You will be redirected to the script in

seconds
Kalvisolai.Info: சரித்திரம் படைத்த சத்ரபதி சிவாஜி
உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Monday, February 19, 2018

சரித்திரம் படைத்த சத்ரபதி சிவாஜி


சரித்திரம் படைத்த சத்ரபதி சிவாஜி | எழுத்தாளர் எம்.குமார் | இன்று (பிப்ரவரி 19) சத்ரபதி சிவாஜி பிறந்தநாள். | மராட்டிய மன்னர்களுள் ஒருவரான இவர், பூனாவில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிவனேர் கோட்டையில், கி.பி. 1627-ம் ஆண்டில் ஷாஜி பான்ஸ்லே, ஜீஜாபாய் தம்பதிக்கு மகனாய் பிறந்தார். ஷாஜி பான்ஸ்லே, துர்காபாய் என்பவரை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்துகொண்டு அவரோடு தனியாக வாழ்ந்து வந்தார். இதனால் சிவாஜியும் அவரது தாயார் ஜீஜாபாயும் பூனாவில் தனியாக வசித்தனர். சிவாஜி, சிறுவயதில் இருந்தே நாட்டின் வரலாற்றையும் நாட்டு நடப்பையும் நன்கு தெரிந்துகொண்டார். பொதுவாழ்க்கையில் சிறிது, சிறிதாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தனது நாட்டின் ஆட்சியை அந்நியர்கள் பிடித்து கொண்டு தவறாக வழிநடத்துகிறார்கள் என்று சிந்திக்கலானார். 'இளம் கன்று பயமறியாது' என்பதை போல தனது 19-வது வயதிலே சுல்தானுக்கு எதிராக படையெடுப்பை தொடங்கினார், சிவாஜி. சிம்ஹகர், புரந்தர் ஆகிய கோட்டைகளை கைப்பற்றினார். சிவாஜியின் நடவடிக்கைளைக் கண்டு அதிர்ச்சியுற்ற பிஜப்பூர் சுல்தான், அவருக்கு எதிராக அப்சல்கான் தலைமையில் ஒரு படையை அனுப்பி அவரை உயிருடனோ, பிணமாகவோ பிடித்துவரும்படி உத்தரவிட்டார். பிரதாப்கர் கோட்டையில் இருந்த சிவாஜிக்கு இந்தத் தகவல் கிடைத்தது. பிஜப்பூர் சுல்தான் தளபதியான கிருஷ்ணாஜி பாஸ்கர் ஒரு மராட்டிய அந்தணர். அவரை சிவாஜியும் நன்கு அறிவார். சுல்தானின் தூதுவராக வந்த அவர், சிவாஜியின் தூதுவரான கோபிநாத்தின் மூலம் மத சம்பந்தமான கூட்டம் ஒன்றை சுல்தான் நடத்துவதற்கு உடன்பாடு செய்யவே சிவாஜியை அழைக்கிறார் என்ற தகவலை கூறினார். சிவாஜியின் பெருந்தன்மையான பண்பையும், தூதுவர் என்ற முறையில் தனக்களித்த வரவேற்பையும் கண்டவுடன் தான் இனியும் உண்மையை மறைப்பது நேர்மையல்ல என்று எண்ணி கோபிநாத்திடம் தான் கொண்டுவந்த செய்தி சிவாஜிக்கு எதிரான பொல்லாத சதிச் செய்தி என்பதை கிருஷ்ணாஜி பாஸ்கர் மறைமுகமாக தெரிவித்தார். சிவாஜிக்கு உண்மையான செய்தி கிடைத்த பின்னும் கிருஷ்ணாஜிக்கு தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக மிகுந்த கவனத்துடன் சுல்தானைச் சந்திக்க முற்பட்டார். வெளிப்பார்வைக்கு ஆயுதம் எதையும் வைத்திருப்பதாகக் காட்டிக் கொள்ளாமல், நெருக்கடி நேர்ந்தால் சூழ்ச்சியை, சூழ்ச்சி மூலம் எதிர்கொள்வதற்காக உடலில் தற்காப்புக் கவசத்தை அணிந்துகொண்டு புறப்பட்டார். உடல் வலிமையும், நல்ல உயரமும் உள்ள தளபதி அப்சல்கான் சிவாஜியை அன்புடன் கட்டித் தழுவி வரவேற்கும் பாவனையில் தனது இடது கையால் உடும்புப் பிடியாக அவரைப் பிடித்து