு ஒன்று இருக்கிறது, மாற்று வழிகள் பல உண்டு' என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். தீர்வு இல்லாத பிரச்சினை என்று எதுவுமில்லை. தேர்வில் ஜெயித்து, நான் அடைய வேண்டிய லட்சியம் அது ஒன்று மட்டும்தான் என்பது உங்கள் நம்பிக்கையாக இருக்கட்டும். ஆனால் அது கைநழுவும் போது அதைவிட சிறந்த உயரத்தை எட்டும் நம்பிக்கையும் உங்கள் மனதில் இருக்கட்டும். மாறிக் கொண்டே இருக்கும் வாழ்க்கையில் மாற்று வாய்ப்புகள் பற்றியும் சிந்திப்பதே மகத்தான வெற்றிக்கு வழிவகுக்கும். * எல்லாவற்றுக்கும் அடிப்படையாக உங்கள் மீது நீங்களே நம்பிக்கை கொண்டிருங்கள். உங்களை குறைத்து மதிப்பிடாமல் இருந்தாலே எதைப் பற்றிய அச்சமும் மனதில் எழுவதில்லை. உங்கள் பலவீனங்களை அறியுங்கள், ஆனால் அதில் மூழ்கிப்போகாமல் கடந்து வர முயற்சி செய்யுங்கள். அப்போது நீங்கள் வெற்றி சிகரத்தில் ஏறிக் கொண்டிருப்பீர்கள். பயம் அகலட்டும், வெற்றிகள் குவியட்டும். வாழ்த்துக்கள்!

அறம் வளர்ந்த மண்ணில் மரம் வளர்த்த சோழ மன்னன்


அறம் வளர்ந்த மண்ணில் மரம் வளர்த்த சோழ மன்னன் | ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் சோழர்கள் வரலாறு பேசப்படுவதற்குக் காரணம் அவர்கள் வானளாவ எழுப்பியக் கலைக்கோவில்கள் மட்டுமல்ல. கட்டிடக் கலையின் உச்சம் தொட்ட சோழர்கள், தாங்கள் கட்டிய கோவில்களில் பூஜை முறைகளுக்கும், விழாக்களுக்கும், இசை, நாட்டிய கலை வளர்க்கவும், தேவாரம் இசைப்பதற்கும் ஏராளமான நிலங்களை வழங்கிய நிர்வாக முறையும் கூட ஒரு காரணமாகும். ஆடுகள், மாடுகள், காசுகள், பொன் நகைகள் வழங்கியது போன்ற தகவல்களை ஆவணமாகப் பதிவு செய்துள்ளார்கள். இவைதான் பெரும்பாலான கல்வெட்டுகள் தரும் தகவல்கள். ஆனால் இவற்றிற்கு மாறாக, மரங்களை நட்டு கோவிலின் நிதி ஆதாரத்தையும் பெருக்கிய தகவலை தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டுத் தருகிறது. சோழர்கால சிற்பக் கலையின் உச்சம் தொட்ட இக்கோவில் யுனெஸ்கோ நினைவுச் சின்னமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. மாமன்னன் ராஜராஜ சோழனை அடுத்து வந்த எட்டாவது மன்னன் இரண்டாம் ராஜராஜ சோழன். இவனது பேர் சொல்லும் பேரன் மூன்றாம் ராஜராஜ சோழன் (கி.பி.1216-கி.பி.1260) இவனது இருபதாவது ஆட்சியாண்டில் நடந்த மிகக் கொடுமையான நிகழ்வால், தாராசுரம் கோவில் வளாகத்தில் இருந்த தென்னை, மா, புளி, பலா உள்பட ஏராளமான மரங்கள் விழுந்துவிட்டன. இந்த பேரழிவு காவிரி வெள்ளத்தாலா, சூறாவளி, புயல், மழையினாலா ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் கல்வெட்டில் உள்ள 'துராக்கிரமான நாளிலே' என்ற சொற்றொடரால் அந்நியர் படையெடுப்பால் கூட நிகழ்ந்து இருக்க வாய்ப்பு உண்டு. மேலும் இதே கல்வெட்டின் வாசகங்களின்படி பார்த்தால் தாராசுரம் கோவில், இன்றுள்ளதை விட மிகப் பெரிய பரந்த நிலப்பரப்பின் நடுவே, மரங்கள் அடர்ந்த தோப்புகளின் நடுவே இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. தாராசுரம் கோவில் வளாகத்தின் கிழக்கு புறத்திலும், மேற்கு புறத்திலும் ராஜராஜன் பெயரால் அமைந்த மிகப்பெரிய வளாகத்திலும் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்து விடுகின்றன. அவ்வாறு சாய்ந்த மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டன. பெருந்தோப்புகளை இழந்து பொட்டல் காடாகிப் போனது. கோவில் பூஜை முறைகள், தேர் திருவிழாக்கள் போன்ற நடைமுறைகளுக்கான நிதியாதாரமும் நின்று போனது. தன் பாட்டனார் கட்டிக் காத்தக் கோவிலுக்கும், வைத்துக் காத்த மரங்களுக்கும் ஏற்பட்ட பெரும் அழிவைக் கண்டு மூன்றாம் ராஜராஜ சோழனுக்குப் பெருங்கவலை. பேரழிவு நடைபெற்று ஓராண்டாகியும் மாற்று ஏற்பாடு எதுவும் செய்யமுடியாமல் உள்ளதே என்ன செய்யலாம்? இம்மன்னனின் மதியமைச்சர்களில் ஒருவர் பொத்தப்பிச் சோழர். அவர் மன்னனின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டார். மன்னனின் மனக்கவலை தீர ஒரு புதுமையான திட்டத்தை முன்வைக்கிறார். அது என்ன இதுவரை இல்லாத புதுமையான திட்டம்? கோவில்கள் நிதி ஆதாரத்திற்கு இதுவரை நிலம், ஆடு, மாடு, காசுகள் கொடுப்பதுதான் நடைமுறை. இதுதானே இதுநாள் வரை எல்லா கோவில்களிலும், ஜைன, பவுத்த மடாலயங்களிலும் பின்பற்றப்படுகின்றது? இவையெல்லாம் அமைச்சரின் திட்டத்தை கேட்ட மன்னனின் மனதில் ஓடிய கேள்விகள். பிறகு, சரியான யோசனையாகத்தான் இருக்கிறது. நமக்கு கொழுக்கட்டை வேண்டும். அவ்வளவுதான்! என எண்ணி இத்திட்டத்தை நடைமுறைப்படுத்திட மன்னன் ஆணை இடுகிறான். அந்த ஆணை தாராசுரம் கோவில் நுழைவு வாயில் வலப்புறம் அனைவரும் அறியும் வண்ணம் கல்வெட்டாகப் பதிவு செய்யப்பட்டது. அந்த கல்வெட்டு தரும் தகவல்படி, தாராசுரம் (ராஜராஜபுரம்) மக்களில் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு தென்னை, மா, புளி, பலா போன்ற பலன் தரும் மரக்கன்றுகளும், பிற மரக்கன்றுகளும் தரப்படுகின்றன. இவைகளைத் தேவைப்படுவோர் விலை கொடுத்துதான் வாங்கவேண்டும். (இனாமாகக் கொடுத்தால் அதற்கு மரியாதையே கிடையாதே!) இக்கன்றுகளை கோவில் வளாகத்தில் உள்ள இடங்களில் இவர்கள் நட்டு, நீருற்றி வளர்த்துப் பராமரிக்க வேண்டும். இதுவும் இறைவனுக்காற்றும் தொண்டுதானே! மன்னன் ஆணைக்கு மறுப்பு உண்டா? மரக் கன்றுகள் வாங்கினார்கள், நட்டார்கள், வளர்த்தார்கள், மரங்கள் ஆளாகிவிட்டன. பலன் தரவும் தொடங்கியாச்சு. இப்ப என்ன பண்ணனும்? காய்ப்பு எல்லாவற்றையும் கோவிலுக்கே கொடுக்கனுமா? அதான் இல்லை. காய்ப்பிற்கு வந்த ஆண்டு முதல் ஒரு தென்னை மரத்தின் காய்ப்பில் இருபத்தி ஐந்து தேங்காய்கள் கோவிலுக்கு கொடுத்தால் போதும். மாதா மாதமா? இல்லை. ஆண்டொன்றுக்குத் தான்! மிச்சம் கன்று நட்டு வளர்த்தவன் அனுபவித்துக் கொள்ளவேண்டியது தான். பலா மரத்தின் காய்ப்பில் ஆறு காய்கள் மட்டும் கோவிலுக்கு. ஆறில் இரண்டு பழமாகவும், மீதி நான்கை விற்பனை செய்து கோவில் கருவூலத்தில் செலுத்திவிட வேண்டும். இந்த கணக்கில் மா, புளி மகசூல் பற்றிய விவரம் தரப்படவில்லை அல்லது கல்வெட்டுத் தகவல்கள் சிதைந்து போயிருக்க வேண்டும். மா, புளி காய்ப்பு ஒரு ஆண்டு போல் மறு ஆண்டு இருக்காது. அதனால் காய்ப்பிற்குத் தகுந்தபடி ஒரு பங்கு கோவிலுக்கு தரும் ஏற்பாடு இருந்திருக்கலாம். எவ்வளவு அருமையான திட்டம் பாருங்கள். கோவிலுக்கும் வருமானம் குடிமக்களுக்கும் வருமானம், சுற்று சூழலுக்கும் பாதுகாப்பு, அரண்மனையார் தலையீடும் கிடையாது. இப்படி மரங்கள் வளர்த்து கோவில் நிதியாதாரத்தை சீர் செய்த தகவல் வேறு எந்தக் கோவிலிலும் கல்வெட்டு ஆவணமாக இருப்பதாகத் தெரியவில்லை. சோழர்கள் புகழ் இன்றும் நிலைத்து நிற்க கற்கோவில்கள் மட்டுமல்ல கல்லில் எழுதப்பட்ட இதுபோன்ற மிகச் சிறந்த பொருளாதார நிபுணத்துவமும் தான் காரணம்.- அய்யம்பேட்டை என்.செல்வராஜ், தலைவர், சோழர் வரலாற்று ஆய்வு சங்கம்

Sunday, February 25, 2018

உலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.


உலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கடா தேசிய பூங்கா, சீனாவின் சீனப் பெருஞ்சுவர், பழைய கற்காலத்தை சார்ந்த டாய் மலை, மனித வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை சார்ந்த ஆனை குகை, வியக்கவைக்கும் எகிப்தின் பிரமிடுகள், இத்தாலியின் தொன்மையான, அழகிய ரோம் நகரம், அங்கு புகழ்பெற்ற பிளாரென்சின் வரலாற்று மையம், பைசா நகரத்து சாய்ந்த கோபுரம், நாபொலி துறைமுகம், ரஷியாவின் செஞ்சதுக்கம், இங்கிலாந்தில் உள்ள லண்டன் டவர் என்று எத்தனையோ அதிசயங்களை, ஆக்கங்களை, உன்னதங்களை இத்திட்டத்தில் அங்கீகரித்து இணைத்து உலகப் பொதுச் சொத்தாகப் போற்றப்படுகின்றன. இந்தியாவில், பாபர், உமாயூன், அக்பர், ஷாஜகான், ஜகாங்கீர், அவுரங்கசீப் போன்ற பேரரசர்கள் வாழ்ந்த ஆக்ராகோட்டை, இந்திய குடைவரை கட்டிடக் கலையின் முன்னோடியாக திகழும் எல்லோரா குகைகள், கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சார்ந்த அஜந்தா குகைகள், மத்தியப் பிரதேசம் சாஞ்சியில் கி.மு. 3-ம் நூற்றாண்டில் அசோகரால் உருவாக்கப் பெற்ற பெரியதூபி, பவுத்த நினைவுச் சின்னங்கள், இந்து-முஸ்லிம் கட்டிடக்கலைக்கு எடுத்துக் காட்டாகத் திகழும் குஜராத் சம்பனேர் பாவாகேத் தொல்லியல் பூங்கா. மும்பையின் பரபரப்பான ரெயில் நிலையமான சத்ரபதி சிவாஜி முனையம், சாளுக்கியர் கால எலிபண்டா குகைகள், அழியும் நிலையில் உள்ள சைபீரியக் கொக்குகள் உள்பட 300-க்கும் மேற்பட்ட அரியவகை பறவைகளின் சரணாலயமாகத் திகழும் பரத்பூர் தேசியப் பூங்கா, இந்திய அதிசயங்கள் என்று குறிப்பிடப்படும் கஜுராஹோ, இந்தியாவின் முதல் முஸ்லிம் அரசனான குத்புதின்ஐபக்கால் 1193-ல் கட்டப்பட்ட உலகிலேயே உயர்ந்த (237.8 அடி) தூபியான குதுப்பினார், உலக மக்கள் காதல் சின்னமாகப் போற்றும் தாஜ்மஹால். மத்தியப் பிரதேசத்தில் உள்ள பீம்பேட்கா பாறை. இது வரலாற்றுக்கு முந்தைய மனித தடயங்களை அறிய உதவியது. இங்கு 30 ஆயிரம் ஆண்டு தொன்மைவாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒடிசா மாநிலத்தில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோவில். இது கருப்பு கிரானைட் கற்களாலும், சிவப்புப் பாறைகளாலும் கட்டப்பட்டது. முகலாயப் பேரரசர் அக்பரால் கி.பி. 1570-ல் உருவாக்கப்பட்டு, அப்பேரரசின் தலைநகராகத் திகழ்ந்த பத்தேப்பூர் சிக்ரி, துங்கப்பத்திரை நதிக்கரையில் விஜயநகரப் பேரரசின் தலைநகரமான ஹம்மி, இந்தப் பேரரசிடம் சுமார் 2 மில்லியன் வீரர்களை கொண்ட மிகப் பெரிய படை இருந்துள்ளது. 600 ஆண்டுகளுக்கு முன்பு அகமதுஷா என்பவரால் உருவாக்கப்பட்ட அகமதாபாத் நகரம். இந்த நகரில் 26 வகையான பழமையான கலை நயமிக்க கட்டிடங்கள், நூற்றுக்கணக்கான கலை அழகு கொண்ட கோட்டை நகரம் எனப் புகழப்படுகிறது. இந்த நகரங்கள் பாரீஸ், கெய்ரோ, எடின்பர் போன்ற உலகப் பாரம்பரிய நகரங்களின் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதே போன்று இந்தியாவில் உள்ள நான்கு மலை ரெயில் பாதைகளும் இந்தப் பாரம்பரியச் சிறப்பிடத்தில் இடம் பெற்றுள்ளன. வட இந்தியாவில் உள்ள டார்ஜிலிங், கால்கா, சிம்லா இவை மூன்றும் இமயமலைப் பகுதியில் உள்ளன. இவற்றோடு தமிழ்நாட்டில் உள்ள உதகைமேட்டுப்பாளையம் ஒரே பற்சட்ட இருப்புபாதையும் இணைகின்றது. முதலாம் குப்தப் பேரரசர் குமாரகுப்தன் ஆட்சிக் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட உலகின் முதல் பல்கலைக்கழகம் என்ற சிறப்பைப் பெற்ற நாளந்தா பல்கலைக்கழகமும் இந்த சிறப்பில் சேர்ந்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நான்கு களங்களை மட்டும் யுனெஸ்கோ தேர்வு செய்துள்ளது. அந்த வகையில் பல்லவர்களால் கட்டப்பட்ட மாமல்லபுரத்தின் மரபுக் கோவில்களும், சோழர்களால் கட்டப்பட்ட அழியாத சோழர் பெருங்கோவில்களும், நீலகிரி மலைப்பாதையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் உலகப் பாரம்பரியக் களங்களில் இணைக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரம் மரபுக் கோவில்கள் அனைத்துமே பல்லவர்களால் உருவாக்கப்பட்டவை. இவை கோரமண்டல் கரையில் 7-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை. அழியாச் சோழர் பெருங்கோவில்கள், இது தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோவிலை உள்ளடக்கிய தொகுப்பாகும். இதில் பிரகதீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டு பழமைமிக்கது. கங்கை கொண்ட சோழபுரம் ராஜேந்திர சோழன் 1,019-ல் கங்கை வரைப் படையெடுத்து சென்று வெற்றி கொண்டதின் நினைவாக உருவாக்கப்பட்டது. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோவிலை சிற்பிகளின் கனவு என உலகமே கொண்டாடுகிறது. திராவிட பாணிக் கட்டிடக் கலையில் உருவாக்கப்பட்ட இக்கோவில் அழகியநுட்பம் கொண்ட சிற்பங்கள், தூண்கள், கலை வேலைப்பாடுகளால் ஆனது. இசை ஒலி எழுப்பும் படிகள் இங்கு புகழ்பெற்றவை. உலகில் பல்லுயிர் வளமிக்க எட்டு இடங்களில் மேற்குத்தொடர்ச்சி மலையும் ஒன்றாகும். இங்கு 5 ஆயிரம் வகைப்பூக்கள், 139 வகைத் தாவரங்கள், 508 பறவை வகைகள், 176 இருவாழ் உயிரினங்கள் உள்ளன. இத்துடன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் தொன்மைச் சிறப்பு, சிறந்த கட்டுமான அமைப்பு, பழமை மாறாத புனரமைப்பு இவற்றிற்காக யுனெஸ்கோவின் சிறப்பு விருதினைப் பெற்றுள்ளது. இந்த உலகப் பாரம்பரியச் சிறப்புமிக்க களங்களைப் பற்றிய புரிதலும், உரிய விழிப்புணர்வும் தற்போதைய முதல் தேவை. குறிப்பாக மாணாக்கர்களுக்கும், இளம் தலைமுறையினருக்கும் இது குறித்த புரிதலையும், பெருமிதத்தினையும் ஏற்படுத்த வேண்டும். இரண்டாவதாக இவற்றை முறையாகப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய களம் என்ற சிறப்பை இவைகள் இழக்க நேரிடும். உலகச் சிறப்பு என்ற உன்னதத்தினை நாம் இழந்துவிடாமல் காப்பது நம் அனைவரின் உரிமை. அதே சமயம் அடுத்த தலைமுறைக்கு இந்த மரபுரிமையை மீளத்தருவது நம் கடமை.

மாணவர்கள் வெற்றிப்பயணத்தில் பெற்றோரின் பங்கு

 
மாணவர்கள் வெற்றிப்பயணத்தில் பெற்றோரின் பங்கு |தமிழகத்தில் அடுத்த மாதம் (மார்ச்) எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வுகள் நடக்க இருக்கின்றன. இந்த தேர்வுகளை எதிர்கொள்ள மாணவ, மாணவிகள் ஆயத்தமாகிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களை ஆசிரியர்களும், பெற்றோரும் தயார்படுத்தி வருகிறார்கள். இதே போல பள்ளிக்கல்வித் துறையும், தேர்வுத்துறையும் இணைந்து தேர்வு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக செய்து வருகின்றன. மார்ச், ஏப்ரல் மாதம் என்றாலே மாணவ, மாணவிகளுக்கு ஒருவித தேர்வு பயம், தேர்வு காய்ச்சல் வருவதுண்டு. இந்த தேர்வு பயம், காய்ச்சல், அச்சம், மனக்குழப்பம், மனஉளைச்சலை போக்க மனநல வல்லுனர்கள், கல்வி ஆலோசகர்கள் அடங்கிய குழு மாவட்டந்தோறும் பள்ளிகளுக்கு சென்று பயத்தை போக்க தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மாணவர்கள் வெற்றிகரமாக தேர்வை எழுதி முடிப்பதில், பெற்றோரின் பங்கு முக்கியமானது. பெற்றோர் தங்களது வீட்டில் படித்துவரும் பிள்ளைகளுக்கு போதிய வசதிகள் செய்து தரவேண்டும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தொலைக்காட்சிகள் பார்ப்பதை யும், விருந்தினர் வந்துபோவதையும் தவிர்க்க வேண்டும். வெளியூர் பயணங்களுக்கு திட்டமிடக் கூடாது. காபி, டீ, உணவு தயாரிப்பதை குறித்த நேரத்தில் செய்து, தேர்வு எழுதப்போகும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். பிள்ளைகளை தேர்வு மையத்துக்கும், தேர்வு முடிந்ததும் வீட்டுக்கும் அழைத்து வர வேண்டும். இதே போல ஆசிரியர்கள் ஏறக்குறைய பத்து மாதங்களாக மாணவ, மாணவிகளுக்கு பாடம் சொல்லி கொடுத்திருப்பீர்கள். எந்த கேள்விக்கு எப்படி பதில் எழுத வேண்டும்? விரிவாக எழுத வேண்டுமா? அல்லது சுருக்கமாக எழுதினால் போதுமா? என்பது போன்ற விவரங்களை மாணவர்களுக்கு சொல்லி கொடுத்து இருப்பீர்கள். 100 சதவீத தேர்ச்சிக்கு பாடுபட வேண்டும். மிகவும் பின் தங்கியவர்கள் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை பெற வழிகாட்ட வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களை உத்வேகப்படுத்த வேண்டும். இறுதி நேரத்தில் தேர்வுக்கு எப்படி தயார் செய்ய வேண்டும்? தேர்வு அறையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பது பற்றி மாணவர்களுக்கு கனிவோடு சொல்லிக்கொடுக்க வேண்டும். மாணவர்களும் தங்களின் பத்து மாத உழைப்புக்கு பலன் கிடைக்க தீவிர முயற்சிகள் எடுக்க வேண்டும். தேர்வு சமயங்களில் மாணவர்கள் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். ஒத்துக்கொள்ளாத உணவு வகைகளை சாப்பிடக்கூடாது. நோய், நொடி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேர்வுக்கு முந்தையை நாள் புதிதாக எதுவும் படிக்காமல் தாங்கள் படித்ததை மீண்டும் திருப்பி பார்க்க வேண்டும். தேர்வு மையத்துக்கு 15 நிமிடம் முன்னதாகவே சென்றுவிட வேண்டும். தேர்வு அறையில் கண்காணிப்பாளர் கூறும் அறிவுரைபடி நடந்துகொள்ள வேண்டும். எவ்வித ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபடாமல், தாங்கள் படித்ததை வைத்து திறமையாக தேர்வை எதிர்கொள்ள வேண்டும். கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலை மட்டும் எழுத வேண்டும். விடுபடாமல் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். அப்போதுதான் மதிப்பெண் குறையாமல் பார்த்துக்கொள்ள முடியும். தேவை இல்லாத வண்ண மை பேனாக்களை பயன்படுத்தக் கூடாது. குறித்த நேரத்தில் தேர்வு எழுத தொடங்கி, குறித்த நேரத்தில் தேர்வை எழுதி முடித்துவிட வேண்டும். தேர்வு எழுதி முடித்தபிறகு தாங்கள் எழுதிய விடை சரியானதா? தவறானதா? என்ற ஆராய்ச்சிக்குள் செல்லவே கூடாது. மாறாக, அடுத்த தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்வதே சாலச்சிறந்தது. இதே போல தேர்வறை கண்காணிப்பாளர்கள் மாணவர்களுக்கு தேவையில்லாத அச்சத்தை, இடையூறை உண்டு பண்ணக்கூடாது. சந்தேகப்படும் மாணவர்களை மட்டும் தனியாக அழைத்து பேச வேண்டும். மாணவர்கள் அமைதியாக தேர்வு எழுதி முடிக்க வேண்டும். இது தேர்வறை கண்காணிப்பாளர்கள் கையில் தான் உள்ளது. எனவே, அரசு பொதுத்தேர்வு என்பது அரசு அதிகாரிகள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களின் கூட்டு முயற்சியில், பொறுப்பில் தான் அமைந்துள்ளது. தேர்வு சிறப்பாக அமைந்திட அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். மாணவர்கள் புத்துணர்ச்சியோடு பொதுத்தேர்வை எதிர்கொள்ளட்டும். கல்வியாளர் ஆர்.லட்சுமிநாராயணன் | 

Monday, February 19, 2018

தேர்வு சமயத்தில் கைகொடுக்கும் ‘நேர நிர்வாகம்’


தேர்வு சமயத்தில் கைகொடுக்கும் 'நேர நிர்வாகம்' | வெற்றிக்கான முதல் படி தோல்வியல்ல, 'நேர நிர்வாகம்'தான்! எந்தப் பணிக்கும் திட்டமிட்டு அதற்கான நேரத்தை ஒதுக்கி உழைப்பதுதான் வெற்றியை எளிதாக்கும். கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்து திட்டமிட்டு செயல்பட்டு வருபவர்களுக்கு இப்போது எதுவும் சிரமமாக தெரிவதில்லை. தேர்வு நேரத்தில் திட்டமிடுதலும், நேர நிர்வாகமும் இன்னும் சிறப்பாக இருந்தால் வெற்றி எளிதில் வசப்படும். தேர்வு சமயத்திற்கான நேர நிர்வாக டிப்ஸ் இதோ...

* பள்ளி நேரம் தவிர்த்து, மாலையில் சுமார் 6 மணி நேரமும், காலையில் சுமார் 3 மணி நேரமும் மாணவர் படிப்பதற்கான நேரமாக இருக்கிறது. இந்த பொன்னான நேரத்தை நீங்கள் எப்படி திட்டமிட்டு பயன்படுத்தி இருக்கிறீர்களோ? அதுவே உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கப் போகிறது. புதிதாக இனி எந்தப் பாடத்தையும் மனப்பாடம் செய்யாமல் ஏற்கனவே படித்த பாடங்களை மீண்டும் நினைவுக்கு கொண்டுவரவும், எழுதி பயிற்சி பெறவும் பயன்படுத்தி, இந்த நேர நிர்வாக யுத்தியை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

* மாலை பள்ளி நேரம் முடிந்த பிறகு தூங்கச் செல்லும் வரையில் கிடைக்கும் 6 மணி நேரத்தில் சுமார் 4 மணி நேரத்திற்கு குறையாமல் படிப்பதற்குப் பயன்படுத்திய மாணவர்கள் சிறப்பாக தேர்வை எதிர்கொள்ள முடியும். தேர்வு நெருங்கிவிட்டதால் இனி சுமார் 5 மணி நேரத்தையாவது படிக்கப் பயன்படுத்த வேண்டும். இதற்கு முன்பு ஒரு பாடத்திற்கு சுமார் 40 நிமிட நேரங்களை ஒதுக்கிப் படிக்க முடிந்திருக்கும். இந்த நேரத்தை நீங்கள் சரியாக ஒதுக்கிப் படித்திருந்தால், தேர்வு சமயமான இந்த நேரத்தில், ஒவ்வொரு பாடத்திற்கும் நீங்கள் 20 நிமிட நேரத்தை ஒதுக்கி திருப்புதல் நடத்தினாலே போதுமானது. மீதி 20 நிமிட நேரத்தை எழுதிப் பார்த்தல், படம் வரைதல் போன்ற பயிற்சிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

* ஒவ்வொரு 40 நிமிட பயிற்சிக்குப் பின்னர் 10 நிமிடங்கள் ஓய்வாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது அரட்டையடிக்கலாம், காபி குடிக்கலாம், எழுந்து உலாவிவிட்டு வந்து அமர்ந்து கொள்ளலாம்.

* நன்கு படித்த பாடங்களுக்கு சில நிமிடங்கள் ஒதுக்கினாலே போதுமானது. அடிக்குறிப்புகள் மற்றும் முக்கிய வார்த்தைகளை நினைவில் வைத்திருந்தால் உடனடியாக பாடங்களை புரிந்து கொண்டு திருப்புதல் செய்துவிடலாம். இதற்கு அதிகபட்சம் 2 நிமிடங்கள் போதுமானது.

