You will be redirected to the script in

seconds
Kalvisolai.Info: அறம் வளர்ந்த மண்ணில் மரம் வளர்த்த சோழ மன்னன்
உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Monday, February 26, 2018

அறம் வளர்ந்த மண்ணில் மரம் வளர்த்த சோழ மன்னன்


அறம் வளர்ந்த மண்ணில் மரம் வளர்த்த சோழ மன்னன் | ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் சோழர்கள் வரலாறு பேசப்படுவதற்குக் காரணம் அவர்கள் வானளாவ எழுப்பியக் கலைக்கோவில்கள் மட்டுமல்ல. கட்டிடக் கலையின் உச்சம் தொட்ட சோழர்கள், தாங்கள் கட்டிய கோவில்களில் பூஜை முறைகளுக்கும், விழாக்களுக்கும், இசை, நாட்டிய கலை வளர்க்கவும், தேவாரம் இசைப்பதற்கும் ஏராளமான நிலங்களை வழங்கிய நிர்வாக முறையும் கூட ஒரு காரணமாகும். ஆடுகள், மாடுகள், காசுகள், பொன் நகைகள் வழங்கியது போன்ற தகவல்களை ஆவணமாகப் பதிவு செய்துள்ளார்கள். இவைதான் பெரும்பாலான கல்வெட்டுகள் தரும் தகவல்கள். ஆனால் இவற்றிற்கு மாறாக, மரங்களை நட்டு கோவிலின் நிதி ஆதாரத்தையும் பெருக்கிய தகவலை தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டுத் தருகிறது. சோழர்கால சிற்பக் கலையின் உச்சம் தொட்ட இக்கோவில் யுனெஸ்கோ நினைவுச் சின்னமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. மாமன்னன் ராஜராஜ சோழனை அடுத்து வந்த எட்டாவது மன்னன் இரண்டாம் ராஜராஜ சோழன். இவனது பேர் சொல்லும் பேரன் மூன்றாம் ராஜராஜ சோழன் (கி.பி.1216-கி.பி.1260) இவனது இருபதாவது ஆட்சியாண்டில் நடந்த மிகக் கொடுமையான நிகழ்வால், தாராசுரம் கோவில் வளாகத்தில் இருந்த தென்னை, மா, புளி, பலா உள்பட ஏராளமான மரங்கள் விழுந்துவிட்டன. இந்த பேரழிவு காவிரி வெள்ளத்தாலா, சூறாவளி, புயல், மழையினாலா ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் கல்வெட்டில் உள்ள 'துராக்கிரமான நாளிலே' என்ற சொற்றொடரால் அந்நியர் படையெடுப்பால் கூட நிகழ்ந்து இருக்க வாய்ப்பு உண்டு. மேலும் இதே கல்வெட்டின் வாசகங்களின்படி பார்த்தால் தாராசுரம் கோவில், இன்றுள்ளதை விட மிகப் பெரிய பரந்த நிலப்பரப்பின் நடுவே, மரங்கள் அடர்ந்த தோப்புகளின் நடுவே இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. தாராசுரம் கோவில் வளாகத்தின் கிழக்கு புறத்திலும், மேற்கு புறத்திலும் ராஜராஜன் பெயரால் அமைந்த மிகப்பெரிய வளாகத்திலும் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்து விடுகின்றன. அவ்வாறு சாய்ந்த மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டன. பெருந்தோப்புகளை இழந்து பொட்டல் காடாகிப் போனது. கோவில் பூஜை முறைகள், தேர் திருவிழாக்கள் போன்ற நடைமுறைகளுக்கான நிதியாதாரமும் நின்று போனது. தன் பாட்டனார் கட்டிக் காத்தக் கோவிலுக்கும், வைத்துக் காத்த மரங்களுக்கும் ஏற்பட்ட பெரும் அழிவைக் கண்டு மூன்றாம் ராஜராஜ சோழனுக்குப் பெருங்கவலை. பேரழிவு நடைபெற்று ஓராண்டாகியும் மாற்று ஏற்பாடு எதுவும் செய்யமுடியாமல் உள்ளதே என்ன