You will be redirected to the script in

seconds
Kalvisolai.Info: யுடியூப் மாயாஜாலங்கள்
உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Wednesday, February 14, 2018

யுடியூப் மாயாஜாலங்கள்


'யுடியூப்' மாயாஜாலங்கள் | விவரம் தெரிந்த மழலைகள் முதல் தள்ளாடும் தாத்தா-பாட்டிகள்வரை ஸ்மார்ட் செல்போனை பயன்படுத்துவது தொழில்நுட்ப வளர்ச்சியின் சாதனைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. அதிலும் குறிப்பாக மாணவ, இளைய சமுதாயத்தை சொல்ல வேண்டும். செல்போன்களின் ஆதிக்கத்தில் சிக்கிக்கிடக்கிறார்கள். வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர் என்று சமூக வலைத்தளங்கள் அவர்களை வளைத்துப்போட்டு உள்ளன. இணைய தள வசதி கொண்ட செல்போன்களில் சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி இன்னும் பல இணைய தளங்களும் அதிக பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் முன்னணியில் இருப்பது 'யுடியூப்' என்ற வீடியோ பகிர்வு இணையதளம். உலகில் எந்த ஒரு மூலையிலும் ஏதாவது வித்தியாசமான சம்பவங்களோ, நிகழ்வுகளோ நடந்தால் உடனடியாக இந்த இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும். அதுமட்டுமின்றி பொது அறிவு, அறிவியல், சமூகம், விளையாட்டு, மருத்துவம், விஞ்ஞானம், கல்வி, பொழுதுபோக்கு அம்சங்கள், வர்த்தகம், அரசியல் உள்ளிட்ட அத்தனை தேவைகளுக்கும் வீடியோ பதிவுகள் மூலம் விளக்கம் பெற வேண்டுமானால் இந்த இணைய தளம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இதனால் கோடிக்கணக்கானோர் இந்த இணைய தளத்துக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். மாயாஜாலங்கள் நிறைந்த 'யுடியூப்' வீடியோ பகிர்வு இணைய தளம் தோன்றிய விதம் சுவாரசியமானது. இதை உருவாக்கியவர்கள் கம்ப்யூட்டர் பட்டதாரிகள் 3 பேர். அமெரிக்கா பென்சில்வேனியாவில் உள்ள இண்டியானா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் டிசைனிங் படித்த சாட்ஹர்லி மற்றும் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் அறிவியல் படித்த ஸ்டீவ்சென், ஜாவித்கரீம் ஆகிய 3 பேர் சேர்ந்து உருவாக்கினார்கள். இவர்கள் மூவரும் பேபால் என்ற நிறுவனத்தில் பணியில் இருந்தபோது, இந்த இணைய தளம் கடந்த 2005-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி இரவு 9.13 மணிக்கு செயல்பாட்டுக்கு வந்தது. அதே ஆண்டில் ஏப்ரல் மாதம் 23-ந்தேதி அந்த இணைய தளத்தில் வீடியோ பதிவேற்ற வசதி கொண்டுவரப்பட்டது. 'யுடியூப்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட முதல் வீடியோ காட்சியின் தலைப்பு 'மிருககாட்சி சாலையில் நான்' என்பதாகும். அதில் முதலில் தோன்றியவர் இணைய தளத்தை உருவாக்கியவர்களுள் ஒருவரான ஜாவித்கரீம். இவர் சான்டிகோ என்ற மிருக காட்சி சாலையில் இருந்தபோது எடுத்த வீடியோவைத்தான் முதலில் பதிவேற்றம் செய்தனர். இது தொடங்கப்பட்ட சிறிது காலத்திலேயே உலக அளவில் சிறப்பான வளர்ச்சியை காண ஆரம்பித்தது. 