* இனி, குறைந்த காலமே இருப்பதால் விளையாட்டிற்கு ஓய்வு கொடுக்கலாம். இன்டர்நெட், சமூக வலைத்தளங்களில் உலவுவதையும் தவிர்த்துவிடலாம். முடிந்தால் செல்போனை அணைத்து வைத்து விடுங்கள். டி.வி. பார்க்கும் நேரத்தையும் குறைத்துக் கொள்ளலாம். குளித்தல், தயாராதல் உள்ளிட்ட அன்றாட பணிகளையும் தாமதமின்றி முடித்துப் பழகுங்கள்.

* பயண நேரத்தையும் படிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பள்ளி வாகனங்கள், வீதி வலம் வந்து பள்ளியை அடையும் நேரத்தில் பல பாடங்களை படித்து முடித்துவிடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். துண்டு காகிதத்தில் குறிப்பெடுத்துக் கொண்டால் எங்கு சென்றாலும் நினைவுபடுத்திப் படிக்கலாம்.

* செல்போனை தேர்வுக் காலம் வரை பொழுதுபோக்க பயன்படுத்தாமல், நேர நிர்வாகத்திற்கான சிறந்த கருவியாக பயன்படுத்துங்கள். அதில் உள்ள காலண்டர் வசதியை மணிக் கணக்காக பிரித்து பாடங்களை அட்டவணையிடுங்கள்.

* நேரத்துளிகளை அளவிடும் ரன்னிங் கடிகாரம், ஸ்நூஸ் வசதியைப் பயன்படுத்தி ஒவ்வொரு மணித்துணிகளையும் வீணாக்காமல் பயன்படுத்துங்கள்.

* இருவராக அல்லது குழுவாக இணைந்து கொண்டு பாடங்களை போட்டியிட்டு படிப்பதையும், வாய்விட்டுச் சொல்லி புரிந்து கொள்வதுமாக படித்தால், வேகமாக படிக்க முடியும். மறந்து போன விஷயங்களை மற்றவர்கள் நினைவூட்டுவது, நாம் புத்தகத்தில் தேடிக் கொண்டிருக்கும் நேரத்தையும் மிச்சப்படுத்திக் கொடுக்கும். தேர்வு அறையில் எளிதாக நினைவுக்கு வந்து கைகொடுக்கும்.

* ஒரு தேர்வுக்கும், மறு தேர்வுக்கும் இடைப்பட்ட காலத்தை திட்டமிடுங்கள். குறைந்த இடைவெளி கொண்ட பாடங்களுக்கு இப்போதிருந்தே கூடுதல் நேரத்தை ஒதுக்கி படியுங்கள்.

தேர்வு அறையில்...

தேர்வு அறையில் கடைப்பிடிக்க வேண்டிய நேர நிர்வாக முறைகள்...

* நன்கு விடை தெரிந்த கேள்விகளை தேர்வு செய்து முதலில் விடையளிக்கத் தொடங்குங்கள். சிறு வினாவுக்கு, சில நிமிடங்களிலும், குறுவினாவுக்கு குறுகிய காலத்திலும் பதிலளிக்கப் பழகுங்கள். விரிவான விடையளிக்க வேண்டிய வினாக்களுக்கு போதிய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். மாதிரி வினாத்தாள்களைக் கொண்டு இதற்கான நேர மதிப்பீட்டை செய்து பாருங்கள்.

* ஒரு மதிப்பெண் வினாக்கள், இலக்கண வினாக்கள், இடைவெளியை நிரப்புதல், படித்துப் பார்த்து விடை கண்டுபிடித்தல், கிராப் வரைதல் போன்றவற்றில் நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என்பதால், இவற்றை முதலில் தேர்வு செய்து விடையளித்துவிடலாம். இதில் சேமிக்கும் நேரம் யோசித்து விடையளிக்க வேண்டிய பதில்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

* உதாரணமாக கணிதப் பாடத்தை எடுத்துக் கொண்டால் 3 மணி நேரம் (180 நிமிடங்களில்) 30 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. இவற்றில் முதல் இரு பிரிவுகளில் இடம் பெறும் எளிமையான வினாக்களுக்கு தலா 2 நிமிடங்களில் பதிலளிக்க முடியும். இவற்றுக்கு தலா 20 நிமிடம் வீதம் 40 நிமிடத்தை பயன்படுத்தலாம். அடுத்த இரு பிரிவுக்கும் கொஞ்சம் விரிவாகவும், மிக விரிவாகவும் பதிலளிக்க வேண்டியிருக்கும். ஆனால் விரிவான வினாக்களுக்கு குறைந்த எண்ணிக்கையில், நிறைய பதிலளிக்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில் 5 மதிப்பெண் வினாக்களுக்கு அதிக எண்ணிக்கையில் பதிலளிக்க வேண்டியிருப்பதால் விரிவான வினாக்களுக்கு ஆகும் நேரம் இதற்கும் தேவைப்படும். எனவே இவற்றுக்கும் சராசரியாக தலா 50 நிமிடங்களை ஒதுக்கலாம். மீதியுள்ள நேரத்தை திருப்புதலுக் கும், விடையை சரி பார்ப்பதற்கும், நேரத்தை குடிக்கும் வினாக்களுக்கும் செலவழிக்கலாம்.

* இவ்விதமாக ஒவ்வொரு தேர்வுக்கும் வினாக்களின் எண்ணிக்கையையும், நேரத்தையும் கணக்கிட்டு, ஒவ்வொரு வினாவுக்கும் எவ்வளவு நேரத்தில் பதிலளிக்க வேண்டும் என்பதை தீர்மானியுங்கள். அதற்கேற்ப பதிலளித்து பயிற்சி பெறுங்கள். இப்படி திட்டமிட்டு செயல்பட்டால் தேர்வறையில் நேரம் போதவில்லை என்ற குறையை களைந்து வெற்றி பெறலாம். மதிப்பெண்களை குவிக்கலாம்!

ஆசிரியர்கள் வளர்க்க வேண்டிய திறன்கள்!மாணவர்கள் உலகம் மாறிவிட்டது. புத்திசாலித்தனம் மிகுந்த குழந்தைகளிடம் கற்றல் திறன் அதிகமாக இருந்தாலும் மற்ற பண்புநலன்களில் வினோத மாற்றங்கள் இருக்கவே செய்கிறது. கால மாற்றத்தாலும், பாடச்சுமையாலும், வளர்க்கப்படும் சூழலாலும் அவர்கள் எதிர்கொண்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களை சமாளிக்க ஆசிரியர்களுக்கும் தனித்திறன் அவசியமானதாக உள்ளது. மாணவர்களை நல்வழிப்படுத்தும் லேசான கண்டிப்பு, கட்டுப்பாடு கூட அவர்களை காயப்படுத்துவதும், உணர்ச்சிவசப்பட்டு விபரீத முடிவு எடுக்கத் தூண்டுவதாக இருப்பதையும் சமீப காலமாக பார்த்து வருகிறோம். இன்றைய சூழலில் மாணவர்களை கையாள ஆசிரியர் பெற்றிருக்க வேண்டிய அவசியமான திறன்கள் பற்றி பார்ப்போம்...

* மாணவர்கள் பலவிதமாக இருப்பார்கள். அவர்களின் திறன்களிலும், லட்சியத்திலும், தேவையிலும் மாற்றங்கள் இருக்கும். பாடக்குறிப்புகளைத் தவிர அனைத்தையும் பொதுமைப்படுத்தி கூறுவது இவர்களுக்கு ஏற்புடையதாக இருக்காது. ஒருவருக்கு கணிதப் பாடம் புரிந்து கொள்வது மிகச் சிரமமாக இருக்கலாம். மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதும், மற்றவர் முன்னிலையில் அவமானப்படுத்துவதும் அவரை முன்னேற்றம் அடையச் செய்து விடாது. அவரை தேர்ச்சி பெற வைப்பதற்கான யுத்திகளை தனியே அழைத்து சொல்லிக் கொடுப்பது சிறந்த வழிமுறையாக இருக்கும். எனவே பாடம் கற்பித்தல் பலருக்கும் பொதுவாகவும், நெறிப்படுத்துதல் அவரவர் தன்மைக்கேற்ப தனியேவும் அமைய வேண்டும்.

* தொழில்நுட்பங்கள் பெருகிவிட்டதால், மாணவர்கள் பள்ளியைத் தாண்டிய சூழலில் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் தங்கள் கருத்துகளையும், கவனத்தையும் குவித்து வைத்திருக்கிறார்கள். 'படிக்கும் வயதில் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தக்கூடாது' என்று கண்டிப்பது மட்டும் சிறந்த ஆசிரியரின் பணியல்ல. தொழில்நுட்ப சாதனங்களை எவ்விதமாக அவசியத்திற்குப் பயன்படுத்த வேண்டும், எது எல்லை மீறியது, எது ஆபத்துக்குரியது என்பதை எடுத்துரைக்கும் வல்லமை ஆசிரியருக்கு இருக்க வேண்டும். அதனால் ஆசிரியரும் அடிப்படை தொழில்நுட்ப அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் அளவுக்கு நல்லாசிரியராக திகழ்வது உங்கள் மதிப்பினை உயர்த்தும்.

* தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் சுருங்கிவிட்டதால் பாடப்புத்தகங்களைத் தாண்டிய விஷயங்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். உலகளாவிய வகையில் உங்கள் பாடத்திட்டங்கள் எப்படி செம்மைப்படுத்தப்பட்டுள்ளன, என்ன புதுமை வந்திருக்கிறது, எப்படி போதிப்பது சிறந்த புரிதலுக்கு வழி வகுக்கிறது, மற்ற நாடுகளில் உங்கள் பாடங்கள் எப்படி போதிக்கப்படுகின்றன என்பது போன்ற உலகளாவிய அறிவும், அனுபவமும் இன்றைய புத்திசாலி மாணவர்களை வழி நடத்த அவசியமானதாகும்.

* உதாரணமாக உங்கள் பாடங்களை எளிமைப்படுத்தும், மாணவர்களின் சுமையைக் குறைக்கும் அப்ளிகேசன்களை அறிந்து அவற்றை பயன்படுத்த ஊக்குவிக்கலாம். உங்கள் பாடத்திட்டத்தினை டிஜிட்டல் மயமாக்க முன்வரலாம். மாணவர்களுடன் புரிதலை அதிகமாக்க தனியே வலைப்பூ, வாட்ஸப் குழு உருவாக்குதல் போன்ற யுத்திகளையும் கையாளலாம். பாடங்கள் கற்பிப்பதைத் தாண்டி மாணவர்களுடன் ஏற்படுத்திக் கொள்ளும் நட்புறவான நடைகள் அவர்களை எளிதில் கவர்வதுடன், உங்கள் மதிப்பினை உயர்த்தும்.

* கற்றல் திறன் குறைந்த மாணவர்களை காயப்படுத்தும் விதமாக நடந்து கொண்டு திருத்த முடியாது. எனவே எப்போதும் எதிர்மறை பேச்சுகளையும், கட்டுப்பாடுகளையும் தவிர்த்துவிடுங்கள். நேர்மையான நடத்தைகள் எவ்வித மாற்றத்தை விளைவிக்கும் என்பதை உதாரணங்களுடன் விளக்குங்கள், செயல்படுத்திக் காட்டுங்கள்.

* 'ஆசிரியப் பணி அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி' என்று கூறுவார்கள். அர்ப்பணிப்பு என்பது என் கடன் போதிப்பது என்பது மட்டுமல்ல. மாணவர் குணமறிந்து, நலனறிந்து நல்வழிப்படுத்துவதே. மாணவர் உலகத்திற்கேற்ப ஆசிரியர் களும் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ளத்தான் வேண்டும்!

