You will be redirected to the script in

seconds
Kalvisolai.Info: வெற்றிக்கு வித்திடுபவர்கள் விஞ்ஞானிகளே!
உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Wednesday, February 28, 2018

வெற்றிக்கு வித்திடுபவர்கள் விஞ்ஞானிகளே!


வெற்றிக்கு வித்திடுபவர்கள் விஞ்ஞானிகளே! சர் சி.வி.ராமன் முனைவர் எஸ்.பாலகுமார் இன்று (பிப்ரவரி 28) தேசிய அறிவியல் தினம். இந்திய விஞ்ஞானி சர் சி.வி.ராமன் என்று அழைக்கப்படும் சர் சந்திரசேகர் வெங்கட்ராமன், கடந்த 1928-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி ராமன் விளைவை கண்டுபிடித்தார். அதற்காக 1930-ம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த நாளே "தேசிய அறிவியல் தினம்" என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகளின் எண்ணிக்கை எவ்வளவு? நாட்டின் வளர்ச்சியில் அவர்களின் பங்கு என்ன? இந்திய ஆராய்ச்சியின் நிலை உலக அளவில் எவ்வாறு உள்ளது? என்பது போன்றவற்றை சற்று நினைவு கூற வேண்டும். பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் பல இடங்களில் ஒரு கேள்வியைக் கேட்டோம். தற்சமயம் பாரத ரத்னா பட்டம் பெற்ற இந்திய விஞ்ஞானி யார் என்பதே அந்தக் கேள்வி. இதற்கு சரியான பதிலான சி.என்.ஆர்.ராவ் என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. ஆனால் தெண்டுல்கர் என்பதைச் சொல்கின்றனர். ஆக விஞ்ஞானிகள் பற்றிய மதிப்பீடு நமது சமுதாயத்தில் எவ்வாறு உள்ளது என்பதைப் பற்றி அறிந்து கொள்ள இது ஒரு அளவுகோலாகும். இந்தியாவில் உள்ள டாக்டர்கள், என்ஜினீயர்கள், உயர் அதிகாரிகளின் எண்ணிக்கையை விட விஞ்ஞானிகள் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆனால் குறைவான எண்ணிக்கையில் உள்ள அவர்களால் சமுதாயத்தில் மாற்றம் உண்டாகிறது என்றால் அது மிகையாகாது. தகவல் பரிமாற்றத் துறையின் மாற்றங்களைச் சற்றே பார்ப்போம். போஸ்ட் கார்டுகள், இன்லேண்ட் லெட்டர்கள், தந்தி போன்றவையெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன. ஏன் வீட்டில் இருந்த டெலிபோன்களும் காணாமல் போய்விட்டன. அனைவரிடமும் கையடக்க செல்போன்கள் வந்துவிட்டன. இந்த மாற்றங்களுக்குக் காரணம் நிச்சயமாக விஞ்ஞானிகள் தான். மருத்துவ உலகின் முன்னேற்றங்களைப் பாருங்கள். உங்களைத் தொடாமலே உங்கள் உடலின் உள்ளே என்ன பிரச்னை என்பதைக் கண்டறியும் எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி. ஸ்கேன் முறைகள் வந்துவிட்டன. இதை சாத்தியமாக்கியவர்கள் பவுதிக விஞ்ஞானிகளே. இவ்வாறு வாழ்வின் ஒவ்வொரு பரிமாண வளர்ச்சிக்கும் வித்திட்டவர்கள் விஞ்ஞானிகளே. ஒரு காலகட்டத்தில் 30 கோடி மக்கள் கொண்ட இந்திய நாட்டில் பசி, பட்டினி, பஞ்சம் தலைவிரித்தாடியது. அப்போது உணவுத்துறையின் மத்திய அமைச்சர்கள் அமெரிக்காவிடம் கையேந்தி கோதுமையை வாங்கி வருவார்கள். இன்றோ இந்தியாவின் மக்கள் தொகை 100 கோடியைத் தாண்டிவிட்டது. ஆனால் விளை நிலமான வயல்களின் பரப்போ அதிகரிக்கவில்லை. இருந்தபோதிலும் உணவில் தன்னிறைவு பெற்றுவிட்டோம். இது எப்படி நிகழ்ந்தது? இந்த சாதனையை நிகழ்த்தியவர்கள் அரசியல்வாதிகளா? இல்லவே இல்லை. புதுவகைப் பயிர்களை அறிமுகப்படுத்திய விஞ்ஞானிகள் தான் இதற்கு காரணம். எத்தகைய பெரிய சோதனை காலமாக இருந்தாலும் அதனை வெல்லக் கூடிய ஆற்றல் படைத்தவர்கள் விஞ்ஞானிகளே! ஆனால் அவர்களில் யாரும் பணக்காரர்கள் ஆகவில்லை. ஒரு