2006-ம் ஆண்டு ஜூலை மாத காலகட்டத்திலேயே ஒரு நாளைக்கு 10 கோடி வீடியோ காட்சிகளை காண்பிக்கும் அளவுக்கு வளர்ச்சி பெற்று அலெக்சாவில் 5-வது அதிபிரசித்தி பெற்றதாக மாறியது. இதை மாதத்துக்கு சராசரியாக 20 கோடி பேர் பார்வையிடுகிறார்கள் என்று 2006-ம் ஆண்டிலேயே நீல்சன்நெட் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சியை கண்ட கூகுள் நிறுவனம் 2006-ம் ஆண்டிலேயே 'யுடியூப்'பை வாங்கிக் கொண்டது. அதன்பிறகு 'யுடியூப்' வளர்ச்சி பாதையில் வேகமெடுத்தது. சிஎன்என், எம்ஜிஎம், எபிஎஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து டி.வி. நிகழ்ச்சிகள், உரையாடல்கள், முழுநீள திரைப்படங்கள், விளையாட்டுகள் போன்றவற்றை வழங்கியது. 2009-ம் ஆண்டில் 4 ஆயிரம் முழுநீள நிகழ்ச்சிகளை 60 பங்குதாரர்களுடன் இணைந்து வெளியிட்டது. 2010-ம் ஆண்டில் இந்தியன் பிரிமீயர் லீக் எனும் 60 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தனது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து அத்துணை கிரிக்கெட் ரசிகர்களையும் தன்வசம் ஈர்த்துக் கொண்டது 'யுடியூப்'. இதன்மூலம் உலக அளவில் முதன் முதலாக மிகப்பெரிய கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக வெளியிட்ட பெருமையை தக்கவைத்துக் கொண்டது. பல்வேறு மாற்றங்களை செய்து வந்த 'யுடியூப்'பில் 2012-ம் ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி முதல் செல்போன் மற்றும் டேப்லெட்களில் (கையடக்க கணினி) பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. அன்று முதல் கம்ப்யூட்டர்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த 'யுடியூப்', செல்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. அதன்பிறகு 2013-ம் ஆண்டில் 'யுடியூப்' வீடியோ இணைய தளத்தை பார்க்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மாதத்துக்கு 100 கோடியை தாண்டிவிட்டதாக அந்நிறுவனம் கணக்கெடுத்துள்ளது. இந்த எண்ணிக்கை இப்போது பலநூறு கோடிகளை தாண்டிவிட்டது. பல்வேறு புதுமை வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்த இந்த நிறுவனம் மொழி வாரியாகவும் தனது எல்லைகளை விரிவடைய செய்ய தவறியதில்லை. ஆங்கிலம், போர்ச்சுக்கீசியம், இத்தாலி, ஜப்பானிஷ், ஸ்பானிஷ், சீன மொழி, பிரெஞ்ச், அரேபியம் என்று உலக மொழிகள் பலவற்றை புகுத்திய 'யுடியூப்', இந்தியாவில் 2008-ம் ஆண்டு இந்தி, வங்காளம், ஆங்கிலம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், தமிழ், மராட்டியம், தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளை தன்னுள் ஏற்றுக் கொண்டது. நிறுவனம் தொடங்கப்பட்டபோது கலிபோர்னியாவில் உள்ள சான் மேத்யோ என்ற ஜப்பானிய உணவக கட்டிடத்தில் செயல்பட்டது. தற்போது இதன் தலைமையகம் கலிபோர்னியாவில் சான்புருனோவில் செயல்படுகிறது. சிறந்த ஜனநாயகத்தை உருவாக்கும் வகையில் 'ஸ்பீக்கர்ஸ் கார்னர்ஸ்' என்ற உரையாடல் நிகழ்ச்சியை நடத்தியதற்காக 'பேபாடி' என்ற விருது, சிறந்த வீடியோக்களை வெளியிட்டதற்காக சிறப்பு விருதுகள் என விருதுகளையும் 'யுடியூப்' அள்ளி இருக்கிறது. பல்வேறு வீடியோ இணைய தளங்களுக்கு நடுவே நீண்டகாலமாக பலதரப்பட்ட மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் தனித்துவம் கொண்ட 'யுடியூப்' செயல் பாட்டுக்கு வந்த தினம் இன்று (பிப்ரவரி 14).

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.