சரித்திரம் படைத்த சத்ரபதி சிவாஜி


சரித்திரம் படைத்த சத்ரபதி சிவாஜி | எழுத்தாளர் எம்.குமார் | இன்று (பிப்ரவரி 19) சத்ரபதி சிவாஜி பிறந்தநாள். | மராட்டிய மன்னர்களுள் ஒருவரான இவர், பூனாவில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிவனேர் கோட்டையில், கி.பி. 1627-ம் ஆண்டில் ஷாஜி பான்ஸ்லே, ஜீஜாபாய் தம்பதிக்கு மகனாய் பிறந்தார். ஷாஜி பான்ஸ்லே, துர்காபாய் என்பவரை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்துகொண்டு அவரோடு தனியாக வாழ்ந்து வந்தார். இதனால் சிவாஜியும் அவரது தாயார் ஜீஜாபாயும் பூனாவில் தனியாக வசித்தனர். சிவாஜி, சிறுவயதில் இருந்தே நாட்டின் வரலாற்றையும் நாட்டு நடப்பையும் நன்கு தெரிந்துகொண்டார். பொதுவாழ்க்கையில் சிறிது, சிறிதாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தனது நாட்டின் ஆட்சியை அந்நியர்கள் பிடித்து கொண்டு தவறாக வழிநடத்துகிறார்கள் என்று சிந்திக்கலானார். 'இளம் கன்று பயமறியாது' என்பதை போல தனது 19-வது வயதிலே சுல்தானுக்கு எதிராக படையெடுப்பை தொடங்கினார், சிவாஜி. சிம்ஹகர், புரந்தர் ஆகிய கோட்டைகளை கைப்பற்றினார். சிவாஜியின் நடவடிக்கைளைக் கண்டு அதிர்ச்சியுற்ற பிஜப்பூர் சுல்தான், அவருக்கு எதிராக அப்சல்கான் தலைமையில் ஒரு படையை அனுப்பி அவரை உயிருடனோ, பிணமாகவோ பிடித்துவரும்படி உத்தரவிட்டார். பிரதாப்கர் கோட்டையில் இருந்த சிவாஜிக்கு இந்தத் தகவல் கிடைத்தது. பிஜப்பூர் சுல்தான் தளபதியான கிருஷ்ணாஜி பாஸ்கர் ஒரு மராட்டிய அந்தணர். அவரை சிவாஜியும் நன்கு அறிவார். சுல்தானின் தூதுவராக வந்த அவர், சிவாஜியின் தூதுவரான கோபிநாத்தின் மூலம் மத சம்பந்தமான கூட்டம் ஒன்றை சுல்தான் நடத்துவதற்கு உடன்பாடு செய்யவே சிவாஜியை அழைக்கிறார் என்ற தகவலை கூறினார். சிவாஜியின் பெருந்தன்மையான பண்பையும், தூதுவர் என்ற முறையில் தனக்களித்த வரவேற்பையும் கண்டவுடன் தான் இனியும் உண்மையை மறைப்பது நேர்மையல்ல என்று எண்ணி கோபிநாத்திடம் தான் கொண்டுவந்த செய்தி சிவாஜிக்கு எதிரான பொல்லாத சதிச் செய்தி என்பதை கிருஷ்ணாஜி பாஸ்கர் மறைமுகமாக தெரிவித்தார். சிவாஜிக்கு உண்மையான செய்தி கிடைத்த பின்னும் கிருஷ்ணாஜிக்கு தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக மிகுந்த கவனத்துடன் சுல்தானைச் சந்திக்க முற்பட்டார். வெளிப்பார்வைக்கு ஆயுதம் எதையும் வைத்திருப்பதாகக் காட்டிக் கொள்ளாமல், நெருக்கடி நேர்ந்தால் சூழ்ச்சியை, சூழ்ச்சி மூலம் எதிர்கொள்வதற்காக உடலில் தற்காப்புக் கவசத்தை அணிந்துகொண்டு புறப்பட்டார். உடல் வலிமையும், நல்ல உயரமும் உள்ள தளபதி அப்சல்கான் சிவாஜியை அன்புடன் கட்டித் தழுவி வரவேற்கும் பாவனையில் தனது இடது கையால் உடும்புப் பிடியாக அவரைப் பிடித்து வலது கையால் சிவாஜியின் உடலில் தன்னிடம் உள்ள கூர்வாளால் குத்திக் கொல்வதற்கு முற்பட்டார். சுல்தானின் தளபதியான இவருடைய தாக்குதலை எதிர்கொள்வதற்கு, சிவாஜி அணிந்திருந்த இரும்புக் கவசம் உதவியது. சுதாரித்துக் கொண்ட சிவாஜி தனது கையில் புலிநகம் போன்ற அமைப்பில் இருந்த எக்கு அலகுகளால் நொடிப்பொழுதில் தளபதியின் கழுத்தில் குத்திக் கிழித்துத் தாக்கி, அந்த இடத்திலேயே அவரைப் பிணமாக்கினார். இதற்கும் மேலாக சிவாஜி தயாராக ரகசியமாக நாலாபுறமும் வைத்திருந்த படைகள் முன்வந்து பெரும்போர் புரிந்தன. சுல்தானின் படை தோற்கடிக்கப்பட்டது. 1664-ல் சிவாஜி சூரத்தைத் தாக்கி அங்கே உள்ள செல்வங்களைத் தன்வசமாக்கினார். அவுரங்கசிப் ஒரு படையை ராஜா ஜெய்சிங் தலைமையில் சிவாஜிக்கு எதிராக அனுப்பினார். சிவாஜிக்கும், அவுரங்கசிப்புக்கும் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி சிவாஜியின் வசமிருந்த 35 கோட்டைகளில் 23-ஐ முகலாயர்களுக்கு விட்டுத் தந்துவிட்டு 12-ஐ மட்டும் சிவாஜி வைத்துக்கொள்வது என தீர்மானம் ஆனது. அது 'புரந்தர் உடன்படிக்கை' என்று அழைக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட சிவாஜியை ஆக்ராவில் உள்ள அரண்மனைக்கு அவுரங்கசிப் அழைத்தார். அதன்படி அங்கு சென்ற சிவாஜியும், அவரது மகனும் அவுரங்கசிப்பால் சிறை வைக்கப்பட்டனர். தந்தையும், மகனும் தந்திரமாக மாறுவேடம் பூண்டு தப்பித்தனர். பிறகு, 1670-ல் சிவாஜி மீண்டும் முகலாயருடன் போரிட்டு கொண்ட்வானா, புரந்தர், மாவலிநந்தல் ஆகிய கோட்டைகளைக் கைப்பற்றினார். 1674-ல் அவுரங்கசிப்பிடமிருந்த பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றினார். 1674-ல் ரெய்காரிலுள்ள தனது கோட்டையில் 'சத்ரபதி' என்ற பட்டத்துடன் அரியணை ஏறினார். அன்று முதல் 'சத்ரபதி சிவாஜி' என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். தக்காணத்தில் இதற்கான முடிசூட்டு விழாவை நடத்தி, இந்து சாம்ராஜ்யத்தைத் தக்காணத்தில் நிறுவிய பெருமை அவரையே சாரும். இதுதான் பிற்காலத்தில் சிவாஜி கண்ட 'இந்து சாம்ராஜ்யம்' எனப் பெயர் பெற்றது. வேலூர், செஞ்சி கோட்டைஉள்பட பல கோட்டைகளைக் கைப்பற்றியதால் அவருடைய மதிப்பு மேலும் உயர்ந்தது. வரலாற்றுப் பேராசிரியர்கள் சிவாஜியை நெப்போலியனோடு ஒப்பிட்டுக் கூறியிருக்கின்றனர். எட்டு பேர் கொண்ட சிவாஜியின் மந்திரி சபை, 'அஷ்டப் பிரதான்' என்று அழைக்கப்பட்டது. அவருடைய வருவாய் நிர்வாகம் பிற்காலத்தில் கூட பின்பற்றப்பட்டது. அவர் சென்னையில் இருக்கும் காளிகாம்பாள் கோவிலுக்கு வருகை தந்திருக்கிறார். அதை குறிக்கும் கல்வெட்டு அக்கோவிலில் இருப்பதை இன்றும் காணலாம். அவர் 1680-ம் ஆண்டு ஏப்ரல் 4-ல் இறந்தார். முகலாய அரசின் வீழ்ச்சிக்குப்பின் 40 வருடங்கள் மராட்டிய அரசு மராட்டியம், தக்காணம் ஆகிய பகுதிகளை ஆண்டு வந்தது. சிவாஜிக்குப்பின் 1761 வரை மராட்டிய அரசு சிறப்பாகச் செயல்பட்டது.

Sunday, February 18, 2018

தமிழ்ப் பெருங்கடல் உ.வே.சா.


தமிழ்ப் பெருங்கடல் உ.வே.சா. தமிழ் தாத்தா உ.வே.சா. அவ்வை நடராசன் (பிப்ரவரி 19) தமிழ் தாத்தா உ.வே.சா. பிறந்த தினம். தமிழுக்கு இன்று உலகளாவிய போற்றுதலைப் பெற்றுத்தருவது சங்க இலக்கியமாகும். காலப்பழமையும் கருத்துச்செழுமையும் சங்க இலக்கியத்தில் காணலாகும். சங்கம் தழைக்கும் மதுரை என்றும் தமிழையே சங்கத்தமிழ் என்றும் புலவர்கள் பலர் மொழிந்துள்ளனர். அத்தகைய சங்க இலக்கியங்கள் காலம் காலமாக குறிப்பாக ஐரோப்பியர் வருகைக்கு முன்பு வரை எந்த நிலையில் இருந்தன என்றால் பனை ஓலைகளால் செய்யப்பட்ட சுவடிகளில் எழுதப்பட்டுத் தேய்ந்தும், சிதைந்தும், ஒருபுறம் ஒடிந்தும், கட்டுக்கட்டாகக் கிடந்தன. அந்த எழுத்துக்களை இன்று படிப்பது அவ்வளவு எளிதில்லை. ஒரு நூலுக்கே இருபதுக்கும் மேற்பட்ட சுவடிகள் இருக்கும். அவை ஒவ்வொன்றும் தம்முள் வேறுபட்டு நிற்கும். அத்தகைய பனை ஓலை ஏடுகளைத் தேடித்தேடிக் கால்களும், கைகளும் சோர்ந்து விழக் கலங்கிப் புலம்பி இடர்ப்பட்டு இன்னலுற்று ஆண்டுக்கணக்கில் தேடிப் படித்து மூலபாடம் கண்டு அச்சில் வெளியிட்ட அளப்பரும் பெருமை உ.வே.சா.வுக்கே உரியது. அப்படிக் கடினமாக உழைத்து வெளியிட்ட இலக்கியச்செல்வங்கள் நமது பண்பாட்டுப் பேழைகளாகும். என் தந்தையார் உரைவேந்தர் அவ்வை துரைசாமி பிள்ளை எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஐங்குறுநூற்றுக்கு ஒரு புத்துரைப் பதிப்பை வெளியிடத் தொடங்கிய பொழுது எழுதிய வரிகளை நினைவுகூரலாம். "இவ்வரிய நூலை முதன் முதலில் அச்சேற்றிய பெருமை நம் தமிழன்னையின் தவப்புதல்வராய், தமிழராகிய நாம் முன்னோர் ஈட்டி நமக்கென வைத்த செந்தமிழ்ச் செல்வம் என வீறு கொண்டு பேசுதற்குரிய பெருந்துணை புரிந்தவராய் இதுபோலும் பண்டைச் செந்தமிழ்ப் பெருநூல் பலவற்றையும் அச்சிட்டுதவிய பெருந்தகையாய் விளங்கும் டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கட்குரியதாகும். இத்திருப்பணியில் ஈடுபட்டுச் செய்தருளியுள்ள தொண்டுகளை உண்மைத் தமிழ்மக்கள் ஒருபோதும் மறப்பதும் நினையார். அத்தகைய பெருமகனார், நாடிய செல்வமும், நீடியநாளும், சூடிய புகழும் உடையராய்த் தமிழன்னையின் சிறப்புடைய தலைமகனெனத் திகழுமாறு பரமன் திருவருள் பெருகுகவென அவன் திருவடிப் போதுகளை மனமொழி மெய்களால் வணங்குகின்றேன்". பழந்தமிழ் நூல் ஏடாக இருந்தால், அந்நூலுக்கான மூலப்படி என்று எதுவும் அமையாது. சில நூல்களுக்கு ஒரே ஒரு மூலப்படிதான் இருக்கும். அதுவும் ஏடு எழுதியோரால் பிழைகள் மலிந்து மூலத்தின் முகமே சிதைந்திருக்கும். ஒப்பு நோக்கப் பல படிகள் வேண்டும். அப்படியே கண்டெடுத்தாலும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகாது. ஒரே நூலைப் பற்றிய வேறுவேறு மூலப்படிகளும் தத்தம் அளவில் பாழ்பட்டிருக்கும். இத்தகைய சிக்கலான பின்னல்களில் உழன்று மூலபாடத்தைக் கண்டடைய நுணுக்கமான புலமை கைவரப்பெறவேண்டும். பனையோலை எழுத்துகளுக்குப் புள்ளி இராது. எல்லா எழுத்துகளும் ஒன்றேபோல் இரா. பல உரைநூல் சுவடிகளில் பாடலும் உரையும் தாள ஒழுங்கிலேயே எழுதப்பட்டிருக்கும். எங்கு உரை முடிந்து அடுத்தப் பாடல் எங்குத் தொடங்குவது என்பது திகைப்பூட்டும். இலக்கியப் புலமையும் இலக்கணச் செம்மையும் வாய்ந்தவர்களிடத்தில் பொருளும் உண்மைப் பாடமும் காணும் திறன் உருவாகும். பனையோலைப் படியைக் காகிதத்திற்கு (அச்சு) கொண்டுவருதல் அடுத்தவெற்றி. இத்தகைய அனைத்தறிவும் பெற்ற சான்றாண்மைக் கிழவராய் உ.வே.சா. தமிழின் பரப்பெங்கும் படர்ந்து நின்றார். தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்துக்கு அருகில் உத்தமதானபுரம் என்னும் சிற்றூரில் 19-2-1855 அன்று வேங்கடசுப்பையருக்கும், சரசுவதி அம்மையாருக்கும் உ.வே.சா. மகனாகப் பிறந்தார். ஒல்லும் வகையெல்லாம் தமிழுக்கு ஓயாது உழைத்த உ.வே.சா. 28-4-1942 அன்று திருக்கழுக்குன்றத்தில் இவ்வுலக வாழ்வினின்றும் ஓய்வு பெற்றார். செந்தமிழ்த் திலகமாய்த் திகழ்ந்த அவரின் நினைவு நீங்காது நிற்க அவர் பணியாற்றிய சென்னை மாநிலக் கல்லூரியில் அவரது முழு உருவச் சிலையை 1948-ல் அரசே நிறுவியது. தமிழறிஞர்க்கென்று நிறுவிய முதல்சிலை இதுவேயாகும். உற்றாரும் உறவினரும் இளஞ் சிறுவனை வடமொழி கற்கச் சொன்னார்கள். தந்தையார் இசையறிவு மிக்கவர் என்ற நிலையில் மகனை இசை பயிலச் சொன்னார். மகனோ விடாப் பிடியாக மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடமே பணிந்து, பணிந்து பாடம் கற்றார். ஆசிரியர் இட்ட பெயர் தான் சாமிநாதன். தந்தையார் சூட்டிய பெயர் வேங்கடராமன். ஆசிரியர் அழைத்த பெயரே அவருக்கு நிலைத்தது. மகாவித்துவான் மறைவு வரை அவரிடமே இணைபிரியாது இருந்தவர் நம் தமிழ்க்கடல். 1.2.1876-ல் மீனாட்சி சுந்தரம் பிள்ளை மறைந்தபின், அப்பொழுது (திருவாவடுதுறை மடத்தின் தலைவராக விளங்கிய சுப்பிரமணிய தேசிகர் நான்காண்டுக் காலம் இவருக்குத் தமிழ்க்கல்வி ஊட்டினார். பின்னர் தமிழறிஞர் சி.தியாகராச செட்டியாரின் உதவியால் 16.2.1880-ல் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணி ஏற்றார். நன்றிமறவாத உ.வே.சா. தம் இல்லத்துக்குத் 'தியாகராசர் விலாசம்' எனப் பெயரிட்டார். பத்துப்பாட்டு, எட்டுத் தொகையில் ஐந்து நூல்கள், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பழந்தமிழ் நூல்களையும் பல்வகை சிற்றிலக்கியங்களையும் பதிப்பித்தார்.பத்துப்பாட்டு வரிசையில் குறிஞ்சிப்பாட்டு நூலில் காணும் 99 மலர்கள் குறித்து வரும் வரிகளில் மூன்று தொடர்கள் ஏட்டில் காணாது உ.வே.சா. பெரிதும் இடர்ப்பட்டார். அவ்வரிகள் இடம்பெற்ற ஏடு கிடைக்காதா என்று தேடினார். ஊர், ஊராய் வீடு வீடாய் ஏறி இறங்கினார்.ஏடு கண்ட பின்னர்தான் குறிஞ்சிப்பாட்டின் 99 மலர்கள் வரிசை நிறைவுபெற்றது. புறநானூற்றுக்கு பழைய உரையைக் கண்டு வெளியிட்ட பெரும்புலமை வியத்தற்குரியது.உ.வே.சா. பழந்தமிழ்ச் சுவடிகளை அச்சிற் பதிப்பித்தார். அவருக்கு முன்னும் நூல்கள் அச்சிடப்பட்டன. எனினும் அவர்தம் பதிப்பு நூல்களில் காணப்பெறும் முகவுரை, மூலப்படிகளின் நிலை, சொற்பொருள் விளக்கம், மேற்கோள் விளக்கம், சொற்பொருள் விவரம், அரும்பொருள் அகராதி, கிடைத்தபடிகளின் நிரல்முறை, அச்சிட உதவியோர் விவரம் என எல்லாம் நிறைந்து உ.வே.சா பதிப்பு ஆய்வுப்பதிப்போடு அறிவு ததும்பும் பதிப்பு என்று அனைவரையும் போற்றச்செய்தது. சிலப்பதிகாரத்தை 1889-ம் ஆண்டு வெளியிட்டார். அவ்வாறே மணிமேகலையை 1898-ல் வெளியிட்டார். உ.வே.சா. சைவ சமயச் சார்புடையவர் எனினும், சமண நூலான சீவகசிந்தாமணியையும், பெளத்த நூலான மணிமேகலையையும் பதிப்பித்தார். புராணம், பரணி, அந்தாதி, உலா, கோவை, தூது முதலான இலக்கிய நூல்களையும் இலக்கண நூல்களையும் பதிப்பித்தார். சிற்றிலக்கியங்களைப் பதிப்பித்த போதும் உ.வே.சா. மனம் சங்கத் தமிழின் பெருமிதத்தையே நாடியது. அவர் சங்க நூல்களை அச்சேற்றியபின் மருந்துக்குகூட ஒரு தகுதியான நூலை ஓலைச்சுவடிகளில் நாம் தேடமுடியவில்லை. ஓலைச்சுவடிகளில் போலிச் சுவடிகளே மிகுந்து பயனின்றி ஒழிந்தன. ஓலைகளை மீட்டுப் பதிப்பிக்கிறோம் என்பதெல்லாம் வெற்று முழக்கமே. உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் எண்பதாண்டு விழாவில்தான் கல்கி "தமிழ்த் தாத்தா" என்ற புகழ்ப்பெயரை வழங்கினார். கல்கி வழங்கிய இந்தப் பட்டப் பெயரே நிலைத்து விட்டது. இது குறித்து கல்கி, உ.வே.சா.வுக்கு எழுதிய கடிதம் சுவையானது. குறுந்தொகைக்கு உ.வே.சா. உரையெழுதிய பொழுது அவருக்கு வயது எண்பத்திரண்டு 1878-ம் ஆண்டில் தொடங்கிய இலக்கியப் பணி 1942 வரை வளர்ந்தது. தமிழ்க்கடல் உ.வே.சா. ஒரு பல்துறைக் களஞ்சியம், உரையாசிரியர், உரைநடை ஆசிரியர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், பேராசிரியர், பாடலாசிரியர், இசைக்கலைஞர் எனப்பல பாங்குகளில் தம் தலைமை மாட்சியை நிறுவியவர். டாக்டர் உ.வே.சா. எந்த நிலையிலும் தம் உள்ளம் உருகி எண்ணித்துதிக்கும் பாடல் வரிகளை நாம் எவரும் மறக்க இயலாது. தமது தளர்ந்த முதுமையிலும் மேடையில் மெல்ல எழுந்து நின்று "இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் திருந்த உதிப்பித்த பன்னூல் ஒளிர அடியேன் பதிப்பிக்கவே கடைக்கண் பார்" என்று அவையினர் விழிகளில் நீர் பெருக உரையாற்றினார் என்பர். தமிழ்விடு தூது நூலில் இடம்பெற்ற இத்தொடர்களையே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு இறுதி மூச்சு வரை வாழ்ந்தார். அண்ணல் காந்தியடிகளும் வங்கக் கவியரசர் தாகூரும் அகத்தியனே இவரென உ.வே.சா.வின் பெருமையைப் போற்றிப்பாராட்டினர்.