வலது கையால் சிவாஜியின் உடலில் தன்னிடம் உள்ள கூர்வாளால் குத்திக் கொல்வதற்கு முற்பட்டார். சுல்தானின் தளபதியான இவருடைய தாக்குதலை எதிர்கொள்வதற்கு, சிவாஜி அணிந்திருந்த இரும்புக் கவசம் உதவியது. சுதாரித்துக் கொண்ட சிவாஜி தனது கையில் புலிநகம் போன்ற அமைப்பில் இருந்த எக்கு அலகுகளால் நொடிப்பொழுதில் தளபதியின் கழுத்தில் குத்திக் கிழித்துத் தாக்கி, அந்த இடத்திலேயே அவரைப் பிணமாக்கினார். இதற்கும் மேலாக சிவாஜி தயாராக ரகசியமாக நாலாபுறமும் வைத்திருந்த படைகள் முன்வந்து பெரும்போர் புரிந்தன. சுல்தானின் படை தோற்கடிக்கப்பட்டது. 1664-ல் சிவாஜி சூரத்தைத் தாக்கி அங்கே உள்ள செல்வங்களைத் தன்வசமாக்கினார். அவுரங்கசிப் ஒரு படையை ராஜா ஜெய்சிங் தலைமையில் சிவாஜிக்கு எதிராக அனுப்பினார். சிவாஜிக்கும், அவுரங்கசிப்புக்கும் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி சிவாஜியின் வசமிருந்த 35 கோட்டைகளில் 23-ஐ முகலாயர்களுக்கு விட்டுத் தந்துவிட்டு 12-ஐ மட்டும் சிவாஜி வைத்துக்கொள்வது என தீர்மானம் ஆனது. அது 'புரந்தர் உடன்படிக்கை' என்று அழைக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட சிவாஜியை ஆக்ராவில் உள்ள அரண்மனைக்கு அவுரங்கசிப் அழைத்தார். அதன்படி அங்கு சென்ற சிவாஜியும், அவரது மகனும் அவுரங்கசிப்பால் சிறை வைக்கப்பட்டனர். தந்தையும், மகனும் தந்திரமாக மாறுவேடம் பூண்டு தப்பித்தனர். பிறகு, 1670-ல் சிவாஜி மீண்டும் முகலாயருடன் போரிட்டு கொண்ட்வானா, புரந்தர், மாவலிநந்தல் ஆகிய கோட்டைகளைக் கைப்பற்றினார். 1674-ல் அவுரங்கசிப்பிடமிருந்த பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றினார். 1674-ல் ரெய்காரிலுள்ள தனது கோட்டையில் 'சத்ரபதி' என்ற பட்டத்துடன் அரியணை ஏறினார். அன்று முதல் 'சத்ரபதி சிவாஜி' என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். தக்காணத்தில் இதற்கான முடிசூட்டு விழாவை நடத்தி, இந்து சாம்ராஜ்யத்தைத் தக்காணத்தில் நிறுவிய பெருமை அவரையே சாரும். இதுதான் பிற்காலத்தில் சிவாஜி கண்ட 'இந்து சாம்ராஜ்யம்' எனப் பெயர் பெற்றது. வேலூர், செஞ்சி கோட்டைஉள்பட பல கோட்டைகளைக் கைப்பற்றியதால் அவருடைய மதிப்பு மேலும் உயர்ந்தது. வரலாற்றுப் பேராசிரியர்கள் சிவாஜியை நெப்போலியனோடு ஒப்பிட்டுக் கூறியிருக்கின்றனர். எட்டு பேர் கொண்ட சிவாஜியின் மந்திரி சபை, 'அஷ்டப் பிரதான்' என்று அழைக்கப்பட்டது. அவருடைய வருவாய் நிர்வாகம் பிற்காலத்தில் கூட பின்பற்றப்பட்டது. அவர் சென்னையில் இருக்கும் காளிகாம்பாள் கோவிலுக்கு வருகை தந்திருக்கிறார். அதை குறிக்கும் கல்வெட்டு அக்கோவிலில் இருப்பதை இன்றும் காணலாம். அவர் 1680-ம் ஆண்டு ஏப்ரல் 4-ல் இறந்தார். முகலாய அரசின் வீழ்ச்சிக்குப்பின் 40 வருடங்கள் மராட்டிய அரசு மராட்டியம், தக்காணம் ஆகிய பகுதிகளை ஆண்டு வந்தது. சிவாஜிக்குப்பின் 1761 வரை மராட்டிய அரசு சிறப்பாகச் செயல்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.