செய்யலாம்? இம்மன்னனின் மதியமைச்சர்களில் ஒருவர் பொத்தப்பிச் சோழர். அவர் மன்னனின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டார். மன்னனின் மனக்கவலை தீர ஒரு புதுமையான திட்டத்தை முன்வைக்கிறார். அது என்ன இதுவரை இல்லாத புதுமையான திட்டம்? கோவில்கள் நிதி ஆதாரத்திற்கு இதுவரை நிலம், ஆடு, மாடு, காசுகள் கொடுப்பதுதான் நடைமுறை. இதுதானே இதுநாள் வரை எல்லா கோவில்களிலும், ஜைன, பவுத்த மடாலயங்களிலும் பின்பற்றப்படுகின்றது? இவையெல்லாம் அமைச்சரின் திட்டத்தை கேட்ட மன்னனின் மனதில் ஓடிய கேள்விகள். பிறகு, சரியான யோசனையாகத்தான் இருக்கிறது. நமக்கு கொழுக்கட்டை வேண்டும். அவ்வளவுதான்! என எண்ணி இத்திட்டத்தை நடைமுறைப்படுத்திட மன்னன் ஆணை இடுகிறான். அந்த ஆணை தாராசுரம் கோவில் நுழைவு வாயில் வலப்புறம் அனைவரும் அறியும் வண்ணம் கல்வெட்டாகப் பதிவு செய்யப்பட்டது. அந்த கல்வெட்டு தரும் தகவல்படி, தாராசுரம் (ராஜராஜபுரம்) மக்களில் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு தென்னை, மா, புளி, பலா போன்ற பலன் தரும் மரக்கன்றுகளும், பிற மரக்கன்றுகளும் தரப்படுகின்றன. இவைகளைத் தேவைப்படுவோர் விலை கொடுத்துதான் வாங்கவேண்டும். (இனாமாகக் கொடுத்தால் அதற்கு மரியாதையே கிடையாதே!) இக்கன்றுகளை கோவில் வளாகத்தில் உள்ள இடங்களில் இவர்கள் நட்டு, நீருற்றி வளர்த்துப் பராமரிக்க வேண்டும். இதுவும் இறைவனுக்காற்றும் தொண்டுதானே! மன்னன் ஆணைக்கு மறுப்பு உண்டா? மரக் கன்றுகள் வாங்கினார்கள், நட்டார்கள், வளர்த்தார்கள், மரங்கள் ஆளாகிவிட்டன. பலன் தரவும் தொடங்கியாச்சு. இப்ப என்ன பண்ணனும்? காய்ப்பு எல்லாவற்றையும் கோவிலுக்கே கொடுக்கனுமா? அதான் இல்லை. காய்ப்பிற்கு வந்த ஆண்டு முதல் ஒரு தென்னை மரத்தின் காய்ப்பில் இருபத்தி ஐந்து தேங்காய்கள் கோவிலுக்கு கொடுத்தால் போதும். மாதா மாதமா? இல்லை. ஆண்டொன்றுக்குத் தான்! மிச்சம் கன்று நட்டு வளர்த்தவன் அனுபவித்துக் கொள்ளவேண்டியது தான். பலா மரத்தின் காய்ப்பில் ஆறு காய்கள் மட்டும் கோவிலுக்கு. ஆறில் இரண்டு பழமாகவும், மீதி நான்கை விற்பனை செய்து கோவில் கருவூலத்தில் செலுத்திவிட வேண்டும். இந்த கணக்கில் மா, புளி மகசூல் பற்றிய விவரம் தரப்படவில்லை அல்லது கல்வெட்டுத் தகவல்கள் சிதைந்து போயிருக்க வேண்டும். மா, புளி காய்ப்பு ஒரு ஆண்டு போல் மறு ஆண்டு இருக்காது. அதனால் காய்ப்பிற்குத் தகுந்தபடி ஒரு பங்கு கோவிலுக்கு தரும் ஏற்பாடு இருந்திருக்கலாம். எவ்வளவு அருமையான திட்டம் பாருங்கள். கோவிலுக்கும் வருமானம் குடிமக்களுக்கும் வருமானம், சுற்று சூழலுக்கும் பாதுகாப்பு, அரண்மனையார் தலையீடும் கிடையாது. இப்படி மரங்கள் வளர்த்து கோவில் நிதியாதாரத்தை சீர் செய்த தகவல் வேறு எந்தக் கோவிலிலும் கல்வெட்டு ஆவணமாக இருப்பதாகத் தெரியவில்லை. சோழர்கள் புகழ் இன்றும் நிலைத்து நிற்க கற்கோவில்கள் மட்டுமல்ல கல்லில் எழுதப்பட்ட இதுபோன்ற மிகச் சிறந்த பொருளாதார நிபுணத்துவமும் தான் காரணம்.- அய்யம்பேட்டை என்.செல்வராஜ், தலைவர், சோழர் வரலாற்று ஆய்வு சங்கம்

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.