Saturday, February 17, 2018

சிபில் ஸ்கோர் குறைவால் கடன் கிடைக்கவில்லையா?


சிபில் ஸ்கோர் குறைவால் கடன் கிடைக்கவில்லையா? | ஆர்யா | கடன் வேண்டி விண்ணப்பிக்கும்போது வங்கிகள் முதலில் உங்கள் சிபில் ஸ்கோரைப் பரிசோதிப்பார்கள். சிபில் ஸ்கோர் என்பது (Credit Information Bureau (India) Ltd - CIBIL Score) கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்கள், கடன் பெற்றிருப்பவர்கள் ஆகியோர் குறித்த தகவல்களையும் கடன் திருப்பிச் செலுத்துவது பற்றிய விபரங்களையும் திரட்டுவது. கடன் தகவல் நிறுவனம் (Credit Information Bureau) நிறுவனத்தின் முக்கியப் பணி. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் வாங்குவோர் குறித்த தகவல்களை மாதந்தோறும் இந்த நிறுவனத்துக்குத் தெரிவிக்க வேண்டும். வீடு கட்ட, வாகனம் வாங்க, கல்யாணம் முடிக்க என வாழ்க்கையின் அத்துணை தேவைகளையும் கடன் வாங்கியே எல்லோரும் நிறைவேற்றுகிறோம். இப்படிக் கடன் வாங்கிப் பயனடையும் சிலர் வங்கிக் கடனை முறையாகத் திருப்பிச் செலுத்துவது இல்லை. இம்மாதிரியான விஷயங்களை சிபில் அமைப்பு கண்காணிக்கும். வங்கியில் கடன் பெற்றவர்களின் தகவல்களைச் சம்பந்தப்பட்ட வங்கி, நிதி நிறுவனத்திடம் இருந்து பெற்று, கண்காணித்து வரும். இதை வைத்து இந்த அமைப்பு கடன் தகவல் அறிக்கையை உருவாக்கும். அதனடிப்படையில் நமக்கும் கடன் புள்ளிகள் வழங்கப்படும். இந்தப் புள்ளிகளின் அடிப்படையில்தான் நமக்கு மீண்டும் கடன்கள் வழங்கப்படும். இதன் மூலம், கடனைச் செலுத்த முடியாத பொருளாதாரப் பின்னணியில் இருப்பவர்களை வங்கிகள் கண்டறிந்துகொள்ள முடியும். அவர்கள் மீண்டும் கடனுக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்குக் கடன் கிட்டாது போகும். நீங்கள் கடனை முழுமையாகச் செலுத்தி முடிந்ததும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மேற்கண்ட சிபில் நிறுவனத்தில் இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இப்படி விண்ணப்பிக்கும்போதுதான் நமக்கான கடன் புள்ளிகள் குறித்து நமக்குத் தெரிய வரும். இந்தக் கடன் புள்ளிகளைப் பெற சிபில் அமைப்பு, கட்டணமும் வசூலிக்கிறது. ஏற்கனவே கடன் வாங்கி முறையாகக் கட்டத் தவறியிருக்கும் பட்சத்தில் மீண்டும் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது நமக்குக் கடன் கிட்டாமல் போக வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான நேரங்களில் நீங்கள் உங்களுடன் விண்ணப்பதாரராக உங்கள் கணவனையோ மனைவியையோ சேர்த்துக்கொள்ளலாம். துணை விண்ணப்பதாரரின் கடன் புள்ளிகளையும் சேர்த்தே வங்கிகள் கணக்கிடும் என்பதால் கடன் கிடைப்பது எளிதாகும்.