மென்பொருளை விற்று இன்று உலகின் மாபெரும் பணக்காரராக சிலர் உலா வருகிறார்கள். இது வருந்துதற்குரியது. மின்சார பல்பைக் கண்டுபிடித்து ஒளிவெள்ளத்தைத் தந்த ஐசக் நியூட்டன் நினைத்திருந்தால் அவரோ அல்லது அவரின் சந்ததியினரோதான் உலகின் செல்வந்தராக ஆகி இருக்க முடியும். மாறாக இன்று வரை எங்களது கண்டுபிடிப்புகள் மனித சமுதாயத்தின் பொதுச் சொத்து என்று அறிவித்து பணக்காரராக வேண்டும் என்ற நோக்கமில்லாமல் உழைத்து வரும் விஞ்ஞானிகளே சமுதாயத்தின் உண்மையான சேவகர்கள். அவர்களது சமுதாயப் பணியினை குடத்தில் இட்ட விளக்காக மறைத்தே வைத்திருப்பது சரியல்ல. போற்றத்தக்க இந்திய விஞ்ஞானிகள் ஒரு சிலரைக் குறிப்பிடலாம் என்றால், தாவர ஆராய்ச்சி நிபுணர் ஜகதீஷ் சந்திர போஸ், பாபா அணுசக்தி நிறுவனப் புகழ் ஹோமி ஜஹாங்கிர் பாபா, விண்வெளி ஆய்வின் வித்தகர் விக்ரம் சாராபாய், மக்கள் போற்றும் அணு விஞ்ஞானி அப்துல் கலாம் போன்றவர்கள் உடனடியாக நினைவுக்கு வருகிறார்கள். 'நேச்சர்' என்ற உலகின் தலை சிறந்த அறிவியல் இதழ் இந்திய நாடானது ரஷியா, பிரான்சு, இத்தாலி, கனடா ஆகிய நாடுகளை விட அதிகமாக ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது என்ற தகவலை தெரிவிக்கின்றது. ஆனாலும் சீனா, பிரேசிலைவிட குறைவுதான் என்பது சற்றே கவலை அளிப்பதாக இருக்கிறது. இருந்தாலும், சாட்டிலைட்டுகள் எனப்படும் விண் கோள்களை வானத்தில் செலுத்துவதில் நாம் முன்னணியில் இருக்கிறோம் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும். அதுவும் தமிழ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி சிவன் தலைமையின் கீழ் இந்த சாதனைகள் நிகழ்த்தப்பட்டது பெருமைக் குரியதாகும். இந்தியாவில் ஆராய்ச்சிக்காக 30 அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையங்கள் இயங்கிவருகின்றன. அவற்றுள் இரண்டு மையங்கள் தமிழகத்தில் உள்ளன. தோல் சம்பந்தமான ஆராய்ச்சி நிறுவனமான சென்ட்ரல் லெதர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் சென்னையிலும், மத்திய மின்வேதியியல் ஆயுவுக்கூடம் காரைக்குடியிலும் சிறப்பாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. காரைக்குடியில் வருங்காலத்தில் சாலைகளில் ஓட உள்ள பேட்டரி கார்களுக்கான பேட்டரிகளைச் சிறந்த முறையில் உருவாக்கும் பணிகள் முனைப்புடன் நடந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். எதிர்கால இந்தியா வளமாக உருவாக வேண்டும் என்றால் சிறந்த விஞ்ஞானிகளை உருவாக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு இந்திய அறிவியல் தொழில் நுட்பக் கழகம், 'இன்ஸ்பயர்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் பிளஸ்-1, பிளஸ்-2 பயிலும் மாணவர்களில் மிக அதிக மதிப்பெண்கள் (அதாவது 94 சதவீதத்துக்கு மேல்) பெற்ற மாணவர்கள் சுமார் 1 லட்சம் பேருக்கு ஆண்டு தோறும் இலவசமாக 5 நாட்கள் முழுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களில் 1000 பேர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு விஞ்ஞானிகளாக மாறிவிட்டால் 10 ஆண்டுகளில் 10 ஆயிரம் தலை சிறந்த விஞ்ஞானிகள் இந்தியாவில் உருவாகி விடுவார்கள். அந்த நாள் வரும் பொழுது உலக அரங்கில் அசைக்க முடியாத மாபெரும் வல்லரசாக இந்தியா திகழும்.

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.