பறவைத் தாங்கிகள்


பறவைத் தாங்கிகள் | ப. ஜெகநாதன் | உலகம் முழுவதும் உள்ள பறவைகளை ஒரே நேரத்தில் ஒவ்வோர் ஆண்டும் கணக்கிடுவதால், பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை கணிக்க முடியும். ஓரிடத்தில் அவற்றின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வை வைத்து, அதற்கான காரணங்களைக் கண்டறிய முடியும். இதுதான் 'ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு' (கிரேட் பேக்யார்டு பேர்டு கவுண்ட்) எனப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பு, பிப். 16-ம் தேதி (நேற்று) தொடங்கி 19-ம் தேதிவரை நடைபெறுகிறது. இந்தியாவில் இந்தக் கணக்கெடுப்பை 'பேர்டு கவுண்ட் இந்தியா' அமைப்பு ஒருங்கிணைக்கிறது. வயல்வெளி, ஏரி, குளங்கள் என உங்கள் வீட்டைச் சுற்றி, நீங்கள் பணியாற்றும் இடத்தைச் சுற்றி இந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ளலாம். ஆனால், ஒவ்வோர் இடத்திலும் குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது பறவைகளைப் பார்க்க வேண்டும். பறவைகளை அடையாளம் கண்டு, அவற்றின் எண்ணிக்கையைக் குறித்துக்கொண்டு, அவற்றை www.ebird.org வலைத்தளத்தில் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு: https://birdcount.in/event/gbbc2018/4/ எங்கள் தெருவில் ஒரு வீட்டில் டிவி ஆண்டெனா ஒன்று உயர்ந்தோங்கி நின்றுகொண்டிருக்கும். அதைப் பார்த்தவுடன் சிறு வயதில் டிவி பெட்டியில் தெளிவாக சேனலை வரவழைக்க நாங்கள் பட்ட பாடுதான் எனக்கு உடனே நினைவுக்கு வரும். இப்போதெல்லாம் எங்கேயாவது ஆண்டெனாவைப் பார்த்தால் அதில் ஏதாவது பறவை அமர்ந்திருக்கிறதா என்றுதான் பார்க்கத் தோன்றுகிறது. சில வீடுகளில் துணிகளைக் காயவைக்க மாடியில் கம்புகள், தடிகளை வைத்து நடுவில் கயிற்றைக் கட்டியிருப்பார்கள். இது போன்ற மொட்டைக் கம்புகளில் ஒரு பறவைதான் அமர முடியும். அதில் இடம் பிடிப்பதற்குப் பறவைகளிடையே ஏற்படும் சண்டை வேடிக்கையாக இருக்கும். சின்னான்கள் இருந்தால் மைனாக்களும் மைனாக்களைக் காகங்களும் விரட்டி விட்டு அந்தக் கம்பின் மேல் இடம் பிடிக்கும். ஆனால், ஆண்டெனாவில் பல கிடைமட்டக் கம்பிகள் இருப்பதால் பெரும்பாலும் சண்டை வராது. என்றாலும் சில வேளைகளில் மற்ற பறவைகளை கரிச்சான் அண்டவிடாது. இருந்தபோதும் கரிச்சானும் வெண்மார்பு மீன்கொத்தியும் ஆண்டெனாவின் இரு முனைகளில் அமர்ந்திருப்பதை ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். சில பறவைகள் இது போன்ற உயரமான கம்பங்களைச் சற்று நேரம் ஓய்வெடுக்க மட்டுமே பயன்படுத்துகின்றன. சில பூச்சியுண்ணும் பறவைகள், குறிப்பாகப் பறந்து சென்று பூச்சியைப் பிடித்துண்ணும் இயல்புடையவை (flycatching) இது போன்ற இடங்களுக்கு வருகின்றன. என் வீட்டு எதிரே உள்ள ஆண்டெனாவில் அந்தி சாயும் வேளைகளில் மட்டுமே கரிச்சான்கள் வந்து அமர்கின்றன. அவ்வழியே பறந்துசெல்லும் பூச்சிகளைப் பறந்து பிடித்து மீண்டும் ஆண்டெனா கம்பியில் அமர்ந்துகொள்கின்றன. ஆனால், சில பறவைகளுக்கு இது போன்ற இடங்கள் மிகவும் முக்கியம். குறிப்பாகக் கழுகு, வல்லூறு போன்ற இரைகொல்லிப் பறவைகள் உயரமான மரத்திலோ செல்போன் கோபுரங்களிலோ அமர்ந்து கீழே நோட்டம் விடும். இரையைக் கண்டவுடன் சரியான தருணத்தில் கீழ் நோக்கிப் பறந்து அவற்றைப் பிடிக்கும். இதுபோல் பெரிய ராஜாளி (Peregrine Falcon) ஒன்று தஞ்சைப் பெரிய கோயிலின் உச்சியில் அமர்ந்திருப்பதைக் கண்டிருக்கிறேன். அதுபோலவே வெட்டவெளிகளில் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மின்கம்பங்களின் மேல் கருந்தோள் பருந்தைக் காணலாம். வாடிக்கையாக இப்படி அமரும் இடங்களை இப்பறவைகள் மற்ற பறவைகளுக்கு (அதே இனத்துக்கோ வேறு வகைப் பறவைகளுக்கோ) அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுப்பதில்லை. இது போன்ற இடங்களுக்குக் கீழே தெறித்து விழுந்திருக்கும் எச்சங்களை வைத்து, எந்த வகைப் பறவை அங்கே அடிக்கடி அமர்கிறது என்பதை ஓரளவு கணிக்க முடியும். பெரிய வெள்ளை நிறத் திட்டுக்கள் இருந்தால் அவை இரைகொல்லிப் பறவையாகவோ நீர்ப்பறவையாகவோ இருக்கலாம். விதைகளுடன் இருந்தால் பழவுண்ணிகள். நீள்வட்ட உருளை வடிவில் சிறிய எலும்புகளும் முடிகளும் கொண்ட சிறிய கொழுக்கட்டைபோல இருந்தால் அவை ஆந்தைகளாக இருக்கும். ஆந்தைகள் இரையை (சிறிய பறவை, எலி, பூச்சி, வண்டு, ஓணான் முதலியவை) விழுங்கிய பிறகு அவற்றின் செரிக்கப்படாத எலும்பு, தாடை, சிறகுகள் முதலியவற்றை வாய் வழியே எதிர்க்களித்து துப்பிவிடும். இந்த உமிழ் திரளைகளை (Bird Pellets) அவை வந்து அமரும் அல்லது பகலில் தங்கும் இடங்களின் கீழே காணலாம். ஆந்தைகள் குறிப்பாகக் கூகைகள், எலிகளை அதிகமாக உண்ணும். விவசாயிகள் வயல் வெளிகளில் எலிகளைக் கட்டுப்படுத்த இப்பறவைகள் வந்து அமர ஏதுவாக 'T' வடிவக் கம்புகளை நட்டு வைப்பார்கள். அதற்குச் செலவாகுமென்றால் தேங்காய் மட்டையைத் தலைகீழாகக் குத்தி வைப்பார்கள். சோலைக்கொல்லை பொம்மைகள் சில பறவைகளை விரட்டுவதற்காக மட்டும் வைக்கப்படுவதல்ல, இது போன்ற ஆந்தைகள் வந்து அமர்வதற்காகவும்தான். மனிதர்களால் திருத்தப்பட்டு வெட்டவெளியான வனப்பகுதிகளை மீளமைக்க (restoration) இது போன்ற 'T' வடிவக் கம்புகளை நட்டுவைத்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் பறவைகள் மூலம் பரவும் விதைகள், அந்தப் பகுதிகளுக்குச் சற்றே துரிதமாக வந்தடைவதைக் கண்டிருக்கிறார்கள். 'கர்ண' பறவை இரைகொல்லிப் பறவைகளைத் தவிர இது போன்ற உயரமான இடங்களில் பொதுவாகப் பார்க்கக்கூடிய பறவைகளில் பனங்காடையைக் குறிப்பாகச் சொல்லலாம். இவை இரையைப் பிடிப்பதற்காக மட்டுமல்லாது அவற்றின் இணையைக் கவரவும் இது போன்ற இடங்களில் அமர்கின்றன. ஆண் பனங்காடை மொட்டைப் பனை மர உச்சியிலிருந்து மேல் நோக்கிப் பறந்து வானில் கர்ணம் அடித்து சட்டெனக் கீழேயும் பின் மேல்நோக்கியும் பறக்கும். நீல வானத்தின் பின்னணியில், ஊதாவும், இள நீலமும் கொண்ட இறக்கைகளை அது அடித்துப் பறக்கும் காட்சியைப் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். குண்டுகரிச்சானும் இது போலத்தான். ஆனால், இவை கர்ணம் அடிப்பதில்லை. உயரமான கம்பத்திலோ மரத்தின் உச்சிக்கிளையிலோ அமர்ந்து இணையைக் கவர்வதற்காகவும், தமது வாழிட எல்லையைக் குறிக்கும் வகையிலும் இடைவிடாமல் பாடிக்கொண்டே இருக்கும். பற்றிக்கொள்ள (Grasping feet) ஏதுவாக உள்ள கால்களைக் கொண்ட பறவை இனங்களே இது போன்ற இடங்களில் அமர முடியும். எனினும், திருநெல்வேலி பகுதியில் இதுபோல மொட்டைப் பனை மரத்தின் மீது செண்டு வாத்து அமர்ந்திருந்தது வேடிக்கையாக இருந்தது. நெட்டுக்குத்தாக இருக்கும் அமைப்புகள் மட்டுமல்ல, கிடைமட்ட மின்கம்பிகளிலும் பல வகைப் பறவைகளைப் பார்க்கலாம். ரயில் பயணங்களில் நம் கூடவே வரும் மின் கம்பிகளில் பல பறவைகளைக் கண்டிருப்போம். நெட்டுக்குத்தாக இருக்கும் அமைப்புகளில் அமர்ந்தால் பறவைகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எனினும், மின்கம்பிகள் பறவைகளுக்கு ஆபத்தையும் உயிரிழப்பையும் ஏற்படுத்துகின்றன. பெருங்கொக்குகள் (Cranes), பாறுக் கழுகுகள் (Vultures), கானமயில்கள் (Bustards) போன்ற பறவைகள் வலசை வரும் வேளையில் மின்கம்பிகளில் மோதி உயிரிழக்கின்றன. காகங்கள், ஆந்தை போன்ற உருவில் சிறிய பறவைகளும் சில வேளைகளில் மின் கம்பிகளில் மாட்டிக்கொண்டு உயிரிழந்து தொங்கிக்கொண்டு இருப்பதைக் கண்டிருக்கலாம். மின் கம்பிகளில் அமர்வதால் அவற்றை மின்சாரம் தாக்குவதில்லை. அதேநேரம், அவற்றின் இறக்கைகள் அல்லது உடலின் பாகங்கள் ஒரே நேரத்தில் இடைவெளி குறைந்த இரண்டு மின்கம்பிகளில் பட்டுவிட்டால் அவை மின்சாரம் தாக்கி உயிரிழக்கின்றன. உருவில் சற்றே சிறிய பறவைகள் எப்படியோ தப்பித்துக்கொள்கின்றன. பொதுவாக, பஞ்சுருட்டான்களும் காட்டுத் தகைவிலான்களும் இது போன்ற மின் கம்பிகளில் நெருக்கமாக அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். அண்மையில் சேலத்தில் உள்ள கன்னங்குறிச்சி ஏரிக்கு மேலே செல்லும் ஒரு மின்கம்பியின் மேல் சுமார் ஆயிரம் தகைவிலான்கள் அமர்ந்திருப்பதை வியப்புடன் கண்டுகளித்தேன். நாகாலாந்தின் ரஷ்ய விருந்தினர்கள் சென்னை பள்ளிக்கரணை சதுப்புநிலம் அருகே சென்றிருந்தால் அங்கிருக்கும் உயரழுத்த மின்கம்பிகளில் நூற்றுக்கணக்கான சாம்பல் கூழைக்கடாக்கள் அமர்திருப்பதைக் காணலாம். எனினும், இதுவரை கண்டத்திலேயே நம்ப முடியாத அளவுக்கு என்னை வியப்பிலாழ்த்தியது நாகாலாந்தில் மின் கம்பிகளின் மேல் அமர்ந்திருந்த அமூர் வல்லூறுகள்தான். நூற்றுக்கணக்கில் அல்ல, ஆயிரமாயிரம் அமூர் வல்லூறுகள்! ரஷ்யாவில் உள்ள அமூர் பகுதியில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு வலசை செல்லும் வழியில் டோயாங் நீர்த்தேக்கப் பகுதியைத் தாப்பாகக் (தங்குமிடமாக) இவை கொண்டுள்ளன. நீர்த்தேக்கத்தின் இருபுறங்களிலும் உள்ள மலைகளுக்கு இடையே செல்லும் சுமார் ஒன்றரை கி.மீ. தூர உயரழுத்த மின் கம்பியின் மேல் ஆயிரக்கணக்கில் இவை அமர்ந்திருப்பதை அக்டோபர், நவம்பர் மாதங்களில் காணலாம். நெருக்கமாக சுமார் ஒரு கி.மீ. நீளத்துக்கு கம்பியில் அமர்ந்திருக்கும் வேளையில் அந்தப் பறவைகளின் பாரத்தைத் தாங்கிக்கொண்டு கம்பியே தாழ்ந்து கிடக்கும். திடீரென அவை அனைத்தும் ஒரே நேரத்தில் கம்பியை விட்டு வானில் பறக்கும் வேளையில், அந்தக் கம்பி மேலும் கீழும் ஆடுவதைக் காணலாம். இயற்கையான நிலவமைப்பில் செயற்கையான இது போன்ற அமைப்புகள் இயற்கை ஆர்வலர்களின் கண்ணை உறுத்தத்தான் செய்யும். எனினும், இவை இல்லாமல் மனிதர்கள் வாழ்வது கடினம்தான். சில பறவைகளும் நிலவமைப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களின் விருப்பத் தேர்வுகளையும் மாற்றிக்கொள்கின்றன. பழைய ஆண்டெனாக்கள் இல்லாமல் போனால் என்ன? புதிய டிஷ் ஆண்டெனாக்களில் உட்கார்ந்துகொள்ளலாம் என்று அவை முடிவு செய்திருக்கக்கூடும். மின் கோபுரங்களும் மின் கம்பிகளும் இல்லாத காலத்தில் இந்தப் பறவைகள் எங்கே, எப்படி அமர்ந்திருக்கும்? என்னால் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியவில்லை. கட்டுரையாளர், பறவையியல் நிபுணர் தொடர்புக்கு: jegan@ncf-india.org

ராமகிருஷ்ணர் காட்டும் வாழ்க்கை நெறி


ராமகிருஷ்ணர் காட்டும் வாழ்க்கை நெறி ஸ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்சர் சுவாமி விமுர்த்தானந்தர், மேலாளர், ஸ்ரீ ராமகிருஷ்ணமடம், சென்னை  (பிப்ரவரி 18) ஸ்ரீ ராம கிருஷ்ணபரமஹம்சரின் பிறந்தநாள். உலக நாடுகளை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் சுவாமி விவேகானந்தர். அப்படிப்பட்ட விவேகானந்தரை உருவாக்கியவர் சுவாமி ராம கிருஷ்ண பரமஹம்சர். இவர் மேற்கு வங்காளத்தில் காமார் புக்கூர் என்ற குக்கிராமத்தில் 1836-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி அவதரித்தார். அந்த காலத்தில் பண்டிதர்கள் மட்டுமே சாஸ்திரங்கள் கற்றுக் கொடுத்து வந்தனர். அந்த சாஸ்திரங்களின் சாராம்சத்தை பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் ஸ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்சர் கதைகள் மூலம் சொல்லி புரிய வைத்தார். சான்றாக அவர் கூறிய கதை ஒன்றை பார்ப்போம். கங்கை நதி பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் ஒரு படகு. படகில் ஓடக்காரனும் சில பயணிகளும். பயணிகளுள் ஓர் அரைகுறை பண்டிதர். தான் படித்ததைப் பிறருக்குப் போதித்தாலே அவர் இன்னும் பலவற்றைக் கற்றிருக்க முடியும். ஆனால் கற்று விட்டோம் என்ற கர்வம் அவரை அதிகம் அலட்டிக்க வைத்தது. அவர் ஓடக்காரனிடம் தனது அறிவை பறைசாற்றத் தொடங்கினார். 'ஏய் ஓடக்காரா, இப்படி நீ தற்குறியாக இருக்கிறாயே? பகவத்கீதையை நீ படித்திருக்கிறாயா? என்று ஏளனமாக கேட்டார்'. 'ஐயா, சாமி என் அப்பன் கூட அதை படித்ததில்லையே?' என்றான் ஓடக்காரன். 'உனது வாழ் நாளில் கால் பங்கு மோசமாக போச்சு' என பண்டிதர் சாபம் தருவது போல் சொன்னார். 'சரி திருக்குறளாவது படித்திருக்கிறாயா?' என கேட்டார். அதற்கு ஓடக்காரன் 'அதை நான் தொட்டது கூடகிடையாதே, சாமி' என்றான். 'தண்டமே இரண்டு பங்கு உன் வாழ்க்கையை வீணாக்கி விட்டாயே, போகட்டும் பாகவதமாவது வாசித்திருக்கிறாயா'? என்றார். சிரமத்துடன் படகு செலுத்திக் கொண்டிருந்த ஓடக்காரன் தலை குனிந்து நின்றான். 'அதுவும் இல்லையா? உன் வாழ்க்கையில் முக்கால்வாசி நஷ்டமாகி விட்டது. இனி நீ என்ன செய்யப்போகிறாய்? கடவுளுக்குதான் வெளிச்சம்' என்று பண்டிதர் சொல்லி முடித்தார். அப்போது கரை புரளும் வெள்ளம். அலையடித்து படகு கவிழ்ந்து விடும் என்ற நிலையில் நீந்தத் தெரிந்தவர்கள் நதியில் குதித்து நீந்திக் கரையேறினர். ஓடக்காரனும், பண்டிதரும் மட்டும் தத்தளிக்கும் படகில் இருந்தனர். 'குதிங்க சாமி. இல்லேன்னா மூழ்கிடுவீங்க.' என்று ஓடக்காரன் சொல்ல, 'ஐயோ, எனக்கு நீச்சல் தெரியாதே...' என்று பண்டிதர் சொன்னார். அந்த அவசரத்திலும் ஓடக்காரன், பண்டிதரிடம், 'சாமி, எனக்கு கீதை, பாகவதம் திருக்குறளென்று எதுவும் தெரியாது. ஆனால் நீச்சல் தெரியும். இதெல்லாம் தெரிஞ்ச நீங்க இப்போ முழு வாழ்க்கையையும் இழக்கப்போறீங்களே' என்று கூறி நதியில் குதித்துக் கரை சேர்ந்தான். பலவற்றைக் கற்ற பண்டிதர் பரிதவித்தார். இந்தக் கதை பகவான் ராமகிருஷ்ணர் கூறியது. இன்று மனிதர்களுள் பலரும் இப்படித்தானே செய்திகளை சுமக்கும் பொதி மாடுகளாக உள்ளனர். உலகைப்பற்றிய, இயற்கைப்பற்றிய, பிறரைப்பற்றிய செய்திகள் ஏராளம் அவர்களுக்குத் தெரியும். அனால் மனிதனுக்கு தன்னைப்பற்றிய அறிவும், ஞானமும் அதிகமில்லை என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று. நான் யார்? நான் பிறந்ததற்கு நோக்கம் எதாவது உண்டா? எல்லோரையும் போலவே நானும் பிறந்து, இறந்து போய் விட வேண்டியது தானா? அல்லது எனது வாழ்க்கைக்கு ஒரு பயனுண்டா? என்றெல்லாம் யோசிப்பதே இல்லை. தன்னைப் பற்றிய தகவல்கள் தான் மனிதனிடம் இன்று இருக்கிறது. அந்தத் தகவல்களே அவனை திருப்தியடையச் செய்திடுமா? பஞ்சாங்கத்தில் இந்த நேரம் மழை பெய்யும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மழை பற்றிய செய்தியை சொல்லியதால், பஞ்சாங்கத்தை பிழிந்தால் மழைநீர் வந்து விடுமா? என்று ராம கிருஷ்ணர் கேட்பார். சமய, சாஸ்திர நூல்களைப்பற்றியும் அந்த கேள்வியை கேட்பார். சிலருக்கு பால் எங்கிருந்து வருகிறது என்று தெரியும். சிலர் பாலைப் பார்த்திருக்கிறார்கள். சிலர் பாலை தொட்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு சிலரே பாலை பருக முடிகிறது. அது போல சாஸ்திரங்களைச்சிலர் படித்திருக்கிறார்கள். சிலர் மேற்கோள் காட்டுகிறார்கள். ஒரு சிலரே சாஸ்திரம் கூறும் ஞானத்தையும், தெய்வசக்தியையும் உணர்கிறார்கள். பிறருக்கும் உணர்த்துகிறார்கள். ராம கிருஷ்ணர் பக்தர்களுக்கும், துறவிகளுக்கும் கூறும் போது முதலில் கடவுள். பிறகு உலகம். இந்த வகையில் தான் மனிதனின் கற்றலும், கவனமும் இருக்க வேண்டும் என்கிறார். அவ்வாறே அவர் வாழ்ந்தும் காட்டினார். லோக மாதாவைத் தரிசிப்பதிலும், தெய்வ ஞானத்தை பெறுவதற்கும் தமது ஆரம்ப கால வாழ்க்கையின் 12 ஆண்டுகளை செலவிட்டார். இறைவனிடத்தில் தன்னை முற்றிலுமாக கரைத்துக் கொண்டதால் ஊரார் ராமகிருஷ்ணரை பைத்தியம் என்றும், பித்தர் என்றும் ஏளனம் செய்தனர். அப்போது அவர் சுவாமி விவேகானந்தர் போன்ற தமது சீடர்களிடம் புன்னகையுடன் 'உலக மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் பைத்தியமாக இருக்கிறார்கள். சிலர் பணத்தின் மீது, சிலர் உடல் இன்பத்தின் மீது, வேறு சிலர் பெயர், புகழ் மீது பைத்தியமாக இருக்கிறார்கள். நான் இறைவன் மீது பைத்தியமாக இருக்கிறேன். இந்த எல்லா பைத்தியங்களுள் எது சிறந்த பைத்தியம்... சொல்லுங்கள்? என்று கேட்டு அவர்களை சிந்திக்க வைப்பார். சிரிக்க வைப்பார். இறைவனை பற்றிய ஞானம் அதிமுக்கியமானது. எதைப் பெற்றால் எல்லாம் பெற்றதற்குச் சமமோ அந்த அறிவைப் பெறுவதில் தான் ராம கிருஷ்ணரின் ஆர்வம் இருந்தது. எந்த அறிவையும் பெறாமல் வாழ்வில் சொத்து, சுகம் என்று ஏனைய அனைத்தும் பெற்றிருந்தும் மனிதன் நிறைவான நிலையையும், நிம்மதியையும் அடைய முடியாதோ, அதில் ராமகிருஷ்ணர் கூடுதல் கவனம் காட்டச் சொல்கிறார். ராமகிருஷ்ணர் நமக்குக் காட்டுவது இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்டது. இதில் தர்மத்துடன் கூடிய வாழ்க்கை வாழ்ந்து நீயும் முன்னேறி, பிறருக்கும் சேவை செய்து வந்தால் ஆனந்தமாக இருப்பது நீ மட்டுமல்ல, ஆண்டவனும் தான் என்பது தான். ஆண்டவனின் ஆனந்தத்தையே பெருக்கும் வாழ்க்கையை வாழக்கற்றுக் கொடுப்பது தான் ராமகிருஷ்ணரின் ஆன்மிக வாழ்க்கை நெறி.  DOWNLOAD - FIND YOUR NEEDS HERE

Thursday, February 15, 2018

புதுசு போய் பழசு வருமா?


புதுசு போய் பழசு வருமா? | பி.கே.இளமாறன், மாநிலத்தலைவர், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் | புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை தொடர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஆசிரியர், அரசு ஊழியர்களின் முதன்மையான கோரிக்கையாகும். இதற்காக பல போராட்டங்களை நடத்தினோம். இதன் எதிரொலியாக அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றியமைத்திட ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தஷீலா நாயர் தலைமையில் வல்லுநர் குழுவை அமைத்தார். அக்குழு ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து மூன்று கட்டங்களாக கருத்துரைகளை கேட்டறிந்தது. அப்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தவறினால், அரசின் சார்பில் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு முதியோர் இல்லங்கள் கட்டிக்கொடுக்க வேண்டிய நிலை வரும் என்று எடுத்துரைத்தோம். வல்லுநர் குழு புதிய ஓய்வூதிய திட்டத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பினை உணர்ந்து ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு சாதகமாக ஆய்வறிக்கையை பரிந்துரைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அன்று உறுதியளித்தது. அதன்பிறகு, முதல்-அமைச்சர் மரணம் மற்றும் அரசியல் மாற்றங்களால் வல்லுநர் குழுவின் தலைவர் தன் பதவியில் இருந்து விலகினார். மீண்டும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு பிறகு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் தற்போது வல்லுநர் குழு அமைக்கப்பட்டு பணி நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதிக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த ஆசிரியர்-அரசு ஊழியர்கள் அனைவரும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி ஆசிரியர், அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம், தர ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத்தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு சமமான தொகையை அரசு தன் பங்காகச் செலுத்துகிறது. அதற்காக ஒவ்வொரு ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதியத்திட்ட எண் வழங்கப்பட்டு, அந்த கணக்கில் இந்த தொகை வரவு வைக்கப்படுகிறது. அந்த கணக்கில் சேரும் தொகையானது அரசு ஊழியர் ஓய்வுபெறும்போது 60 சதவீதம் திருப்பிக்கொடுக்கப்படும் என்றும் மீதம் உள்ள 40 சதவீதம் தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு திரும்ப அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அந்த 40 சதவீதம் தொகை எப்போது கிடைக்கும்? என்பது பற்றி தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 4.5 லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதுவரை 3 ஆயிரத்து 256 பேர் பணியில் இருந்து ஓய்வுப்பெற்று உள்ளனர். இவர்களில் ஒரு சிலர் உயர்நீதிமன்றம் சென்று 60 சதவீதம் தொகையினை பெற்றுள்ளனர். மற்றவர்கள் யாருக்கும் 60 சதவீதத்தொகை வழங்கப்படவில்லை. ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை. புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஆசிரியர்-அரசு ஊழியர்கள் பங்கு மற்றும் அரசு பங்கு என இதுவரை 18 ஆயிரம் கோடி ரூபாய் சேர்ந்துள்ளது. இது எந்த கணக்கில் தற்போது உள்ளது என்ற விவரமும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அவசர மருத்துவ செலவினங்களுக்காக கூட தேவைப்படும் தொகையை பெற முடியாது. ஆனால் பழைய ஓய்வூதியத்திட்டத்தில் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்து பணிவரன்முறை முடித்தவர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை 60 சதவீத தொகையினை அவசரத்தேவைக்கு பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. பெற்ற தொகையினை சமகால தவணை முறையில் திரும்ப செலுத்தலாம். அதுமட்டுமின்றி 15 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் 75 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை பழைய ஓய்வூதிய திட்ட கணக்கில் இருந்து பணம் பெற்றுக்கொள்ளலாம். பணம் திரும்ப செலுத்த வேண்டிய அவசியமில்லை. அதுமட்டுமின்றி பழைய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் அத்தனை பேருக்கும் ஓய்வூதியம் உண்டு. ஆனால் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள சுமார் 4.5 லட்சம் ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்துவந்தால் அவர்களுக்கு 3 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 300 ரூபாய் வரையே மாதம் கிடைக்கும். ஆனால், பழைய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறுபவர்களுக்கு மாதம் 9 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். மேலும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியம் நிச்சயத்தன்மையற்றதாகவே உள்ளது. ஆசிரியர்-அரசு ஊழியர்கள் ஓய்வுப்பெற்ற பிறகு அனாதைகளாக வேண்டிய சூழல் இருக்கிறது. எனவே, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் தொடர்ந்திட வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்த புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை மாநில அரசு ரத்து செய்ய முடியுமா? என்ற கேள்வியும் பரவலாக எழுகிறது. ஆனால் மத்திய அரசு இந்த திட்டத்தினை அறிவிக்கும்போதே செயல்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அதில், மாநில அரசு விரும்பினால் பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே தொடரலாம் என்று கூறி உள்ளது. எனவே, நவம்பர் 30-ந்தேதிக்குள் புதிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்ததற்கான அறிவிப்பை ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீதர் தலைமையிலான குழு வெளியிடுமா? அல்லது ஆசிரியர்- அரசு ஊழியர்களை மீண்டும் போராட்டத்திற்குள் தள்ளுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Wednesday, February 14, 2018

யுடியூப் மாயாஜாலங்கள்


'யுடியூப்' மாயாஜாலங்கள் | விவரம் தெரிந்த மழலைகள் முதல் தள்ளாடும் தாத்தா-பாட்டிகள்வரை ஸ்மார்ட் செல்போனை பயன்படுத்துவது தொழில்நுட்ப வளர்ச்சியின் சாதனைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. அதிலும் குறிப்பாக மாணவ, இளைய சமுதாயத்தை சொல்ல வேண்டும். செல்போன்களின் ஆதிக்கத்தில் சிக்கிக்கிடக்கிறார்கள். வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர் என்று சமூக வலைத்தளங்கள் அவர்களை வளைத்துப்போட்டு உள்ளன. இணைய தள வசதி கொண்ட செல்போன்களில் சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி இன்னும் பல இணைய தளங்களும் அதிக பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் முன்னணியில் இருப்பது 'யுடியூப்' என்ற வீடியோ பகிர்வு இணையதளம். உலகில் எந்த ஒரு மூலையிலும் ஏதாவது வித்தியாசமான சம்பவங்களோ, நிகழ்வுகளோ நடந்தால் உடனடியாக இந்த இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும். அதுமட்டுமின்றி பொது அறிவு, அறிவியல், சமூகம், விளையாட்டு, மருத்துவம், விஞ்ஞானம், கல்வி, பொழுதுபோக்கு அம்சங்கள், வர்த்தகம், அரசியல் உள்ளிட்ட அத்தனை தேவைகளுக்கும் வீடியோ பதிவுகள் மூலம் விளக்கம் பெற வேண்டுமானால் இந்த இணைய தளம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இதனால் கோடிக்கணக்கானோர் இந்த இணைய தளத்துக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். மாயாஜாலங்கள் நிறைந்த 'யுடியூப்' வீடியோ பகிர்வு இணைய தளம் தோன்றிய விதம் சுவாரசியமானது. இதை உருவாக்கியவர்கள் கம்ப்யூட்டர் பட்டதாரிகள் 3 பேர். அமெரிக்கா பென்சில்வேனியாவில் உள்ள இண்டியானா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் டிசைனிங் படித்த சாட்ஹர்லி மற்றும் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் அறிவியல் படித்த ஸ்டீவ்சென், ஜாவித்கரீம் ஆகிய 3 பேர் சேர்ந்து உருவாக்கினார்கள். இவர்கள் மூவரும் பேபால் என்ற நிறுவனத்தில் பணியில் இருந்தபோது, இந்த இணைய தளம் கடந்த 2005-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி இரவு 9.13 மணிக்கு செயல்பாட்டுக்கு வந்தது. அதே ஆண்டில் ஏப்ரல் மாதம் 23-ந்தேதி அந்த இணைய தளத்தில் வீடியோ பதிவேற்ற வசதி கொண்டுவரப்பட்டது. 'யுடியூப்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட முதல் வீடியோ காட்சியின் தலைப்பு 'மிருககாட்சி சாலையில் நான்' என்பதாகும். அதில் முதலில் தோன்றியவர் இணைய தளத்தை உருவாக்கியவர்களுள் ஒருவரான ஜாவித்கரீம். இவர் சான்டிகோ என்ற மிருக காட்சி சாலையில் இருந்தபோது எடுத்த வீடியோவைத்தான் முதலில் பதிவேற்றம் செய்தனர். இது தொடங்கப்பட்ட சிறிது காலத்திலேயே உலக அளவில் சிறப்பான வளர்ச்சியை காண ஆரம்பித்தது. 2006-ம் ஆண்டு ஜூலை மாத காலகட்டத்திலேயே ஒரு நாளைக்கு 10 கோடி வீடியோ காட்சிகளை காண்பிக்கும் அளவுக்கு வளர்ச்சி பெற்று அலெக்சாவில் 5-வது அதிபிரசித்தி பெற்றதாக மாறியது. இதை மாதத்துக்கு சராசரியாக 20 கோடி பேர் பார்வையிடுகிறார்கள் என்று 2006-ம் ஆண்டிலேயே நீல்சன்நெட் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சியை கண்ட கூகுள் நிறுவனம் 2006-ம் ஆண்டிலேயே 'யுடியூப்'பை வாங்கிக் கொண்டது. அதன்பிறகு 'யுடியூப்' வளர்ச்சி பாதையில் வேகமெடுத்தது. சிஎன்என், எம்ஜிஎம், எபிஎஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து டி.வி. நிகழ்ச்சிகள், உரையாடல்கள், முழுநீள திரைப்படங்கள், விளையாட்டுகள் போன்றவற்றை வழங்கியது. 2009-ம் ஆண்டில் 4 ஆயிரம் முழுநீள நிகழ்ச்சிகளை 60 பங்குதாரர்களுடன் இணைந்து வெளியிட்டது. 2010-ம் ஆண்டில் இந்தியன் பிரிமீயர் லீக் எனும் 60 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தனது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து அத்துணை கிரிக்கெட் ரசிகர்களையும் தன்வசம் ஈர்த்துக் கொண்டது 'யுடியூப்'. இதன்மூலம் உலக அளவில் முதன் முதலாக மிகப்பெரிய கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக வெளியிட்ட பெருமையை தக்கவைத்துக் கொண்டது. பல்வேறு மாற்றங்களை செய்து வந்த 'யுடியூப்'பில் 2012-ம் ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி முதல் செல்போன் மற்றும் டேப்லெட்களில் (கையடக்க கணினி) பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. அன்று முதல் கம்ப்யூட்டர்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த 'யுடியூப்', செல்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. அதன்பிறகு 2013-ம் ஆண்டில் 'யுடியூப்' வீடியோ இணைய தளத்தை பார்க்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மாதத்துக்கு 100 கோடியை தாண்டிவிட்டதாக அந்நிறுவனம் கணக்கெடுத்துள்ளது. இந்த எண்ணிக்கை இப்போது பலநூறு கோடிகளை தாண்டிவிட்டது. பல்வேறு புதுமை வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்த இந்த நிறுவனம் மொழி வாரியாகவும் தனது எல்லைகளை விரிவடைய செய்ய தவறியதில்லை. ஆங்கிலம், போர்ச்சுக்கீசியம், இத்தாலி, ஜப்பானிஷ், ஸ்பானிஷ், சீன மொழி, பிரெஞ்ச், அரேபியம் என்று உலக மொழிகள் பலவற்றை புகுத்திய 'யுடியூப்', இந்தியாவில் 2008-ம் ஆண்டு இந்தி, வங்காளம், ஆங்கிலம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், தமிழ், மராட்டியம், தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளை தன்னுள் ஏற்றுக் கொண்டது. நிறுவனம் தொடங்கப்பட்டபோது கலிபோர்னியாவில் உள்ள சான் மேத்யோ என்ற ஜப்பானிய உணவக கட்டிடத்தில் செயல்பட்டது. தற்போது இதன் தலைமையகம் கலிபோர்னியாவில் சான்புருனோவில் செயல்படுகிறது. சிறந்த ஜனநாயகத்தை உருவாக்கும் வகையில் 'ஸ்பீக்கர்ஸ் கார்னர்ஸ்' என்ற உரையாடல் நிகழ்ச்சியை நடத்தியதற்காக 'பேபாடி' என்ற விருது, சிறந்த வீடியோக்களை வெளியிட்டதற்காக சிறப்பு விருதுகள் என விருதுகளையும் 'யுடியூப்' அள்ளி இருக்கிறது. பல்வேறு வீடியோ இணைய தளங்களுக்கு நடுவே நீண்டகாலமாக பலதரப்பட்ட மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் தனித்துவம் கொண்ட 'யுடியூப்' செயல் பாட்டுக்கு வந்த தினம் இன்று (பிப்ரவரி 14).

Tuesday, February 13, 2018

இந்தியாவின் முதல் பெண் கவர்னர்


இந்தியாவின் முதல் பெண் கவர்னர் | இன்று (பிப்ரவரி 13) சரோஜினி நாயுடு பிறந்த நாள். புகழ்பெற்ற கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகம் கொண்ட சரோஜினி நாயுடு, இந்தியாவின் முதல் பெண் கவர்னர், இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் போன்ற சிறப்புகளுக்கும் சொந்தக்காரர். இந்தியர்களின் கவிக்குயில், பாரதீய கோகிலா என்றும் புகழப்படுபவர். ஐதராபாத்தில் பிறந்த இவர், சென்னை பல்கலைக்கழக மெட்ரிக் தேர்வில் முதலிடத்தில் தேர்ச்சிபெற்று தேசிய அளவில் சாதனை படைத்தார். சிறுவயதிலேயே கவிதைகள் புனையும் திறனை வளர்த்துக் கொண்ட சரோஜினிக்கு அதுவே, லண்டனில் உள்ள கிங் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலையில் கல்லூரிக் கல்வி பயின்றார். கணிதமேதை அல்லது கவிஞராக வேண்டும் என விரும்பிய சரோஜினியை அவரது எழுத்தாற்றல் பாதை மாற்றியது. அவரது கவிதைகள் இந்திய சிறப்புகள், இந்திய மக்களின் வாழ்வியல் முறைகள், பண்பாடு, கலாசாரம் போன்றவற்றை பிரதிபலிப்பதாகவே அமைந்தன. அவரது 'தி கோல்டன் திரேஷோல்டு', 'தி பார்ட் ஆப் டைம்', 'தி ப்ரோசன் விங்' ஆகிய படைப்புகள் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் வெகுபிரபலம். காதல் கலப்பு திருமணத்துக்கு அந்தக்காலத்திலேயே அடித்தளமிட்டவர் அவர். தனது 19-வது வயதில் தனது சாதியை சேராத கோவிந்தராஜுலு என்பவரை காதலித்து கரம்பிடித்தார். இது அவரது முதல் புரட்சி. இல்லற வாழ்க்கையில் தன்னை நுழைத்துக் கொண்டாலும் அவரது எண்ணம் முழுக்க, முழுக்க இந்திய தேசம், அதன் வளர்ச்சி மீதே இருந்தது. அதன் விளைவே, வங்கதேச பிரிவினையின்போது (1905) அவரை இந்திய தேசிய இயக்கத்தில் சேரவைத்தது. அதன்மூலம் காந்தி, நேரு, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட தலைவர்களுடன் தொடர்பையும் ஏற்படுத்திக் கொண்டு முழுமையாகவே தேசத்துக்காக தன்னை அர்ப்பணித்தார். 1925-ம் ஆண்டு நடந்த சட்டமறுப்பு இயக்க போராட்டம், 1942-ம் ஆண்டில் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில் பங்கேற்று சிறைவாசம் செய்தார். சுதந்திர இந்தியாவில் முதல் பெண் கவர்னராக (தற்போதைய உத்தரபிரதேசம்) நியமிக்கப்பட்ட பெருமையையும் பெற்றவர் இவர். பெண்கள் நலன், முன்னேற்றம், உரிமைகள் போன்றவற்றிற்காக நாட்டின் பல்வேறு நகரங்கள், மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனால் இவரது பிறந்தநாள் தேசிய மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. -முக்கூடற்பாசன்

மருத்துவ மாணவர்களின் தொடர் தற்கொலைகள் முடிவுக்கு வருமா?


மருத்துவ மாணவர்களின் தொடர் தற்கொலைகள் முடிவுக்கு வருமா? | டெல்லியில் உள்ள ஒரு பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் எம்.டி. படித்துவந்த திருப்பூர் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரத்பிரபு, கடந்த மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த கடலூர் மாவட்டம் திட்டக்குடி குடிகாட்டை சேர்ந்த சுந்தரவேல் என்ற மருத்துவ மாணவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதே போல கடந்த 2016-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சரவணன் என்ற மாணவரும், 2017-ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முத்துகிருஷ்ணன் என்ற மாணவரும் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இவ்வாறு, மருத்துவ மாணவர்கள் மர்ம மரணம் அடைவதும், தற்கொலை செய்துகொள்வதும் அதிகரித்து வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மருத்துவ மாணவர்களின் தொடர் தற்கொலைக்கு காரணம் என்ன? அன்றைய காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் 8 மருத்துவ கல்லூரிகள் இருந்தன. கல்லூரிகள் இருந்த மாவட்டத்தை சுற்றி இருந்த பகுதி மாணவர்கள் அங்கேயே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவர்கள் தங்கி இருக்கும் இடங்களுக்கு மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் அடிக்கடி வந்து பார்த்து சென்றனர். இது மாணவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. உறவுகள் மேம்பட்டன. இன்று 23 அரசு மருத்துவ கல்லூரிகள் வந்துவிட்டன. தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கிய மாணவன் சென்னையிலோ, பிற இடங்களிலோ சேரக்கூடிய நிலை ஏற்படுகிறது. இதனால் அவன் குடும்பத்தை விட்டு, பெற்றோரை பிரிந்து புதிய சூழ்நிலையில் கல்லூரியில் சென்று சேருகிறான். கிராமங்களில் இருந்து நகரத்திற்கு வரும் மாணவன் கல்லூரி பேராசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு நகர்ப்புற மாணவர்களை போல ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அவனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு மனஉளைச் சலுக்கு ஆளாகிறான். 2-வது ஆண்டு படிக்கும்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்போது 10 மாணவர்கள் செல்வர். இவர்களில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் இருப்பார்கள். அவர்களின் நாகரிக மோகத்தில் மூழ்கி, சினிமா நடன கிளப் போன்றவற்றுக்கு செல்வதுண்டு. சிலர் மதுவுக்கும், போதை மருந்துக்கும் அடிமையாகும் வாய்ப்பு இருக்கிறது. இந்த பழக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் தவிப்பர். இது ஒருபுறமிருக்க படிப்பின் சுமையும் அதிகமாகிறது. பெற்றோரை பிரிந்து இருக்கும்போது சூழ்நிலைக்கேற்ப தங்களை வசப்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் மனஉளைச்சல் ஏற்படுகிறது. தற்கொலை செய்யும் விபரீத எண்ணத்தை தூண்டிவிடுகிறது. பெண்கள் ஆடைகள் அணியும் முறையில் ஏற்பட்ட மாற்றம் பாலியல் உணர்வுகளை தூண்டும் விதத்தில் அமைந்துவிடுகிறது. இதனால் காதல் மோகத்தில் சிக்கி, அது கைகூடாத பட்சத்தில் தற்கொலை முடிவுக்கு வந்துவிடுகின்றனர். நொடிப்பொழுதில் செய்தியை கொண்டு சேர்க்கும் வாட்ஸ்அப் யுகத்தில் காதலும், காதல் முறிவும் இயல்பானதுதான். இதை புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில், ஏன் இந்தியா முழுவதும் பல இடங்களிலும் நிலவும் சாதி பாகுபாடும் நீரு பூத்த நெருப்பாக இருக்கிறது. இதுவும் பல இடங்களில் பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது. இதன் பாதிப்பு சற்று குறைந்துவிட்டது என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால் ஏழ்மையால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை மனஉளைச்சலை கொண்டு வரத்தான் செய்கிறது. இதனால் மனம் நொந்து மடிந்தவர்களும் உண்டு. ஆனால் எதிலும் எதிர்த்து நின்றால் வெற்றியே. அதே போல, ஆசிரியர், ஆசிரியைகளின் பாரபட்சமான போக்கும் நிச்சயம் மாணவ, மாணவிகளுக்கு மன உளைச்சலை கொடுக்கும் வாய்ப்பு அதிகம். முறையாக கல்வி பயின்று சிறப்பாக சொல்லிக்கொடுக்கும் பல ஆசிரியர்களுக்கு நடுவில் ஒட்டி இருக்கும் அரை வேக்காடுகளும் அதிகம். அதனால் மாணவ, மாணவியர் புத்தகம் ஒன்றையே துணையாகக் கொண்டு புரிந்தும், புரியாமலும் பாடத்தை படித்து காலத்தை கடத்துகிறார்கள். தற்போதைய சூழலில் ஆசிரியர்கள், மருத்துவர்கள் போதுமான அளவுக்கு பணியமர்த்தப்பட வேண்டும். அரசு கல்லூரிகள், ஒரு சில தனியார் கல்லூரிகள் நிலைமை மோசமாக இருக்கிறது. மாணவர்கள், மாணவியர்களின் நடவடிக்கைகள் கவனிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மருத்துவ ஆசிரியருக்கும் அந்தப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். பணியில் அர்ப்பணிப்பு இல்லாத மருத்துவ ஆசிரியர்கள் தூக்கி எறியப்பட வேண்டும். வகுப்பு எடுக்காமல் டிமிக்கி கொடுப்பவர்கள், மாணவர்கள் இல்லாத மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட வேண்டும். கல்லூரியில் முதல்வராக வருபவர்கள் அவசியமாக அரசு உதவிப்பணத்தை விரைவில் தாமதமின்றி மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். விடுதிகளுக்கு அடிக்கடி திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அங்கு இருக்கும் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்துகொடுக்க வேண்டும். மாணவ, மாணவியரின் திறமைகளை வெளிக்கொணர்வது போன்ற கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், பட்டி மன்றங்கள் நடத்த வேண்டும். உளவியல் மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்கள் அதிக எண்ணிக்கையில் அமர்த்தப்பட்டு, மாணவ-மாணவிகளை குழுக்களாக சந்திக்க வேண்டும். பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களை மன ரீதியாக பலப்படுத்த வேண்டும். தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டும் தான் கட்டணமாக வசூலிக்கப்படுகிறதா? அல்லது மேலும் பணம் கேட்டு துன்புறுத்துகிறார்களா? என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், இது நாள் வரை நடந்த மருத்து மாணவ, மாணவியரின் தற்கொலைகள், மர்ம மரணங்களை விஞ்ஞானப்பூர்வமாக அணுக வேண்டும். மாணவர்களின் தற்கொலைகளுக்கான உண்மையான காரணங்களை பட்டியலிட்டு, மீண்டும் தற்கொலை நிகழ்வுகள் அரங்கேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். | டாக்டர் ஏ.ஜேசுதாஸ்